திங்கள், 1 ஜூலை, 2013

ஒரு மூத்த பதிவரின் புலம்பல்கள்

நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்  - குறள் 948

பதிவெழுதுவது ஒரு பைத்தியமாக மாறிக்கொண்டு வருகிறது. எப்பொழுதும் சிந்தனை, அடுத்த பதிவு எப்பொழுது, எதைப்பற்றி என்பதைச் சுற்றியே வந்துகொண்டு இருக்கிறது. இந்த மாதிரிப் பைத்தியம் கல்யாணத்திற்கு முன்பு எங்கள் கிளப்பில் சீட்டு விளையாடினபோது வந்தது. மிகவும் சிரமப்பட்டு அதை குணப்படுத்தினேன்.

பதிவு போட்ட பின், பின்னூட்டம் வந்திருக்கிறதா, எத்தனை ஹிட்ஸ் வந்திருக்கிறது என்று பலமுறை பார்க்கத் தோன்றுகிறது. தமிழ்மணம் ரேங்க் எவ்வளவில் இருக்கிறது என்று தினந்தோறும் பார்க்கிறேன். ரேங்க் குறையக் குறைய ஏற்படும் மகிழ்ச்சி, அந்த ரேங்க் அதிகமாகும்போது துக்கமாக மாறுகிறது.

மற்றவர்கள் போடும் பதிவுகளின் தலைப்புகளை மட்டும்  நுனிப்புல் மேய்கிறேன். வெகு சில பதிவுகளை மட்டும் படித்து பின்னூட்டம் போடுகிறேன். ஆழமான படிப்பிற்கான பதிவுகள் அபூர்வமாகத்தான் எழுதப்படுகின்றன. அவைகளை ஆழமாகப் படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வருகிறேன்.

பேப்பரில், பேனாவினால் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது போன்று தோன்றுகிறது. ஒரு வித்தியாசத்திற்காக இந்தப் பதிவை முதலில் பேப்பரில் எழுதி பிறகு கம்ப்யூட்டரில் அச்சிடுகிறேன். யாருக்கும் கடிதம் எழுதுவது என்பது மறந்தே போய்விட்டது. யாரிடமிருந்தும் கடிதங்கள் வருவதும் இல்லை. தபால்காரனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்த காலங்கள் மறந்தே போனது.

தூங்கி எழுந்ததும் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து இணையத்தைப் பார்க்கத் தோன்றுகிறதே தவிர வேறு ஒரு வேலையையும் செய்யத்தோன்றுவதில்லை. புத்தகங்கள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. ஆரணி குப்புசாமி முதலியார் மற்றும் வடுவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் கதைகளை நடு ஜாமம் வரை படித்துவிட்டு, பின்பு பயத்தினால், ஒன்றுக்கு கூடப் போகாமல்,  தூக்கம் வராமல் கிடந்தது, ஏதோ போன ஜன்மத்தில் நடந்தது போல் இருக்கிறது.

பிரசங்கங்கள், கதா காலக்ஷேபங்கள், சங்கீதக் கச்சேரிகள், நாட்டியம், சினிமா ஆகியவற்றில் எனக்கு அபரிமிதமான பற்று ஒரு காலத்தில் இருந்தது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எங்கள் ஊரிலேயே  குமுதம் பிரதியை, முதல் ஆளாக, ஒவ்வொரு வாரமும் (அதற்கு முன்பு மாதம் மும்முறை)  விநியோகஸ்தர் பார்சலைப் பிரித்ததும்  வாங்கி, வீட்டிற்கு வருவதற்குள் அதை நடந்துகொண்டே படித்து முடித்தவன் நான் என்று சொன்னால் என் பேரப் பிள்ளகள் நம்ப மறுக்கிறார்கள்.

யூட்யூபில் இருந்து ஆயிரக்கணக்கான கர்னாடக இசைப் பாடங்களை டவுன்லோடு பண்ணி கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கிறேன். அவைகளை எப்போது கேட்பேன் என்று சொல்ல முடியவில்லை. அநேகமாக அடுத்த ஜன்மத்தில் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நாய் பெற்ற தங்கப் பழம் கதைதான்.

