பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 டிசம்பர், 2016

உலகில் பணமே பிரதானம்


பணம் என்று ஒன்றை மனிதன் கண்டு பிடித்த நாளிலிருந்து இன்று வரை பணத்தினால் மயங்காதவர்கள் யாரும் இல்லையென்றே சொல்லலாம். இல்லறத்தானில் இருந்து முற்றும் துறந்த துறவி என்று சொல்கிறவர்கள் வரை இந்தப் பணம் பிரதானமாய் விளங்குகிறது.

காரணம் என்னவென்றால் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும். யாரையும் விலைக்கு வாங்க முடியும். எந்த குற்றமும் செய்து விட்டு தண்டனையில்லாமல் திரியலாம்.

ஆகவேதான் பணத்தின் மீதான மனிதனின் ஆசைக்கு அளவே இல்லை. ஆனாலும் இந்தப் பணத்தில் ஒரு சிக்கல். இதை தன் உபயோகத்திற்காக பயன்படுத்தத்  தெரியாதவர்களின் கையில் இது ஒரு விலங்கேயாகும்.

பழங்காலத்து ராஜாக்கள் முதல் இந்நாளைய அரசியல்வாதிகள் வரை பணம் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இதை எப்படி சேர்த்துவது என்பதற்கு வரையறை எதுவும் இல்லை. பணம் சேரவேண்டும், அவ்வளவுதான். யார் சாப்பிட்டால் எனக்கென்ன, சாப்பிடாவிட்டால் எனக்கென்ன? என்கிற கொள்கைதான் இன்று ஆட்சி புரிகிறது.

தமிழ்நாட்டில் இன்று அரசியல்வாதிகளை ஆட்டுவிப்பது பணம், பணம் மட்டும்தான் என்று அனைவரும் புரிந்திருப்பீர்கள். பணம் முட்டாளையும் அறிவாளியாகக் காட்டும். அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்களை அரசியலுக்கு வரவழைக்கும். பணம்  இருந்தால்  பதவி தானாகத் தேடி வரும். பணம் படைத்தவர்களை  அனைவரும் போற்றுவார்கள்.

ஆகவே, மக்களே, எப்படியாவது பணம் சேருங்கள். அப்போதுதான் உங்களை ஒரு மனிதன் என்று அனைவரும் போற்றுவார்கள்.

வெள்ளி, 12 ஜூன், 2015

ஓவியமாம் ஓவியம்?

இந்த ஓவியம் 140 மில்லியன் டாலராம்.

அப்படீன்னா எத்தனைங்க?

most expensive paintings

இதுல என்ன இருக்கு? என் மர மண்டைக்கு ஒண்ணும் புரியல? உங்களுக்காவது எதாச்சும் புரியுதா பாருங்க.

அதைவிட இது கொடுமை. 186 மில்லியன் டாலராம்.

expensive painting

இந்தப் படம் அதைவிடக் கொடுமை. நம்ம வீட்டுப் பாப்பா இதை விட நல்லாப் படம் போடும்.

ஆதாரம். எனக்கு வந்த பாபா மெயில்.

ஒரு கணக்கு - எனக்கு கணக்கு கொஞ்சம் வீக். இருந்தாலும் ஒரு கணக்கு போட்டுப் பார்ப்போமா?

ஒரு மில்லியன்  =  10 லட்சம்
ஒரு டாலர்           =   60 ரூபாய்
10 லட்சம் டாலர் = 600 லட்சம் ரூபாய் அதாவது 6 கோடி
ஆகவே ஒரு மில்லியன் டாலர் என்பது 6 கோடி ரூபாய்.

அப்போ 140 மில்லியன் டாலர் என்பது 840 கோடி ரூபாய்.
                 186 மில்லியன் டாலர் என்பது 1116 கோடி ரூபாய்.

எனக்கு ஒரு சந்தேகம். இத்தனை பணம் அவர்கள் எப்படி சம்பாதித்தார்கள்? இந்தப் படத்திற்கே இப்படி கோடிக்கணக்காக செலவழிப்பவர்கள் மொத்தம் எத்தனை பணம் வைத்திருப்பார்கள்?

திங்கள், 9 ஜூன், 2014

பூதம் காத்த புதையல்


ஆசைகளில் தீராத ஆசை பணத்தின் மேல் உள்ள ஆசைதான். இந்த ஆசை எல்லாவற்றையும் முற்றும் துறந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்நாள் மாடர்ன் சாமியார்களையும் விடவில்லை. அப்படியிருக்க நான் எம்மாத்திரம்?

