வியாழன், 26 ஜனவரி, 2012

திருப்பூர் முட்டாள்கள்


திருப்பூர் கடின உழைப்பாளிகள் நிறைந்த ஊர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதே அளவு முட்டாள்களும் இருப்பார்களென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

மலேசியாவிலிருந்து ஒருவன் அடிக்கடி வந்து திருப்பூரில் ஒரு சொகுசு ஓட்டலில் தங்குவானாம். நம்ம புத்திசிகாமணி திருப்பூரில் ஒரு டிராவல் ஏஜென்சி வைத்திருக்கிறார். இவரிடம் மலேசியாக்காரர் அடிக்கடி விமான டிக்கெட் வாங்குவாராம். திருப்பூர்காரர்கள் இப்படிப்பட்ட ஆட்களைப் பார்த்தால் பெரிய ஆள் என்று எடை போடுவார்கள் போல இருக்கிறது. ஏனென்றால் பனியன் வாங்க வரும் வெளிநாட்டுக்காரன் எல்லாம் இப்படித்தான் சீன் போடுவான்.

அந்த ஆள் ஒரு நாள் நம்ம புத்திசிகாமணியை ஓட்டலுக்கு வரவழைத்து பார்ட்டி (தண்ணிப் பார்ட்டிதான். வேறென்ன) கொடுத்து தன் வலையை விரித்துள்ளான். தன்னிடம் உள்ள ஒரு பெட்டியைக் காட்டி இதற்குள் 4 கோடி ரூபாயும் ஒரு கிலோ தங்கமும் இருக்கிறது. இது பாரத ஸ்டேட் வங்கியின் பணப்பெட்டி. இதன் பூட்டைத் திறப்பதற்கு சென்னையிலிருந்து அந்த பேங்கின் ஆபீசர்தான் வரவேண்டும். அவர் மூன்று நாள் லீவு போட்டுவிட்டு சொந்த வேலையாக வெளியூர் போயிருக்கிறார். அதற்குள் எனக்கு கொஞ்ச அவசரத் தேவைக்காக 5 லட்சம் ரூபாய் வேண்டும். அந்த பேங்க்கின் ஆபீசர் வந்து இந்த பெட்டியைத் திறந்து கொடுத்தவுடன் நான் உங்கள் பணத்தை இரட்டிப்பாகக் கொடுத்துவிடுகிறேன். இப்படியாக ஒரு கதை சொல்லியிருக்கிறான்.

நம்ம புத்தி சிகாமணி, ஆஹா, மூன்று நாளில் நம் பணம் இரட்டிப்பாகப் போகிறது. இந்தப் பாழாப்போன பேங்க்குக்காரன்கள் நம் பணத்தை இரட்டிப்பாக்க ஏழு வருடம் ஆகுமென்கிறான். இதோ நம் கண்முன்னால் லட்சுமி நின்றுகொண்டு என்னை எடுத்துக்கொள் என்கிறாள். இதை விடலாமா என்று பேராசைகொண்டு உடனே வீட்டிற்குப்போய் 5 லட்சம் ரூபாயைக் கொண்டுவந்து அந்த ஆளிடம் கொடுத்து விட்டான்.

அவன் இதே மாதிரி இன்னும் பத்து பேருக்கு வலை விரித்துள்ளான். அதில் ஐந்தாறு பேர் நம்ம புத்தி சிகாமணிக்கு அண்ணன்மார்கள். அவர்களும் ஆளுக்கு ஐந்து லட்சம் வீதம் கொடுத்திருக்கிறார்கள். மூன்றாவது நாள் மலேசியாக்காரன் ஓட்டலைக் காலி பண்ணிவிட்டு போகுமிடத்தைச் சொல்லாமல் போய்விட்டான். புத்திசிகாமணிகளெல்லாம் ஓட்டலுக்குப் போனால் பட்சி பறந்து போன விஷயம் தெரிந்திருக்கிறது. நாலு நாள் காத்திருந்திருக்கிறார்கள். பட்சி வரும் என்று. பட்சி வராமல் போகவே, போலீசில் போய் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

நம்ம ஊரு போலீசும் திருடனுக்குத் திருடன்தானே! எப்படியோ வலை தயார் பண்ணி விரித்ததில் பட்சி சிக்கிவிட்டது. என்ன பிரயோஜனம்? பணமெல்லாம் ஸ்வாஹா. பட்சிக்கு இதுதான் முழுநேரத் தொழிலாம்.

