ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மிளகாய் ஊறுகாய் செய்யும் முறை.



முதலில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மிளகாய் என்றதும் காய்ந்த மிளகாயை நினைத்தவர்கள் அனைவரும் "ஒன் ஸடெப் பேக்". ஊறுகாய் போடுவதற்கு உகந்தது பச்சை மிளகாயே.

போன பதிவில் "நான் படித்த படிப்பென்ன" என்று எம்ஜியார் பாணியில் பாடினேன் அல்லவா? அப்படி நான் என்ன படித்தேன் என்று அறிய ஆவல் கொண்டிருப்பீர்கள் என்று அறிவேன். ஆகவே நான் படித்த பெருமைகளைச் சிறிது கூறிவிட்டுப் பிறகு ஊறுகாய் சமாச்சாரத்திற்குப் போவோம்.

நான் படித்தது விவசாய வேதியல் படிப்பு அதாவது "கெமிஸ்ட்ரி".  இந்த வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பீர்கள். சினிமாவில் குறிப்பாக "கெமிஸ்ட்ரி" வொர்க்அவுட் ஆகலைன்னு இப்ப அடிக்கடி சொல்றாங்களல்லவா? அதுக்கு அர்த்தம் அவுங்க எதிர்பார்த்த மாதிரி அந்தப் படம் வெற்றி பெறவில்லை அல்லது அந்தக்காட்சி எதிர் பார்த்த மாதிரி வரவில்லை, இப்படி பல அர்த்தங்கள்.

உலகம் முழுவதும் இந்த "கெமிஸ்ட்ரி" யினால்தான் இயங்குகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். "கெமிஸ்ட்ரி" இயங்காத இடமே இல்லை. ஊறுகாய் போடுவதும் சுத்தமான "கெமிஸ்ட்ரியே" தவிர வேறு ஒன்றும் இல்லை.

இப்போது மிளகாய் ஊறுகாய்க்குத் தேவையான பொருட்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.

1. நல்ல புதிதாகப் பறித்த பச்சை மிளகாய் -
       நன்றாக கழுவி  ஒரு வெள்ளைத் துணிமேல் பரப்பி
       பேஃனுக்கு அடியில் வைத்து ஈரம் போகும் அளவிற்கு             உலர்த்தியது                                                               -  500 கிராம்.
2. தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி                -   250 கிராம்.
3. தோல் நீக்கிய பூண்டு                                        -    250 கிராம்
4. பொடித்த கல்லுப்பு                                             -   100 கிராம்
5.  பெருங்காயப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
6.  நல்ல நல்லெண்ணை - 100 மில்லி
7.  கடுகு   - ஒரு டேபிள் ஸ்பூன்
8. சீரகம்  - அரை டேபிள் ஸ்பூன்
9. கருவேப்பிலை - ஒரு இணுக்கு
10. இரண்டு எலுமிச்சம்பழத்திலிருந்து எடுத்த சாறு.

செய்முறை.

முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து  
ஈரம் இல்லாமல் துடைத்து வைத்த ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் இஞ்சியையும் பூண்டையும் அரைத்து அதே பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நன்றாக கலக்கவும். உப்பைச் சேர்க்கவும். எலுமிச்சை சாறையும் சேர்க்கவும். (எலுமிச்சை இல்லாவிட்டால் 100 மில்லி வினிகர் சேர்த்துக்கொள்ளலாம்)

பாத்திரத்தை மூடி மூன்று நாட்கள் வைத்திருக்கவும். மூன்றாம் நாள் அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணையை ஊற்றி காயவைக்கவும். நன்றாக காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு பாதி பொரிந்து கொண்டிருக்கும்போது சீரகத்தைப் போடவும். உடனே கருவேப்பிலையைப் போடவும். பத்து செகன்ட் கழித்து வாணலியை இறக்கி வைத்து பெருங்காயத்தைப் போடவும், பிறகு தாளித த்தை மிளகாய் அரைத்து வைத்திருப்பதின் மேல் கொட்டி நன்றாக கிளறி விடவும்.

ஊறுகாயை உங்களுக்கு விருப்பமான (நன்கு கழுவி, வெயிலில் இரண்டு மணி நேரம் காயவைத்த) ஜாடி அல்லது பாட்டிலில்  போட்டு வைத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான். சுவையான காரசாரமான மிளகாய் ஊறுகாய் ரெடி. தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள, தயிர் சாதம் அமிர்தமாய் சுவைக்கும். ஒரு குறிப்பு - பொரியல் சாப்பிடுகிற மாதிரி வழித்து நாக்கில் வைக்காதீர்கள். ஒரு விரலால் நொட்டு நாக்கில் வைத்தால் போதும்.

ஒரு எச்சரிக்கை; வயிற்றில் அல்சர் இருப்பவர்கள் தங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பிறகு இந்த ஊறுகாயை உபயோகிக்கவும். அப்படிச்செய்யாமல்   இந்த ஊறுகாயைச் சாப்பிட்டால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பில்லை.

பிற்சேர்க்கை: இதோ நான்கு மாதங்களுக்கு முன் நான் போட்ட மிளகாய் ஊறுகாய்.