புதன், 14 டிசம்பர், 2016

உலகில் பணமே பிரதானம்


பணம் என்று ஒன்றை மனிதன் கண்டு பிடித்த நாளிலிருந்து இன்று வரை பணத்தினால் மயங்காதவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம். இல்லறத்தானில் இருந்து முற்றும் துறந்த துறவி என்று சொல்கிறவர்கள் வரை இந்தப் பணம் பிரதானமாய் விளங்குகிறது.

காரணம் என்னவென்றால் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும். யாரையும் விலைக்கு வாங்க முடியும். எந்த குற்றமும் செய்து விட்டு தண்டனையில்லாமல் திரியலாம்.

ஆகவேதான் பணத்தின் மீதான மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. ஆனாலும் இந்தப் பணத்தில் ஒரு சிக்கல். இதை தன் உபயோகத்திற்காக பயன்படுத்தத்  தெரியாதவர்களின் கையில் இது ஒரு விலங்கேயாகும்.

பழங்காலத்து ராஜாக்கள் முதல் இந்நாளைய அரசியல்வாதிகள் வரை பணம் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இதை எப்படி சேர்த்துவது என்பதற்கு வரையறை எதுவும் இல்லை. பணம் சேரவேண்டும், அவ்வளவுதான். யார் சாப்பிட்டால் எனக்கென்ன, சாப்பிடாவிட்டால் எனக்கென்ன? என்கிற கொள்கைதான் இன்று ஆட்சி புரிகிறது.

தமிழ்நாட்டில் இன்று அரசியல்வாதிகளை ஆட்டுவிப்பது பணம், பணம் மட்டும்தான் என்று அனைவரும் புரிந்திருப்பீர்கள். பணம் முட்டாளையும் அறிவாளியாகக் காட்டும். அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்களை அரசியலுக்கு வரவழைக்கும். பணம்  இருந்தால்  பதவி தானாகத் தேடி வரும். பணம் படைத்தவர்களை  அனைவரும் போற்றுவார்கள்.

ஆகவே, மக்களே, எப்படியாவது பணம் சேருங்கள். அப்போதுதான் உங்களை ஒரு மனிதன் என்று அனைவரும் போற்றுவார்கள்.