வெள்ளி, 2 நவம்பர், 2012

சுகப்பிராப்தியும் துக்க நாஸ்தியும்

[இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதை பராமரிக்கும் ஒரு சக்தி இருக்கலாம். ஆனால் அது என்ன என்று மனிதன் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அதுவரையிலும் நாம் இந்த சாஸ்திரங்களையுக் புராணங்களையும் இதிகாசங்களையும் படித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவைகளை எவ்வளவு நம்பலாம் என்பதை, அவைகளின் தோற்றங்களை ஆராய்ந்து பிறகு முடிவு எடுங்கள்.]சுகம் - உலகில் பிறந்துள்ள அத்துணை ஜீவராசிகளும் இதைத்தான் விரும்புகின்றன. அதாவது துன்பமில்லாத, இன்ப வாழ்வு. ஆனால் இத்தகைய வாழ்வு தேவலோகத்தில் வாழ்பவர்களுக்குக் கூட கிடைப்பதில்லை என்றுதான் பல புராணங்கள் மூலமாக அறிகிறோம்.

அசுரர்களுக்கு மும்மூர்த்திகள் அவர்கள் கேட்ட வரங்களை முன்பின் யோசியாமல் தருவதும், பிறகு அதனால் வரும் துன்பங்களை மும்மூர்த்திகளில் இன்னொருவர் தீர்ப்பதுவும், காலங்காலமாக நடந்துவரும் தொடர்கதை. இராவணனுக்கு வரம் கொடுப்பது ஏன், பிறகு அவனால் ஏற்படும் இன்னல்களுக்கு, ராமாவதாரம் எடுத்து அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து அவனைக் கொல்வானேன்?

இந்தப் புராணக்கதைகளைக் கேட்கும்போது சுஜாதாவின் துப்பறியும் கதைகள் எனக்கு ஞாபகம் வருவதைத் தடுக்க முடிவதில்லை. மனித வாழ்வில் ஏற்படும் அத்தனை திருப்பங்களும், வக்கிரங்களும், கடவுளர்களின் வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ளதாக, இந்தப் புராணங்கள் கூறுகின்றன. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கடவுளர்கள் மனிதனைப்போல் நடந்து கொள்வதுதானே இயல்பு. புராணங்களில் மனிதனின் வக்கிர நடவடிக்கைகள் அனைத்தையும் கடவுள்களும் செய்திருப்பதாகத்தான் எழுதியிருக்கிறது. இப்படிப்பட்ட கருத்துகளை நான் எழுதுவதால் ஆஸ்தீகர்கள் என் மேல் வருத்தப்படலாம். ஆனால் நான் சொல்பவை பொய்யென்று சொல்லமுடியாது. ஆகவே மெய்யன்பர்களே, சிந்தியுங்கள். மெய்ஞ்ஞானம் பெறுங்கள். கடவுள் சிந்தாந்தத்தை, அதன் அடிப்படையை ஆராயுங்கள்.

நமக்கு மேல் உள்ள சக்தியைக் கண்டு பயப்படுவது மனிதனின் இயற்கை. அதனால்தான் ஆதி காலத்தில் சூரியன், சந்திரன், காற்று, மழை இவைகளைக் கண்டு பயந்தான். அவைகளைக் கடவுளாக எண்ணி வழிபடவும் செய்தான். நாளாவட்டத்தில் சிந்தனாவாதிகள் பல கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். நன்றாகக் கவனிக்கவும். கடவுள் மனிதனை உற்பத்தி செய்தாரோ என்னமோ, நமக்குத் தெரியாது. ஆனால் நாம் இன்று வழிபடும் கடவுள்களை உற்பத்தி செய்தது மனிதன்தான்.

இந்து மதத்தின் அடிப்படையான வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தும் மனிதனால்தான் கற்பனையில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதை நான் உறுதியாகச்சொல்லக் காரணம், இந்த உலகம் தோன்றி பல்லாயிரக் கணக்கான வருடங்கள் சென்ற பிறகுதான் மனிதன் தோன்றினான். மனிதன் தோன்றினபொழுது அவனுக்குப் பேசத் தெரிந்திருக்கவில்லை. நாளாவட்டத்தில்தான் மொழி தோன்றியது. மொழி தோன்றி பல காலம் கழித்துத்தான் வரிவடிவங்கள் தோன்றியிருக்கவேண்டும். அதன் பிறகுதான் இந்தக் கதைகள் உதித்திருக்கவேண்டும்.

