ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மிளகாய் ஊறுகாய் செய்யும் முறை.



முதலில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். மிளகாய் என்றதும் காய்ந்த மிளகாயை நினைத்தவர்கள் அனைவரும் "ஒன் ஸடெப் பேக்". ஊறுகாய் போடுவதற்கு உகந்தது பச்சை மிளகாயே.

போன பதிவில் "நான் படித்த படிப்பென்ன" என்று எம்ஜியார் பாணியில் பாடினேன் அல்லவா? அப்படி நான் என்ன படித்தேன் என்று அறிய ஆவல் கொண்டிருப்பீர்கள் என்று அறிவேன். ஆகவே நான் படித்த பெருமைகளைச் சிறிது கூறிவிட்டுப் பிறகு ஊறுகாய் சமாச்சாரத்திற்குப் போவோம்.

நான் படித்தது விவசாய வேதியல் படிப்பு அதாவது "கெமிஸ்ட்ரி".  இந்த வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பீர்கள். சினிமாவில் குறிப்பாக "கெமிஸ்ட்ரி" வொர்க்அவுட் ஆகலைன்னு இப்ப அடிக்கடி சொல்றாங்களல்லவா? அதுக்கு அர்த்தம் அவுங்க எதிர்பார்த்த மாதிரி அந்தப் படம் வெற்றி பெறவில்லை அல்லது அந்தக்காட்சி எதிர் பார்த்த மாதிரி வரவில்லை, இப்படி பல அர்த்தங்கள்.

உலகம் முழுவதும் இந்த "கெமிஸ்ட்ரி" யினால்தான் இயங்குகிறது என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். "கெமிஸ்ட்ரி" இயங்காத இடமே இல்லை. ஊறுகாய் போடுவதும் சுத்தமான "கெமிஸ்ட்ரியே" தவிர வேறு ஒன்றும் இல்லை.

இப்போது மிளகாய் ஊறுகாய்க்குத் தேவையான பொருட்களின் லிஸ்ட்டைப் பார்ப்போம்.

1. நல்ல புதிதாகப் பறித்த பச்சை மிளகாய் -
       நன்றாக கழுவி  ஒரு வெள்ளைத் துணிமேல் பரப்பி
       பேஃனுக்கு அடியில் வைத்து ஈரம் போகும் அளவிற்கு             உலர்த்தியது                                                               -  500 கிராம்.
2. தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி                -   250 கிராம்.
3. தோல் நீக்கிய பூண்டு                                        -    250 கிராம்
4. பொடித்த கல்லுப்பு                                             -   100 கிராம்
5.  பெருங்காயப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
6.  நல்ல நல்லெண்ணை - 100 மில்லி
7.  கடுகு   - ஒரு டேபிள் ஸ்பூன்
8. சீரகம்  - அரை டேபிள் ஸ்பூன்
9. கருவேப்பிலை - ஒரு இணுக்கு
10. இரண்டு எலுமிச்சம்பழத்திலிருந்து எடுத்த சாறு.

செய்முறை.

முதலில் பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து  
ஈரம் இல்லாமல் துடைத்து வைத்த ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் இஞ்சியையும் பூண்டையும் அரைத்து அதே பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நன்றாக கலக்கவும். உப்பைச் சேர்க்கவும். எலுமிச்சை சாறையும் சேர்க்கவும். (எலுமிச்சை இல்லாவிட்டால் 100 மில்லி வினிகர் சேர்த்துக்கொள்ளலாம்)

பாத்திரத்தை மூடி மூன்று நாட்கள் வைத்திருக்கவும். மூன்றாம் நாள் அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணையை ஊற்றி காயவைக்கவும். நன்றாக காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு பாதி பொரிந்து கொண்டிருக்கும்போது சீரகத்தைப் போடவும். உடனே கருவேப்பிலையைப் போடவும். பத்து செகன்ட் கழித்து வாணலியை இறக்கி வைத்து பெருங்காயத்தைப் போடவும், பிறகு தாளித த்தை மிளகாய் அரைத்து வைத்திருப்பதின் மேல் கொட்டி நன்றாக கிளறி விடவும்.

