திங்கள், 1 ஜூலை, 2013

ஒரு மூத்த பதிவரின் புலம்பல்கள்

நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்  - குறள் 948

பதிவெழுதுவது ஒரு பைத்தியமாக மாறிக்கொண்டு வருகிறது. எப்பொழுதும் சிந்தனை, அடுத்த பதிவு எப்பொழுது, எதைப்பற்றி என்பதைச் சுற்றியே வந்துகொண்டு இருக்கிறது. இந்த மாதிரிப் பைத்தியம் கல்யாணத்திற்கு முன்பு எங்கள் கிளப்பில் சீட்டு விளையாடினபோது வந்தது. மிகவும் சிரமப்பட்டு அதை குணப்படுத்தினேன்.

பதிவு போட்ட பின், பின்னூட்டம் வந்திருக்கிறதா, எத்தனை ஹிட்ஸ் வந்திருக்கிறது என்று பலமுறை பார்க்கத் தோன்றுகிறது. தமிழ்மணம் ரேங்க் எவ்வளவில் இருக்கிறது என்று தினந்தோறும் பார்க்கிறேன். ரேங்க் குறையக் குறைய ஏற்படும் மகிழ்ச்சி, அந்த ரேங்க் அதிகமாகும்போது துக்கமாக மாறுகிறது.

மற்றவர்கள் போடும் பதிவுகளின் தலைப்புகளை மட்டும்  நுனிப்புல் மேய்கிறேன். வெகு சில பதிவுகளை மட்டும் படித்து பின்னூட்டம் போடுகிறேன். ஆழமான படிப்பிற்கான பதிவுகள் அபூர்வமாகத்தான் எழுதப்படுகின்றன. அவைகளை ஆழமாகப் படிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வருகிறேன்.

பேப்பரில், பேனாவினால் எழுதி பல ஆண்டுகள் ஆகிவிட்டது போன்று தோன்றுகிறது. ஒரு வித்தியாசத்திற்காக இந்தப் பதிவை முதலில் பேப்பரில் எழுதி பிறகு கம்ப்யூட்டரில் அச்சிடுகிறேன். யாருக்கும் கடிதம் எழுதுவது என்பது மறந்தே போய்விட்டது. யாரிடமிருந்தும் கடிதங்கள் வருவதும் இல்லை. தபால்காரனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்த காலங்கள் மறந்தே போனது.

தூங்கி எழுந்ததும் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து இணையத்தைப் பார்க்கத் தோன்றுகிறதே தவிர வேறு ஒரு வேலையையும் செய்யத்தோன்றுவதில்லை. புத்தகங்கள் படித்து வெகு காலம் ஆகிவிட்டது. ஆரணி குப்புசாமி முதலியார் மற்றும் வடுவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் கதைகளை நடு ஜாமம் வரை படித்துவிட்டு, பின்பு பயத்தினால், ஒன்றுக்கு கூடப் போகாமல்,  தூக்கம் வராமல் கிடந்தது, ஏதோ போன ஜன்மத்தில் நடந்தது போல் இருக்கிறது.

பிரசங்கங்கள், கதா காலக்ஷேபங்கள், சங்கீதக் கச்சேரிகள், நாட்டியம், சினிமா ஆகியவற்றில் எனக்கு அபரிமிதமான பற்று ஒரு காலத்தில் இருந்தது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எங்கள் ஊரிலேயே  குமுதம் பிரதியை, முதல் ஆளாக, ஒவ்வொரு வாரமும் (அதற்கு முன்பு மாதம் மும்முறை)  விநியோகஸ்தர் பார்சலைப் பிரித்ததும்  வாங்கி, வீட்டிற்கு வருவதற்குள் அதை நடந்துகொண்டே படித்து முடித்தவன் நான் என்று சொன்னால் என் பேரப் பிள்ளகள் நம்ப மறுக்கிறார்கள்.

யூட்யூபில் இருந்து ஆயிரக்கணக்கான கர்னாடக இசைப் பாடங்களை டவுன்லோடு பண்ணி கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கிறேன். அவைகளை எப்போது கேட்பேன் என்று சொல்ல முடியவில்லை. அநேகமாக அடுத்த ஜன்மத்தில் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நாய் பெற்ற தங்கப் பழம் கதைதான்.

