வெள்ளி, 10 ஜூன், 2016

நான் ஒரு பைத்தியக்காரன்


                                  Image result for பைத்தியக்காரன்

எல்லோரும் அநேகமாக தாங்கள் போகும் வழியில் தங்கியிருக்கும் ஏதோவொரு பைத்தியக்காரனைப் பார்த்திருப்பார்கள். அந்த உருவம் உங்கள் கண்களின் வழியே மூளைக்குச் சென்றிருக்குமானால் ஒரு சில விநாடிகள் ஒரு பரிதாபம் உங்களுக்குள் தோன்றியிருக்கும். அதன் பிறகு உங்கள் அன்றாட வாழ்வின் போராட்டங்கள் இந்த நினைவை அழித்திருக்கும்.

அடுத்த தடவை இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரனைப் பார்த்தால் ஒரு சில மணித்துளிகள் நின்று அவனைக் கவனியுங்கள். நீங்கள் கவனிப்பதை அவன் பார்த்தால் கூட அதைக் கண்டு கொள்ள மாட்டான். அவன் அருகே மூன்று அல்லது நான்கு சாக்கு மூட்டைகள் இருக்கும். அதில் பலதரப்பட்ட குப்பைகள், தெருவில் கிடக்கும் சாமான்களைச் சேகரித்து வைத்திருப்பான். அவைகள் ஏதோ மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் போன்று அவைகளைப் பாதுகாப்பான்.

உங்களுக்கு அவைகள் வெறும் குப்பைகளாகத்தான் தெரியும். இவன் ஏன் இந்தக் குப்பைகளை இவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கிறான் என்று உங்களுக்குப் புரியாது. அவன் பைத்தியக்காரன்தானே, அப்படித்தான் இருப்பான் என்று உங்கள் மனதைச் சமாதானம் செய்து கொண்டு உங்கள் வேலையைப் பார்க்கப் போய் விடுவீர்கள்.

நேற்று நான் நடைப் பயிற்சி சென்றுவிட்டுத் திரும்பும்போது ஒரு போதி மரத்தின் கீழ் சில நொடிகள் நிற்க வேண்டி  வந்தது. அப்போது எனக்கு இந்தப் பைத்தியக்காரனின் சிந்தனை வந்தது. அப்போது திடீரென்று என் மூளியில் ஒரு பொறி தட்டியது. ஆஹா, அந்தப் பைத்தியக்காரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? நாமும் எவ்வளவு வேண்டாத பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம் என்று தோன்றியது.

வேண்டாத பொருட்கள் என்று நான் குறிப்பிடுவது நாளைக்குத் தேவைப்படலாம் என்று எண்ணி எவ்வளவு பொருட்களை நாம் சேகரிக்கிறோம்? ஆனால் அவைகளை நாம் வருடக்கணக்காக உபயோகப்படுத்தியதே இல்லை. இனி வரும் காலங்களிலாவது அவைகளை உபயோகப்படுத்துவோமா என்றும் தெரியாது. சரி, அவைகளை உபயோகப்படுத்தக்கூடிய யாருக்காவது கொடுக்கலாமே என்றால் அதற்கும் நம் மனது இடம் கொடுப்பதில்லை. ஆனாலும் பைத்தியக்காரன் சாக்கு மூட்டைகளைப் பாதுகாத்து வைத்திருப்பது போல் அவைகளை நாம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்.

 அப்படி நான் பாதுகாப்பாக வைத்திருக்கும் சில பொருட்கள்- தேவைக்கு அதிகமான பணம், உபயோகப் படுத்தாத நாட்குறிப்பு ஏடுகள், பேனா, பென்சில், துணிகள், கம்ப்யூட்டர் சிடிக்கள், இன்னும் பல. இப்போது சொல்லுங்கள், நான் பைத்தியக்காரன்தானே!

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. முதல் வரவிற்கு நன்றி. உங்கள் ஊரில் இப்போது மணி இரவு 11 இருக்குமா?

   நீக்கு
 2. அய்யா, தேவைக்கு அதிகமாக உங்களிடம் இருக்கும் அந்த பணத்தை மட்டும் என்னிடம் கொடுத்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. அப்படிப் பார்த்தால் உலகத்தில் பாதிப்பேர் பைத்தியங்களே !

