செவ்வாய், 29 மே, 2012

ஈமு கோழி வாங்கலியோ? ஈமு கோழீஈஈஈஈஈ


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். இந்க் காலத்தில் மக்களின் மனதைக் கரைப்பதற்கு விளம்பரங்கள் உதவுகின்றன. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும். அப்படி ஈமு கோழிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஜே ஜே என்று முட்டையிட ஆரம்பித்து விட்டன. மக்கள் ஈமு கோழிக் கறி சாப்பிட்டு திடகாத்திரமாக ஆகிவிட்டார்கள். தமிழீழம் வாங்கியே தீருவார்கள்.

விளம்பரங்களின் அளவையும், எண்ணிக்கைகளையும் பார்த்தால் தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவாகும்போல் தோன்றுகிறது. இவ்வளவு பணம் செலவு செய்து நியாயமான வழிகளில் லாபம் ஈட்டுவது என்னுடைய மனக்கணக்குப் பிரகாரம் அசாத்தியம் என்று தோன்றுகிறது.

இருபது வருடங்களுக்கு முன் தேக்கு மரம் வளர்ப்பதைப் பற்றி பிரமாதமாக விளம்பரம் செய்தார்கள். உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அதன் பெயரில் ஒரு தேக்கு கன்று நட்டால் அவளுக்கு கல்யாண வயசு வரும்போது அந்த தேக்கு மரத்தை விற்றால், அந்தப் பணம் கல்யாணத்திற்குப் போதுமானதாக இருக்கும் என்று விளம்பரம் செய்தார்கள்.

இதைப் போலவே உங்களுக்கு வருடாந்தரத் தேவைக்கு சர்க்கரை தருகிறோம், அரிசி தருகிறோம், என்றெல்லாம் விளம்பரங்கள் வந்தன. இதை நம்பி பலர் முதலீடு செய்தார்கள். அந்தக் கம்பெனிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.

நம் மக்கள் இருக்கிறார்களே, அவர்கள் கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்றால் கூட, உடனே பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் பாலைத் தூக்கிக்கொண்டு ஓடுவார்களா?

ஈமு கோழி வளர்ப்பில் இவ்வளவு லாபம் வருகிறது, அவ்வளவு லாபம் வருகிறது என்று கம்பெனிகள் கணக்கு காட்டுகின்றன. பார்த்தால் நம்பும்படிதான் இருக்கிறது. ஆனால் நன்கு யோசித்துப் பார்த்தால்தான் அதில் உள்ள ஓட்டைகள் தெரிய வரும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று ஒரு விளம்பரம் ஒரு தமிழ் தினசரியில் வந்திருக்கிறது. அதன் விபரங்களைப் பாருங்கள்.
1. முதலீடு: ரூ. 1 லட்சம்
2. மாத சம்பளம்: ரூ. 10,000
அதே விளம்பரத்தில் இன்னொரு ஆஃபர்:
திட்டம் 1.
1. முதலீடு: 1,50,000
2. ஒப்பந்த காலம்: இரண்டு வருடம்
3. போனஸ்: 50,000
4. சிறப்பு சலுகை: 1 பவுன்
5. மாத வருமானம்: 10,000
6. இரண்டு வருட முடிவில் முதலீடு தொகை திருப்பி தரப்படும்.
7. பண்ணை அமைத்தல், தீவனம் வழங்குதல், மருத்துவ உதவி அனைத்தும் இலவசம்.
என்ன கணக்குப் போட்டாலும் இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
முதலில் ஈமு கொழியின் கறியை எடுத்துக் கொள்வோம். ஒரு கிலோ கறி 700 ரூபாய்க்கு விற்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு பெரிய ஈமு கோழி 45 கிலோ இருக்கும். அதன் விலை 31500 ஆகிறது. அந்த விலைக்கு ஈமு கோழியை வாங்குவார் யாரும் இல்லை. ஏனென்றால் அந்தக் கறியை சாப்பிடுவதற்கு ஆள் இல்லை. சில கம்பெனிக்காரர்களே சில இடங்களில் ஓட்டல்கள் வைத்து ஈமு கறி கிடைக்கும் என்று விளம்பரங்கள் செய்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டல்கள் ஓட்டிக்கொண்டு இருக்கின்றன என்று பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள். இந்தக் கறியை மக்கள் எந்த அளவிற்கு விரும்புவார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.

