திங்கள், 1 ஜூலை, 2013

ஒரு மூத்த பதிவரின் புலம்பல்கள்

நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்  - குறள் 948

பதிவெழுதுவது ஒரு பைத்தியமாக மாறிக்கொண்டு வருகிறது. எப்பொழுதும் சிந்தனை, அடுத்த பதிவு எப்பொழுது, எதைப்பற்றி என்பதைச் சுற்றியே வந்துகொண்டு இருக்கிறது. இந்த மாதிரிப் பைத்தியம் கல்யாணத்திற்கு முன்பு எங்கள் கிளப்பில் சீட்டு விளையாடினபோது வந்தது. மிகவும் சிரமப்பட்டு அதை குணப்படுத்தினேன்.

பதிவு போட்ட பின், பின்னூட்டம் வந்திருக்கிறதா, எத்தனை ஹிட்ஸ் வந்திருக்கிறது என்று பலமுறை பார்க்கத் தோன்றுகிறது. தமிழ்மணம் ரேங்க் எவ்வளவில் இருக்கிறது என்று தினந்தோறும் பார்க்கிறேன். ரேங்க் குறையக் குறைய ஏற்படும் மகிழ்ச்சி, அந்த ரேங்க் அதிகமாகும்போது துக்கமாக மாறுகிறது.

மற்றவர்கள் போடும் பதிவுகளின் தலைப்புகளை மட்டும்  நுனிப்புல் மேய்கிறேன். வெகு சில பதிவுகளை மட்டும் படித்து பின்னூட்டம் போடுகிறேன். ஆழமான படிப்பிற்கான பதிவுகள் அபூர்வமாகத்தான் எழுதப்படுகின்றன. அவைகளை ஆழமாகப் படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வருகிறேன்.

பேப்பரில், பேனாவினால் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது போன்று தோன்றுகிறது. ஒரு வித்தியாசத்திற்காக இந்தப் பதிவை முதலில் பேப்பரில் எழுதி பிறகு கம்ப்யூட்டரில் அச்சிடுகிறேன். யாருக்கும் கடிதம் எழுதுவது என்பது மறந்தே போய்விட்டது. யாரிடமிருந்தும் கடிதங்கள் வருவதும் இல்லை. தபால்காரனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்த காலங்கள் மறந்தே போனது.

தூங்கி எழுந்ததும் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து இணையத்தைப் பார்க்கத் தோன்றுகிறதே தவிர வேறு ஒரு வேலையையும் செய்யத்தோன்றுவதில்லை. புத்தகங்கள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. ஆரணி குப்புசாமி முதலியார் மற்றும் வடுவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் கதைகளை நடு ஜாமம் வரை படித்துவிட்டு, பின்பு பயத்தினால், ஒன்றுக்கு கூடப் போகாமல்,  தூக்கம் வராமல் கிடந்தது, ஏதோ போன ஜன்மத்தில் நடந்தது போல் இருக்கிறது.

பிரசங்கங்கள், கதா காலக்ஷேபங்கள், சங்கீதக் கச்சேரிகள், நாட்டியம், சினிமா ஆகியவற்றில் எனக்கு அபரிமிதமான பற்று ஒரு காலத்தில் இருந்தது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எங்கள் ஊரிலேயே  குமுதம் பிரதியை, முதல் ஆளாக, ஒவ்வொரு வாரமும் (அதற்கு முன்பு மாதம் மும்முறை)  விநியோகஸ்தர் பார்சலைப் பிரித்ததும்  வாங்கி, வீட்டிற்கு வருவதற்குள் அதை நடந்துகொண்டே படித்து முடித்தவன் நான் என்று சொன்னால் என் பேரப் பிள்ளகள் நம்ப மறுக்கிறார்கள்.

யூட்யூபில் இருந்து ஆயிரக்கணக்கான கர்னாடக இசைப் பாடங்களை டவுன்லோடு பண்ணி கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கிறேன். அவைகளை எப்போது கேட்பேன் என்று சொல்ல முடியவில்லை. அநேகமாக அடுத்த ஜன்மத்தில் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நாய் பெற்ற தங்கப் பழம் கதைதான்.

நல்லவேளை. பேஸ்புக், ட்விட்டர், செல்போன், எஸ் எம் எஸ், டி.வி. சீரியல், சினிமா விமரிசனம் எழுதுதல் ஆகியவைகளில் நான் சிக்கவில்லை. அப்படி சிக்கியிருந்தால் என்னை ஏர்வாடி தர்காவில்தான் சந்தித்திருக்கமுடியும்.

இது ஒரு  சரியான மனப்பிறழ்தல் நோய். உங்களுக்கும் இருக்கலாம். ஒரு பிரச்சினையை உணர்வதே அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதில் முதற்படியாகும். முதற்படி எடுத்து வைத்தாகிவிட்டது. எப்படியும் தீர்வை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.