நல்லவேளை. பேஸ்புக், ட்விட்டர், செல்போன், எஸ் எம் எஸ், டி.வி. சீரியல், சினிமா விமரிசனம் எழுதுதல் ஆகியவைகளில் நான் சிக்கவில்லை. அப்படி சிக்கியிருந்தால் என்னை ஏர்வாடி தர்காவில்தான் சந்தித்திருக்கமுடியும்.

இது ஒரு  சரியான மனப்பிறழ்தல் நோய். உங்களுக்கும் இருக்கலாம். ஒரு பிரச்சினையை உணர்வதே அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதில் முதற்படியாகும். முதற்படி எடுத்து வைத்தாகிவிட்டது. எப்படியும் தீர்வை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

59 கருத்துகள்:

 1. :)))))))) ஐயோ பாவம் என்று சொல்ல மாட்டேன் .காரணம் இதே நோய் எனக்கும் உள்ளது .இங்கு பலருக்கும் இருக்கும். உங்களைப் போன்ற
  என்னைப் போன்றவர்கள் தான் ஒத்துக் கொள்வார்கள் :)) தமிழ் மணம் 1,2,3,..மேல போகாது என் தளத்திலும் யாரோ பேயை ஏவி விட்டுள்ளனர்
  ஐயா .என்றைக்காவது ஒரு நாள் பழைய மாதிரி 13 ஒட்டு விழும் என்று நம்பி வெம்பிக் கிடக்கிறேன் போதுமா .அது சரி தபால்காரன் என்றால்
  யாரு ?.....:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினமும் வீட்டுக்கு நீங்க எழுந்திரிக்கறதுக்கு முந்தி பால் கொண்டு வந்து போடுவானே, அவன்தான் தபால்காரன். நீங்க அவனைப் பாத்திருக்க மாட்டீங்க.

   நீக்கு
 2. தமிழ்மணம் ஓட்டுப் போட்டு விட்டேன் .இனிமேல் யாருக்குப் போட்டாலும் சரி போடாது போனாலும் சரி எனது ஒட்டு ஒன்று அதை எப்போதும் போடத் தவற மாட்டேன் போதுமா ?...சிரியுங்க ஐயா :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, அம்பாள் அடியாள். முப்பத்தியிரண்டு பல்லும் இருக்கிறவங்க சிரிச்சா பாக்கறதுக்கு நல்லா இருக்கும். பத்து பல்லோட இருக்கறவன் சிரிச்சா எப்படியிருக்கும், கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்க.

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றி, டீச்சரம்மா. எல்லோரும் உங்களை அப்படிக்கூப்பிடறாங்களே அப்படீன்னு நானும் கூப்பிட்டுட்டேன். தப்பில்லையே?

   நீக்கு
 4. தங்களைப் போல அனுபவத்தால் மூத்தவர்களிடம்
  இருந்து இளைய தலைமுறை தெரிந்து கொள்ள
  கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது
  இதை நோய் என வகைப்படுத்தாமல்
  அரிய வாய்ப்பு எனக் கருதுவீர்கள் ஆயின்
  நாங்கள் மிக மகிழ்வோம்
  தங்கள் பதிவைப் படித்தவுடனேயே
  இன்னும் சொல்வதற்கு உங்களிடம் நிறைய
  இருக்கிறது எனப் புரிகிறது
  தொடர்ந்தால் நிச்சயம் பயன்பெறுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதலைக் கூட நோய்னு சொல்றோமே ரமணி சார்?

   நீக்கு
  2. நன்றி ரமணி சார். ஒரு பதிவுக்கு ஐடியா கொடுத்ததற்கு இன்னொரு நன்றி.

   நீக்கு
 5. தீர்வு 1: மேலும் சரியாக முகநூல் செல்லுங்கள்... அங்கு தொடருங்கள்... இதைவிட அங்கே "எல்லாமே" இருக்கின்றன... "எல்லாமே" சரியாகி விடலாம்...

  தீர்வு 2: பிறகு...

  ஹிஹி... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. //முதற்படி எடுத்து வைத்தாகிவிட்டது. எப்படியும் தீர்வை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.//

  வாழ்த்துகள்! முதற்படி எடுத்து வைப்பது தான் சற்றே கடினம்.....