  பதிலளிநீக்கு
 4. //பைத்தியக்காரன் சாக்கு மூட்டைகளைப் பாதுகாத்து வைத்திருப்பது போல் அவைகளை நாம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்//

  இது மனிதருக்குள்ள பலவீனம். சொல்ல நினைப்பதை, மிக இயல்பாகவும் எளிதாகவும் தெளிவாகவும் சொல்வது உங்களின் பலம்.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. விழிப்புணர்வுப் பதிவு! நானும் என்னிடம் இருக்கும் தேவையில்லாத பொருட்களின் லிஸ்ட்டை எடுக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 6. அருமையான பதிவு. மிகவும் யதார்த்தமான + உண்மையான செய்திகள். இன்று நம்மில் பலரும் இதேபோலத்தான் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 7. தேவைக்கு அதிகமாக வைத்துக் கொள்பவன் எங்கோ ஒரு பிச்சைக்காரனையோ ஏழையயோ உருவாக்குகிறான் என்று காந்தி சொன்னதாக கேள்வி. இப்போது அதனுடன் ஒரு பைத்தியக்காரனையும் என்று சேர்த்துக் கொள்ளலாம்.....!

  பதிலளிநீக்கு
 8. பலரின் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி விட்டீர்கள் ஐயா
  தமிழ் மணம் + 1

  பதிலளிநீக்கு
 9. என்னமோ நீங்கள் மட்டும் பைத்தியகாரன் என்று சொல்லி இருக்கிறீர்கள் அப்ப நாங்கள் எல்லாம் பைத்தியகாரங்கள் இல்லியா? எப்ப இருந்து இப்படி பிரிச்சு பேசுற பழக்கம் உங்களுக்கு இது வரை நாமெல்லாம் ஒன்றுதான் என்று நினைத்து இருந்தோம் நமக்குள் பிரிவிணை ஏற்படுத்திவிட வேண்டாம்

  பதிலளிநீக்கு
 10. இதை இப்போ சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. ஏற்கனவே உங்கள் வீட்டார் உங்களைப் பற்றி அப்படித்தான் சொன்னார்கள் என்று நீங்களே சொன்னீர்கள்.

  பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு என்று விட்டு விட்டேன். நீங்கள் கலைக்கப்பட்ட கிறுக்கர்கள் சங்கத்தலைவர் ஆயிற்றே.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 11. எழுதி இருப்பது மிகவும் சரி. என்னிடமும் நிறையப்பொருள்கள் சேர்ந்துவிடும். ஏண்டா வைத்திருக்கிறோம் என்று எண்ணி, சுத்தப்படுத்தும் சாக்கில் அந்தப் பல பொருட்களில் சில பொருட்களைத் தூக்கி எறிவேன். ரெண்டு செட் உடை, பணம், படுக்கப் பாய தவிர பிற எல்லாமே ஆடம்பரமான தேவையில்லாத சங்கதிகள்தான். What we see or feel as important, most of the time is இடத்தை அடைக்கும் குப்பை for our near and dear.

  பதிலளிநீக்கு
 12. அருமையாக இப்படி சொல்வதினாலேயே நீங்கள் பைத்தியக்காரன் இல்லை! எந்த பைத்தியம்தான் தன்னை பைத்தியம் என்று ஒத்துக்கொள்ளும் யோசித்துப் பாருங்கள்!

  பதிலளிநீக்கு
 13. ஐயா! நீங்கள் மட்டுமல்ல. நாம் அனைவருமே பைத்தியங்கள் தான். நீங்கள் ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். நாங்கள் அதை செய்யவில்லை. அவ்வளவே!

  பதிலளிநீக்கு
 14. ஹஹஹ ஐயா அப்போ நாங்களும் பைத்தியக்காரர்கள்தான்....இந்த உலகில் பெரும்பான்மையோர் பைத்தியக்காரர்களே. நாம் கண்டபடி சேர்த்துவைப்பதை மிக அழகாகச்சொல்லிவிட்டீர்கள் ஐயா

  பதிலளிநீக்கு