நான் ஒரு சராசரி மனிதன். ஏதோ கொஞ்சம் ஆன்மீகத்தில் பரிச்சயம் உண்டு. ஆசையே மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று பல குருமார்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவர்களும் பிரசங்கம் முடிந்தவுடன் சீடர்களை தட்டுடன் வசூலுக்கு அனுப்புவதையும் பார்த்திருக்கிறேன்.

சில சமயம் நானும் சன்னியாசம் வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் துறந்து விட்டு இமயமலைக்குப் போய்விட்டால் என்ன என்று யோசித்ததுண்டு. ஆனால் இன்னும் தைரியம் வரவில்லை. இப்போது கிடைக்கும் சௌகரியங்களெல்லாம் அங்கு வெறும் கையுடன் போனால் கிடைக்குமா என்பது பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.

எங்கு சென்றாலும் பணம் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை என்பதை கண்கூடாகப் பார்த்திருப்பதால் இப்போது அனுபவிக்கும் சுகங்களை விட்டு விட்டு புதிதாக வேறொரு இடத்திற்குப் போவானேன் என்ற சிந்தனையும் மூளையின் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

என் இளம்பிராயத்தில் என்னிடம் பணம் எப்போதும் இருந்ததில்லை. யாராவது சொந்தக்காரர்கள் வந்து போகும்போது காலணா அரையணா கொடுப்பார்கள். அதை வாங்கும்போதே அம்மாவிடம் அர்ச்சனை வாங்கவும் தயாராகிக் கொள்ளவேண்டும். ஏண்டா அவர்களிடம் காசு வாங்கினே என்று ஆரம்பித்து சில சமயம் அடிகளும் கூடக் கிடைக்கும். எப்படியோ, என்ன நடந்தாலும் அந்தக் காசு லாபம்தானே. சில சுகங்களுக்காக சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும்.

கொஞ்சம் பெரிய பையன் ஆன பிறகு நான் கமிஷன் ஏஜண்ட் ஆனேன். அதாவது கடைகளுக்கு ஏதாவது பொருட்கள் வாங்க அனுப்பினால் அதில் கொஞ்சம் காசு கமிஷனாக எடுத்துக் கொள்வது. இதில் ஒரு நியாயத்தைக் கடைப்பிடித்தேன். காலணா அல்லது அரையணாவிற்கு மேல் எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு மேல் எடுத்துக்கொண்டால் அது தெரிந்துபோய் அப்பாவிடம் புகார் சென்று விடும். அப்புறம் நடப்பதை எல்லாம் எழுதினால் இந்தப் பதிவு கிரைம் நாவலாகிவிடும். வேண்டாம்.

நான் தொழிலதிபராக உருவெடுத்ததை முன்பு ஏதோ ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். புக் பைண்டிங்க் செய்திருக்கிறேன். காப்பிக்கொட்டை வறுத்திருக்கிறேன். இதிலெல்லாம் ஏதோ கொஞ்சம் சில்லறை நடமாட்டம் இருந்தது. கல்லூரி படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கு ஆர்டர் வந்து விட்டது. ஆரம்ப சம்பளத்தை சொல்ல வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு சரித்திரம் என்றால் உண்மையை அறிவிக்க வேண்டுமல்லவா.

மாத சம்பளம் நூறு ரூபாய். பஞ்சப்படி இருபத்திநான்கு ரூபாய். (1956 ம் வருடம்). இப்படியாக இருந்து படிப்படியாக உயர்ந்து நான் ஓய்வு பெறும்போது (1994)  பெற்ற சம்பளம் ஆறாயிரம் ரூபாய். அதில் பாதி மூவாயிரம் ரூபாய் பென்ஷன் கொடுத்தார்கள். இருபது வருடம் கழித்து பென்ஷன் அதைப்போல் பல மடங்கு வாங்குகிறேன். இதனால்தான் அன்றே பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். காலணா உத்தியோகம் என்றாலும் கவர்மென்டு உத்தியோகம் வேண்டும் என்று.

இப்படியான வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், கையில் காசில்லாதவன் வாழ்வில் நடைப்பிணமே. ஆகவே என்னால் முடிந்த அளவு சேமிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச கொஞ்சமாக சேமித்தது இப்போது கணிசமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் இன்னும் சேர்க்கவேண்டும் என்ற ஆசையைத் தவிர்க்க முடியவில்லை.

