புதன், 14 டிசம்பர், 2011

தொழிற்சாலைகளும் விவசாயமும்



இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் அரசு மறைமுகமாக விவசாயத்தை நசுக்குகிறது என்கிற உண்மை பலருக்குத் தெரியாது. தொழிற்சாலைகளுக்கு நிலம் சலுகை விலையில் தரப்படுகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கும், இயந்திரங்கள் வாங்குவதற்கும் சலுகை வட்டியில் கடன்கள் கொடுக்கப்படுகின்றன. தொழிற்சாலை ஆரம்பித்து பல வருடங்களுக்கு வரிச்சலுகைகள் கொடுக்கப் படுகின்றன.

இவற்றையெல்லாம் அனுபவிப்பவர்கள் யாரென்று பார்த்தால் ஏற்கனவே தொழில்துறையில் ஏகபோக உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் பணமுதலைகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல்வாதிகளும்தான். இத்தகைய முதலாளிகளில் பெரும்பான்மை ஆசாமிகளின் வழிமுறை என்னவென்றால் – பேங்குகளில் ஏகப்பட்ட கடன் வாங்கி தொழிற்சாலை ஆரம்பிக்கவேண்டியது. ஆரம்பித்திலிருந்தே பொய்க் கணக்குகள் எழுதி பெரும்பகுதி பணத்தை ஸ்வாஹா செய்து ஸ்விஸ் வங்கிகளில் போட்டுவிடுவது. சில வருடங்கள் கழித்து நஷ்டம் என்று சொல்லி தொழிற்சாலையை மூடிவிடுவது.

இந்த தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளினாலும் மற்ற ஆசை வார்த்தைகளினாலும் மக்கள் விவசாய வேலைக்குப் போகாமல் இந்த தொழிற்சாலைகளுக்கு சென்று விடுகிறார்கள். இவர்களுடன் இந்த விவசாயிகள் போட்டிபோட முடியாமல் நிலத்தை விற்றுவிடுகிறார்கள் அல்லது கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இந்த கொள்கை நீடிக்குமானால் இந்தியா எதிர்காலத்தில் கல்லையும் மண்ணையும் சாப்பிட்டுத்தான் வாழ வேண்டியிருக்கும்.