கடவுள் ஆதாமை தோற்றுவித்தார். அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாளைத் தோற்றுவித்தார் என்னும் கதைகளை நம்புபவர்கள் இருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளுக்கு இந்தக் கதைகள் எவ்விதத்திலும் ஒத்துப் போகவில்லையே? இராவணன் புஷ்பக விமானத்தில் சீதையைக் கடத்தினான், ஆகவே பாரத நாட்டில் அன்றே இண்டியன் ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ் இருந்தது என்று அரசமரத்தடித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இப்படி சர்வ சக்தி வாய்ந்த கடவுளர்களே துக்கங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இது எப்படி என்று யோசிக்கவேண்டும். இவைகளிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. உலகில் பிறந்த எல்லோரும் சுகம், துக்கம் இரண்டையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது என்பதே. இதை உணர்ந்த மனிதன் தான் கற்பனை செய்த கடவுளர்களும் அப்படியே சுகம் துக்கம் இரண்டையும் அனுபவிக்குமாறு செய்துவிட்டான்.

ஆகவே, நண்பர்களே, கடவுளர்களின் கதைகளைக் கேட்கும்போது கொஞ்சம் நம் புத்தியையும் செலவிட வேண்டும்.

25 கருத்துகள்:

 1. "மனுஷ்யன் மதங்களை ஸ்ருஷ்டிச்சு
  மதங்கள் தெய்வங்களை ஸ்ருஷ்டிச்சு
  மனுஷ்யனும் மதங்களும் தெய்வங்களும் சேர்ந்நு
  மனசு பங்கு வச்சு"

  இது ஒரு பழைய மலையாளப் பாடல்.

  நான் சொல்ல நினைக்கறதை இது சொல்லுது.

  பதிலளிநீக்கு
 2. //…….. ஆகவே மெய்யன்பர்களே, சிந்தியுங்கள். மெய்ஞ்ஞானம் பெறுங்கள். கடவுள் சிந்தாந்தத்தை, அதன் அடிப்படையை ஆராயுங்கள். //

  சிந்தனை செய் மனமே! தினமே!

  பதிலளிநீக்கு
 3. // இப்படிப்பட்ட கருத்துகளை நான் எழுதுவதால் ஆஸ்தீகர்கள் என் மேல் வருத்தப்படலாம். ஆனால் நான் சொல்பவை பொய்யென்று சொல்லமுடியாது.//
  உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனாலும் நீங்கள் சொல்வது சரியே!

  பதிலளிநீக்கு
 4. நல்ல விளக்கம் சார்...

  இதோ கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகள் :

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
  பிறந்து பாரென இறைவன் பணித்தான்...!

  படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
  படித்துப் பாரென இறைவன் பணித்தான்...!

  அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
  அறிந்து பாரென இறைவன் பணித்தான்...!

  அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
  அளித்துப் பாரென இறைவன் பணித்தான்...!

  பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
  பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்...!

  மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
  மணந்து பாரென இறைவன் பணித்தான்...!

  பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
  பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்...!

  முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
  முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்...!

  வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
  வாடிப் பாரென இறைவன் பணித்தான்...!

  இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
  இறந்து பாரென இறைவன் பணித்தான்...!

  "அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
  ஆண்டவனே நீ ஏன்..?" எனக் கேட்டேன்...!

  ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
  'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்...!

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  அனுபவமே கடவுள்.... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. உலகில் பிறந்த எல்லோரும் சுகம், துக்கம் இரண்டையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது ...