இந்த விவகாரத்தில் எனக்குப் புரியாதது என்னவென்றால் திருப்பூரில் இப்படிப்பட்ட அடி மடையன்களும் இருப்பார்களா என்பதே?

நிற்க, எங்கள் ஊரும் ஒன்றும் திருப்பூருக்கு சோடை போனதல்ல. (எங்க ஊர் கோவைன்னு எல்லோருக்கும் தெரியும்னு நம்பறேன்). 

கோவையைப்பற்றி ரொம்ப நாளைக்கு முன்பு குமுதம் பத்திரிக்கையில் எழுதியிருந்தது என்னவென்றால் கோயம்புத்தூர்காரனுங்க (அப்ப கோவை ஆகவில்லை) தண்ணியை காசு மாதிரி செலவழிப்பானுங்க, ஆனா காசை தண்ணி மாதிரி செலவழிப்பானுங்க, அப்படீன்னு எழுதியிருந்தாங்க. அது ஒரு வகையில உண்மைதானுங்க. அந்தக் காலத்தில இங்க தண்ணிக் கஷ்டம் அதிகம் உண்டுங்க. (அந்தத் தண்ணியில்லீங்க, வெறும் தண்ணிதாங்க.) அந்தத் தண்ணிக்கு கடவுள் புண்ணியத்தில ஒரு கொறையும் இல்லீங்க. சாதா தண்ணிக்குத்தான் கொஞ்சம் கஷ்டம். இப்ப பரவாயில்ல.

இங்க கொஞ்சம் காசு ஜாஸ்திதானுங்க. (குசும்பும் கூடத்தானுங்க). நேத்து பாருங்க ரெண்டு பேரு (ஒருத்தன் நெலம் வித்தவன், இன்னொருத்தன் நெலம் வாங்கறவன்) இவங்க ரெண்டு பேரும் பணத்த காருல வச்சுட்டு ஏதோ வேலையா அக்கட்டால போயிருக்காங்க. இதப்பாத்துட்டு இருந்த முடிச்சவிக்கீக காரு கண்ணாடியை ஒடைச்சு பணத்தை எடுத்துட்டு ஓடிட்டானுங்க. காருக்காரனுங்க திரும்பி வந்து பாக்கறப்போ காசைக் காணோம். அப்பறம் என்ன, போலீஸ்தான். பணம் என்னமோ யானை வாயில போன கரும்புதான்.

அப்படி என்னங்க பணம் என்ன பொண கனமா இருக்கும்? அந்தப் பணத்தை கையோட எடுத்துட்டுப் போறதுக்கு அத்தனை கஷ்டமா? இப்ப பணம் முச்சூடும் போய்ட்டுதே, எந்தக் குட்டிச் செவுத்துல போயி முட்டிக்கறது?

இவங்க எல்லாம் எந்த ஜன்மத்தில திருந்துவாங்க?




  

புதன், 25 ஜனவரி, 2012

பொழுது எப்படி போகுதுங்க?


கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப் போகும்போது சமீப காலங்களில் நான் படும் கஷ்டங்கள் பலவகையானவை. முதல் சங்கடம் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் அறிமுகமில்லாதவர்கள். இதில் ஒன்றும் தொந்தரவு இல்லை. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு எதையாவது கற்பனையில் மூழ்கி இருப்பேன்.

இந்த நூற்றில் ஒருவர் தெரிந்தவர் இருக்கிறாரே அவரிடம் சிக்கிக் கொண்டால்தான் கஷ்டமே ஆரம்பிக்கும். கொஞ்ச நேரம் ஏதாவது பொதுப்படையாகப் பேசிக்கொண்டு இருந்த பிறகு அவர் இந்த பிரம்மாஸ்திரத்தை பிரயோகிப்பார். “பொழுது எப்படி போகுதுங்கஅப்படீன்னு கேப்பார்.

நானோ பணியிலிருந்து ஓய்வு பெற்றவன். ஒரு வேலையும் கிடையாது. வேலைக்குப் போவதென்றாலும் வயது ஆகிவிட்டது. என்னுடைய வயதுக்கு எங்கவது கம்பெனியில் காவல்காரன் வேலைதான் கொடுப்பார்கள். அந்த வேலைக்குப் போவதற்கு என் சுயமரியாதை இடம் கொடுக்காது. ஆகவே வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டுசும்மாஇருக்கிறேன்.