ஊறுகாயை உங்களுக்கு விருப்பமான (நன்கு கழுவி, வெயிலில் இரண்டு மணி நேரம் காயவைத்த) ஜாடி அல்லது பாட்டிலில்  போட்டு வைத்துக்கொள்ளவும்.

அவ்வளவுதான். சுவையான காரசாரமான மிளகாய் ஊறுகாய் ரெடி. தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள, தயிர் சாதம் அமிர்தமாய் சுவைக்கும். ஒரு குறிப்பு - பொரியல் சாப்பிடுகிற மாதிரி வழித்து நாக்கில் வைக்காதீர்கள். ஒரு விரலால் நொட்டு நாக்கில் வைத்தால் போதும்.

ஒரு எச்சரிக்கை; வயிற்றில் அல்சர் இருப்பவர்கள் தங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பிறகு இந்த ஊறுகாயை உபயோகிக்கவும். அப்படிச்செய்யாமல்   இந்த ஊறுகாயைச் சாப்பிட்டால் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பில்லை.

பிற்சேர்க்கை: இதோ நான்கு மாதங்களுக்கு முன் நான் போட்ட மிளகாய் ஊறுகாய்.




21 கருத்துகள்:

  1. படிக்கும் போதே மண்டையுச்சி வரை சுர்ரென்று ஒரு உணர்வு. ஹிமாச்சல் பிரதேசத்தில் chசுக் என ஒரு மிளகாய் ஊறுகாய் உண்டு. அதை நினைவுபடுத்தியது உங்கள் ஊறுகாய்.

    பதிலளிநீக்கு
  2. இது பச்சைமிளகாய் ஊறுகாய் இல்லை. இது பச்சைமிளகாய் சட்னி. ஊறுகாய் என்றால் ஊறிய காய். பச்சைமிளகாய்
    ​அரைக்கப்படாமல் இருக்கவேண்டும். ஆந்திரா பக்கம் உண்டு. பச்சை மிளகாய் அப்படியே முழுதாக ஊறி இருக்கும். இதை கடித்துத் தான் சாப்பிட வேண்டும். ஆமாம் பச்சைமிளகாய் அல்வா சாப்பீட்டீர்களா?​

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் சொன்னது போல் இது வயதானவர்களுக்கு உகந்த ஊறுகாய். அதாவது பல் போனவர்களுக்கு. கடித்துச் சாப்பிட நான் என்ன ஆடா, மாடா?

      பச்சை மிறகாய்ச் சட்னி ஆறு மாதம் கெடாமல் இருக்குமா? நான் சொன்ன ஊறுகாய் ஆறு மாதம் கெடாது.

      நீக்கு
  3. செய்முறை நல்லாத்தான் இருக்கு. இஞ்சி, பூண்டு, மிளகாய் மூணுமே தனித்தனியாவே ரொம்பக் காரம்.. ஒரு நாள் பூண்டு போடாமல் செய்துபார்த்துடலாம்.

    சினிமா கெமிஸ்டிரிக்கு வேற அர்த்தம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யய்யோ, அதச்சொல்லிக்கொடுங்க, சார். இல்லேன்னா ஆறு மாதம் ராத்திரி தூக்கம் வராதே?

      நீக்கு
  4. எனக்குப் பிடித்தது என்பதால்
    அதன் உறைப்பு எண்ணம் வர
    வாயில் நீர் சுரந்தது நிஜம்

    பதிலளிநீக்கு
  5. செய்முறை எல்லாம் சரி, ஃபோட்டோ என் புளி மிளகாய் ஊறுகாய் போட்டிருக்கீங்களே? (முன்பே சொன்ன பதிவு - http://middleclassmadhavi.blogspot.in/2011/05/blog-post_30.html)
    ஏன் மூன்று நாள் கழித்து தாளித்து கொட்டணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. கூகுளில் இந்த போட்டோதான் கிடைத்தது.
      2. மூன்று நாள் "கெமிஸ்ட்ரி" வேலை செய்யவேண்டும். அதாவது பெர்மென்டேஷன் நடக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் நல்ல பதத்திற்கு ஊறாது.
      3. மிடில் கிளாஸ் மாதவி போட்டிருக்கும் ஊறுகாய் 10 நாளைக்குத்தான் வரும் என்று அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். என் முறைப்படி போடும் ஊறுகாய் ஆறு மாதத்திற்கு கெடாது. அரை ஸ்பூன் KMS போட்டீர்களானால் ஒரு வருடத்திற்கு வைத்து உபயோகப் படுத்தலாம். ஊறுகாய்க்கு புளி போட்டால் அது ஊறுகாயே அல்ல.