தவிர, இந்தக் கறி மருத்துவ குணங்கள் மிகுந்தவை என்று விளம்பரம் செய்கிறார்கள். அதை எப்படி கண்டு பிடிப்பது? ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த ஈமு கோழி ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. அந்த நாட்டிலேயே இப்போது ஈமு கோழி வளர்ப்பதை விட்டு விட்டார்கள்.


இது தவிர, ஈமு கோழியிலிருந்து கொழுப்பு. தோல், இன்னும் என்னென்னமோ தயாரிக்கலாம் என்று சொல்லுகிறார்கள். இவை எல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைக் காலம்தான் சொல்லும்.

தற்சமயம் புதிது புதிதாகப் பண்ணைகள் உருவாவதால் கோழிகளுக்கும், முட்டைகளுக்கும் தேவையும், நல்ல விலையும், இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் தமிழ்நாடு முழுவதும் ஈமு பண்ணைகள் உருவாகும்போது கோழிகளுக்கும் முட்டைகளுக்கும் டிமாண்ட் குறைந்துவிடும். அப்போது இந்தக் கம்பெனிகள் காணாமல் போகும். அதில் பணம் முதலீடு செய்தவர்கள் எல்லாம் ஒரு பெரிய நாமத்தை தங்கள் நெற்றியில் போட்டுக்கொண்டு போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குப் போவார்கள்.

இந்த விவகாரத்தில அதிசயம் என்னவென்றால் விவசாயிகளுக்கு சேவை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள விவசாய இலாக்காவோ அல்லது கால்நடைத்துறையோ இதைப் பற்றி எந்த தகவலும் விவசாயிகளுக்குச் சொல்வதில்லை. இதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். யாராவது ஏன் இப்படி என்று கேட்டால், எங்களிடம் வந்து விசாரித்தால் நாங்கள் விவரங்கள் தருவோம் என்பார்கள். திருடன் திருடிக்கொண்டு போனபின் வீட்டைப் பூட்டுவது போல்தான் இருக்கிறது.

20 கருத்துகள்:

 1. Well Said Sir. I remember those TeakWood program. Sure, without much proof about sales data all these programs are same as putting money to TeakWood program

  பதிலளிநீக்கு
 2. ஈமு கோழி பண்ணைகளின் மோசடி குறித்த விரிவான செய்தியை இந்த இணைப்பில் படிக்கலாம்.. http://namakkal4u.com/?p=18485

  பதிலளிநீக்கு
 3. ///அப்படி ஈமு கோழிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஜே ஜே என்று முட்டையிட ஆரம்பித்து விட்டன. மக்கள் ஈமு கோழிக் கறி சாப்பிட்டு திடகாத்திரமாக ஆகிவிட்டார்கள். தமிழீழம் வாங்கியே தீருவார்கள்.///

  உங்கள் எழுத்தில் எனக்குப் பிடித்தது எளிமை, நையாண்டி மற்றும் சந்துல பேந்தா விடுகிறது. சிறுவயதில் கோலி விளையாட்டில் "பேந்தா" ஆடி இருந்தால் தெரியும்!

  அதாவது இங்கு எனக்குப் பிடித்தது இது தான்! " தமிழீழம் வாங்கியே தீருவார்கள்!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சிறு வயதில் அவ்வளவாக கோலி விளையாடினதில்லை. அதை நினைத்து நினைத்து இன்றும் ஏக்கத்துடன் இருக்கிறேன். இந்த வயதில் சின்னப்பையன்கள் என்னைக் கோலி விளையாடச் சேர்த்துக் கொள்ளமாட்டார்களே! இது இன்னும் வருத்தமாக இருக்கிறது.

   நீக்கு
 4. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  இந்க் காலத்தில் மக்களின் மனதைக் கரைப்பதற்கு விளம்பரங்கள் உதவுகின்றன. அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்.

  அருமையான விழிப்புணர்வு தரும் எச்சரிக்கை பகிர்வுகள்..

  பதிலளிநீக்கு
 5. நம்ம நாட்டுலே ஒரு உணவுப்பொருள் விற்றுத்தீரணுமுன்னா அதுக்கு எளிய விளம்பரம் ஒன்னு இருக்குதே! இது 'அது' 'க்கு நல்லதுன்னாப் போதுமே! 'அது' அதிகரிக்க எதையும் செய்வாங்களே மக்கள்ஸ்.