நல்லவேளை. பேஸ்புக், ட்விட்டர், செல்போன், எஸ் எம் எஸ், டி.வி. சீரியல், சினிமா விமரிசனம் எழுதுதல் ஆகியவைகளில் நான் சிக்கவில்லை. அப்படி சிக்கியிருந்தால் என்னை ஏர்வாடி தர்காவில்தான் சந்தித்திருக்கமுடியும்.

இது ஒரு  சரியான மனப்பிறழ்தல் நோய். உங்களுக்கும் இருக்கலாம். ஒரு பிரச்சினையை உணர்வதே அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணுவதில் முதற்படியாகும். முதற்படி எடுத்து வைத்தாகிவிட்டது. எப்படியும் தீர்வை அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வியாழன், 27 ஜூன், 2013

எனக்குப் புரியாத பேங்க் விவரம் ஒன்று

இன்றைய செய்தித்தாள்களில் வந்த ஒரு பேங்க் மோசடி விவகாரம் பற்றி படித்திருப்பீர்கள். கர்நாடகா பெங்களூரில் உள்ள அரசு சார்ந்த ஒரு நிறுவனம் 25 கோடி ரூபாயை இரண்டாகப்பிரித்து சேலம் மாவட்டத்தில் சங்ககிரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் டிபாசிட்டாக ஒரு வருடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

அதில் 12 கோடி ரூபாயை வங்கி அதிகாரிகள் மோசடி செய்திருக்கிறார்கள்.

எனக்கு வந்த சந்தேகம் என்னவென்றால் இந்தப் பணத்தை டிபாசிட் வைப்பதற்கு ஒரு நல்ல பேங்க் பெங்களூரில் இல்லையா என்பதுதான்?  பெங்களூரில் இருந்து இவ்வளவு தூரம் வருவதற்கான காரணம் என்ன?

என் சந்தேகம் நியாயமானதுதானா?

திங்கள், 24 ஜூன், 2013

அக்காளைக் கட்டினால் தங்கச்சி இலவசம்


இலவசங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

சீலை வாங்கினால் ஜாக்கெட்டு இலவசம்.

சோப்பு வாங்கினால் சீப்பு இலவசம்.

இரண்டு சர்ட் (அல்லது பேன்ட்) வாங்கினால் மூன்றாவது இலவசம்.

இப்படி உலகில் பல வியாபார வித்தைகள் நடக்கின்றன.

இதைப் பார்த்த என் நண்பர் சொன்னதைத்தான் இந்தப் பதிவிற்கு தலைப்பாக வைத்திருக்கிறேன். இது வேடிக்கைக்காக சொன்னாலும் இலவசங்களின் தத்துவத்தை நன்றாக விளக்குகிறது.

இந்த பொது தத்துவம் இணையத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம்.

இவ்வுலகில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை என்பதை அனுபவசாலிகள் புரிந்துகொண்டிருப்பார்கள். காற்றும் தண்ணீரும் இயற்கை தந்த இலவசச் செல்வங்கள் என்று சிறுவயதில் பாடபுத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அவை எவ்வாறு வியாபாரப் பொருள்களாகி விட்டன என்று கண்கூடாகப் பார்க்கிறோம்.

இலவசம் என்று செல்லப்படும் அனைத்து விஷயங்களிலும் மறைமுகமாக ஏதோ ஒன்றை நம்மிடம் தள்ளிவிடுகிறார்கள் அல்லது அதனால் ஏதோவொரு லாபம் அவர்களுக்கு இருக்கிறது என்று புரிந்து கொள்ளவேண்டும்.

உலக நடைமுறை இவ்வாறு இருக்க இணையம் மட்டும் எப்படி வேறு விதமாக இருக்க முடியும்? இணையத்தில் இந்த உத்தியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

கம்ப்யூட்டரை இயக்க பல மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்களில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ஆனால் அத்தியாவசிய மென்பொருட்களுக்கான விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் ஏறக்குறைய எல்லோரும் காப்பியடிக்கப்பட்ட (Pirated) மென்பொருட்களை உபயோகிக்கிறோம்.

இது போக பல இலவச மென்பொருட்களை நம் பதிவுலக ஆர்வலர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில மென்பொருட்கள் உண்மையிலேயே இலவசமானவை. ஆனால் அவைகளின் மூலமாக ஏதோவொரு லாபம் அவர்களுக்கு கிடைக்கிறது. நம் காரியம் நடந்தால் சரி என்று நாம் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்கள் தங்களுடன் இன்னுமொரு இலவசத்தைக் கொண்டு வருகின்றன. பெரும்பாலான கம்ப்யூட்டர் வைரஸ்கள்  இவ்வாறுதான் நம் கம்பயூட்டருக்கு வந்து சேர்கின்றன.
சில வைரஸ்கள் பெரிய தீங்கு விளைவிக்காதவை. ஆனால் சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரையே முடக்கிப் போட வல்லவை.

