புதன், 10 மே, 2017

3.நதிமூலம்-3


        Image result for usa flag

அமெரிக்கா ஒரு சொர்க்கபுரிதான். ஆனால் என்னதான் சொர்க்கமாய் இருந்தாலும் பேசுவதற்கு ஆள் இல்லாவிட்டால் அது நரகம்தானே. என் நண்பருக்கு இந்த விஷயம் நன்றாகத்தெரியும். ஆகவே அமெரிக்கா போவதற்கு முன்பே என்னிடம் ஒரு எழுதா ஒப்பந்தம் போட்டு விட்டுத்தான் போனார். அது என்னவென்றால் தினமும் நான் அவருக்கு ஒரு மின்னஞ்சலில் இங்குள்ள நாட்டு நடப்புகளை (அதாவது ஊர் வம்புகள்)  அனுப்ப வேண்டும். நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் இந்த மின்னஞ்சல் அனுப்புவதற்கு நான் பட்ட கஷ்டங்களை பிறகு எழுதுகிறேன்.

என்னுடைய கணிணியில் இன்டர்நெட் தொடர்பு இல்லை. என் மகளுடைய இன்டர்நெட் தொடர்பில் கொஞ்ச நாள் மின்னஞ்சல் அனுப்பி வந்தேன். பிறகு அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் வந்தபடியால் நானே ஒரு இன்டர்நெட் இணைப்பு வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நமது அரசு வழங்கும் இணைப்பை வாங்கினேன். நீண்ட நாள் பழக்கத்தினால் எது மலிவாக கிடைக்குமோ அதைத்தான் வாங்கிப்பழக்கம். அப்படி வாங்கியதுதான் 280 ரூபாயில் ஒரு வருடத்திற்கு 50 மணி நேர பேக்கேஜ். இன்டர்நெட் பேக்கேஜில் இரண்டு விதமான செலவுகள் உண்டு. ஒன்று உபயோகிக்கும் நேரத்திற்கான செலவு.  அதாவது இந்த 50 மணி நேரத்திற்கு 280 ரூபாய் என்றால் ஒர் மணி இன்டர்நெட் உபயோகித்தால் ரூபாய் 5.60 அம்பேல். இரண்டாவது நாம் இன்டர்நெட் உபயோகிக்கும் நேரத்திற்கு உண்டான தொலைபேசி கட்டணம். இது பகலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.9.60 ஆகும். அதாவது 7 -1/2 நிமிடத்திற்கு ஒரு யூனிட் சார்ஜ்.

என்னைப்போன்ற தாராள மனசுக்காரங்களுக்காக அரசு பெரிய மனசு பண்ணி இதில் இரண்டு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. உபயோகித்தவர்களுக்கு தெரியும். ஒன்று இரவு 11 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் இன்டர்நெட் உபயோகித்தால் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம் இல்லை. மேலும் இரவு 10.30 மணியிலிருந்து காலை 7.30 மணி வரை இன்டர்நெட் உபயோகித்தால் தொலைபேசி கட்டணம் பாதிதான் ஆகும் அதாவது ஒரு மணிக்கு ரூ.4.80 தான். 15 நிமிடங்களுக்கு ஒரு யூனிட் சார்ஜ். நான் என்ன செய்திருப்பேன் என்று யூகிப்பது ஒன்றும் அப்படி கடினமான விஷயம் அல்ல.

வழக்கமாகவே எனக்கு காலையில் 3 மணிக்கு விழிப்பு வந்துவிடும். ஆகவே இந்த சலுகைக்கட்டணத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.

பிறகு....