திங்கள், 29 அக்டோபர், 2012

முக்காத் துட்டுக்கு கருப்பட்டி வாங்கீட்டு வாடோய்!


அந்தக் காலத்தில இந்த சொல்லை அடிக்கடி கேட்கலாம். பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் சொல்லக் கூடிய வாக்கியம் இது.

இதனுடைய உட்பொருள் ஒரு உதாரணம் சொன்னால்தான் சரியாக விளங்கும். ஊர்ல செல்வாக்கான ஒருத்தர், அவருக்கு வேண்டாதவனைப் பற்றி ஏதோ திட்டி விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எல்லா ஊர்களிலும் நாரதர்கள் இருப்பார்கள். அதில் ஒருத்தன் அந்த திட்டப்பட்டவனிடம் போய் வத்தி வைப்பான். அவனுக்கும் கோபம் வந்து இவனைப்பற்றி ஏதாவது மோசமாகச் சொல்லுவான். இந்த நாரதர் திரும்ப வந்து இவரிடம் ஒண்ணுக்கு ரெண்டாக பத்த வைப்பான்.

இத பாருங்க அவன் உங்க கையை வெட்டறேனுங்கறானுங்க என்பான். இவருக்கும் கோபம் வரும். அப்போது அவர் வழக்கமாகச் சொல்லும் வார்த்தை என்னவென்றால், ஊம், அவனுக்குப் பயந்துகிட்டு நான் எறும்புக் குழியிலதான் ஒளிஞ்சுக்கோணும், போயி முக்காத்துட்டுக்கு கருப்பட்டி வாங்கிட்டு வா, என்பார். கருப்பட்டி எதற்கென்றால், கருப்பட்டிய வாசல்ல போட்டா, அதைத்தேடி எறும்புகள் வரும், அப்போ எறும்புக்குழி எங்க இருக்குன்னு தெரியும், அதுல போயி ஒளிஞ்சுக்கப்போறேன் என்று பொருள். எறும்புக்குழிக்குள் மனிதன் ஒளிய முடியாதென்று நன்றாகத் தெரியும். ஆனாலும் ஒரு எகத்தாளத்திற்காக சொல்லும் வார்த்தை இது.

இந்த பீடிகை எதற்கென்றால், நான் இனிமேல் ஒரு பதிவு போட்டவுடன் முக்காத்துட்டுக்கு கருப்பட்டி வாங்கீட்டு வந்து வச்சுக்கப்போறேன். யாராச்சும் என் பதிவில அது சொத்தை இது சொத்தைன்னு போலீஸ்ல புகார் செஞ்சா, உடனே அந்த எறும்புக் குழிக்குள்ள போயி ஒளிஞ்சக்கப் போறேன். எல்லாப் பதிவர்களும் இப்படியே செய்யவும்.

பின்குறிப்பு: அந்தக் காலத்தில ரூபாய் அணா பைசாக்கள் புழக்கத்தில் இருந்தது பெரியவங்களுக்கு ஞாபகம் இருக்கும். அப்போ ஒரு துட்டு என்பது நாலு பைசா அதாவது இன்றைய இரண்டு நயா பைசாவுக்கு சமம். முக்காத்துட்டு என்பது மூன்று பைசா அதாவது காலணா. புழக்கத்தில் இருக்கும் மிகச்சிறிய நாணயம். அதுக்கே இரண்டு அச்சு வெல்லம் கொடுப்பார்கள்.

ஒரு பணம் என்பது நான்கு அணா, கால் ரூபாய். கோமணத்தில ஒரு பணம் இருந்தா கோழி கூவறப்ப பாட்டு வரும் என்பது அந்தக் காலத்து பழமொழி.

கணக்குப்புலிகளுக்கு: இந்தக் கணக்கை மனக்கணக்காகப் போடவேண்டும். பேப்பர், பேனா வைத்துப் போடக்கூடாது.

காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் கத்தரிக்காய் என்றால் காசுக்கு எத்தனை கத்தரிக்காய்?