வெள்ளி, 6 ஏப்ரல், 2012

ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை


இந்தப் பழமொழியை எல்லொரும் அறிந்திருப்பீர்கள். இதைப்போலவே இன்னொரு பழமொழி; தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்.

இந்தப் பழிமொழிகளின் நீதி என்னவென்றால் திறமையுள்ளவன் இல்லாதபோது திறமையற்றவனைக் கொண்டாடுவார்கள். இது உலக இயற்கை.

இதை ஏன் இப்போது சொல்கிறேனென்றால், நேற்று என்னுடைய பிளாக்கின் தமிழ்மணம் தர வரிசையைப் பார்த்தேன். 29 வது ரேங்க்கில் என்னுடைய பிளாக் இருந்தது. ஏதோ என்னால் முடிந்த அளவு எழுதுகிறேன் என்றாலும் என்னுடைய பிளாக் பெரிய சர்வதேசத் தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. பெரிய இலக்கியச் சேவையோ சமூக சேவையோ ஒன்றும் இந்த பிளாக்கில் நான் செய்வதில்லை.

பொழுது போவதற்காகவும், கம்ப்யூட்டர் கைவசம் இருப்பதாலும், டெக்னாலஜியை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலாலும் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன். இப்படிப்பட்ட பிளாக் தமிழ்மணத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பிளாக்குகளில் 29 வது ரேங்க்கில் இருக்கிறதென்றால், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நல்ல எழுத்தாளர்களெல்லாம் பதிவுலகத்தை விட்டுப்போய் விட்டார்கள் என்பதுதான்.

என்னுடைய கடந்த வருட சாதனைகளைப் பாருங்கள். மூன்றாவதாக உள்ளது இப்போதுள்ள ரேங்க்.

tamil blogs traffic ranking2010 Blog Rank 92 2011 Blog Rank 48

முதலில் கூறிய பழமொழிகளின் பொருத்தம் இப்போது புரிகிறதா?

தமிழ்மணத்தில் போனவருடம் ஏறக்குறைய தினம் 500 இடுகைகள் பதிவாகிக்கொண்டு இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 150 ஆகக் குறைந்துள்ளது.

நான் நான்கு வருடங்களுக்கு முன் பதிவுலகத்தில் பிரவேசித்த காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் இன்று பதிவுலகில் இல்லை. இது ஏன் என்று யோசித்தால், இந்தப் பதிவுலகம் வரவர போர் அடிக்கிறது என்பதுதான் அர்த்தம். அவர்களுக்கு சோர்வும் சலிப்பும் ஏற்பட்டதால்தான் அவர்கள் பதிவுலகை விட்டு விலகி விட்டார்கள்.

எனக்கும் எப்போது இந்த நிலை வரும் என்று என்னால் கணிக்கமுடியவில்லை. இப்போது என்னால் பழைய மாதிரி பிளாக்குகளுக்குப் பின்னூட்டம் போட முடிவதில்லை. என் பிளாக்குக்கு வரும் பின்னூட்டங்களுக்கும் ஒழுங்காக பதில் போட முடிவதில்லை. ஏதோ என்னால் முடிந்தவரை பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த சோர்வு நிலை ஒரு நாள் கண்டிப்பாக வந்தே தீரும் என்று எதிர்பார்க்கிறேன். அன்று நானும் கடையைக் கட்டி விடவேண்டியிருக்கும் என்று முன்னெச்சரிக்கையாக இப்போதே கூறிக்கொள்கிறேன்.