ஞாயிறு, 13 ஜூன், 2010

நான் வம்பினில் சிக்கினேன்

 
வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜம்பம் பிரசித்தி பெற்றது. இதனால் நான் எப்படி வம்பில் சிக்கினேன் என்று பார்க்கலாமா?
நான் நிலக்கடலை ஆராய்ச்சிப் பண்ணையில் சேரும்போது கடலைக்காய் அறுவடைக்காலம். கடலைக்காயில் இரண்டு வகை உண்டு: 1. குத்துக்காய்
2. கொடிக்காய். குத்துக்காய் அறுவடை செய்வது சுலபம். மண்ணில் சரியான ஈரப்பதம் இருக்கும்போது செடியைப்பிடித்து இழுத்தால் செடி வேருடனும் காய்களுடனும் வந்து விடும். மண்ணுக்குள் அதிகம் காய்கள் நிற்காது. ஆனால் கொடிக்காய் தரையோடு படர்ந்திருக்கும். அதை மம்மட்டி அல்லது களைக்கொத்து கொண்டு வெட்டித்தான் பிடுங்கவேண்டும். அப்படியும் பல காய்கள் மண்ணிற்குள் நின்றுவிடும். இதற்கு அதிகம் ஆட்கள் தேவைப்படும்.
இதற்காக கோயமுத்தூர் விவசாய பொறியியல் துறையில் டிராக்டரில் பொருத்தக்கூடிய கருவி ஒன்று கண்டு பிடித்திருந்தார்கள். அதைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக எங்கள் பண்ணைக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதை கொண்டுவந்திருந்த டிராக்டர் டிரைவர் எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்தவன். என்னை விட 10 வயது மூத்தவன். அதிகமாக சர்வீஸ் போட்டவன். அதனால் அவன் என்னுடன் கொஞ்சம் உரிமையுடன் பழகுவான். அவன் சொன்ன ஒரு அறிவுரை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் உபயோகமாக இருந்தது.
இப்படி கொஞ்சம் நெருக்கமானபடியால் ஒரு நாள் பக்கத்திலுள்ள ஒரு ஹோட்டலுக்கு நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்தோம். நான் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவன். ஒரு நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆபீஸ் நடைமுறைகள், சர்வீஸ் ரேங்குகள், சமூக அந்தஸ்து வித்தியாசங்கள் இவைகளில் எல்லாம் எந்த அனுபவங்களும் இல்லாதவன். ஆனால் வேட்டைக்காரன்புதூர் மக்களுடைய பார்வையில் நான் ஒரு கவர்மென்ட் ஆபீசர். நான் ஒரு டிரைவருடன் சேர்ந்து காபிக்கடைக்குப் போய் டிபன் சாப்பிட்டது மாபெரும் அகௌரவமான செயல். தனியாகக்கூட நான் காபிக்கடைக்குப் போய் அங்கு வரும் பாமர கூலித்தொழிலாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது. எது வேண்டுமென்றாலும் ஆள் அனுப்பி வேண்டியதை வாங்கிக்கொண்டு வரச்செய்து ஆபீசில் என்னுடைய அறையில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும்இப்படியிருக்க நான் என்னைவிட பல படிகள் கீழே உள்ள ஒரு டிரைவருடன் எப்படிப்போய் காப்பிக்கடையில் சாப்பிடலாம் என்பது ஒரு பெரிய செய்தியாகி விட்டது.  


இதை என்னுடைய ஆபீசில் வேலை செய்பவர்கள் வந்து சொன்னார்கள். அப்போதுதான் புரிந்தது, கிராமம் என்றால் என்ன என்று. பிறகு சுதாரித்துக்கோண்டேன். வேட்டைக்காரன்புதூர் கவுண்டர்களின் ஜபர்தஸ்தை போகப்போக புரிந்து கொண்டேன். அவர்கள் வீடுகளெல்லாம் மிகப்பெரியதாய் இருக்கும். ஒவ்வொருவர் வீட்டு மெயின் ஹாலிலும் ஆளுயரத்திற்கு இரண்டு யானைத் தந்தங்கள் ஒரு ஸ்டேண்டில் பொருத்தி வைத்திருப்பார்கள். அவர்களை வேலைக்காரர்கள் எல்லாம் பார்த்து பேசவே மாட்டார்கள். எல்லாம் கணக்குப்பிள்ளை அல்லது மேஸ்திரி மூலமாகத்தான் நடக்கும்.
இது மாதிரி தஞ்சாவூரில் வேலை பார்த்தபோதும் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். நேரில் பார்த்தது இல்லை. அங்கு ஒரு பெரிய மிராஸ்தார். அவர் எப்பொழுதும் அவர் வீட்டு மாடியில்தான் இருப்பார். அவரைப் பார்க்க வருபவர் யாராயிருந்தாலும் மாடிக்குச்சென்றுதான் பார்க்கவேண்டும். மாடியில் ஒரு சேர்தான் உண்டு. அதில் அவர் உட்கார்ந்திருப்பார். வருபவர்கள் நின்று கொண்டுதான் அவரைப் பார்த்து பேசிவிட்டுப் போகவேண்டும். ஒருக்கால் யாராவது ரொம்பப் பெரிய மனுஷன் (கலெக்டர் மாதிரி) வந்துவிட்டால், அவருக்கு வேறு சேர் கொண்டு வரச் சொல்லமாட்டாராம். என்ன செய்வாரென்றால் இவரும் எழுந்து நின்றுகொண்டு அவரிடம் பேசி அனுப்பி விடுவாராம். இது எப்படி இருக்கு?
தொடரும்….