  பதிலளிநீக்கு
 6. ஈமு கோழியில் முதலீடு என்பது முட்டாள்தனமானது ​என மக்களுக்கு புரிய கொஞ்ச மாதங்கள் தேவைப்படும். நானும் ஒரு ஈமு கோழி நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்தேன். இடம் மட்டும் இருந்தால் போதும் நாங்கள் எல்லாத்தையும் செஞ்சு தாரோம் என்கிறார்களே. ஏன் அவர்கள் அதை இலவசமாக செஞ்சு தருவார்களா கிடையாது. அப்படி எனில் இதனை ஏமாற்று வேலை என்று எண்ணாமல் ​எப்படி இருக்க முடியும்.

  மக்களே பேசாம....இரண்டு ஆட்டு குட்டிங்கள வாங்கி வளர்க்க ஆரம்பிங்க நல்ல லாபம் பார்க்கலாம்

  நாகு
  www.tngovernmentjobs.in

  பதிலளிநீக்கு
 7. ஈமுக் கோழி சாமத்தில் கூவுமா ?

  *******

  நல்ல விழிப்புணர்வு பதிவு ஐயா.

  பதிலளிநீக்கு
 8. மாடு மேக்கதான் நீ சரிபடுவ என அப்பா சொன்னா கேட்க மாட்டாங்க அதுவே விளம்பரத்துல அவங்களுக்கு பிடிச்ச சினிமா நடிகர் , நடிகைகள் சொன்னா கேட்பாங்க . நல்ல பகிர்வு உணருவாகளா ? தெரியவில்லை .

  பதிலளிநீக்கு
 9. ஐயா பிரயோசனமான பதிவுகள் இந்தியாவில் முதலீட்டு மோசடிகள் அதிகளவில் நடக்கின்றன என்பதினை நிறைய சினிமாவில் பார்த்திருக்கிறேன் உங்கள் பதிவின் மூலம் அப்படியான சம்பங்கள் உண்மைதான் என்பது புரிகிறது....இப்படியான அறிவுருத்தல்களை விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தும் தொலைக்காட்ட்சி மற்றும் வானொலிகளில் செய்தால் அனைத்து விவசாயிகளுக்கும் மிக விரைவில் இந்த அவதான செய்திகள் சென்றடையும்...

  பகிர்வுக்கு நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 10. ஐயா... உண்மையின் உரைகல்லாக விழுப்புணவு தரும் பதிவு.

  1. கலைமகள் சபா...

  2. ரமேஷ் கார்ஸ்...

  3. சினேகம் ஃபைனான்ஸ்...

  இப்போ இது...

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ஐயா..

  இங்கே ஈமு கோழியை யாருமே கணக்கெடுப்பதில்லை.
  தேசியப் பறவையாக ஈமுவை கொண்டாடுகிறார்கள். ஈமு இறைச்சி ஒரு கடைகளிலும் விற்பதுமில்லை..
  நல்லாத் தான் நம்மாளுங்க பூச்சுத்துறாங்க.

  பதிலளிநீக்கு
 12. சாமி சார்,

  முன்னர் கூட ஒரு ஈமு பதிவுபோட்டிங்க போல, இது ஏமாற்று வியாபாரம் தான் முன்னர் மல்டி லெவெல் பிசினெஸ்ஸில் ஷாம்ப்பூ, ஹேர் ஆயில் என சில பொருட்களை கொடுத்து அதிக மதிப்பு சொல்வாங்க,அதே போல இப்போ ஈமு,இது ஆஸ்திரேலியாவில் தேவையில்லாத பறவை , மானாவாரியா இருக்காம், இங்கே என்னமோ அதிசய பறவைனு சொல்லி யாவாரம் செய்றாங்க.

  இதற்கு முகவர்களாக பெரும்பாலும் வேளாண் பட்டதாரிகள் தான் இருக்காங்க என்பதும் தெரியுமா? கள்ளக்குறிச்சி,சேலம், ஈரோடுனு அந்தப்பக்கம் தான் இந்த யாவாரம் ரொம்ப வேகமாக ஓடுது. அங்கே காசு வச்சுக்கிட்டு என்ன பண்றதுனு தெரியாம நிறையப்பேர் இருக்காங்க போல. எங்க பக்கம்லாம் சீண்ட ஆள் இல்லை,

  நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது வேளாண் துறை, கால் நடைத்துறையில லஞ்சுக்கு அப்புறம் ஒருத்தரும் அலுவலகத்திலேயே இருக்கமாட்டாங்க, பீல்ட் விசிட்னு நோட்டில் எழுதி வச்சுட்டு வீட்டுப்போயிடுறாங்க,அப்புறம் எங்கே மக்களுக்கு எடுத்து சொல்ல, நேராப்போயிக்கேட்டாலே இன்று போய் நாளை வான்னு தான் சொல்றாங்க :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது வேளாண் துறை, கால் நடைத்துறையில லஞ்சுக்கு அப்புறம் ஒருத்தரும் அலுவலகத்திலேயே இருக்கமாட்டாங்க,//

   அப்போ லஞ்ச் வரைக்கும் ஆபீஸ்ல இருக்காங்கன்னு சொல்றீங்க. சும்மா தமாஸ் எல்லாம் பண்ணாதீங்க.

   நீக்கு
 13. நையாண்டியாய் எழுதியிருந்தாலும் மக்கள் ஏமாறுகிறார்களே என்ற வருத்தம் உங்கள் பதிவில் தெரிகிறது.
  நல்ல பகிர்வு. நாம் செம்மறி ஆட்டுக் கூட்டம்தானே... திருந்துவதெல்லாம் நமக்குத் தெரியாது. பட்டால்தான் புரியும்.

  பதிலளிநீக்கு
 14. ஐயா வணக்கம்
  நான் ஏற்கன்வே சொல்லி இருக்கேன் இது 2 வது முறை நான் இரண்டு வருடத்திற் முன் 20 பறவைகள் வாங்கி வளர்த்து வருகிறேன் ,முட்டையிடும் பருவத்தில் வாங்கி வந்தேன் ,சென்ற பருவத்தில் எனக்கு 270 முட்டைகள் கிடைத்தது 1000ம் ரூபாய்க்கு ஒரு நிறுவனத்திடம் கொடுத்து வந்தேன் எனக்கு அருகிலேயே ஒரு ந்ன்பர் குஞ்சு பொறிப்பான் அமைத்துள்ளதாக சொல்லி முட்டைகளை ரூ1200வீதம் எடுத்துக்கொண்டார்,சென்ற ஆண்டு தீவன செலவு ரூ68000 மட்டுமே வேறு எந்த செலவும் எனக்கு இல்லை ஆகையால் எனக்கு எந்த நட்டமும் இல்லை

  நீங்க யாராவது பண்ணை அமைத்து ந்ட்டம் வந்த்தாக சொல்லுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் ஒப்பந்த அடிப்படையில் பணம் கட்டி ஏமாற்றுகிற
  தரகர்களை மக்களுக்கு அடையாள்ம் காட்டுங்கள் ஏமாராமல் இருக்க ,1000ரூபாய்க்கு 1கிராம் த்ங்கம் தருவதாக யாராவது விளம்பரம் செய்தால் உடனே போய் வாங்கிவிட்டு தங்கம் வாங்காதீங்க தங்கம் வாங்கினா ந்ட்டம் ஏற்படும் என்று சொல்வதுமாதிறி உள்ளது உங்கள் செய்தி

  பதிலளிநீக்கு
 15. சொந்தமாக ஈமு பண்ணை அமைத்தால் தற்போதைய சுழ்நிலையில் லாபகரமாக இருக்கும் என்பதை நான் என்னுடைய பதிவுகளில் மறுக்கவே இல்லை. ஆனால் இந்த நிலை எவ்வளவு நாள் நீடிக்கும் என்றுதான் ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறேன்.

  கிராம் ஆயிரம் ரூபாய்க்கு யாராவது தங்கம் விற்றால் சொல்லுங்கள். என் சொத்து முழுவதையும் விற்று தங்கம் வாங்கி விடுகிறேன்.

  என் பதிவில் எங்கும் யாருக்கும் நட்டம் வந்ததாக நான் எழுதவேயில்லையே. வேறு எதையோ மனதில் வைத்துக்கொண்டு என் பதிவை நீங்கள் விமரிசனம் செய்வதாகத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் தீவனச்செலவு குறைவாக இருக்கிறது. ஒரு கோழிக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ தீனி போடவேண்டும். அது 20 ரூபாய் ஆகிறது. வருடத்திற்கு ஏறக்குறைய 1.5 லட்சம் ஆகும். வரவு 270 முட்டைக்கு 3 லட்சம். 1.5 லட்சம் லாபம்தான்.

   நீக்கு