ஞாயிறு, 6 ஜூன், 2010

நிலக்கடலை ஆராய்ச்சிப்பண்ணை, ஆனைமலை. பாகம் - 1


நான் இந்தப் பண்ணையில்தான் என்னுடைய முதல் வேலைக்கு சேர்ந்தேன் என்று சொல்லியிருக்கிறேன். கூடவே என்னுடைய வகுப்புத்தோழனும் சேர்ந்திருந்தான். அவனுக்கும் எங்களுடைய மேல் அதிகாரிக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால், தன்னுடைய பாட்டிக்கு உடம்பு சரியில்லைஎன்று தந்தி வரவழைத்து, லீவு போட்டுவிட்டுப் போய்விட்டான். என்னுடைய மேல் அதிகாரியும் தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார். நான் ஒருவனாக எல்லா வேலைகளையும் பார்த்ததில் எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்லாமல் போய் (டைபாய்டு காய்ச்சல்) லீவில் போகவேண்டியதாய் விட்டது. கணக்கு வழக்குகளெல்லாம் முடிக்கவில்லை.

இதற்கிடையில் என் அதிகாரி டூட்டியில் சேர்ந்துவிட்டார். நான் உடம்பு சரியில்லாமல் லீவீல் போனது உண்மைதானா என்று பார்ப்பதற்காக என் வீட்டிற்கும் ஒரு முறை வந்து போனார். கணக்கு வழக்குகளை தான் சரி செய்வதாகக் கூறிவிட்டு சென்றார். நான் ஓரளவு நிம்மதியடைந்தேன்.

இரண்டு மாதத்தில் என் உடம்பு சரியானது. டூட்டியில் சேர்ந்தேன். எனக்கு சாப்பாடு செய்து போடுவதற்காக என்னுடைய பாட்டியையும் அழைத்து வந்து விட்டேன். ஒரு வீடு பார்த்து செட்டில் ஆனோம். காலையில் 8 மணிக்குப் போய் ஆபீசரைப் பார்த்தேன். பண்ணைக்குப்போய் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு விட்டு மதியத்திற்கு மேல் ஆபீசுக்கு வரச்சொன்னார்.

பண்ணைக்குப்போனால் அங்கு ஒரு ஆச்சரியம் ! என்னுடைய வகுப்புத் தோழன் அங்கே இருந்தான். பண்ணை ஆபீசுக்கு வெளியில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருந்தான். அவனிடம் நீ பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லையா என்று கேட்டேன். ஏனென்றால் சீனியாரிட்டி பிரகாரம் அவன்தான் பொறுப்பு எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லை, எனக்கு பொறுப்பு கொடுக்கவில்லை என்றான். இது என்ன புது குழப்பம் என்று சிறிது நேரம் குழம்பிவிட்டு, பிறகு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதாக கையெழுத்து போட்டேன். அது வரை பொறுப்புகளை எங்களுக்கு கீழ் பதவியில் இருந்த ஒருவன் வைத்துக்கொண்டு இருந்தான். சாதாரணமாக இப்படி நடப்பது நடைமுறை இல்லை.

என்ன விவரம் என்று விசாரித்தால், என் வகுப்புத்தோழன் லீவில் போனதே மேல் அதிகாரியுடன் கருத்து வேற்றுமை காரணமாகத்தானே. அது ஏன் என்றால் என் தோழன் கணக்கு வழக்குகளில் கொஞ்சம் தில்லுமுல்லு செய்திருக்கிறான். இது எனக்குத்தெரியாது. (நான் அப்போது சரியான வெள்ளைச்சோளம்). அதை அதிகாரி கண்டுபிடித்ததினால்தான் இவன் லீவு போட்டுவிட்டு ஓடிப்போய்விட்டான். அதனால் அவன் லீவில் இருந்து திரும்பி வந்ததும் அவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை.

அது மட்டுமல்லாமல் அவனை துன்புறுத்தவும் செய்திருக்கிறார். அவனுக்கு எந்தப்பொறுப்பும் கொடுக்கவில்லை. ஆபீசுக்குள்ளும் விடுவதில்லை. தினமும் ஒரு பியூன் அவனுக்கு ஏதாவது ஒரு நொண்டிக்காரணம் காட்டி காலையில் ஒரு மெமோகொண்டுபோய் கொடுப்பான். மாலையில் அதற்கப்பதில் வாங்கி வருவான். இப்படி தினந்தோறும் நடந்து வந்திருக்கிறது. நான் டூட்டியில் சேரும்போது இந்த மெமோ பைல் ஏறக்குறைய நூறு பக்கம் ஆகிவிட்டது. அந்தப் பியூனுக்கு இந்த வேலை ஒன்றுதான். இதைப்பொன்ற அவமானகரமான நிலை வேறு ஒன்றும் இருக்காது.

நாலைந்து நாளில் அவனுக்கு மாற்றல் உத்திரவு வந்துவிட்டது. என் மேலதிகாரிதான் மெட்ராஸ் ஆபீசுக்கு எழுதி இந்த மாற்றல் வந்தது என்று பின்னாளில்தான் எனக்குத் தெரிய வந்தது. இப்படியாக மூன்று மாதத்தில் சர்க்கார் ஆபீஸின் கெடுபிடிகள் அத்துபடியாயின.