திங்கள், 27 ஜனவரி, 2014

பேங்க் கணக்குகள்- உபயோகிப்பாளரின் பார்வையில் - பாகம் 1


paul jayakanthan - பேங்க் கணக்கு வைத்திருக்கிறீர்களா?": என்ற இடுகையில்  விட்டுச்சென்ற பின்னூட்டம்"

பயணுள்ள தகவல் நன்றி மேலும் வங்கி பற்றிய செய்திகளை பதியலாம்
உ.ம் IFC CODE,MICR,NEFT,RTGS,SWIFT,CTS, இவற்றின் விரிவாக்கம்,விளக்கமும் தந்தால் அனைவருக்கும் பயன்படும்.

இப்படி ஒரு பின்னூட்டம் என்னுடைய ஒரு பதிவிற்கு வந்திருந்தது. இதைப்பற்றி சிந்தித்தபோது பலருக்கு பேங்குகளின் அடிப்படை விவரங்களே தெரியாமல் இருக்கிறது என்ற உண்மை மனதில் பட்டது. இதைப் பற்றி ஒரு பேங்க் உபயோகிப்பாளன் என்ற முறையில் என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

நான் பேங்க் ஆபீசரல்ல. ஆனாலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பேங்க் கணக்குகள் வைத்திருக்கிறேன். தற்போது கம்ப்யூட்டரும் வைத்திருப்பதால் இன்டர்நெட் பேங்கிங்க், மொபைல் பேங்கிங்க் விஷயங்களும் அறிந்து வைத்திருக்கிறேன். ஆகவே ஒரு உபயோகிப்பாளன் என்ற முறையில்தான் இந்த பதிவை எழுதுகிறேன். பேங்கிங்கில் கரை கண்டவர்கள் இருப்பார்கள். அவர்க்ள பின்னூட்டத்தில் கருத்துகளைத் தெரிவித்தால் அனைவருக்கும் உபயோகமாயிருக்கும். 

பேங்க் சமாசாரங்கள் முழுவதையும் ஒரு பதிவில் அடக்க முடியாது. ஆகையால் இது ஒரு தொடர் பதிவாக அமையும். 

பாகம்-1 முன்னுரை;

பேங்குகள் இன்று வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றன. ஆனாலும் வாழ்க்கையின் அடித்தட்டு மக்களுக்கு பேங்கின் தேவை அவ்வளவு அவசயமில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர்களும் பேங்க் சேவைகளை உபயாகப்படுத்தவேண்டிய அவசியம் வரும். 

இன்றைய கால கட்டத்தில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை பேங்க் மூலமாகவே கொடுக்கிறார்கள். காரணம் இன்றைய சூழ்நிலையில் பேங்கிலிருந்து அதிகமான பணத்தை எடுத்து வருவது ஒரு ஆபத்தான செயலாக ஆகிவிட்டது. அதேபோல் அதிக பணத்தை வசூல் செய்து பேங்கில் கட்டுவதும் ஆபத்தாக மாறி வருகிறது.

தனிமனித வாழ்விலும் அதிகமான ரொக்கப் பணத்தை கையாள்வது ஆபத்தான சமாசாரமாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஆதனால் பேங்கின் சேவைகளை எல்லா தரப்பினரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு சாதாரண மனிதன் பேங்க் கணக்கு தொடங்கி அதைப் பயன்படுத்துவதைப் பற்றி கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசயமாகிறது.

பேங்க் கணக்கின் தேவை: 

1. உங்கள் வருமானத்தில் நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்கள்.

2. நீங்கள் வேலை செய்யும் ஸ்தாபனம் உங்கள் சம்பளத்தை பேங்க் கணக்கில் போடப்போகிறார்கள்.

3. உங்களுக்கு ஏதாவது செக்குகள் வருகின்றன. அல்லது நீங்கள் செக் மூலமாக அடிக்கடி ஏதாவது பணம் கொடுக்கவேண்டுயிருக்கிறது.

4. அடிக்கடி வெளியூர் செல்வதால் ஏடிஎம் கார்டு தேவைப்படுகிறது.

5. பேங்கில் ஏதோ கடன் வாங்க உத்தேசித்துள்ளீர்கள்.

இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் பேங்கில் கணக்கு துவங்க ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்யவேண்டியது என்ன?

பேங்க் கணக்கு துவங்க தேவையானவை.

1. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பேங்கைத் தேர்ந்தெடுங்கள். அது ஒரு ஷெட்யூல்டு பேங்க்காக இருக்கவேண்டும்.

2. உங்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இரண்டு வேண்டும். ரேஷன் கார்டு இருக்கவேண்டும். அதில் உங்கள் பெயர் என்ன இருக்கிறதோ அந்தப் பெயரில்தான் கணக்கு ஆரம்பிக்க முடியும்.

3. பேங்க் கணக்கு ஆரம்பிக்க குறைந்தது 1000 ரூபாய் வேண்டும். இந்தப் பணத்தை உங்களுடையது என்ற எண்ணத்தை உடனே மறந்து விடவேண்டும். ஏனெனில் இந்த குறைந்த பட்ச பணம் உங்கள் கணக்கில் எப்போதும் இருக்கவேண்டும்.

4. ஓரளவிற்கு படிவங்களை பூர்த்தி செய்யும் திறமை இருக்கவேண்டும். ஒவ்வொரு தடவையும் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது.

5. அந்த பேங்கில் ஏற்கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரை நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அவர் உங்களை பேங்கில் அறிமுகம் செய்து வைக்க தயாராய் இருக்கவேண்டும். இது மிகவும் அவசியம்.

6. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் இரண்டு வேண்டும்.

இவை எல்லாவற்றையும் கொண்டு போனால், பேங்க் அதிகாரிக்கு உங்களைப் பிடித்துப்போனால் நீங்கள் கணக்கு ஆரம்பிக்கலாம். பொதுவாக நீங்கள் ஆரம்பிக்கும் கணக்கைத் தொடர்ந்து வைத்திருப்பீர்களா, உங்கள் நிதி நிலை என்ன, என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் உங்களுக்கு கணக்கு ஆரம்பிப்பார்கள். எப்படியும் இரண்டு மூன்று தடவை உங்களை இழுத்தடிப்பார்கள். தொடர்ந்து முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.

எப்படியோ, யாருடைய கையையோ, காலையோ பிடித்து கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். கணக்கு ஆரம்பிக்கும்போதே உங்களுக்கு என்னென்ன தேவை என்று சோல்லிவிட வேண்டும்.

அத்தியாவசியத்தேவைகள்.

1. பாஸ்புக்:  இது கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களே கோடுத்து விடுவார்கள். இதில்தான் உங்கள் கணக்கின் வரவு செலவுகளைக் குறிப்பார்கள். அடிக்கடி பேங்கில் வரவு செலவு செய்பவராயிருந்தால் அவைகளை இந்த பாஸ்புக்கில் அவ்வப்போது பதிவு செய்து கொள்ளவேண்டும்.  

உங்கள் கணக்கில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச அளவு பணம் எவ்வளவு என்று ஒவ்வொரு பேங்கிலும் ஒரு அளவு வைத்திருப்பார்கள். அதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அந்த அளவிற்கு குறைந்தால் அபராதக் கட்டணம் போடுவார்கள்.

2. செக்புக்: நீங்கள் அடிக்கடி யாருக்காவது செக் மூலமாக பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இருந்தால் செக் புக் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அப்படி வாங்கிக்கொண்டால் உங்கள் கணக்கில் ஒரு குறைந்த பட்சம் பணம் வைத்திருக்கவேண்டும். அந்த தொகை குறைந்தால் அபராதம் உண்டு.

3. ஏடிஎம் கார்டு: இது ஒரு சௌகரியமான வசதி. அவசரத் தேவைகளுக்கு இப்போது மூலைக்கு மூலை முளைத்திருக்கும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதை உபயோகப்படுத்த கொஞ்சம் பயிற்சி வேண்டும். தவிர நேரங்கெட்ட நேரங்களில் அநாமத்தான இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

இப்போது நீங்கள் பேங்க் கஸ்டமர் ஆகி விட்டீர்கள். அடுத்தது பேங்க்கில் பணம் போடுவதும் எடுப்பதும்தான். அவைகளை எப்படி செய்வது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கொசுறு:

முதலில் குறிப்பிட்ட சில "சுருக்கி" களின் விரிவாக்கம். இவைகளின் உபயோகத்தைப் பற்றி பின்னால் கூறுகிறேன்.

 IFSC CODE: Indian Financial System Code.

