வியாழன், 6 அக்டோபர், 2016
போன மச்சான் திரும்பி வந்தாண்டி பூமணத்தோட
இப்படி ஒரு பழமொழியை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மசான வைராக்யம், பிரசவ வைராக்யம் இந்த இரண்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இவைகளுக்கெல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரைகள் தேவையில்லாமலேயே எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடியவை. இவைகளைப் புரிந்து கொண்டவர்கள் நான் ஏன் பதிவுகள் போடாமல் ஒரு மாதம் இருந்தேன் என்பதையும் நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருப்பார்கள்.
கடைசியாக ஒரு சமகாலப் பிரச்சினை பற்றி என் மேலான (அல்லது சிலர் கருத்தில் கீழான) கருத்துக்களை ஒரு பதிவு போட்டிருந்தது படித்தவர்களுக்கு நினைவு இருக்கலாம். அதில் குறிப்பாக சிலருக்கு என் வயது ஒரு உறுத்தலாக இருந்திருக்கிறது. அதாவது வயது குறைவாக இருந்தால் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். வயது ஆன பின் இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று கருத்து சொன்னார்கள். சரி போகட்டும் என்று அந்தப் பதிவை நீக்கினேன்.
நண்பர் தமிழ் இளங்கோ அவர்கள் தொலை பேசியில் என்னிடம் பேசி சில கருத்துக்களைச் சென்னார். அதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் இந்த உலகை சீர்திருத்த தனி மனிதனால் முடியாது என்பதுதான்.
சரி, இந்தப் பதிவுலகை விட்டு விலகி இருக்கலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனாலும் என் பதிவுகளைப் பார்வையிடுபவர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் புதிதாகப் பதிவுகள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் பதிவுகளை மகாஜனங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூகுளாரின் வரவு செலவு அறிக்கை கூறுகிறது.
இது வரையில் நான் ஆயிரம் பதிவுகளுக்கு மேல் எழுதி விட்டேன். இன்றைய தேதியில் பத்து லட்சம் மக்கள் என் பதிவுகளைப் பார்வையிட்டிருக்கிறார்கள். என் பதிவின் தமிழ் மணம் ரேங்க் ஒரு நூறையாவது எட்டியிருக்கும் என்று பார்த்தால் பனிரெண்டைத் தாண்ட மாட்டேன் என்கிறது.
ஆகவே என் பதிவுகளுக்கு என்று ஒரு வாசகர் வட்டம் இருப்பதை அறிந்தேன். அவர்களை ஏமாற்றக்கூடாது என்ற நல்ல அல்லது கெட்ட எண்ணத்தினால் திரும்பவும் எழுதலாம் என்று வந்து விட்டேன்.
பதிவுலக வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வழக்கம்போல் என்னைத்திட்டி பின்னூட்டம் போடுவதை நிறுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
பின் குறிப்பு: இதுக்கு எதுக்கு பொம்பளை படம் என்று கேட்பவர்களுக்கு, அந்தப் பெண் பூ வைத்திருப்பதைப் பார்த்தீர்களல்லவா, தலைப்பிலும் பூமணம் இருப்பதைப் பார்த்தீர்களல்லவா, அதுதான் சம்பந்தம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)