  பதிலளிநீக்கு
 7. இதே நோய் பலருக்கும் உண்டு. வலைப்பதிவை தாண்டி பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ், இன்ச்டாகிராம் என பேய் விரட்டுது. இதனால் தான் இதில் எதிலும் சிக்காமல் நான் தனி ரூட்டில் போகின்றேன். கணனியைத் தாண்டி வெளியே எவ்வளவோ இருக்கு. அவ் அனுபவங்களில் நல்லதை இணையத்தில் பகிரலாம், அது தான் வலைப்பதிவு. இவ் வலையில் சிக்கி சின்னா பின்னமாகும் முன், ஜூன் போனால் ஜூலைக் காற்றுப் பாடலைக் கேளுங்கள், " அறைக்குள்ளே மழை வருமா, வெளியே வா குதூகலமாய் ". இந்தப் பாடலை தினமும் காலை, மாலை பாராயணம் செய்து வந்தால் எல்லாப் பித்தும் தொலையுமய்யா. உபயம்: கூகுளாண்டவர் போற்றி போற்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி,நன்றி,நன்றி. அப்படியே பாராயணம் பண்ணீடறேன். இந்த மாதக் கடைசியில் ஊட்டி போகலாம் என்றிருக்கிறேன். அங்க போயி இந்த பாராயணத்தை ஆரம்பிக்கிறேன்.

   நீக்கு
 8. நாய் பெற்ற தங்கப் பழம் கதைதான்.

  சரியான உதாரணம் ..!

  பதிலளிநீக்கு

 9. பொழுது போகாமல் இருப்பதைத் தவிர்க்க எழுதத் துவங்கியது பொழுதே இல்லாமல் செய்து விடுகிறதா. பலரும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் என்ன .?உங்களுக்கு பதிலும் தெரியுமே. அதுதான் பதிவின் ஆரம்பத்திலேயே “ நோய்நாடி........” என்று எழுதி இருக்கிறீர்களே. எல்லாம் சரியாக வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. ஹிஹி இதற்கு தீர்வு தான் என்ன கம்ப்யூட்டரை பரணில் போடுவதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யய்யோ, இப்படி ஒரு சீக்கு இருக்குன்னு தெரிஞ்சாப்போதும். தானாகவே சரியாகிவிடும்.

   நீக்கு
 11. எல்லாரையுமே பைத்தியம் ஆக்கிவிட்டது இந்த வலைப்பூ உலகம் என்பதே உண்மை ஐயா..

  பதிலளிநீக்கு
 12. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் ஐயா....

  ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று தான் பதிவுலகுக்கே வந்திருக்கிறேன். ஏனோ புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் பிடித்து விட்டதால் கணினி முன் அமரவே பிடிக்கவில்லை....:))

  பதிலளிநீக்கு
 13. நல்லா ஓய்வெடுங்க. சிலதையெல்லாம் ஒதுக்கி பத்தியமா இருங்க.. வியாதி சரியாப்போகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓய்வெடுக்கிறதுதான் நம்ம முழு நேரத் தொழில். அதுக்காகத்தான் மாட்சிமை பொருந்திய சர்க்கார் எனக்கு ஓய்வூதியம் கொடுக்கிறாங்க.

   நீக்கு
 14. ஏக்கம் வந்தால் தூக்கம் போய்விடும்
  http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 15. நிறைய பேரை தாக்கிய தாக்கிக் கொண்டிருக்கிற நோய்தான்! அருமையாக சொன்னமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 16. நாம் கல்லின் மீது இடித்து விட்டு, கல் நம்மை தடுக்கி விட்டது என்பதைப் போலத்தான் இது.

  பதிலளிநீக்கு
 17. பெர்சு...இப்பவாவது புர்ஞ்சுகினியா! சரி...இனிமேல் உருப்பட்டு இன்னா ஆவப் போவுது!

