செவ்வாய், 29 மே, 2012

ஈமு கோழி வாங்கலியோ? ஈமு கோழீஈஈஈஈஈ


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். இந்க் காலத்தில் மக்களின் மனதைக் கரைப்பதற்கு விளம்பரங்கள் உதவுகின்றன. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும். அப்படி ஈமு கோழிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஜே ஜே என்று முட்டையிட ஆரம்பித்து விட்டன. மக்கள் ஈமு கோழிக் கறி சாப்பிட்டு திடகாத்திரமாக ஆகிவிட்டார்கள். தமிழீழம் வாங்கியே தீருவார்கள்.

விளம்பரங்களின் அளவையும், எண்ணிக்கைகளையும் பார்த்தால் தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவாகும்போல் தோன்றுகிறது. இவ்வளவு பணம் செலவு செய்து நியாயமான வழிகளில் லாபம் ஈட்டுவது என்னுடைய மனக்கணக்குப் பிரகாரம் அசாத்தியம் என்று தோன்றுகிறது.

இருபது வருடங்களுக்கு முன் தேக்கு மரம் வளர்ப்பதைப் பற்றி பிரமாதமாக விளம்பரம் செய்தார்கள். உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அதன் பெயரில் ஒரு தேக்கு கன்று நட்டால் அவளுக்கு கல்யாண வயசு வரும்போது அந்த தேக்கு மரத்தை விற்றால், அந்தப் பணம் கல்யாணத்திற்குப் போதுமானதாக இருக்கும் என்று விளம்பரம் செய்தார்கள்.

இதைப் போலவே உங்களுக்கு வருடாந்தரத் தேவைக்கு சர்க்கரை தருகிறோம், அரிசி தருகிறோம், என்றெல்லாம் விளம்பரங்கள் வந்தன. இதை நம்பி பலர் முதலீடு செய்தார்கள். அந்தக் கம்பெனிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.

நம் மக்கள் இருக்கிறார்களே, அவர்கள் கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கூட, உடனே பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் பாலைத் தூக்கிக்கொண்டு ஓடுவார்களா?

ஈமு கோழி வளர்ப்பில் இவ்வளவு லாபம் வருகிறது, அவ்வளவு லாபம் வருகிறது என்று கம்பெனிகள் கணக்கு காட்டுகின்றன. பார்த்தால் நம்பும்படிதான் இருக்கிறது. ஆனால் நன்கு யோசித்துப் பார்த்தால்தான் அதில் உள்ள ஓட்டைகள் தெரிய வரும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு விளம்பரம் ஒரு தமிழ் தினசரியில் வந்திருக்கிறது. அதன் விபரங்களைப் பாருங்கள்.
1. முதலீடு: ரூ. 1 லட்சம்
2. மாத சம்பளம்: ரூ. 10,000
அதே விளம்பரத்தில் இன்னொரு ஆஃபர்:
திட்டம் 1.
1. முதலீடு: 1,50,000
2. ஒப்பந்த காலம்: இரண்டு வருடம்
3. போனஸ்: 50,000
4. சிறப்பு சலுகை: 1 பவுன்
5. மாத வருமானம்: 10,000
6. இரண்டு வருட முடிவில் முதலீடு தொகை திருப்பி தரப்படும்.
7. பண்ணை அமைத்தல், தீவனம் வழங்குதல், மருத்துவ உதவி அனைத்தும் இலவசம்.
என்ன கணக்குப் போட்டாலும் இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
முதலில் ஈமு கொழியின் கறியை எடுத்துக் கொள்வோம். ஒரு கிலோ கறி 700 ரூபாய்க்கு விற்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு பெரிய ஈமு கோழி 45 கிலோ இருக்கும். அதன் விலை 31500 ஆகிறது. அந்த விலைக்கு ஈமு கோழியை வாங்குவார் யாரும் இல்லை. ஏனென்றால் அந்தக் கறியை சாப்பிடுவதற்கு ஆள் இல்லை. சில கம்பெனிக்காரர்களே சில இடங்களில் ஓட்டல்கள் வைத்து ஈமு கறி கிடைக்கும் என்று விளம்பரங்கள் செய்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டல்கள் ஓட்டிக்கொண்டு இருக்கின்றன என்று பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள். இந்தக் கறியை மக்கள் எந்த அளவிற்கு விரும்புவார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

தவிர, இந்தக் கறி மருத்துவ குணங்கள் மிகுந்தவை என்று விளம்பரம் செய்கிறார்கள். அதை எப்படி கண்டு பிடிப்பது? ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த ஈமு கோழி ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. அந்த நாட்டிலேயே இப்போது ஈமு கோழி வளர்ப்பதை விட்டு விட்டார்கள்.


இது தவிர, ஈமு கோழியிலிருந்து கொழுப்பு. தோல், இன்னும் என்னென்னமோ தயாரிக்கலாம் என்று சொல்லுகிறார்கள். இவை எல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைக் காலம்தான் சொல்லும்.

தற்சமயம் புதிது புதிதாகப் பண்ணைகள் உருவாவதால் கோழிகளுக்கும், முட்டைகளுக்கும் தேவையும், நல்ல விலையும், இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் தமிழ்நாடு முழுவதும் ஈமு பண்ணைகள் உருவாகும்போது கோழிகளுக்கும் முட்டைகளுக்கும் டிமாண்ட் குறைந்துவிடும். அப்போது இந்தக் கம்பெனிகள் காணாமல் போகும். அதில் பணம் முதலீடு செய்தவர்கள் எல்லாம் ஒரு பெரிய நாமத்தை தங்கள் நெற்றியில் போட்டுக்கொண்டு போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குப் போவார்கள்.

இந்த விவகாரத்தில அதிசயம் என்னவென்றால் விவசாயிகளுக்கு சேவை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள விவசாய இலாக்காவோ அல்லது கால்நடைத்துறையோ இதைப் பற்றி எந்த தகவலும் விவசாயிகளுக்குச் சொல்வதில்லை. இதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். யாராவது ஏன் இப்படி என்று கேட்டால், எங்களிடம் வந்து விசாரித்தால் நாங்கள் விவரங்கள் தருவோம் என்பார்கள். திருடன் திருடிக்கொண்டு போனபின் வீட்டைப் பூட்டுவது போல்தான் இருக்கிறது.