வியாழன், 28 நவம்பர், 2013

ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள் - பாகம் 3


நான் பலமுறை முயன்றும் கதவைத் திறக்க முடியவில்லை. வேறு வழி தெரியாமல் ரிசப்ஷனில் சென்று முறையிட்டேன். அவர்கள் நீங்கள் சாவியை எப்படி போட்டீர்கள் என்று கேட்டார்கள். நான் காட்டினேன். அவர்கள் இப்படிப் போட்டால் உங்கள் ஆயுளுக்கும் அந்தக் கதவு திறக்காது. சாவியைத் திருப்புங்கள் என்றார்கள். திருப்பினேன். இப்போது இந்த சாவியின் ஒரு மூலையில் ஒரு கருப்பு புள்ளி இருக்கிறதல்லவா? அந்தக் கருப்பு புள்ளி தெரிகிற மாதிரி வைத்துக்கொண்டு சாவியைப் போட்டால்தான் கதவு திறக்கும் என்றார்கள்.

நான் திரும்ப ரூமுக்கு வந்து அதே மாதிரி சாவியைப் போட்டேன். மந்திரம் போட்ட மாதிரி கதவு அழகாகத் திறந்தது. ஆஹா, இப்படியா இருக்கிறது சூட்சுமம் என்று நினைத்துக்கொண்டு கதவைப் பூட்டிவிட்டு வெளியில் வந்தேன். ரிசப்ஷனில் உள்ள பெண்கள் என்னைப் பார்த்து சிரிப்பது போல் ஒரு உணர்வு வந்தது. என்ன செய்ய முடியும்? உள்ளூர் யானை அசலூரில் பூனைதானே!

என்னுடைய அன்றைய பிளான் சும்மா ஊரைச்சுற்றிப் பார்ப்பதுதான். பக்கத்திலிருந்த பஸ் ஸடாப்பிற்குப் போனேன். அங்கு ஒரு அறிவிப்பு இருந்தது. ஒரு நாள் முழுவதும் அல்லது இரண்டு, மூன்று, நான்கு நாட்கள் வரையில் அங்கு சுற்றிப்பார்க்க விரும்பினால் ஸ்பெஷல் டூரிஸ்ட் பாஸ்கள் கிடைக்கும், இந்த பாஸ்களை பஸ்களிலேயே வாங்கிக்கொள்ளலாம் என்று போட்டிருந்தது. விலையோ மிகவும் சலீசாக இருந்தது. இரண்டு ட்ரிப் தனித்தனியாக வாங்கும் டிக்கட் சார்ஜை விட கொஞ்சம்தான் அதிகம்.

அடிச்சது லக்கி சான்ஸ் என்று பஸ்சில் ஏறினதும் இந்த பாஸை வாங்கிவிட்டேன். அந்த ஊரில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அங்கு உள்ளூர் போக்குவரத்திற்கு மூன்று வகையான வசதிகள் இருக்கின்றன.

ஒன்று - நம்ம ஊர் டவுன் பஸ் மாதிரியான சர்வீஸ். நம்ம ஊர் பஸ் மாதிரி என்று நான் எழுதியுள்ளதை அந்த ஊர்க்காரர்கள் பார்த்தால் என் மேல் கேஸ் போட்டுவிடுவார்கள்.

இரண்டு - சென்னையிலுள்ள லோகல் மின்சார வண்டிகள் மாதிரியான ஒரு சர்வீஸ். இந்த சர்வீசிலுள்ள ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் நேரம் தவறாமை. 9.22 ரயில் என்றால் சரியாக 9.21க்கு பிளாட்பாரத்தில் வந்து நிற்கும். 9.22 க்கு புறப்படும். எப்பொழுதும் எந்த மாறுபாடும் இல்லாமல் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப் படுகிறது. தவிர, இந்த ரயில்களின் அட்டவணை காலம் காலமாக மாற்றப்படாமல் அப்படியே இருக்கிறது.

மூன்று - டிராம் வண்டி. இந்தக் காலத்து இளைஞர்கள் சென்னையில் பார்க்கக் கிடைக்காத ஒன்று. ரோட்டின் நடுவில் தண்டவாளம் பதித்து அதில் போகும் ரயில் மாதிரி ஒரு வாகனம்.

எதற்கு இந்த மூன்றையும் குறிப்பிட்டேனென்றால், இந்த மூன்றுக்கும் ஒரே டிக்கட்தான். நாம் போகவேண்டிய இடத்திற்கு இந்த மூன்றிலும் மாறி மாறிப் போகவேண்டியிருந்தால், ஆரம்பத்தில் ஒரு டிக்கட் வாங்கினால் போதும். எல்லா வண்டிகளுக்கும் அது செல்லுபடியாகும்.

நான் வாங்கிய மூன்று தினங்களுக்கான பாஸ் இந்த மூன்று வகை வாகனங்களுக்கும் செல்லுபடியாகும். எங்கு வேண்டுமானாலும் ஏறி, எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். சின்னப்பிள்ளை மாதிரி அன்று முழுவதும் இப்படி ஊர் சுற்றினேன்.

இப்படி ஒரு ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது டிக்கட் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக்கொண்டேன்.