வியாழன், 7 மே, 2015

ஆத்மாவும் அனாத்மாவும்

                                       Image result for ஞானம்
வாசகர்கள் என்னை மன்னிக்கக் கோருகிறேன். இன்று +2 ரிசல்ட் வருவதால் என் மூளை வேலை செய்ய மறுக்கிறது. அதனால் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு. இந்தப் பதிவைப் படித்து மூளை கலங்கினால் கம்பெனி பொறுப்பேற்காது.

ஆத்ம ஞானம் என்பது எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ; எதனால் இந்த உலகம் பிரகாசிக்கிறதோ; அந்த பிரம்மவடிவாகவே உலகம் உள்ளதோ; இப்பிரபஞ்சம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி அறிவதே ஆத்ம ஞானம் ஆகும். இந்த ஆத்ம ஞானத்தை அறிந்தவரை ஆத்ம ஞானி என்பர்.
தங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் இறைவனே.
வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் வழியாக கேட்பது சிரவணம், கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல்மனனம், கேட்டதை மனதில் அசைபோடுதல் (நிதித்யாசனம்), வேதம், குரு, சாத்திரங்கள், யுக்தி, அனுபவம் முதலிய சாதனங்கள் வழியாக மட்டுமே ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மாவை விசாரனை செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமயமான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.
இது போன்ற அனாத்மா (ஆத்மாவின் எதிர்மறை பொருள்) பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், நீர், காற்று, நெருப்பு, சப்தம், சுவை, தொடு உணர்வு, முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும்முக்குணங்களின் சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் (இயற்கை) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்.

துயரத்திற்கு காரணம் தன்னைப் பற்றிய அறியாமை எனும் அஞ்ஞானமே. ஞானிகள் துயரப்படுவதில்லை. ஞானத்தினால் வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுபடலாம். ஆத்மாவைப் பற்றிய அறியாமையால் மனிதர்கள் துயரப்படுகிறார்கள். ஆத்மா நிலையானது, மாறாதது, என்றும் நித்தியமாக இருப்பது. ஆனால் அனாத்மா எனும் இந்த உடல் பிறப்பு, வளர்வு, தேய்வு மற்றும் இறப்புடன் கூடியது. அனாத்மா அழிவுக்கு உட்பட்டது என்று ஆத்ம-அனாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.