ஞாயிறு, 19 நவம்பர், 2017

24 மூட நம்பிக்கைகள் - சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது.

                                         Image result for drinking water

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக்கூடாது.

இது யார் வைத்த சட்டம் என்று நான் ஒரு ஆராய்ச்சியே செய்தேன். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ சொன்னதாக வைத்துக்கொள்வோம். ஆனால் பலர் இதை நம்புகிறார்களே என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம்.

அவர்கள் சொல்லும் முக்கியமான வாதம் என்னவென்றால் செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் நீர்த்துப்போகுமாம். என்சைம்கள் என்றால் என்னவென்ற அறிவு இல்லாதவர்கள்தான் இவ்வாறு சொல்வார்கள். என்சைம்கள் அடர்வாக இருந்தாலும் நீர்த்துப்போனாலும் அதன் வேலையை எந்த சுணக்கமுமில்லாமல் செய்யும். இன்னும் சொல்லப்போனால் தண்ணீர் அதிகம் இருக்கும் உணவை இன்னும் சீக்கிரமாக செருக்க உதவும்.

இரண்டாவது இதனால் வயிற்றில் அசிடிடி அதாவது அமிலத்தன்மை அதிகரிக்குமாம். இதைப்போன்ற அறிவீனம் வேறொன்றுமில்லை. அமிலம் தண்ணீரினால் நீர்த்துத்தான் போகும். அது எப்படி அசிடிடியை உண்டாக்கும்?

இரைப்பையில் சேரும் உணவை இரைப்பை தன் அசைவுகளினால் அரைக்கிறது. போதுமான அளவு தண்ணீர் இல்லாவிட்டால் இரைப்பை கெட்டியாக இருக்கும் உணவை அரைக்க முடியாமல் திணறும்.

மேலும் செரிமானமான உணவை குடல் உறிஞ்சுவதற்கு அந்த உணவு நீர்த்ததாக இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் செரித்த உணவில் உள்ள உப்புகள் அதிகமாக உறிஞ்சப்பட்டு சிறுநீரகக்கற்கள் உற்பத்தி ஆகும். 

இந்தக்காரணங்களினால் சாப்பிடும்போது அளவாகத் தண்ணீர் அருந்தலாம். சாப்பிட்டபிறகு தேவையான தண்ணீரை கண்டிப்பாக அருந்தவேண்டும். மூடநம்பிக்கைகளை களைந்தெறியுங்கள். ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

தவறினால் விக்கல் வந்து செத்துப்போவீர்கள்.