MICR: Magnetic Ink Character Recognition

NEFT: National Electronics Fund Transfer

RTGS: Real Time Gross Settlement

SWIFT: Society for Worldwide Interbank Financial Telecommunication

CTS:     Core Treasury System

21 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி, திலகம் கோபி. எனக்கு கூகுளில் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்தத் தவறு ஏற்பட்டுவிட்டது.

   நீக்கு
 2. எனக்கு 80 களிலும் 90 களிலும் என் கணக்கிலிருந்து, என் பணத்தை எடுக்க பேங்க்குக்குள் போகவே அலர்ஜியாக இருக்கும்! இப்போது பரவாயில்லை! :)))

  பதிலளிநீக்கு
 3. ஒரு வங்கியின் வாடிக்கையாளர் என்ற பார்வையில், உங்கள் அனுபவங்களை, உங்களுக்கே உரிய நகைச்சுவை நடையில் எழுதத் தொடங்கியமைக்கு நன்றி!

  // எப்படியோ, யாருடைய கையையோ, காலையோ பிடித்து கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.//

  கணக்கு ஆரம்பிக்கும் வரைதான் அவர்கள் BOSS. அப்புறம் வாடிக்கையாளாரான நீங்கள்தான் BOSS

  பதிலளிநீக்கு
 4. ஏடிஎம் கார்டு:நிஜமாகவே வரப்ரசாதம் .
  வி.ஆர் எஸ் வங்கி மானேஜர் என்ற முறையில் சொல்கிறேன்

  80 களில் அக்கவுண்டில் ஆயிரக்கணக்கில் பணம் இருந்தாலும் ஒரு மணி நேரம் காத்திருந்து 10 ரூபாய் எடுக்கும் வாடிக்கையாளர்களும் இருந்தனர்.கை கொள்ளாத அளவு வுவுச்சர்களை செக் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்
  இது மாதிரியான குருவி transaction
  களால் வெட்டிவேலைகள் ரொம்பவே இருக்கும்.
  அனுபவித்தவர்களால் மட்டுமே இந்தக் கொடுமையைப் புரிந்து கொள்ளமுடியும் .
  தவிர .manual ஆபரேஷன்
  என்பதால் சாயந்திரம் டே புக் அட்ஜஸ்ட் ஆவதும் கஷ்டமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே பேங்கிங்க்கில் அசாத்தியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உபயோகிப்பாளருக்கும் பேங்க் அதிகாரிகளுக்கும் பல வசதிகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் இருபாலருக்கும் மனதளவில் பல மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

   நீக்கு
 5. வங்கிக்கு நாம் செல்லும் சமயம் முன்பின் தெரியாதவர்கள் நம்மை அறிமுகம் ஆனவர்கள்(Introducer))கையெழுத்துபோட சொல்லுவார்கள். உங்களுக்கு நன்கு அவர்களைபற்றிதெரியும் என்றால் கையெழுதது போடவேண்டும. தெரியவில்லையென்றால் முடியாது என மறுத்துவிடவேண்டும. தெரியாதவர்களுக்கு கையெழுத்துபோட்டுவிட்டு பின்னர்அவர்கள் தவறுஏதும் செய்யும் பட்சத்தில் நீங்கள் அவதிப்படநேரும் எனவே கவனம்தேவை..கட்டுரை அருமை சார்...
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வங்கிகளுக்கு செல்லும் போது இன்னொரு விசயத்தில் அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாதிபேர் பேனா கொண்டுவர மாட்டார்கள். சார் ஒரு நிமிஷம் என்று சொல்லி பேனா வாங்குவார்கள். பின் பேனா நம் கைக்கு வரும் வரை நாம் அவர்கள் பின்னாடியே அலைந்து கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் திருப்பி கொடுக்கும் போது இந்த அற்ப பேனாவுக்காகவா இப்படி என் பின்னால் அலைந்து கொண்டிருந்தாய் என்பது போன்ற பார்வை.