  சிந்திக்கவைத்த சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 6. இராவணன் புஷ்பக விமானத்தில் சீதையைக் கடத்தினான், ஆகவே பாரத நாட்டில் அன்றே இண்டியன் ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ் இருந்தது என்று அரசமரத்தடித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

  தகவல் பிழையை வன்மையாகக் கண்டிக்கிறேன்! அது இண்டியன் ஏர்லைன்ஸ் அல்ல - ஏர் லங்கா:-) இந்தியாவில் அல்ல, இலங்கையிலிருந்துதான் செயல்பட்டது:-))

  சரவணன்

  பதிலளிநீக்கு
 7. கிரேக்க, ரோமானிய புராணங்களும் வெகு சுவாரசியமாக இருக்கும். அவற்றை அடிப்படையாக வைத்து ஏராளமான நாவல்களும், திரைப்படங்களும் வெளிவருகின்றன. 'பெர்சி ஜாக்ஸன் அன் தி ஒலிம்பியன்ஸ்', 'ஹீரோஸ் ஆஃப் ஒலிம்பஸ்' ஆகிய நாவல் தொடர்கள் சக்கைப்போடு போடுகின்றன. இரண்டாவது தொடரில் நாலாவது பாகமான 'மார்க் ஆஃப் ஏதெனா' ஒரு மாதம் முன்பே வெளிநாடுகளில் வெளிவந்துவிட்டாலும் இங்கு நவம்பர் பாதியில்தான் வெளியாகுமாம்... அதற்காகப் பல்லாயிரம் ப்ரீ டீன், டீன் குழந்தைகள் பொறுமையிழந்து காத்திருக்கிறார்கள்!

  சரவணன்

  பதிலளிநீக்கு

 8. நீங்கள் எதையோ சொல்ல வருகிறீர்கள் , ஆனால் முழுவதையும் சொல்ல விடாமல் ஏதோ தடை செய்கிறது என்று தோன்றுகிறது. தோன்றும் எண்ணங்களுக்கு வடிகால் கொடுக்காவிட்டால் அவை வாடிய சருகு போல் ஆகிவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்திக்க வைக்கத்தான் நினைக்கிறேன். (என்னையும் சேர்த்து) சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டும்.

   நீக்கு
 9. \\அசுரர்களுக்கு மும்மூர்த்திகள் அவர்கள் கேட்ட வரங்களை முன்பின் யோசியாமல் தருவதும், பிறகு அதனால் வரும் துன்பங்களை மும்மூர்த்திகளில் இன்னொருவர் தீர்ப்பதுவும், காலங்காலமாக நடந்துவரும் தொடர்கதை.\\ எப்பவுமே சிவனும், பிரம்மாவும் வரம் குடுத்து மாட்டிக்குவாங்க, விஷ்ணுதான் அவங்களை அதிலிருந்து காப்பாற்றி விடுவிப்பார். எங்கேயாச்சும் விஷ்ணு தப்பா வரம் குடுத்ததாகவோ அதை மத்தவங்க வந்து தீர்த்து வைத்ததாகவோ புராணத்தில் இருக்கா, இருந்தால் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
 10. \\இராவணனுக்கு வரம் கொடுப்பது ஏன், பிறகு அவனால் ஏற்படும் இன்னல்களுக்கு, ராமாவதாரம் எடுத்து அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து அவனைக் கொல்வானேன்?\\ அவர் கஷ்டங்களை அனுபவித்தேன் என்று எப்பவாச்சும் சொன்னாரா? இராமாயனத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறீர்களா? இராமர் பாருங்க எப்பவும் புன்னகை பூத்த மாதிரி இருப்பாரு, மத்தவங்களை போட்டுத் தள்ளும்போது கூட. எந்த சூழ்நிலையிலும் கூலை இழக்காமல் இருப்பவர்தான் கடவுள். மனிதனுக்கு பாடம் கற்ப்பிக்க இறைவன் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றுகிறான், அவை புராணங்களாக வடிக்கப் பட்டுள்ளன. அதனால் அவனும் நம்மைப் போல கஷ்டப் படுகிறான் என்பது அறியாமை.

  பதிலளிநீக்கு
 11. \\மனித வாழ்வில் ஏற்படும் அத்தனை திருப்பங்களும், வக்கிரங்களும், கடவுளர்களின் வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ளதாக, இந்தப் புராணங்கள் கூறுகின்றன.\\ தவறான புரிதல்.