  பதிலளிநீக்கு
 18. அச்சுக்கு அச்சு என் நிலைமையும் இதுதான். ஐய்யா.காலையில் எழுந்ததும் கண்முன்னாலிருக்கு ஸ்வாமி படத்துக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டு கணினியப் போட்டுவிடுகிறேன். ஒழுங்காகப் பின்னூட்டம் போடுவதில்லை. ஆனால் ஒன்று,வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்தவியாதி குறையும். புத்தகங்களும் படிக்க ஆரம்பித்தால் ,நாம் விடுபட வழி உண்டு:)

  பதிலளிநீக்கு
 19. நாய் பெற்ற தங்கப் பழமா, தெங்கம் பழமா?!!

  இது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க! கரண்ட் போகும் நேரத்தில் புத்தகம் படியுங்கள். ஒரு நாளில் வேலை நேரம் போல இத்தனை மணியிலிருந்து இத்தனை மணி வரைதான் இணையம் என்று தீர்மானியுங்கள். ஒரு சின்ன டூர் ப்ரோக்ராம் போடுங்கள். அவ்வளவுதான்! எல்லோருக்கும் ஒரு நேரத்தில் தோன்றும் எண்ணமே இது!

  பதிலளிநீக்கு
 20. வயதுக்கேற்ற உடற்பயிற்சியும் தியாணமும் செய்தால் மேற்க்கண்ட மனஅழுத்தம் மற்றும புலம்பல் குறையும் என்று எனக்கு ஒரு அய்யா சொன்னார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "கருப்பும் ஒரு அழகு, தீசலும் ஒரு ருசி" அப்படீன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. அது போல வயசானா புலம்பலிலும் ஒரு சுகம் இருக்குன்னு புரிஞ்சிக்குவீங்க.

   நீக்கு
 21. ***பதிவெழுதுவது ஒரு பைத்தியமாக மாறிக்கொண்டு வருகிறது. எப்பொழுதும் சிந்தனை, அடுத்த பதிவு எப்பொழுது, எதைப்பற்றி என்பதைச் சுற்றியே வந்துகொண்டு இருக்கிறது***

  பெரிய பெரிய விசயங்களை நாம் எழுதினாலும், விவாதிச்சாலும், விமர்சிச்சாலும் இதுவும் ஒரு குறுகிய வட்டம்தான்!

  பதிலளிநீக்கு
 22. பிரச்சினை என்னவென்று தெரியவில்லையே?

  பதிலளிநீக்கு
 23. கருத்துரைகளைகளை பார்க்கும்போது உங்க வியாதி பலருக்கும் இருப்படுதேரிய வருகிறது. இளைஞர்கள் முதல் மூத்தவர்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது.விடுபடவும் கட்டுப் பாட்டில் வைக்கவும் ஆலோசனை கூறுங்கள்

  பதிலளிநீக்கு
 24. ரொம்ப சரியாகச் சொன்னீர்கள்.
  நம்மில் இருக்கும் பிரச்னைக்கு நாமே தீர்வு காண வேண்டும். இத்தனை நேரம்தான் என்று முடிவு செய்யுங்கள். அவ்வப்போது எழுந்து போய் வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள்.
  இது ஒரு பிரச்னையே இல்லை.

  //பதிவு எழுத டாபிக் கிடைக்கவில்லை// இதுதான் விஷயமா?
  என்னவோ ஏதோவென்று பயந்துவிட்டேன்!

  பதிலளிநீக்கு
 25. அந்தத் தீர்வைக் கூட ஒருவர் பதிவாய்ப் போட்டிருக்கிறார், பார்த்தீர்களா?.. அதைப் படிக்க ஆரம்பித்தால், மறுபடியும் முதலிலிருந்து....

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் ஐயா!
  நீங்கள் அங்கங்கே கருத்துப்பகிர்தல் செய்வதை கண்டுள்ளேன். உங்கள் வலைத்தளத்திற்கு வரவேண்டுமென இருந்த ஆவல் இன்றுதான் பூர்த்தியாகியது.

  வந்துபார்த்தால் உங்கள் பதிவில் பதிவிடுதலும் பின்னூட்டங்கலும் ஒரு நோயெனவே ஆராய்ந்துகொண்டிருக்கின்றீர்கள்...:0

  நல்லதே. ஒருநேரம் எனக்கும் பயன்படும் விடயம்தான்.
  தொடருங்கள் ஐயா!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கம்மா, தங்கள் வரவு நல்வரவாகட்டும். அடிக்கடி வந்து போங்க. நானும் வருகிறேன்.