   திருச்சி காயத்ரி மணாளன்

   நீக்கு
 6. உங்களுக்கே உரிய பாணியில், பலருக்கும் பயன் தரும் தொடரை ஆரம்பித்து உள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா... அப்படியே தனியார் வங்கிகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 7. மிகவும் பயனுள்ள பதிவுத்தொடர். வாழ்த்துக்கள்

  /ஆனாலும் வாழ்க்கையின் அடித்தட்டு மக்களுக்கு பேங்கின் தேவை அவ்வளவு அவசயமில்லை. ஆனால் கால ஓட்டத்தில் அவர்களும் பேங்க் சேவைகளை உபயாகப்படுத்தவேண்டிய அவசியம் வரும். /

  அடித்தட்டு மக்களுக்கு பேங்கின் தேவை அவசியமாகிக் கொண்டு வருகிறது. Government subsidies அனைத்தும் முறையாக அவரவர் பாங்க கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன.
  எனவே புது கணக்கு திறக்கும் முறைகளும் எளிதாக்கப்பட்டு வருகின்றன
  பதிவைப் படிக்கும் நேயர்கள் உயர்தட்டில் இருப்பினும், அவர்கள் தினமும் பல்வேறு அடித்தட்டு மக்களின் சேவைகளை பெற்று வருவர். எனவே அவர்கட்கு உதவும் பொருட்டு "no frill account" திறக்கும் முறைகளை அறிவது நலம்.
  ஆதார் அட்டை மட்டுமே கொண்டு அத்தகு கணக்கை திறந்து விடலாம். சில நாட்கட்கு பின்னர் அதை முழுமையான கணக்கா மாற்றிக்கொள்ள ஏதுவாகும். ICICI bank விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள் (அவர்கள் கேட்கும் minimum balance அதிகமாயிருக்கும்.). பொதுத்துறை வங்கிகளில் minimum balance குறைந்த அளவில் இருக்கும்
  பெரும்பாலன் வங்கிகளில், போட்டி காரணமாக கணக்கு திறப்பது முன்பை விட மிகவும் எளிதாகி விட்டது

  கணினிமயமாக்கப் பட்ட பின் வங்கி வர்த்தகங்கள் மிகவும் எளிதாகி விட்டன.
  Online Purchases , Point of Sale purchases, web based payment of utility bills -என பெரும்பாலான செயல்கள் ATM-Cum_debit card னால் சாத்தியமாகின்றன  பதிலளிநீக்கு
 8. ஒரு உபயோகிப்பாளன் என்ற முறையில்தான் இந்த பதிவை எழுதுவதாக சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் உங்களைப்போன்ற வெகுநாளாக வங்கியில் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள்தான் தங்களின் அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டதை சரியாக சொல்லமுடியும். நீங்கள் தரும் பின்னூட்டுகள் (Feedback) வங்கியின் சேவையில் தவறு இருப்பின் வங்கியாளர்கள் அதை திருத்திக்கொள்ள ஏதுவாக அமையும் அந்த வகையில் வாழ்த்துக்கள் உங்களுக்கு.
  வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க, ‘எப்படியும் இரண்டு மூன்று தடவை உங்களை இழுத்தடிப்பார்கள்.’ என சொல்லியிருக்கிறீர்கள். தேவையான ஆவணங்களை கொண்டு சென்றால் எந்த வங்கியும் வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கமாட்டார்கள்.
  CTS இன் விரிவாக்கம் பற்றி திலகம் கோபி அவர்கள் சொல்லிவிட்டபடியால் அது பற்றி திரும்பவும் சொல்ல விரும்பவில்லை.
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. ATM-ல் பணம் எடுப்பது வசதிதான். ஆனால் அதில் பட்டுவாடா ஆகும் செல்லாத நோட்டுக்களுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. நஷ்டம் நமக்குத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னது ஏடிஎம்மில் செல்லாத நோட்டுக்களா?
   புது நோட்டுக்கள்தான் பார்த்திருக்கிறேன்.
   இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கணும் போல் இருக்கிறதே.
   பணம் எடுத்து செல்லாத நோட்டை பார்த்தக்கப்புரம் ஜாக்கிரதையாக இருந்து என்ன பண்ண முடியும். நைசாக அதை இன்னொருத்தர் தலையில் கட்ட வேண்டியதுதான். இப்படி 'செல்லாத' நோட்டு வெகு சீக்கிரம் ரொம்ப பேரிடம் 'செல்லும்' நோட்டாகிவிடும்

   ரிசர்வ் பாங்க கவர்னர் இதற்கு ஒரு வழி சொன்னால் பரவாயில்லை.

