வெள்ளி, 10 ஜூன், 2016
நான் ஒரு பைத்தியக்காரன்
எல்லோரும் அநேகமாக தாங்கள் போகும் வழியில் தங்கியிருக்கும் ஏதோவொரு பைத்தியக்காரனைப் பார்த்திருப்பார்கள். அந்த உருவம் உங்கள் கண்களின் வழியே மூளைக்குச் சென்றிருக்குமானால் ஒரு சில விநாடிகள் ஒரு பரிதாபம் உங்களுக்குள் தோன்றியிருக்கும். அதன் பிறகு உங்கள் அன்றாட வாழ்வின் போராட்டங்கள் இந்த நினைவை அழித்திருக்கும்.
அடுத்த தடவை இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரனைப் பார்த்தால் ஒரு சில மணித்துளிகள் நின்று அவனைக் கவனியுங்கள். நீங்கள் கவனிப்பதை அவன் பார்த்தால் கூட அதைக் கண்டு கொள்ள மாட்டான். அவன் அருகே மூன்று அல்லது நான்கு சாக்கு மூட்டைகள் இருக்கும். அதில் பலதரப்பட்ட குப்பைகள், தெருவில் கிடக்கும் சாமான்களைச் சேகரித்து வைத்திருப்பான். அவைகள் ஏதோ மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் போன்று அவைகளைப் பாதுகாப்பான்.
உங்களுக்கு அவைகள் வெறும் குப்பைகளாகத்தான் தெரியும். இவன் ஏன் இந்தக் குப்பைகளை இவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கிறான் என்று உங்களுக்குப் புரியாது. அவன் பைத்தியக்காரன்தானே, அப்படித்தான் இருப்பான் என்று உங்கள் மனதைச் சமாதானம் செய்து கொண்டு உங்கள் வேலையைப் பார்க்கப் போய் விடுவீர்கள்.
நேற்று நான் நடைப் பயிற்சி சென்றுவிட்டுத் திரும்பும்போது ஒரு போதி மரத்தின் கீழ் சில நொடிகள் நிற்க வேண்டி வந்தது. அப்போது எனக்கு இந்தப் பைத்தியக்காரனின் சிந்தனை வந்தது. அப்போது திடீரென்று என் மூளியில் ஒரு பொறி தட்டியது. ஆஹா, அந்தப் பைத்தியக்காரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாமும் எவ்வளவு வேண்டாத பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம் என்று தோன்றியது.
வேண்டாத பொருட்கள் என்று நான் குறிப்பிடுவது நாளைக்குத் தேவைப்படலாம் என்று எண்ணி எவ்வளவு பொருட்களை நாம் சேகரிக்கிறோம்? ஆனால் அவைகளை நாம் வருடக்கணக்காக உபயோகப்படுத்தியதே இல்லை. இனி வரும் காலங்களிலாவது அவைகளை உபயோகப்படுத்துவோமா என்றும் தெரியாது. சரி, அவைகளை உபயோகப்படுத்தக்கூடிய யாருக்காவது கொடுக்கலாமே என்றால் அதற்கும் நம் மனது இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் பைத்தியக்காரன் சாக்கு மூட்டைகளைப் பாதுகாத்து வைத்திருப்பது போல் அவைகளை நாம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படி நான் பாதுகாப்பாக வைத்திருக்கும் சில பொருட்கள்- தேவைக்கு அதிகமான பணம், உபயோகப் படுத்தாத நாட்குறிப்பு ஏடுகள், பேனா, பென்சில், துணிகள், கம்ப்யூட்டர் சிடிக்கள், இன்னும் பல. இப்போது சொல்லுங்கள், நான் பைத்தியக்காரன்தானே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)