   நீக்கு
 27. இந்த ‘நோய்’க்குத் தீர்வு நம் கையில் தான் இருக்கிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு பதிவுக்குமேல் போடுவதில்லை எனப் பழக்கப் படுத்திக்கொண்டால் கணினியே கதி என இருக்கத்தேவையில்லை. ஆனால் இது முடியுமா? மில்லியன் டாலர் கேள்வி!

  பதிலளிநீக்கு
 28. எனக்கும் அந்த நோய் இருக்கிறதோ என்று எண்ணுகிறேன்......நீங்கள் சொன்னது அவ்வளவும் நிஜம் ஐயா ! ஆனால் நீங்கள் சொன்னது போல் அன்றைய பாக்கெட் நாவல்கள் எல்லாம் இன்று வழக்கொழிந்து போய் விட்டன......எல்லாமே இணையம்தானே.

  பதிலளிநீக்கு
 29. அய்யா...உங்கள் பதிவில் சொல்லியிருப்பது சரிதான்....நான் முதலில் வலைதளங்களில் எழுதினேன்...அப்போது அவர்கள் நமது எழுத்துக்கும் கருத்துக்கும் போடும் தடைகள் ...சென்சர் அதிகாரிகள் போன்று...எனக்கு அவமானமாக தெரிந்தது...பிறகுதான் நானே பிளாக் எழுத ஆரம்பித்தேன் ....யாரும் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி...நானே படித்துக்கொள்ள எழுதுகிறேன்....நன்றி

  பதிலளிநீக்கு
 30. உங்களது மனம் இது குறித்து வருந்த தேவை இல்லை
  எனக்காக நீங்கள் பகவத் கீதை அத்தியாயம் ஒன்று முதல் படித்து பார்த்து உங்கள் பாணியில்
  உரை எழுதுங்கள் ............... ஸ்ரீ கிருஷ்ணர் வியாச நாராயணர் உங்களுக்கு அருபமாக உதவுவார்கள் ...........பழனியப்பன் அப்பாவின் ரமணரும் உங்களுக்காக காத்து இருக்கிறார்கள் ...........எழுதுங்கள் உங்கள் வீரல்கள் 247 தமிழ் தேவதைகளின் வழியாக ஞானத்தை என்னை போன்ற தெசை தெரியாம சுழல்கின்ற மானுடரை நல் வழி காட்டட்டும் ..............
  உங்களது படைப்பு எங்களுக்கு இருளில் வழி காட்டும் ஞான ஒளி ஆகட்டும் .............கிருஷ்ணா உணர்வில் வாழும் உங்கள் பாலு

  பதிலளிநீக்கு
 31. உணர்வு பூர்வமான ஆக்கம் ..

  தளத்தில் தத்தமது ஆக்கங்களை பதிந்து விட்டு

  பின்னூட்டங்களை பார்க்கும் நமது எதிர்ப்பார்ப்பு

  உற்ற சொந்தங்களின் கடிதங்களை எதிர்பார்க்கும் உணர்வு ..

  சற்றேர குறைய தாங்கள் கூறிய அனைத்து பிரச்னையும் எனக்கும் உண்டு

  தங்களின் எழுத்து பணி மேலும் சிறக்க வாழ்க பல்லாண்டு

  பதிலளிநீக்கு
 32. உண்மைதான் ஐயா இந்த நோய் எனக்கும் உண்டு!ம்ம் உங்கள் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு ஒரு வழிக்காட்டி! தொடர்ந்து பின்னூட்டம் போடாவிட்டாலும் உங்கள் பதிவையும் மேய்கின்றோம்!

  பதிலளிநீக்கு
 33. எல்லோரும் இணைய அடிமையாக இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது.அதில்நாம் மட்டும் என்ன விதி விலக்கா என்ன? புகழ் தரும் போதை தனி அலாதியானது.அன்றாட செயல்கள் கூட தள்ளி போடப்படுகிறது என்பது மட்டும் உண்மை !

  பதிலளிநீக்கு
 34. உணர்வு பூர்வமான ஆக்கம் ..

  பதிலளிநீக்கு