ஆகையால்தான் எந்த வைரஸாக இருந்தாலும் தடுக்கவேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். இணையத்தை உபயோகப்படுத்தாதவர்கள் இந்த வைரஸ்களைக் கண்டு பயப்படத்தேவையில்லை. அவர்களை இந்த வைரஸ் இணையம் மூலமாக அணுகாது. வேறு வகைகளில் வரலாம்.

எந்தவொரு மென்பொருளையும் தரவிறக்கும்போது நல்ல ஆன்டிவைரஸ் மூலமாக பரிசோதித்து, பின்பு தரவிறக்குங்கள். அல்லது நண்பர்களிடம் விசாரித்துவிட்டு, பின்பு தரவிறக்குங்கள்.

கடந்த வாரத்தில் என்னுடைய கம்ப்யூட்டரை இரு முறை முற்றிலுமாக ரீஇன்ஸ்டால் செய்ய வேண்டி நேர்ந்தது. எனக்கு ஓரளவு இந்த தொழில் நுட்பம் தெரிந்திருந்ததினால் செலவு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் இந்த தொழில் நுட்பம் தெரியாதவர்களுக்கு வீண் செலவு ஏற்படும். ஆகவே இணையத்திலிருந்து எதையும் தரவிறக்கம் செய்யுமுன் தீர யோசித்து, பலரை விசாரித்து செயல்படவும்.


திங்கள், 17 ஜூன், 2013

வருமானவரி - மேலும் சில விவரங்கள்.

பதிவுகளைப் படிக்கும் பெரும்பான்மையானவர்கள் என்னைப்போல் சட்டங்களுக்கு பயப்படும் நடுத்தர வர்க்க மக்கள் என்று நம்பி இந்தப் பதிவை எழுதுகின்றேன். அப்படி இல்லாதவர்கள் இந்தப் பதிவைப் படித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழ்படுத்திக்கொள்ளாமல், இன்னும் இரண்டு காசு பார்க்கும் வேலையைச் செய்யவும்.

வருமான வரி என்றால் என்ன என்று கேட்கும் பல கோடீஸ்வரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாதா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு விடை இதுதான். நாயை கண்டு பயந்து ஓடுபவனைத்தான் நாய் துரத்தும். தைரியமாக எதிர் நிற்பவனைப் பார்த்து வாலை சுருட்டிக்கொண்டு ஓடும்.

சட்டமும் இப்படித்தான். என்ன,  நாயை கல்லால் அடிக்கவேண்டும். சட்டக் காவலர்களை பணத்தால் அடிக்கவேண்டும். அவ்வளவுதான். நாம் எல்லோரும் நாயைக்கண்டு பயந்து ஓடும் ஜாதி.

வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் உங்களுக்கு வருமானம் இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டவேண்டும் என்று பார்த்தோம். மாமனார் வீட்டிலிருந்து வரும் வருமானத்தை இதில் காட்டவேண்டியதில்லை. மாமனார் என்பதற்கு அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (நமக்கு வருமானம் தரும் ஒவ்வொருவரும் மாமனாரே.)

இப்படி கணக்குப்போட்டு வரும் வருமான வரி 10000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வரியில் 30 சதத்திற்கு குறையாமல் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் கட்டவேண்டும். 60 சதத்திற்கு குறையாமல் டிசம்பர் 31 க்குள் கட்டவேண்டும். மீதி வரியை துல்லியமாக கணக்குப் போட்டு மார்ச் 15ம் தேதிக்குள் கட்டவேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதென்றே பலருக்குத் தெரியாது. மார்ச் 31 க்குள் வரி கட்டினால் போதும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறையிலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள்.

நானும் என் நண்பர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். போனவருடம் கொடுத்த வருமான வரிப் படிவத்தில், என் நண்பர் தவறுதலாக ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கட்டிவிட்டார். இந்த ரிடர்ன் எப்படியோ ஒரு வருமானவரி அதிகாரியின் பார்வையில் சிக்கியிருக்கிறது. அதற்கு அவர் என் நண்பருக்கு ஒரு "ஓலை" அனுப்பி விட்டார்.

