திங்கள், 11 நவம்பர், 2013

வயது வந்தவர்களுக்கு மட்டும்.


தலைப்பைக் கண்டு மயங்காதீர்கள். இது உண்மையிலேயே வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். அதாவது 70 வயதைத் தாண்டியவர்களுக்கு.

சமீபத்தில் ஒரு வயதானவரை எனக்கு வேண்டியவர்களின் குடும்பத்தில் பார்த்த போது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் சாரம்.

 மனிதன் வாழ்க்கையில் பல பருவங்களைத் தாண்டி வளர்கிறான். அதில் முதுமைப் பருவமும் ஒன்று.

மற்ற எல்லா பருவங்களுக்கும் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் மனிதன் இந்த முதுமைப் பருவத்தை எதிர் கொள்ள எந்த முன் நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. நான் முதுமையடைய மாட்டேன் என்கிற மாயையால் பீடிக்கப்பட்டு, முதுமை அவனைப் பீடிக்கும்போது அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இது வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய அவலம். இம்மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அந்திம காலம் என்று ஒன்று உண்டு. அதன் முடிவில் இறப்பு என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்க்கையில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய உண்மை இது.

ஆனால் மனிதன் முதுமையையும் மரணத்தையும் கண்டு அஞ்சுகிறான். ஆகவே அதைப்பற்றி சிந்திக்க மறுக்கிறான். அதைப்பற்றி சிந்திக்காமல் இருந்தால் அவை அவன் வாழ்வில் வராமல் போய்விடுமா என்ன?

இதனால் பல முதியவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில், மிகவும் வேதனைப்படுகிறார்கள். தாங்கள் வேதனைப்படுவது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்தவர்களையும் வேதனைப்படுத்துகிறார்கள்.

ஏதாவது வைத்தியம் செய்து தன்னைப் பழைய மாதிரி (அதாவது இளமை நிலைக்கு) கொண்டு வரமாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். அது சாத்தியமல்ல என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் சொல்ல முடியாது.

பழங்காலத்தில் செவ்விந்தியர் நாடோடிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறும்போது நடக்க முடியாதவர்களை பழைய இடத்துலேயே விட்டு விட்டுப் போவது வழக்கம். அந்த ஆளுக்கு முன்னால் குச்சிகளினால் நெருப்பு மூட்டி விட்டு, பக்கமத்திலும் கொஞ்சம் குச்சிகளை வைத்து விட்டுப் போய்விடுவார்களாம். அந்த நெருப்பு முழுவதும் அணைந்த பிறகு ஏதாவது காட்டு மிருகங்க்ள வந்து அந்த ஆளை அடித்து சாப்பிட்டு விடுமாம்.

இந்த நடைமுறையைக் கேட்க காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றினாலும் அவர்களின் வாழ்வில் வேறு வழியில்லாததினால்தான் அப்படி ஒரு வழக்கம் வந்திருக்கும்.  இன்றும் கூட நம் தாய்த்திரு நாட்டில் மன நோயாளிகளைக் கொண்டு போய் கண் காணாத இடத்தில் விட்டு விட்டு வருவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பழங்காலத்தில் முதுமக்கள் தாழி இருந்த செய்தி அநேகருக்குத் தெரியும். இன்று சாதாரண குடும்பங்களில் இந்த வழக்கங்களெல்லாம் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் வயதானவர்கள் இருக்கும் குடும்பங்களில் அவர்களைப் பராமரிப்பதில் பல சங்கடங்கள் இருக்கின்றன.

இதைப்பற்றிய சிந்தனை பல நாட்களாக என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மரணம் என்பது சிலருக்கு அநாயாசமாக வந்து விடுகிறது. நேற்று பார்த்தேன், நல்லாத்தானே இருந்தார் என்று சொல்லும்படியான மரணங்கள் பெரும் புண்ணியம் செய்தவர்களுக்கே வாய்க்கும்.

மற்றவர்கள் தங்கள் இறுதிக்காலத்தில் பல துன்பங்களை சந்திக்க நேரலாம். அத்துன்பங்களை ஏதாவது மாத்திரைகள் சாப்பிடுவது மூலம் குறைத்துக்கொள்ளலாமே தவிர முற்றிலும் குணப்படுத்துவது இயலாத காரியம். ஆஸ்பத்திரியில் சேர்த்து உபாதைகளைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் மிகுந்த பொருட்செலவைத் தரும் வேலைகள். தவிர அதற்குத் தகுந்த ஆள் பலம், பொருள் பலம் வேண்டும்.

ஆகவே சிறிதாவது சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு முதுமையில் வரும் துன்பங்களை, மற்றவர்களுக்கு இடைஞ்சல் தாராமல் பொறுத்துக்கொள்ள பழக வேண்டும். இன்றுள்ள சமுதாயத்தில் எது எதற்கோ பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். இந்த முதுமையை எதிர்கொள்வது பற்றியும் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே நடத்தவேண்டும்.

இயற்கையைப் புரிந்து அதற்குத் தக்க வாழ எல்லோருக்கும் இறைவன் அருள் புரிவானாக.