சேமித்த பணத்தை எதற்காவது செலவு செய்யலாம் என்றால் மனம் அதற்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இந்த சேமிப்பினால் எனக்கு ஏதும் பயன் இல்லை என்றாலும் அது ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. ஏதாவது இன்னல் வந்தால் யார் கையையும் எதிர் பார்க்காமல் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தை அளிக்கிறது.

அதற்காகவே பூதம் காப்பது போல் இந்தப் பணத்தைக் காத்துக்கொண்டு இருக்கிறேன். வேறு வழிகள் யாருக்காவது தெரிந்திருந்தால் தெரிவிக்கவும்.

ஞாயிறு, 27 மே, 2012

மொபைல் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.


இன்றைய நாளில் கம்ப்யூட்டரும் மொபைல் போனும் இல்லாதவர்களே இல்லை என்று ஆகிவிட்டது. இவைகளால் செலவு மட்டும்தான் என்று நினைப்பவரா நீங்கள். உங்கள் எண்ணம் தவறு. இவைகளின் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். இதோ அதற்கான உத்தி.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
BT-664120 என்ற விலாசத்திலிருந்து எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்துள்ளது.

வந்த நாள் 18.05.2012 காலை 9.40 மணி.

அதை அப்படியே கீழே எழுதி அனுப்பியுள்ளேன்.

பொதுவாக இதுபோல எனக்கு அடிக்கடி செய்திகள் வருவதும் நான் அவற்றை உடனடியா DELETE செய்வதும் தான் வழக்கம்.

இதைப்பற்றி தங்கள் கருத்தினையும் ஒரு பதிவாக வெளியிட்டால் யாரும் ஏமாறாமல் விழிப்புணர்வு கொள்வார்கள்.

இதை நம்பி செயல்பட்ட என் அலுவலக நண்பர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் முன்பு பலவித தொல்லைகள் எற்பட்டன என்பது எனக்கும் ஓரளவு தெரியும்.

முழுமையாகத் தெரியாததால் நான் அதைப்பற்றி பதிவிடவில்லை.

இதோ அந்த வந்துள்ள குறுஞ்செய்தி:

URGENT-YOUR NUMBER HAS WON 1,000,000.00 IN COCO COLA UK 2012.

TO RECEIVE YOUR AWARD SEND YOUR NAME, ADDRESS, AGE, PHONE NUMBER TO

coladraw2012@gmail.com SENDER BT-664120 SENT 09:40:20 18-05-2012
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலே கொடுத்துள்ளது திரு.வை.கோபாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள பின்னூட்ட செய்தி. இந்த மாதிரியான செய்திகள் உங்கள் பலருக்கும் வந்திருக்கலாம். பெரும்பாலானோர் இந்த மாதிரி செய்தியைப் பார்த்தவுடன் டெலீட் செய்து விடுவார்கள். நானும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தேன். இப்போது வை.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய செய்தியைப் பார்த்ததும் ஒரு யோசனை உதித்தது.


நம்ம ஜனங்கள் இருக்காங்களே, அவர்களுக்கு எத்தனை முறை பட்டாலும் திரும்பவும் அப்படியேதான் செய்வார்களே அன்றி, திருந்தவே மாட்டார்கள். பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் கோட்டை விடுபவர்களை எவ்வளவு நாட்களாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 


அதாவது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது உலக நியதி. அப்படியானால் நாம் ஏன் எப்போதும் ஏமாந்துகொண்டே இருக்கவேண்டும். அக்கரைக்குச் சென்றால் என்ன என்று தோன்றியது. என் திட்டத்தை இங்கே கொடுத்துள்ளேன். என் அனுமதியின்றி யாரும் இந்தத் திட்டத்தை உபயோகித்தால் நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்று அறியவும்.

தேவையான முதலீடு, ஒரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட் கனெக்ஷனும். அடுத்ததாக ஒரு நல்ல செல்போனும் அளவற்ற எஸ்.எம்.எஸ் உபயோகிக்கக் கூடிய ஒரு செல் கனெக்ஷனும். பதிவர்கள் அநேகரிடம் இந்த இரண்டு சௌகரியங்களும் ஏற்கனவே இருக்கும். அதற்காக இந்தத் தொழிலில் இறங்க வேண்டாம். ரிஸ்க் அதிகம். ஒரு பத்து வருடம் கம்பி எண்ணவேண்டிவரும். இதில் ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் (கம்பி எண்ணுவதில்) துணிந்து இறங்கலாம்.