அந்த ஓலையில் எழுதியிருந்ததாவது. நீங்கள் உங்கள் வருமானவரியில் 1000 ரூபாய் குறைவாகக் கட்டியிருக்கிறீர்கள், அதற்கு 750 ரூபாய் வட்டி சேர்த்து உடனடியாக பேங்கில் கட்டி, கட்டின ரசீதை இந்த ஆபீசுக்கு அனுப்பவும்.

இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே என்று வருமான வரி அலுவலகத்தில் போய் விசாரித்தோம். அதற்கு அவர்கள் சொன்னது. நீங்கள் உங்கள் வரி முழுவதையும் மார்ச் மாதம்தான் கட்டியிருக்கிறீர்கள், எங்கள் விதிகளின்படி மூன்றில் ஒரு பாகத்தை செப்டம்பர் மாதத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை டிசம்பர் மாத த்திலும் கட்டியிருக்கவேண்டும். இந்த தாமதத்திற்குத்தான் இவ்வளவு வட்டி என்றார்கள்.

ஐயா, இந்த சமாசாரம் எங்களுக்குத் தெரியாதே என்றோம். நீங்கள் இந்தியக் குடிமகன்தானே என்று கேட்டார்கள். ஆம் என்றோம். அப்படியானால் உங்கள் நாட்டுச் சட்டங்களையே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே, அது உங்கள் குற்றமல்லவா? என்றார்கள். நாங்கள் ஒரு பதிலும் பேசமுடியவில்லை.

பேசாமல் அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டிவிட்டு வந்தோம்.

அப்புறம் எங்களுக்குத் தெரிந்த வக்கீல் ஒரு பொன்மொழி சொன்னார்.

Ignorance of rules is no excuse for not following.

திங்கள், 10 ஜூன், 2013

டிராபிக் ரூல்ஸ்


சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானவை என்றுதான் நாம் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நடைமுறை அப்படியில்லை என்பதை பலர் தங்கள் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள்.

சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம்.

கோவையில் உள்ள ஒரு முக்கிய ரோட்டில் ஒரு பக்கத்தில் "நோ பார்க்கிங்க்" போர்டுகள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டுகள் ஒரே சீரான இடைவெளியில் இல்லை. ஒரு இடத்தில் அந்த மாதிரி போர்டு இல்லாத இடம் இருந்திருக்கிறது. அங்கு சில கார்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். என் நண்பர் "இந்த இடத்தில் கார்களை நிறுத்தலாம் போல் இருக்கிறது" என்று தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அவர் வேலையை கவனிக்கப் போய்விட்டார்.

திரும்பி வந்து பார்க்கையில் அவர் கார் சக்கரத்திற்கு ஒரு பூட்டுப் போட்டிருந்தது. கார் கண்ணாடியில் ஒரு போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் உங்கள் கார் "நோ பார்க்கிங்" இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் உங்கள் காரை லாக் செய்திருக்கிறோம். இந்த போலீஸ் ஸடேஷனுக்கு வந்து உங்கள் காரை ரிலீஸ் செய்து கொள்ளவும் என்று எழுதியிருந்தது.

அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களை எனது நண்பர் பார்த்தார். அந்தக் கார்களுக்கு இந்த மாதிரி பூட்டு போடவில்லை. இவர் சிரமப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்தார். அந்த டூட்டியில் இருக்கும் போலீஸ்காரர் இந்த ரோட்டில் இப்போது இருக்கிறார், அங்கு சென்று பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இவரும் அங்கே சென்று சிரமப்பட்டு அவரைக்கண்டுபிடித்து கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு கூட்டிவந்தார்.

அவர் 300 ரூபாய்க்கு பைன் எழுதி பணத்தை வாங்கிக்கொண்டு பூட்டை திறந்துவிட்டார். என் நண்பருக்கு வயித்தெரிச்சலும் கோபமும் ஒரு சேர வந்தன. அவர் போலீஸ்காரரிடம் "இங்கே இன்னும் நாலு கார்கள் இருக்கின்றனவே, அவைகளுக்கு ஏன் பூட்டு போனவில்லை, என் காருக்கு மட்டும் ஏன் பூட்டு போட்டீர்கள்" என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த போலீஸ்காரர் சொன்ன பதில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை. "சார், இப்போ விவகாரம் எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான், அடுத்தவர்களைப்பற்றி நீங்கள் பேசவேண்டாம்" என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவல்ல. ஆளாளுக்கு மாறுபடும் என்பதுதான். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள்தான் உண்மையான இந்தியப் பிரஜை.

