ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன் என்கிறீர்களே. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?
காலையில் நாளிதழை திறந்தவுடன் விபத்துக்களை பார்க்கிறோம். நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருக்கும்போது எளிதாக மனதில் எந்த ஒரு கணமும் இல்லாமல் அடுத்த செய்திக்கு போய்விடுகிறோம். ஆனால் அதே விபத்தில் நமக்கு சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இருந்திருந்தால் - அடிபட்டவர்கள் மட்டும் அல்ல, விபத்துக்கு காரணமானவர்களே ஆனாலும் சரி - மனது கிடந்து துடிக்கிறதே. உடனே ஓடிபோய் உதவி செய்ய மனது அலை பாய்கிறதே. நீங்கள் ரொம்ப எளிதாக ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்கிறீர்கள். உங்கள் உறவினர்களை நினைத்து பரிதாபபடுகிறேன்
திருச்சி காயத்ரி மணாளன்
-----------------------------------------------------------------------
உங்களுக்கே இது நியாயமாய்ப் படுகிறதா?
நல்ல கேள்வி. சரியாக பாய்ன்டைப் பிடித்து விட்டீர்கள்.
அதாவது நான் ஒரு மனிதப் பண்புகள் இல்லாதவன் என்கிற மாதிரி ஒரு உருவத்தை உருவகப்படுத்தியுள்ளீர்கள். நான் அதை மறுக்கவில்லை. உயர்ந்த பண்புகள் ஒருவனுக்கு இருப்பது மிகவும் போற்றத்தக்கது. அப்படிப்பட்ட நல்ல பண்புகளில் வயதானவர்களை அவர்கள் முகம் கோணாமல் பராமரிப்பது என்பது மிக மிக உன்னதமான பண்பு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அந்தப் பண்புகள் மனதளவில் மட்டும் இருந்தால் போதுமா? அதை செயலில் காட்டினால்தானே பலன்.
எனக்கும் இந்தக் கொள்கை மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு கடவுள் சர்வ வல்லமையும் மற்ற வசதிகளையும் அளவில்லாமல் கொடுத்திருந்தால் நானும் இந்த கொள்கைகளை தடையில்லாமல் என் உறவினர்கள் அனைவருக்கும் நிறைவேற்றத் தயார்தான். என்ன, அதற்குண்டான ஆட்களைப் போட்டுவிட்டு அவர்களுக்குண்டான கூலியை தாராளமாகக் கொடுத்தால் வேலை நடந்துவிடும்.
உங்கள் நேரடி அனுபவத்தைப் பற்றி கேள்விகள் கேட்பது தேவையில்லை. என் குடும்பம் சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் இங்கு குறிப்பிடுவது தற்பெருமை பேசுவது போல் ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன். என் பக்கத்து வாதங்களை மட்டும் முன் வைக்கிறேன்.
வயதானவர்களின் முதல் ஆதங்கம் அவர்களின் உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாதது. "நான் பத்து வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு தெம்பாக இருந்தேன். இப்பொழுது என்னால் அப்படி இருக்க முடியவில்லையே. இப்பொழுது மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். என்னை முன்பு போல தெம்பானவனாக மாற்ற ஏன்முடியாது?"
அவர்களைப் பராமரித்துக் கொள்பவர்களை ப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். "நீங்கள் ஏன் அப்படிப்பட்ட மருத்துவரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய் வைத்தியம் செய்யக்கூடாது?"
இதுதான் பெரும்பாலான வயதானவர்களின் ஆதங்கம்.
முதுமையின் தாக்கங்களை மாற்றக்கூடிய வைத்தியம் இருந்தால் பணம் படைத்தவர்கள் ஒருவரும் இறக்கவே மாட்டார்கள். முதுமையின் மாற்றங்களுக்கு தற்காலிக சாந்தி செய்யலாமே தவிர அவைகளை முற்றிலும் நிரந்தரமாக மாற்ற முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மாற்றம் தற்காலிகமானது.
முதல் தடவை வயதான ஒருவருக்கு இந்த மாதிரி வைத்தியம் செய்தால் சில நாட்களுக்கு தெம்பாக இருப்பார். கொஞ்ச நாட்கள் போன பிறகு பழையபடி சோர்வு வரும். திரும்பவும் வைத்தியம் செய்ய ஆசைப் படுவார். வைத்தியம் செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். திரும்பவும் தெம்பாக உணருவார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் வைத்தியம் செய்யவேண்டி வரும். இந்த இடைவெளி குறைந்து கொண்டே போய் கடைசியில் எந்த வைத்தியமும் பலனளிக்காத நிலை ஏற்படும்.
அப்போது டாக்டர்கள் "இனி இவருக்கு வைத்தியம் செய்து பலனில்லை. அவரை வீட்டோடு வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி விடுவார்கள். சொந்தக்கார்ர்களும் "நாங்கள் எங்களால் முடிந்தவரை வைத்தியம் செய்தோம், இனி ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்" என்று வருபவர்களிடம் சாதாரணமாகவோ அல்லது பெருமையாகவோ சொல்லிக்கொள்ளலாம்.
அந்த நிலையில் அந்த வயதானவரின் நிலையை யோசித்துப் பாருங்கள். உடலில் தெம்பு இல்லை. உடல் உபாதைகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. எந்த மருந்தும் நிவாரணம் கொடுக்க மாட்டேனென்கிறது. பார்த்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச ஆளில்லை. மரண வாதனை அவர்களை வாட்டுகிறது.
இந்த நிலையில் யார் என்ன செய்து அவர் வேதனையைக் குறைக்க முடியும்? இப்படி வேதனைப் படாமல் தூக்கத்திலேயே இறந்து போகிறவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்க்ள. ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த மரண வாதனையை அனுபவித்து விட்டுத்தான் இறக்கிறார்கள்.
இந்த மாதிரி ஒருவருக்கு வைத்தியம் பார்க்க ஆள் வசதியும் பணவசதியும் வேண்டும். அப்படி இருந்தாலும் தொடர்ந்து வைத்தியம் பார்க்க மன வலிமை வேண்டும். இப்படி எத்தனை குடும்பங்களில் செய்ய முடியும்?
நான் சமீபத்தில் பார்த்த ஒரு குடும்பத்தில், குடும்பத்தலைவன் இறந்து விட்டார். அந்தக் குடும்பத்தலைவி இரண்டு மகன்களையும் வயதான தன்னுடைய தாய் தந்தையரையும் வைத்து காப்பாற்றிக்கொண்டு இருக்கிறாள். ஓரளவு வசதி இருக்கிறது. மகன்கள் இப்போதுதான் வாழ்க்கையில் வேரூன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு மகனுக்கு சமீபத்தில் கல்யாணம் ஆயிற்று.
தந்தைக்கு நடக்க முடியாது. பாத் ரூமில் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிவதில்லை. அவருடைய மனைவிக்கும் வயதாகி விட்டது. அவரைத் தூக்கும் சக்தி இல்லை. அவர்கள் இருப்பதோ ஒரு அபார்ட்மென்டில் ஐந்தாவது மாடியில். அவரை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றால் இரண்டு வலுவான ஆட்கள் வேண்டும். ஆம்புலன்ஸ் வேண்டும். இந்த மகளும் உடன் செல்லவேண்டும். இதற்கெல்லாம் நேரம் வேண்டும்.
அந்தப் பெண் என்ன செய்வாள்? இந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு தயார் செய்வாளா? அப்பாவின் வைத்தியத்திற்கு கூடப் போவாளா? அப்படி வைத்தியம் செய்து இவரால் என்ன செய்ய முடியும்? உதவிக்கு அடிக்கடி வர இன்றைய உங்கில் யாரால் முடியும்?
இந்த நிலையில் அவருக்கு நான் சொன்ன யோசனை -" இந்தக் கஷ்டங்களை நீங்க்ள பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்து பலனில்லை. நடக்க முடியாதவைகளுக்கு ஆசைப்படாதீர்கள். உங்கள் மகளுக்கு வீணாக உபத்திரம் தராதீர்கள்" என்று யோசனை சொன்னேன்.
இது நியாயமானதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள். மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரியும். தர்மம் உதுதான் என்று வரையறுத்து கூறமுடியாது. சூழ்நலைகளுக்கு ஏற்ப தர்மம் மாற்படும் என்று தர்மத்திற்கே உதாரணமாக சொல்லப்படும் தர்மரே பல இடங்களில் கூறியிருக்கிறார்.
என்னுடைய கடந்த
"வயது வந்தவர்களுக்கு மட்டும்"