திடீரென்று நம்மைப் பார்த்துபொழுது எப்படிப் போகுதுங்கஎன்று கேட்டால் பதில் சொல்வது கொஞ்சம் கடினம்தான். நான் இதற்கு ஒரு பதில் வைத்திருக்கிறேன்.

காலைல 3 மணிக்கு எழுந்திருப்பனுங்க, பல வெளக்கி மூஞ்சி கழுவிட்டு, சமையல் ரூம்ப்ல போயி ஒரு காப்பி போட்டுக் குடிப்பனுங்க. அப்புறம் கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இன்டர்நெட்ல பிளாக் பார்ப்பனுங்க. அப்புறம் 6 மணிக்கு விடியுதுங்களா, எந்திருச்சு வாக்கிங்க் போவனுங்க, …… .” இந்த ஸ்டேஜ் வரப்பவே பல பேர் வேற கிராக்கிய பார்த்துட்டு ஓடிடுவாங்க.

சில சமயம் அவங்களையே பார்த்துபொழுது போகமாட்டேங்குது, என்ன பண்ணலாம், சொல்லுங்கஅப்படீன்னாப் போதும். பார்ட்டி ஓடிடும்.

அப்புறம் சிலர்பென்சன் எவ்வளவு வருதுஅப்படீம்பாங்க. ஏதோ நான் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படற மாதிரியும், இவர்கள் நமக்கு அனுதாபம் காட்டுகிற மாதிரியும் சீன் போடுவாங்க. உண்மையான பென்ஷனைச் சொன்னால் இவர்கள் ஒன்று நம்ப மாட்டார்கள் அல்லது நான் பொய் சொல்லுகிறேன் என்று நினைப்பார்கள். ஆகவே நான் யாரிடமும் என் உண்மையான பென்ஷன் தொகையைச் சொல்வது இல்லை.

அவர்களிடமே பதில் கேள்வி கேட்பேன். எவ்வளவு வரும்னு நெனைக்கிறீங்க அப்படீம்பேன். என் பென்ஷனில் நாலில் ஒரு பங்கு சொல்வார்கள். ஆமாங்க, ஏறக்குறைய அவ்வளவுதானுங்க வருது என்று சொல்லிவிட்டால் அப்புறம் வாயைத் தெறக்க மாட்டார்கள்.
இப்படியாகத்தானே என் ஓய்வு வாழ்க்கை ஒடிக்கொண்டு இருக்கிறது.


திங்கள், 23 ஜனவரி, 2012

நீங்கள் சாதனையாளரா?


"வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்வதில் என்ன பயன்? வாழ்நாளில் ஏதாவது ஒரு சாதனை செய்வதுதான் பிறவியின் பயனை அடைந்ததாகும்."

இவ்வாறு பல அறிஞர்கள் தங்கள் நூல்களிலும், பேச்சாளர்கள் தங்கள் மேடைப் பேச்சுகளிலும் முழங்குவதைப் படித்தும் கேட்டுமிருப்பீர்கள்.
நம் வாழ்நாளில் பல சாதனையாளர்களைப் பார்த்தும் இருக்கிறோம். அவர்கள் லட்சத்தில் ஒருவராகவோ அல்லது கோடியில் ஒருவராகவோதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற வகையைச் சேர்ந்தவர்களே. நானும் அப்படித்தான்.

நீங்கள் ஒரு சாதனையாளராக இருந்தால் மிக்க சந்தோஷம். அதற்காக முயற்சி செய்பவராக இருந்தால் வாழ்த்துக்கள். அப்படி இல்லையென்றால் அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை. அப்படியிருக்கும் நாம்தான் பெரும்பான்மைக் கட்சி. அதற்காக நாம் எந்த குற்ற உணர்ச்சியுடனும் வாழவேண்டியதில்லை.

நீங்கள் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்பட்டு உங்கள் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டிருந்தால், அதுவே போதும் உங்களை முழு மனிதன் என்று சொல்வதற்கு. உலக மனிதர்கள் அனைவரும் சாதனையாளர்களாக மாறினால் இந்த உலகம் தாங்குமா?