  \\ஆகவே மெய்யன்பர்களே, சிந்தியுங்கள். மெய்ஞ்ஞானம் பெறுங்கள்.\\ புராணமெல்லாம் புருடான்னு சொல்லிட்டீங்க, அதுக்கப்புறம் மெய்ஞ்ஞானம்ன்னு எதை சொல்றீங்க அல்லது அது எங்கே கிடைக்குதுன்னும் சொல்லுங்களேன்!!

  பதிலளிநீக்கு
 12. \\நமக்கு மேல் உள்ள சக்தியைக் கண்டு பயப்படுவது மனிதனின் இயற்கை. அதனால்தான் ஆதி காலத்தில் சூரியன், சந்திரன், காற்று, மழை இவைகளைக் கண்டு பயந்தான். அவைகளைக் கடவுளாக எண்ணி வழிபடவும் செய்தான். நாளாவட்டத்தில் சிந்தனாவாதிகள் பல கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். நன்றாகக் கவனிக்கவும். கடவுள் மனிதனை உற்பத்தி செய்தாரோ என்னமோ, நமக்குத் தெரியாது. ஆனால் நாம் இன்று வழிபடும் கடவுள்களை உற்பத்தி செய்தது மனிதன்தான்.\\

  பகவத் கீதையை படிச்சா இந்த மாதிரி நெருப்பைப் பார்த்து பயந்தவன், இருட்டைப் பார்த்து பயந்தவன் எழுதியது மாதிரி இல்லை. அதில் கொடுக்கப் பட்டுள்ள அறிவு, இன்றைக்கு அணுகுண்டு செய்தவனையே மிரள வைக்கும் அளவுக்கு உள்ளது. ஐன்ஸ்டீனே மெச்சிய அறிவு அதில் உள்ளது. பூமியை கோளம் என்ற அறிவு புராணங்களில் உள்ளது, தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று சொன்ன விஞ்ஞானம் புராணங்களில் உள்ளது. இதையெல்லாம் பாம்பையும் பல்லியையும் பார்த்து பயந்த கோழைகளின் உருவாக்கம் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை.

  பதிலளிநீக்கு
 13. \\ஆகவே, நண்பர்களே, கடவுளர்களின் கதைகளைக் கேட்கும்போது கொஞ்சம் நம் புத்தியையும் செலவிட வேண்டும்.\\ எதைக் கேட்பதானாலும் தகுதியான நபர் வாயிலிருந்து கேட்கவேண்டும். தனிப்பட்ட முறையில் நாம் ஒன்றும் மேதாவிகள் அல்ல, நம் அறிவுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்கு அப்பாற்ப்பட்டது இருக்கவே முடியாது என்பது மமதை. எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருத்தர் நினைத்தால் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதன் அப்பட்டமான வெளிப்பாடாகவே அது இருக்கும். மருத்துவம், சட்டம், கட்டுமானம் என அத்தனைக்கும் வல்லுனர்களைத் தேடும் நாம், ஆன்மிகம் என வந்துவிட்டால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற தத்துவத்தை தழுவ ஆரம்பித்து விடுகிறோம். விளைவு, தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரும் ஞானியாகி போதிக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆன்மீகத்தின் முதல் படியே தகுதியான குருவை ஏற்ப்பதுதான் அதை யாருமே செய்வதில்லை ஆனால் ஒவ்வொருத்தரும் போதனை மட்டும் செய்கிறோம். ஆகையினால் உண்மை நம் கண்களுக்கு ஒருபோதும் புலப்படுவதில்லை, நம் இருட்டு மனது எதையெல்லாம் கற்ப்பிக்கிறதோ அதையே உண்மை என்று நம்புகிறோம். E=MC2 என்பதை கணிதம் தெரியாத ஒருத்தர் அர்த்தமற்ற வார்த்தை என்பார் ஆனால் படித்தவர் அதனுள் அணுகுண்டு தயாரிக்கும் ரகசியமும் சூரியன் ஒளிரும் ரகசியமும் உள்ளது என்பர். புராணங்களையும் இதிகாசங்களையும் நேரடியாகப் பயில முயற்சி செய்தால் ஒன்னும் விளங்காது, அதைப் பாத்து பயந்தான் இதைப் பாத்து பயந்தான், என்று மற்றவர்களையும் குழப்பி தானும் குழம்பிப் போய் வேண்டியது தான். ஆன்மீகத்திலும் அந்த மாதிரி கற்றுத் தேர்ந்த வல்லுனரிடம் சென்று அறிந்து கொள்ள வேண்டும்.

  tad viddhi pranipatena
  pariprasnena sevaya
  upadeksyanti te jnanam
  jnaninas tattva-darsinah

  Just try to learn the truth by approaching a spiritual master. Inquire from him submissively and render service unto him. The self-realized soul can impart knowledge unto you because he has seen the truth.