திங்கள், 3 ஜூன், 2013

நீங்கள் குடி பெயர்ந்தீர்களா, சனி உங்களைப் பிடித்துவிட்டான்.


ஏழரை நாட்டு சனி என்று கேள்விப்படாதவர்கள் இருக்கமாட்டார்கள். இந்தச் சனி பிடித்தால் ஒருவனைப் படாதபாடு படுத்தும் என்று கேள்வி. நமது புராண நாயகன் நளச்சக்கரவர்த்தியை சனி எப்படிப் பிடித்தான் என்று அறிந்திருப்பீர்கள். ஒரு நாள் அவன் கைகால் கழுவும்போது குதிகாலில் ஒரு இடத்தில் கால் நனையவில்லை. சனி, நளனை அது வழியாகப் பிடித்தான் என்பது புராணக் கதை.

இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் துர்ப்பாக்கிய வசமாக வீடு மாற்ற நேர்ந்தால் அப்போது உங்களை சனி பிடித்துக்கொள்ளுவான் என்பது மட்டும் தெரியும். வேறு ஊருக்குப் போய்விட்டீர்கள் என்றால் உங்களை ரெட்டைச் சனி பிடித்துக்கொண்டான் என்று அர்த்தம்.

நீங்கள் இவ்வாறு வீடு மாற்றியவுடன் செய்யவேண்டியவை:

1. ரேஷன் கார்டை புது விலாசத்திற்கு மாற்றவேண்டும்.

2. கேஸ் கனெக்ஷனை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

3. தபால் ஆபீசில் உங்கள் தபால்களை புது விலாசத்திற்கு அனுப்பச்சொல்லி கடிதம் கொடுக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு உங்கள் கடிதங்களை புது விலாசத்திற்கு அனுப்புவார்களா என்பது வேறு விஷயம்.

4. பேங்க் அக்கவுன்டுகளை உங்கள் புது வீட்டிற்குப் பக்த்தில் உள்ள கிளைக்கு மாற்றவேண்டும்.

5. உங்கள் டிரைவிங் லைசன்சில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும்.

6. உங்களை வாகன ரிஜிஸ்ட்ரேஷன் அட்டையில் உங்கள் விலாசத்தை மாற்றவேண்டும். அந்த வாகனத்திற்குண்டான இன்சூரன்ஸ் சர்டிபிகேட்டிலும் விலாசத்தை மாற்றவேண்டும்.

7. உங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஸ்கூல் மாற்றவேண்டும்.

8. லேண்ட் லைன் டெலிபான் வைத்திருந்தால் அதை புது இடத்திற்கு மாற்றவேண்டும்.

இன்னும் விட்டுப் போனவை இருக்கலாம். எனக்கு நினைவு வந்தவரை குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பதிவு எழுதவேண்டிய அளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன. அப்படி எழுதினால் உங்களில் பலரை, தற்கொலை செய்து கொள்ளத்தூண்டிய பாவம் என்னை வந்து சேரும் என்ற பயத்தினால் எழுதாமல் விடுகிறேன்.

ஞாயிறு, 26 மே, 2013

நீங்கள் கோவைக்கு வருகிறீர்களா, ஜாக்கிரதை.


போக்குவரத்து சிக்னல்கள் நகர வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சந்தடி மிகுந்த சாலை சந்திப்புகளில் அவைகளின் பங்கு மகத்தானது. ஆனால் எந்த தொழில் நுட்பமும் அவைகளை உபயோகிப்போரின் பொறுப்பான செயல்களினால்தான் பயன் பெறும்.

சிக்னல்களில் மூன்று கலர் விளக்குகள் இருப்பதை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். ஒரு ஜோக்கில் ஒரு சிறுவன் சொன்னதை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். அவனுடைய டீச்சர் இந்த டிராபிக் விளக்குகளின் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார்.

அந்த சிறுவன் சென்ன பதில்: பச்சை விளக்கென்றால் நிற்காமல் போகவேண்டும். ஆரஞ்சு விளக்கென்றால் அதிக வேகத்தில் போகவேண்டும். சிகப்பு விளக்கு விழுந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு உச்சகட்ட வேகத்தில் போகவேண்டும் என்று சொன்னானாம்.