ஒரு நல்ல கடிதம் தயார் செய்துகொள்ளவேண்டும். காசைக்கொடுத்தால் அதற்கு ஏகப்பட்ட பேர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கடிதத்தில் எழுத வேண்டிய கருத்து பல விதமாக இருக்கலாம். சேம்பிளுக்கு ஒன்று இங்கே கொடுத்திருக்கிறேன். உங்களுக்குப் புரிவதற்காக தமிழில் கொடுத்துள்ளேன். ஆனால் கடிதம் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடையீர்,


நான் பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் உயர் அதிகாரியாய்ப் பணிபுரிகிறேன். எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் எங்கள் பேங்க்கில் ஒரு மில்லியன் பவுண்ட் பணம் போட்டிருந்தார். அவர் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு இங்கு யாரும் வாரிசு இல்லை. அவர் தன் உயிலில் தன் பணம் முழுவதையும் ஒரு குணசாலியான தமிழருக்குக் கொடுத்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். எங்கள் விசாரணையில் நீங்கள் அதற்குப் பொருத்தமானவர் என்று கண்டு பிடித்தோம்.


நீங்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தால் உங்கள் முழு விலாசம், பேங்க் பெயர், கணக்கு எண், ஆகிய விபரங்களை உடனடியாக எனக்கு அனுப்பினால், உங்கள் கணக்கிற்கு மொத்தப் பணத்தையும் அனுப்பிவிடுகிறேன்.


அன்புள்ள,


#%$&%*&(*&()  
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கடிதத்தை கிடைக்கும் ஈமெயில் அட்ரசுக்கெல்லாம் அனுப்பவேண்டும். ஈமெயில் அட்ரஸ் விற்பதற்கு பலர் இருக்கிறார்கள். ஒரு பத்தாயிரம் பேருக்கு அனுப்பினால் ஒன்றிரண்டு பேர் பதில் போடுவார்கள். இந்த கடிதத்தையே சுருக்கி எஸ்.எம்.எஸ். ஆக ஒரு பத்தாயிரம் பேருடைய மொபைலுக்கு அனுப்பவேண்டும். மொபைல் நெம்பர்கள் மொபைல் கம்பெனிக்காரர்கள் கொஞ்சம் காசு கொடுத்தால் கொடுப்பார்கள். இதற்கும் சிலர் பதில் அனுப்புவார்கள். தூண்டிலில் மீன் சிக்கிவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.


இதற்கு மேல்தான் ஜாக்கிரதையாக டீல் செய்யவேண்டும். என்ன சொல்லவேண்டுமென்றால், இந்தப் பணத்தை உங்களுக்கு அனுப்ப பேங்க் கமிஷன் 50000 ரூபாய் ஆகும். அந்தப் பணத்தை இந்தியாவில் உள்ள பேங்கில் இன்ன ஊரிலுள்ள பேங்க்கில் இந்த அக்கவுன்ட் நெம்பரில் போடவும். உங்கள் பணத்தை உடனே உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும் என்று ஒரு மெயில் அனுப்பவும். இந்த மாதிரி ஒரு கணக்கு முன்பே ஆரம்பித்துக்கொள்ளவும்.


அந்த மடையன் பணத்தை நீங்கள் சொன்ன மாதிரி நீங்கள் சொன்ன பேங்க்கில் போட்டானென்றால் நல்ல கொழுத்த மீன் என்று புரிந்து கொள்ளவும். பிறகு, இன்னொரு மெயிலில் இந்திய ரிசர்வ் பேங்க்கிடம் கிளியரன்ஸ் வாங்க 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதையும் இதே கணக்கில் கட்டவும் என்று சொல்லவும். அந்தப் பணமும் கணக்கில் கட்டப்பட்டு விட்டால் உடனே கட்டின பணத்தையெல்லாம் சுருட்டிக்கொள்ளவும். இதற்கு மேலும் ஆசைப்பட்டால் மாட்டிக்கொள்வோம்.


இதுவரை உபயோகித்த ஈமெயில் ஐடி, செல்போன் சிம், பேங்க் அக்கவுன்ட், எல்லாவற்றையும் சுத்தமாக அழிக்கவும். இன்டர்நெட்டை கேன்சல் செய்யவும். கம்ப்யூட்டரை காயலான் கடைக்குப் போடவும். வேறு ஊருக்குப் போய் செட்டில் ஆகி, திரும்பவும் இதே தொழிலை வேறு பெயர்களில் தொடரவும்.


அவ்வளவுதான். இதற்கு மேல் பேராசைப்பட்டீர்களோ, அப்புறம் கம்பிதான். ஜாக்கிரதை.