வெள்ளி, 2 நவம்பர், 2012

சுகப்பிராப்தியும் துக்க நாஸ்தியும்

[இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதை பராமரிக்கும் ஒரு சக்தி இருக்கலாம். ஆனால் அது என்ன என்று மனிதன் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அதுவரையிலும் நாம் இந்த சாஸ்திரங்களையுக் புராணங்களையும் இதிகாசங்களையும் படித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவைகளை எவ்வளவு நம்பலாம் என்பதை, அவைகளின் தோற்றங்களை ஆராய்ந்து பிறகு முடிவு எடுங்கள்.]சுகம் - உலகில் பிறந்துள்ள அத்துணை ஜீவராசிகளும் இதைத்தான் விரும்புகின்றன. அதாவது துன்பமில்லாத, இன்ப வாழ்வு. ஆனால் இத்தகைய வாழ்வு தேவலோகத்தில் வாழ்பவர்களுக்குக் கூட கிடைப்பதில்லை என்றுதான் பல புராணங்கள் மூலமாக அறிகிறோம்.

அசுரர்களுக்கு மும்மூர்த்திகள் அவர்கள் கேட்ட வரங்களை முன்பின் யோசியாமல் தருவதும், பிறகு அதனால் வரும் துன்பங்களை மும்மூர்த்திகளில் இன்னொருவர் தீர்ப்பதுவும், காலங்காலமாக நடந்துவரும் தொடர்கதை. இராவணனுக்கு வரம் கொடுப்பது ஏன், பிறகு அவனால் ஏற்படும் இன்னல்களுக்கு, ராமாவதாரம் எடுத்து அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து அவனைக் கொல்வானேன்?

இந்தப் புராணக்கதைகளைக் கேட்கும்போது சுஜாதாவின் துப்பறியும் கதைகள் எனக்கு ஞாபகம் வருவதைத் தடுக்க முடிவதில்லை. மனித வாழ்வில் ஏற்படும் அத்தனை திருப்பங்களும், வக்கிரங்களும், கடவுளர்களின் வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ளதாக, இந்தப் புராணங்கள் கூறுகின்றன. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுளர்கள் மனிதனைப்போல் நடந்து கொள்வதுதானே இயல்பு. புராணங்களில் மனிதனின் வக்கிர நடவடிக்கைகள் அனைத்தையும் கடவுள்களும் செய்திருப்பதாகத்தான் எழுதியிருக்கிறது. இப்படிப்பட்ட கருத்துகளை நான் எழுதுவதால் ஆஸ்தீகர்கள் என் மேல் வருத்தப்படலாம். ஆனால் நான் சொல்பவை பொய்யென்று சொல்லமுடியாது. ஆகவே மெய்யன்பர்களே, சிந்தியுங்கள். மெய்ஞ்ஞானம் பெறுங்கள். கடவுள் சிந்தாந்தத்தை, அதன் அடிப்படையை ஆராயுங்கள்.

நமக்கு மேல் உள்ள சக்தியைக் கண்டு பயப்படுவது மனிதனின் இயற்கை. அதனால்தான் ஆதி காலத்தில் சூரியன், சந்திரன், காற்று, மழை இவைகளைக் கண்டு பயந்தான். அவைகளைக் கடவுளாக எண்ணி வழிபடவும் செய்தான். நாளாவட்டத்தில் சிந்தனாவாதிகள் பல கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். நன்றாகக் கவனிக்கவும். கடவுள் மனிதனை உற்பத்தி செய்தாரோ என்னமோ, நமக்குத் தெரியாது. ஆனால் நாம் இன்று வழிபடும் கடவுள்களை உற்பத்தி செய்தது மனிதன்தான்.

இந்து மதத்தின் அடிப்படையான வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் மனிதனால்தான் கற்பனையில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதை நான் உறுதியாகச்சொல்லக் காரணம், இந்த உலகம் தோன்றி பல்லாயிரக் கணக்கான வருடங்கள் சென்ற பிறகுதான் மனிதன் தோன்றினான். மனிதன் தோன்றினபொழுது அவனுக்குப் பேசத் தெரிந்திருக்கவில்லை. நாளாவட்டத்தில்தான் மொழி தோன்றியது. மொழி தோன்றி பல காலம் கழித்துத்தான் வரிவடிவங்கள் தோன்றியிருக்கவேண்டும். அதன் பிறகுதான் இந்தக் கதைகள் உதித்திருக்கவேண்டும்.

கடவுள் ஆதாமை தோற்றுவித்தார். அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாளைத் தோற்றுவித்தார் என்னும் கதைகளை நம்புபவர்கள் இருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளுக்கு இந்தக் கதைகள் எவ்விதத்திலும் ஒத்துப் போகவில்லையே? இராவணன் புஷ்பக விமானத்தில் சீதையைக் கடத்தினான், ஆகவே பாரத நாட்டில் அன்றே இண்டியன் ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ் இருந்தது என்று அரசமரத்தடித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இப்படி சர்வ சக்தி வாய்ந்த கடவுளர்களே துக்கங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இது எப்படி என்று யோசிக்கவேண்டும். இவைகளிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. உலகில் பிறந்த எல்லோரும் சுகம், துக்கம் இரண்டையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது என்பதே. இதை உணர்ந்த மனிதன் தான் கற்பனை செய்த கடவுளர்களும் அப்படியே சுகம் துக்கம் இரண்டையும் அனுபவிக்குமாறு செய்துவிட்டான்.

ஆகவே, நண்பர்களே, கடவுளர்களின் கதைகளைக் கேட்கும்போது கொஞ்சம் நம் புத்தியையும் செலவிட வேண்டும்.