      நீக்கு
    2. 1. நீங்கள் செய்த ஊறுகாய் ஃபோட்டோ போடுங்கள் - ஆறு மாதம் தாங்கும் என்பதால் இன்னும் இருக்கும் என நினைக்கிறேன்!! :-))
      2. தாளித்துக் கொட்டிய பின் உடன் உபயோகிக்கலாமா? பின்னர் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளணுமா?
      3.நான் செய்த ஊறுகாய் பெயரே புளி மிளகாய் தான். நோ கெமிக்கல்ஸ்.

      நீக்கு
    3. கந்தசாமி சார்... கெமிஸ்ட்டிரி மாதிரி, இது என்ன KMS? Knowledge Management Service தெரியும். இது ஸ்பூன்லலாம் கிடைக்காதே.. பொட்டாசியம் மெட்டா பைசல்பேட் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? கடைலலாம் கிடைக்கிறாதா? ஹெல்துக்கு ஒன்றும் செய்யாதா?

      நீக்கு
    4. இதோ, போட்டோ எடுத்து போட்டு விட்டேன்.

      KMS நமது இல்லத்தரசிகளுக்கு பரிச்சயமாயிருக்கும் என்று நம்புகிறேன். அனைத்து சமையல் புத்தகங்களிலும் இதைக் குறிப்பிட்டிருப்பார்கள். பெட்டிக்கடைகளைத் தவிர மற்ற பலசரக்குக் கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது.

      நீக்கு
    5. தாளித்த பின் உடனே உபயோகிக்கலாம். பிரிட்ஜ்ஜில் வைப்பது நலம்.

      நீக்கு
  6. அழகான செய்முறை. பதிவு நன்கு சுள்ளென்று உள்ளது. எனக்கென்னவோ ஊறிய வடுமாங்காய் தவிர வேறு எந்த ஊறுகாயாக இருந்தாலும் ஃப்ரெஷ் ஆக இருக்கணும். 15-20 நாட்களுக்கு மேல் பழசாக நிறம் மாறி இருக்கக்கூடாது.

    பதிலளிநீக்கு
  7. இதையே சற்று மாற்றத்துடன் மிளகாய்ச் சட்னி என்று அவ்வப்போது செய்து உண்ணலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஊறுகாய் போடுவது ஒரு ஹாபி. அதனால்தான் இந்த முயற்சி.

      நீக்கு
  8. குறிப்பும் விளக்கமும் அருமை! செய்து பார்க்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் சுவை அள்ளிக்கொன்டு போகும்! நீங்கள் சொன்னது போல தொட்டுக்கொள்வது போல உபயோகிக்க வேன்டும். துண்டுகளாய்ப்போடுவது ஊறுகாய். அரைத்து செய்யப்படுவது தொக்கு என்பார்கள். அதனால் இது பச்சை மிளகாய் தொக்கு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரி. தொக்கு என்கிற வார்த்தை எங்கள் பக்கம் அதிகமாக உபயோகிப்பதில்லை. அதனால் நான் ஊறுகாய் என்றே எழுதி விட்டேன்.

      எலுமிச்சை சாறு ஒரு Preservative. இதற்குப் பதிலாக citric acid யையும் உபயோகிக்கலாம். அல்லது வினிகரையும் உபயோகிக்கலாம்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, திருமதி மனோ சாமிநாதன்.

      நீக்கு
  9. ஊறுகாய் படம் போடுகிறேன் என்று சந்தடி சாக்கில் உங்க போன் நம்பர் எல்லாம் சேர்த்து போட்டோ போட்டிருக்கீங்க. ஏதாவது குழப்பம் என்றால் கூப்பிடவா?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு