ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க

இந்தப் பழமொழியை அநேகமாக எல்லோரும் அறிந்திருக்கலாம்.

அறிந்திருக்கவில்லை என்றால் இப்போது அறிந்து கொள்ளவும்.

சிறுவயது முதலே எனக்கு ஊர் சுற்றிப் பார்ப்பது மிகவும் விருப்பமான சமாச்சாரம். ஆனா அப்போவெல்லாம் ஊர் சுற்றுவதற்கு வேண்டிய காசு இல்லை, இப்போ காசு இருக்கிறது ஆனால் சுதந்திரம் இல்லை.

அதற்கு முன் இந்தப் பாட்டை ஒரு முறை பாடிப் பார்த்துக்கொள்ளவும்.



நல்ல ஓட்டலுக்குப் போய் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் இருந்தது. அன்றைக்கு கல்லைத் தின்றாலும் செரிக்கக் கூடிய தெம்பு இருந்தது. குறிப்பா பல்லு நல்லா இருந்தது. என்ன இருந்து என்ன பிரயோஜனம்? அன்றைக்கு கையில காசு இல்லை.

இன்னைக்கு காசு இருக்குது, பல்லு இல்லே, பசி இல்லே. ரெண்டு தோசை முருகலாச் சாப்பிட்டா நடு ராத்தியில நெஞ்சு கரிக்குது. எழுந்திரிச்சி அரை ஸ்பூன் பெருங்காயத்தை வாயில் போட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிச்சாத்தான் சரியாகுது.

இந்த லட்சணத்தில ஊர் சுத்திப் பாக்கணும்னு ஆசை. இரண்டு நாளைக்கு முன்னால தெரிஞ்ச டிராவல்ஸ்காரன் போன் பண்ணி, துபாய் போறேன்னு சொன்னீங்களே, வாரீகளா என்று கேட்டான். எப்பவோ சொல்லி வச்சது. இப்ப போன் பண்ணறான். இதைக் காதில் கேட்ட என் சகதர்மிணி என்ன போன் என்றாள்.

நான் இந்த டிராவல்ஸ்காரன் துபாய் வர்றியான்னு கேக்கறான், ரெண்டு பேரும் போகலாமா என்றேன். நான் வரலை என்றாள். அப்ப நான் மட்டும் போய்ட்டு வரட்டுமான்னு கேட்டேன். நான் வராத இடத்திற்கு நீங்களும் போக க்கூடாது அப்படீன்னுட்டாள்.

இந்த மாதிரி அக்கிரமம் உலகத்தில் உண்டா?  இங்கிலீசுல ஒரு பழமொழி சொல்லுவாங்க.  Dog in the manger policy அப்படீன்னு. நாய் போயி மாட்டுக்காடில உக்காந்துட்டு தானும் வைக்கோல சாப்பிடாம மாட்டையிம் வைக்கோல சாப்பிட உடாம வம்பு பண்ணுமாம். அந்த மாதிரி ஆயிப்போச்சுங்க என் கதை.