வியாழன், 2 செப்டம்பர், 2010

ஒரு லைட் பல்பு மாற்ற 35000 ரூபாய்



நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள். ஆனால் இது உண்மை. வீட்டில் ஒரு லைட் பல்பு மாற்ற 35000 ரூபாய் செலவு.

அமெரிக்க சஞ்சிகைகளில் அடிக்கடி வரும் ஒரு பிரபலமான கேள்வி. ஒரு லைட் பல்பு மாற்றுவதற்கு எவ்வளவு பேர் வேண்டும் என்று கேட்பார்கள். இதில் ஏதோ ஒரு ஜோக் இருக்குதுன்னு நம்புகிறேன். ஆனா அது என்னன்னு என்னுடைய மரமண்டைக்கு இன்னமும் புரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் ஆயுளுக்கும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பயப்படாதீங்க. என்னுடைய ஆயுள் அவ்வளவு ஜாஸ்தியா இருக்காது. (76 வயசுக்காரன் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப்போகிறான்?)

நம்ம சப்ஜக்ட்டுக்கு வருவோம். நேற்று என் நண்பர்  (என் வயசுதான்) ஒருவரை எலும்பு முறிவு ஆஸ்பத்திரியில் பார்த்தேன். என்ன இங்க வந்திருக்கீங்க, என்ன சமாசாரம் என்று விசாரித்தேன்.

அவர் சிரித்துவிட்டு வீட்டில் ஒரு பல்பு மற்றினேன் என்றார்.

அதுக்கு இங்க எதுக்கு வந்திருக்கீங்க என்றேன்.

அவர் அது பாருங்க, ஒரு ஸ்டூல் மேல ஏறி நின்னு பல்பு மாத்தினேனுங்களா, அந்த ஸ்டூல் சாய்ந்து நான் கீழே விழுந்துட்டேன். இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது. இங்க வந்து அதுக்கு ஒட்டுப்போட்டு ரிப்பேர் செய்தேன். இன்னிக்கு செக்கப்புக்கு வந்திருக்கேன் என்றார்.

அடடா, அப்படியா ஆய்ட்டுது, வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டு, சரி, இதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு என்று கேட்டேன்.

அவர் முப்பத்தியைந்தாயிரம் ஆச்சு என்றார்.

இப்ப கணக்கு புரிஞ்சுதுங்களா?

என் வீட்டிலும் ஒரு பல்பு ப்யூஸ் ஆகிவிட்டது. முப்பத்தியைந்தாயிரம் ரூபாய் வேண்டும். பதிவர்கள் யாராவது உதவ முடியுமா?