   சேலம் குரு

   நீக்கு
 10. பெரும்பாலன் வங்கிகளில், போட்டி காரணமாக கணக்கு திறப்பது முன்பை விட மிகவும் எளிதாகி விட்டது

  வீட்டுக்கே வந்து அக்கௌண்ட் ஓபன் செய்து தருகிறோம் என்கிற அளவில் இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 11. வங்கி பற்றி எழுத வேண்டும் என்றால் தனி பதிவாக தான் போட முடியும் .இன்னமும் பதினைந்து வருடங்கள் பினோக்கி இருப்பதாக தான் தோன்றுகிறது. கனிவான சேவையும் , கடவுச்சொல்லை தெரிந்து எடுக்கும் உரிமையும் , கணக்கு புத்தகத்தை நாமே அச்சிட்டு கொள்ளும் வசதியும் எப்படியும் இன்னும் பத்து வருடங்களில் வந்து விடும் என் நம்புகிறேன் .பழைய பதிவில் சில தகவல்கள் .
  http://nathiyinvaliyilorunaavai.blogspot.com/2012/12/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "கடவுச்சொல்லை தெரிந்து எடுக்கும் உரிமையும்"
   கடவுச்சொல் (password) உரிமை முற்றிலும் வாடிக்கையாளர் உரிமையாகத்தான் இருந்து வருகிறது.(excluding prepaid cards)
   "கணக்கு புத்தகத்தை நாமே அச்சிட்டு கொள்ளும் வசதியும் "
   ATM card கொண்டு கடவுச்சொல் தெரிந்த யாரும் பணம் எடுக்க முடியும் அவ்வாறே POS, online transactions முதலியவற்றை செய்ய இயலும . இத்தகு முறைகள் தவறானவை என்ற போதிலும் வங்கிகள் கண்டு கொள்ளுவதில்லை . ஏனெனில் அவற்றிற்கு வாடிக்கையாளர்களே பொறுப்பு. ஆனால் cheque-ல் வேறு யாரும் கையெழுத்திட்டு பணம் எடுத்தால் (even if signature ostensibly tallies) வங் கிக்கு பொறுப்புண்டு . it is not lack of technology, but legal constraints that dissuade banks fully replicating international practices.வெளி நாடுகளில் வங்கிகளில் "footfalls" என சொல்லப்படும் வருகை தரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை இங்குள்ளதைக்காட்டிலும் மிக குறைவு . இங்குள்ள சில முன்னேற்றங்கள் வளர்ச்சி அடைந்த வெளி நாடுகளிலும் கூட காணமுடியாது

   நீக்கு
 12. பலருக்கு பயன்படும். இப்போதெல்லாம் அரசு மானியத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதால் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்வது மிக அவசியம். NAREGA தொழிலாளிகளுக்குக் கூட வங்கி மூலம் தான் பணம் தருகிறார்கள். கிராமங்களில் இந்த வேலைக்குச் செல்பவர்கள் ஒரு கையில் மண்வெட்டியோடு, மறுகையில் வங்கிக் கணக்குப் புத்தகம் வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்வதைப் பார்த்ததுண்டு!

  பதிலளிநீக்கு
 13. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி.

  ஏ டி எம் மற்றும் கடன் அட்டை பயன்பாட்டில் கடைப்பிடிக்க வேண்டியவைகளைப் பற்றிய என் பதிவு
  http://vaidheeswaran-rightclick.blogspot.in/2012/06/credit-card-debit-card-bank-account.html

  பதிலளிநீக்கு
 14. //உங்கள் கணக்கில் இருக்கவேண்டிய குறைந்த பட்ச அளவு பணம் எவ்வளவு என்று ஒவ்வொரு பேங்கிலும் ஒரு அளவு வைத்திருப்பார்கள். அதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அந்த அளவிற்கு குறைந்தால் அபராதக் கட்டணம் போடுவார்கள்.//

  தனியார் வங்கிகளில் நகர்ப்புறக் கிளையாக இருந்தால் குறைந்தபட்சம் ரூ 10,000மும், ஊரகக் கிளையாக இருந்தால் குறைந்த பட்சம் ரூ.5,000மும் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்தே அபராதம் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 15. //கணக்கு ஆரம்பிக்கும் வரைதான் அவர்கள் BOSS. அப்புறம் வாடிக்கையாளாரான நீங்கள்தான் BOSS//

  இல்லை ஐயா. இப்பொழுதும் பாதுகாப்புப் பெட்டகம் வேண்டுமெனக் கேட்டால் ஏதோ தன் அப்பன் வீட்டு சொத்தைக் எடுத்துக் கொடுப்பது போல், 5 லட்சம் டெபாஸிட் போடு, இன்வெஸ்ட்மென்ட் பாலிசி (ULIP) எடு என்று வாதிக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு