திங்கள், 25 ஜூலை, 2016

ஒரு தம்பதியருக்கு குழந்தைகள் அவசியமா?

                           
                                 Image result for couple
மனித இனம் தோன்றிய காலம் முதல் சமீப காலம் வரை குழந்தைகள் பெறுவது என்பது ஒரு குடும்பஸ்தனின் முக்கிய கடமையாக இருந்தது. இதை வம்ச விருத்தி என்று அழைத்தார்கள். கல்யாணமாகிய தம்பதியினரின் பெற்றோர்களை பார்ப்பவர்கள் விசாரிப்பது மருமகளுக்கு (மகளுக்கு) ஏதாவது விசேஷமா? என்பதாகத்தான் இருக்கும்.

குழந்தை இல்லாவிடில் அதை ஒரு துர்ப்பாக்கியமாகக் கருதினார்கள். அதற்குக் காரணம் நமது பாரம்பரியத்தில் பெற்றோரைப் பேணுதல் என்பதை ஒரு முக்கிய கடமையாகக் கருதினார்கள். அது ஒரு காலம்.

நிகழ் காலத்திற்கு வருவோம். இப்போது உயிருடன் இருக்கும் 60 வயதைத் தாண்டினவர்கள் எத்தனை பேரை அவர்களின் வாரிசுகள் பராமரிக்கின்றன? ஒரு ஐந்து சதவிகிதம் கூட இருக்காது என நினைக்கிறேன். காரணம் இக்காலத்தில் பொருள் ஈட்ட ஒவ்வொருவனும் பல ஜாலங்கள் புரிய வேண்டி இருக்கிறது.

தான் பிறந்த ஊரில் பிழைக்க வழி கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கானடா என்று திரை கடலோடி திரவியம் சேர்க்கிறான். இந்த ஓட்டத்தில் அவன் பெற்றோரை எங்கே நினைப்பது? நினைத்தாலல்லவா பாரமரிப்பதற்கு?

ஆக மொத்தம் வயதான பிறகு மகன் அல்லது மகள் நம்மைக் காப்பாற்றுவாள் என்ற நடைமுறை ஒழிந்து விட்டது. தன் கையே தனக்குதவி என்ற முறையில் தன்னிடம் ஏதாவது பணம் சேர்த்து வைத்திருந்தால் ஒழிய, வயதானவர்கள் மானமாக வாழ வழி இல்லை.

நிலைமை இப்படியிருக்க, குழந்தைகளைப் பெறுவானேன்? அப்புறம் அவர்கள் நம்மைக் காப்பாற்றவில்லையே என்று புலம்புவானேன்? என்னுடைய யோசனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இனிமேல் தம்பதிகள் விட்டு விடவேண்டும். அன்பு செலுத்த ஏதாவது உயிர் வேண்டுமென்றால் நாய், பூனை இப்படி ஏதாவது ஒரு பிராணியை எடுத்து வளர்த்தால் போதும். இனிமேலாவது ஜனங்கள் புத்தியாய்ப் பிழைத்தால் சரி.