  பதிலளிநீக்கு
 14. புத்தியை ரொம்ப செலவிடுவதால் தான் இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகிறதோ என்று கூட ஒரொரு சமயம் தோன்றுகிறது.

  தெய்வத்தின் மேல் குருட்டு நம்பிக்கை வைப்பது, வாழ்வில் சில பதில் சொல்லமுடியாத/தெரியாத கேள்விகளுக்கு பதில் தேடி அலைய வேண்டியதை குறைக்கும்.

  அந்தக் குருட்டு நம்பிக்கையை வரவைப்பதுதான் தெய்வங்களைப் பற்றிய கதைகள்.

  உங்கள் கருத்திலிருந்து முரண் படுவதற்கு மன்னிக்கவும்!

  பதிலளிநீக்கு
 15. ஒரு கேள்வி? சாமி கண்ணைக்குத்துமா? நான் கேட்பது கந்தசாமியைப் பற்றி!

  பதிலளிநீக்கு
 16. புராணங்கள் கற்பனைகள் என்பதிலிருந்து நான் வேறுபடுகிறேன்! நம்மை மீறிய சக்தி இருக்கிறது! இதை அனுபவத்தில் உணரலாம். தெய்வங்களும் கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பது எப்படி? இராமர் அனுபவித்தார்ர் என்றால் அது அவதாரம் மனிதனாக அவதரித்து மனிதன் படும் இன்னல்களை பட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமே! இதில் மேலும் விவாதிக்க இன்னும் நான் படிக்க வேண்டும்! ஆனால் உங்கள் கருத்தில் எனக்கு உடன் பாடு இல்லை!

  பதிலளிநீக்கு
 17. ஐயா! நீங்கள் சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்; என்ன? சிலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


  Just try to learn the truth by approaching a spiritual master---எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு கிடக்குமோ? தெரியவில்லை.எல்லாக் குருவில் வண்டவாளம் எல்லாம் தானே இப்போ புட்டுக் கொண்டு தெரியுது.
  எல்லோருக்கும் தீபாவளிக்கு ஆசிவழக்கிய லோககுரு சங்காராச்சாரிக்கு ,தீபாவளிக்கு முதல் அம்மா களி போடப்போறா? என்பது தெரியவில்லை. அவர் "அம்மணிகளுக்கு" அதிகாலை 5 மணிக்கே நல்ல காலம் சொல்லிக்கிட்டிருந்தார்.அம்மணிகளுக்கு அருள்வழங்குவதில் சாமிமாருக்கு அப்படி என்ன? ஆர்வமுங்க!இனியுமா? சாமிகளைத்தேடிப்போக வேண்டும்.
  கொஞ்சநாளா குருமார் நல்லாக் காட்டி விட்டாங்க , போதும்,போங்கோ புழைக்கும் வழியைப் பார்ப்போம்.
  பின்னூட்டங்களில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. சாமி வியாபாரத்துக்குக் குறையில்லை.

  நான் 16 வயது மார்க்கண்டேயரைத் தேடுகிறேன். கண்டால் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 18. பதிவைப் படித்ததுமே ஜெயதேவதாஸ் பதில்களை எதிர்பார்த்தேன். திண்டுக்கல் தனபாலனும் சுவாரஸ்யமாக கண்ணதாசன் பாடலுடன் வந்து விட்டார்.

  பதிலளிநீக்கு
 19. //கடவுள் ஆதாமை தோற்றுவித்தார். அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாளைத் தோற்றுவித்தார் என்னும் கதைகளை நம்புபவர்கள் இருக்கலாம். ஆனால் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளுக்கு இந்தக் கதைகள் எவ்விதத்திலும் ஒத்துப் போகவில்லையே?//
  மனிதன் எப்படி தோன்றினான் என்பதற்கு விஞ்ஞானம் சொல்லும் பதிலும் ஒரு புராணம் எழுதும் அளவுக்கு இருக்கிறது என்பதே உண்மை.

  //இப்படி சர்வ சக்தி வாய்ந்த கடவுளர்களே துக்கங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.//
  எல்லாம் மனிதர்கள் செய்யும் அக்கிரமம் தாங்க முடியாமல்தான் :)

  பதிலளிநீக்கு
 20. விஷ்ணு ஜெயதேவ் தாஸ் ரொம்ப நல்லவரு...அவரு விஷ்ணுவை மட்டுமே நம்புவார். சிவன் எல்லாம் வெறும் முட்டை.

  இதுக்கு அது முட்டை...அதுக்கு இது முட்டை...முடிவில் அனைத்தும் கூமுட்டை...

  பதிவு நச்....ஆனா........எனக்குப் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 21. என்னுடைய எத்தனையோ காலத்து எண்ண வடிவுக்கு எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறீர்கள்,,
  {இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதை பராமரிக்கும் ஒரு சக்தி இருக்கலாம். ஆனால் அது என்ன என்று மனிதன் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. அதுவரையிலும் நாம் கடவுள் [மன அமைதிக்கு] என்கிற சக்தியை நம்பி தான் ஆக வேண்டியிருக்கிறது,,

  ஒரு வீடை தெரியாத உதாரணம்,,, டைனாசரஸைப் பற்றி ஏன் எந்த பைபிலிலோ,,இராமயணத்திலோ,,அல்லது குரானிலோ செய்திகள் இல்லை,,அவைகளை யார் படைத்தது என்கிற கேள்விக்கு பதில் இதுவரை இல்லை,,

  மனிதன் தோன்றிய பிறகு தான் மதங்கள் தோன்றியிருக்கிறது என்பதறகு இதைவிட என்ன உதாரணம் வேண்டிக்கிடகிறது,,

  இன்று தொள்பொருள் ஆராய்ச்சி மட்டும் இல்லை என்றால் இப்படி ஒரு பிரமாண்ட உயினம் வாழ்ந்தது என்கிற உண்மையே மனிதனுக்கு தெரியாமலே பொயிருக்கும்,,

  ஆனால் டைனாசரஸ் என்கிற பிரமாண்டமான உரினம் இந்த பூமியை மனிதனின் தோன்றலுக்கு பல வருடங்களுக்கு முன் ஆட்சி செய்தது என்பது மறுக்க முடியாத அறிவியல் உண்மை
  இதைப் பற்றி ஏன் எந்த மதப் புத்தகங்களிலும் இல்லை என்கிற கேள்விக்கு பதில் இதுதான்
  அவை மனிதனின் தோன்றலுக்கு பல்லாயிரம் அண்டுகள் முன் தோன்றிய மூத்த குடிமக்கள்,, ஆக பல வருடங்களுக்கு பின் பிறந்த
  பச்சிளம் குழந்தையான மனிதனுக்கு அதன் தேற்றம் தெரியாலே போய்விட்டது,,
  தெரிந்த்ருதால் கடவுள் அவைகளையும் மனிதனையும் ஒன்றாகத்தான் படைத்தார் அவைகள் அதிகான பாவச்செயலை செய்தன அதனால் கடவுள் மனிதனை மட்டும் காப்பாற்றிவிட்டு அவைகளை அழித்துவிட்டார் என ஒரு புருடா கதையை அவிழ்த்துவிட்டிருப்பான்,,

  ஆக நம்மை எல்லாம் படைத்த உண்மையான சக்தியை மதங்களை புரந்தள்ளிவிட்டு தேடுவோம் ,,உண்மையான ஆன்மீகத்தை வளர்ப்போம்

  பதிலளிநீக்கு
 22. மிக்க நன்றி. தெளிவாக சிந்திக்கும் ஒவ்வொருவரும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

  பதிலளிநீக்கு
 23. அய்யா நம்ம பக்கம் சாயுறாப் போல தெரியுது. ஆனாலும் கடவுள் இருக்கிறது என்று சொல்லி விடாதீர்கள்

  பதிலளிநீக்கு