வியாழன், 28 ஜூன், 2012

நாட்டிய அரங்கேற்றங்கள்.

சமீபத்தில் இரண்டு நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தேன். நாட்டியம் ஒரு நுண்கலை. நுண்கலைகளுக்கென்றே சிலர் இருக்கிறார்கள். மற்றும் சிலர் இதில் ஆர்வம் மிகுந்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சங்கீதம்  (அரங்கேற்றம்) மாதிரி இது சாதாரண விஷயமில்லை.

மிகுந்த வசதி படைத்தவர்களுக்கே சாத்தியமாகக்கூடிய ஒரு விஷயம். ஏறக்குறைய ஒரு ஐந்து வருடம் ஒரு நல்ல குருவிடம் பயிற்சி பெறவேண்டும். அந்தக் குருவிற்கு கலை ஞானத்துடன் நல்ல லோகாதய அனுபவமும் வேண்டும். இல்லாவிட்டால் கற்றுக்கொண்ட கலை குடத்தினுள் விளக்காகப் போய்விடும்.

ஓரளவு நாட்டியம் கற்றுத் தேர்ந்தவுடன் அரங்கேற்றம் செய்யவேண்டும். அரங்கேற்றம் நடத்துவது என்பது ஒரு கல்யாணம் நடத்துவது போலத்தான். அந்த அளவு சிரமங்களும் செலவுகளும் பிடிக்கும். ஒரு சில லட்சங்கள் ஆகும்.


முதலில் ஒரு குளிரூட்ட வசதி உள்ள ஹால் வேண்டும். ஒளி, ஒலிக்கருவிகள், போட்டோ, விடியோ எடுக்க ஸ்பெஷலிஸ்ட்டுகள், அரங்கு அலங்காரம், விளம்பரம், இன்விடேஷன், நடன மணிகளைப் பற்றி ஒரு விளக்க அட்டை, நடன மணிக்கு உடைகள், அலங்காரம் செய்பவர், குரு, பக்க வாத்தியம், அவர்களுக்கு சம்பாவனை, தலைமை தாங்க ஒரு பெரிய மனிதர், அரங்கேற்றம் முடிந்த பிறகு விருந்து, இப்படி ஏகப்பட்ட வேலைகள்.

தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று வருபவர்களை வரவேற்று அரங்கேற்றத்தை நடத்தி முடித்தால் பெரிய விடுதலையாக இருக்கும். ஆனாலும் அந்தப் பெண்ணின் கல்யாணம் முடியும் வரையிலும் இதைப்பற்றியே பெருமை பேசிக்கொண்டிருக்கலாம்.

அரங்கேற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் அதற்கப்புறம் நிகழ்ச்சிகள் செய்வது அபூர்வம். அதை முழுநேர தொழிலாக ஏற்றுக்கொள்பவர்கள் பெரும்பாலும் இல்லை.

ஆனாலும் இதற்காக அந்தப்பெண்ணும் அவர்கள் குடும்பத்தாரும் படும் பாடு இருக்கிறதே அது ஒரு சரித்திரக் காவியம்!