திங்கள், 27 ஜனவரி, 2014

பேங்க் கணக்குகள்- உபயோகிப்பாளரின் பார்வையில் - பாகம் 1


paul jayakanthan - பேங்க் கணக்கு வைத்திருக்கிறீர்களா?": என்ற இடுகையில்  விட்டுச்சென்ற பின்னூட்டம்"

பயணுள்ள தகவல் நன்றி மேலும் வங்கி பற்றிய செய்திகளை பதியலாம்
உ.ம் IFC CODE,MICR,NEFT,RTGS,SWIFT,CTS, இவற்றின் விரிவாக்கம்,விளக்கமும் தந்தால் அனைவருக்கும் பயன்படும்.

இப்படி ஒரு பின்னூட்டம் என்னுடைய ஒரு பதிவிற்கு வந்திருந்தது. இதைப்பற்றி சிந்தித்தபோது பலருக்கு பேங்குகளின் அடிப்படை விவரங்களே தெரியாமல் இருக்கிறது என்ற உண்மை மனதில் பட்டது. இதைப் பற்றி ஒரு பேங்க் உபயோகிப்பாளன் என்ற முறையில் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

நான் பேங்க் ஆபீசரல்ல. ஆனாலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பேங்க் கணக்குகள் வைத்திருக்கிறேன். தற்போது கம்ப்யூட்டரும் வைத்திருப்பதால் இன்டர்நெட் பேங்கிங்க், மொபைல் பேங்கிங்க் விஷயங்களும் அறிந்து வைத்திருக்கிறேன். ஆகவே ஒரு உபயோகிப்பாளன் என்ற முறையில்தான் இந்த பதிவை எழுதுகிறேன். பேங்கிங்கில் கரை கண்டவர்கள் இருப்பார்கள். அவர்க்ள பின்னூட்டத்தில் கருத்துகளைத் தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாயிருக்கும். 

பேங்க் சமாசாரங்கள் முழுவதையும் ஒரு பதிவில் அடக்க முடியாது. ஆகையால் இது ஒரு தொடர் பதிவாக அமையும். 

பாகம்-1 முன்னுரை;

பேங்குகள் இன்று வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றன. ஆனாலும் வாழ்க்கையின் அடித்தட்டு மக்களுக்கு பேங்கின் தேவை அவ்வளவு அவசயமில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர்களும் பேங்க் சேவைகளை உபயாகப்படுத்தவேண்டிய அவசியம் வரும். 

இன்றைய கால கட்டத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை பேங்க் மூலமாகவே கொடுக்கிறார்கள். காரணம் இன்றைய சூழ்நிலையில் பேங்கிலிருந்து அதிகமான பணத்தை எடுத்து வருவது ஒரு ஆபத்தான செயலாக ஆகிவிட்டது. அதேபோல் அதிக பணத்தை வசூல் செய்து பேங்கில் கட்டுவதும் ஆபத்தாக மாறி வருகிறது.

தனிமனித வாழ்விலும் அதிகமான ரொக்கப் பணத்தை கையாள்வது ஆபத்தான சமாசாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஆதனால் பேங்கின் சேவைகளை எல்லா தரப்பினரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு சாதாரண மனிதன் பேங்க் கணக்கு தொடங்கி அதைப் பயன்படுத்துவதைப் பற்றி கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசயமாகிறது.

பேங்க் கணக்கின் தேவை: 

1. உங்கள் வருமானத்தில் நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்கள்.

2. நீங்கள் வேலை செய்யும் ஸ்தாபனம் உங்கள் சம்பளத்தை பேங்க் கணக்கில் போடப்போகிறார்கள்.

3. உங்களுக்கு ஏதாவது செக்குகள் வருகின்றன. அல்லது நீங்கள் செக் மூலமாக அடிக்கடி ஏதாவது பணம் கொடுக்கவேண்டுயிருக்கிறது.

4. அடிக்கடி வெளியூர் செல்வதால் ஏடிஎம் கார்டு தேவைப்படுகிறது.

5. பேங்கில் ஏதோ கடன் வாங்க உத்தேசித்துள்ளீர்கள்.

இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் பேங்கில் கணக்கு துவங்க ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்யவேண்டியது என்ன?

பேங்க் கணக்கு துவங்க தேவையானவை.

1. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பேங்கைத் தேர்ந்தெடுங்கள். அது ஒரு ஷெட்யூல்டு பேங்க்காக இருக்கவேண்டும்.

2. உங்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இரண்டு வேண்டும். ரேஷன் கார்டு இருக்கவேண்டும். அதில் உங்கள் பெயர் என்ன இருக்கிறதோ அந்தப் பெயரில்தான் கணக்கு ஆரம்பிக்க முடியும்.

3. பேங்க் கணக்கு ஆரம்பிக்க குறைந்தது 1000 ரூபாய் வேண்டும். இந்தப் பணத்தை உங்களுடையது என்ற எண்ணத்தை உடனே மறந்து விடவேண்டும். ஏனெனில் இந்த குறைந்த பட்ச பணம் உங்கள் கணக்கில் எப்போதும் இருக்கவேண்டும்.

4. ஓரளவிற்கு படிவங்களை பூர்த்தி செய்யும் திறமை இருக்கவேண்டும். ஒவ்வொரு தடவையும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது.

5. அந்த பேங்கில் ஏற்கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரை நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அவர் உங்களை பேங்கில் அறிமுகம் செய்து வைக்க தயாராய் இருக்கவேண்டும். இது மிகவும் அவசியம்.

6. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இரண்டு வேண்டும்.

இவை எல்லாவற்றையும் கொண்டு போனால், பேங்க் அதிகாரிக்கு உங்களைப் பிடித்துப்போனால் நீங்கள் கணக்கு ஆரம்பிக்கலாம். பொதுவாக நீங்கள் ஆரம்பிக்கும் கணக்கைத் தொடர்ந்து வைத்திருப்பீர்களா, உங்கள் நிதி நிலை என்ன, என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் உங்களுக்கு கணக்கு ஆரம்பிப்பார்கள். எப்படியும் இரண்டு மூன்று தடவை உங்களை இழுத்தடிப்பார்கள். தொடர்ந்து முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.

எப்படியோ, யாருடைய கையையோ, காலையோ பிடித்து கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். கணக்கு ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு என்னென்ன தேவை என்று சோல்லிவிட வேண்டும்.

அத்தியாவசியத்தேவைகள்.

1. பாஸ்புக்:  இது கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களே கோடுத்து விடுவார்கள். இதில்தான் உங்கள் கணக்கின் வரவு செலவுகளைக் குறிப்பார்கள். அடிக்கடி பேங்கில் வரவு செலவு செய்பவராயிருந்தால் அவைகளை இந்த பாஸ்புக்கில் அவ்வப்போது பதிவு செய்து கொள்ளவேண்டும்.  

உங்கள் கணக்கில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச அளவு பணம் எவ்வளவு என்று ஒவ்வொரு பேங்கிலும் ஒரு அளவு வைத்திருப்பார்கள். அதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அந்த அளவிற்கு குறைந்தால் அபராதக் கட்டணம் போடுவார்கள்.

2. செக்புக்: நீங்கள் அடிக்கடி யாருக்காவது செக் மூலமாக பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இருந்தால் செக் புக் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அப்படி வாங்கிக்கொண்டால் உங்கள் கணக்கில் ஒரு குறைந்த பட்சம் பணம் வைத்திருக்கவேண்டும். அந்த தொகை குறைந்தால் அபராதம் உண்டு.

3. ஏடிஎம் கார்டு: இது ஒரு சௌகரியமான வசதி. அவசரத் தேவைகளுக்கு இப்போது மூலைக்கு மூலை முளைத்திருக்கும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதை உபயோகப்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும். தவிர நேரங்கெட்ட நேரங்களில் அநாமத்தான இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

இப்போது நீங்கள் பேங்க் கஸ்டமர் ஆகி விட்டீர்கள். அடுத்தது பேங்க்கில் பணம் போடுவதும் எடுப்பதும்தான். அவைகளை எப்படி செய்வது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கொசுறு:

முதலில் குறிப்பிட்ட சில "சுருக்கி" களின் விரிவாக்கம். இவைகளின் உபயோகத்தைப் பற்றி பின்னால் கூறுகிறேன்.

 IFSC CODE: Indian Financial System Code.

MICR: Magnetic Ink Character Recognition

NEFT: National Electronics Fund Transfer

RTGS: Real Time Gross Settlement

SWIFT: Society for Worldwide Interbank Financial Telecommunication

CTS:     Core Treasury System