வெள்ளி, 24 அக்டோபர், 2014

அமுதைப் பொழியும் நிலவே !



 இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

“காற்று வாங்கப்போனேன், காதல் வாங்கி வந்தேன்” என்ற சினிமா பாட்டு பாணியில் நம் கதாநாயகர் பஸ் பிரயாணத்தில் ஒரு காதலியைக் கண்டு பிடித்திருக்கிறார். ஆனால் அது ஒரு பகல் கனவாய்ப் போனதுதான் ஒரு சோகம். கனவென்றால் சாதாரணக் கனவா? அப்படியே ஆகாயத்தில் பறக்க வைத்த கனவு.

இருந்தாலும் அந்த நினைவுகள் இனிமையானவைகளே. கனவில் வந்த நிலவின் அழகு, படிக்கும் நம்மையே சொக்கவைக்கிறது. அரைத்த சந்தனம் போல் மேனி. மேனியில் இருந்து சந்தன வாசம் வந்திருக்குமோ. வந்திருக்கலாம்.

பாரதியிலிருந்து இன்றைய கதாசிரியர் வரை கேரள அழகிகள் மேல் அப்படியென்ன மோகமோ தெரியவில்லை. அதுவும் பாலக்காடாம். நானும் பாலக்காட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறேன். என் கண்ணில் அப்படி சந்தன மேனிக்காரிகள் யாரும் கண்ணில் படக் காணோம்.

இப்படி சொர்க்க லோகத்தில் உலா வந்து கொண்டிருந்தவரை பூலோகத்திற்கு இழுத்த அந்த படுபாவி கண்டக்டர் அடுத்த ஜன்மத்தில் நபும்சகனாகத்தான் பிறப்பான்.

அத்தோடு விதி விட்டதா? திரும்பி வரும்போது பக்த்து சீட்டில் ஒரு கர்ண கடூரக் கிழவி. இதுதான் விதியின் விளையாட்டோ?

ஒரு சாதாரண நிகழ்வை ரசனை மிக்க கதையாக மாற்றிய வைகோவும் கேரள கன்னிகளும் நீடூழி வாழ்க.