கோவையில் ஏறக்குறைய இது மாதிரிதான் நடக்கிறது. சட்டம் என்னவென்றால், ஆரஞ்சு விளக்கு விழும்போது நீங்கள் பாதி தூரம் வந்திருந்தால் போய் விடலாம். நிறுத்துக் கோட்டிற்கு இந்தப் புறம் இருந்தால் ஆரஞ்சு விளக்கு விழுந்தவுடன் வண்டியை நிறுத்திவிடவேண்டும்.

ஆனால் நடப்பது என்னவென்றால் அந்த பள்ளிச் சிறுவன் சொன்னது போல்தான். நீங்கள் சட்டப்பிரகாரம் ஆரஞ்சு விளக்கைப் பார்த்தவுடன் நிறுத்தினால் பின்னால் வருபவன் உங்கள் வண்டி மீது வந்து மோதுவான். கேட்டால் ஆரஞ்சு விளக்குதானே விழுந்திருக்குது. நீ போகவேண்டியதுதானே என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவான்.

சந்திப்புகளில் நிற்கும் போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. லாரிக்காரர்களை "கவனிப்பது" தான் அவர்களின் முக்கிய வேலை.

நாங்கள், அதாவது உள்ளூர்க்காரர்கள் இதற்கு பழகிப் போய்விட்டோம். வெளியூரிலிருந்து கோவைக்கு புதிதாய் வருபவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.

வியாழன், 23 மே, 2013

நான் செய்த தவறு


நான் சமீபத்தில் தமிழீழம் பற்றி ஒரு பதிவு போட்டதில் சில தவறுகள் செய்து விட்டேன். அதாவது ஈழ சரித்திரம் சரியாகப் படிக்காததினால் வந்த தவறுகள் அவை. ஆகவே ஈழச் சரித்திரத்தை படிப்போம் என்று சில புத்தகங்களைப் படித்தேன்.

அதிலிருந்து நான் தெரிந்து கொண்டவை என்னவென்றால் இலங்கையில் தமிழினம் 2000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.  தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்வதற்காக 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து போனவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இலங்கையை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் ஆண்டுவிட்டு பிறகு சுதந்திரம் கொடுத்தபோது பல சிக்கல்களையும் விட்டுச் சென்றார்கள். அந்தச் சிக்கல்களில் தலையாயதுதான் தமிழ் ஈழப் பிரச்சினை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை.

பல கட்டங்களைத் தாண்டி இந்தப் பிரச்சினை இன்று ஒரு குழப்பமான நிலைக்கு வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை எப்படி தீரும் என்பதை காலம்தான் சொல்லும்.

வெள்ளி, 17 மே, 2013

ஒரு அறிவிப்பு


நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தமிழீழம் பற்றி ஒரு சந்தேகம்.


எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மனதைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

தமிழீழம், தமிழீழம் என்று தமிழர்கள் உயிரை விடுகிறார்களே, இலங்கைக்கு அந்தக் காலத்தில் கேரளாவிலிருந்தும் கணிசமான மக்கள் போயிருப்பார்கள் அல்லவா, அவர்களும் கேரள ஈழம் கேட்பதில்லையா?

படம்: கூகுளாண்டவர் உபயம்

செவ்வாய், 14 மே, 2013

திரு. பட்டாபட்டி - இறுதி சடங்குகள்.


திரு.பட்டாபட்டியின் நிஜப் பெயர் வெங்கிடபதி. அவர் அப்பா பெயரையும் சுருக்கி ராஜ் வெங்கிடபதி என்ற பெயரில் சிங்கப்பூரில் "Global Foundries" என்னும் ஸ்தாபனத்தில் சீனியர் இஞ்சினீயராக வேலை பார்த்துள்ளார். ஏதோ விஷயமாக பேங்காக் சென்றிருந்தபோது ஒரு மாலுக்குள் சென்றிருக்கிறார். அங்கு உள்ளே நுழைந்த சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக இறந்துவிட்டார். அவரின் ஒரு சகோதரர் சிங்கப்பூரிலேயே இருக்கிறார். அவர் உடனடியாக பேங்காக் சென்றிருக்கிறார்.

திரு. பட்டாபட்டி இறந்தது 12-5-2013, ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாளான 13ந் தேதி, திங்கட்கிழமை, தாய்லாந்தில் லீவு. ஒரு காரியமும் நடக்கவில்லை. இன்றுதான் (14-5-2013) பேப்பர் வொர்க் முடிந்து மதியத்திற்கு மேல் பேங்காக்கில் விமானத்தில் ஏற்றுவார்கள். இன்று இரவு(அதாவது 15-5-2013 அதிகாலை)  1 மணி சுமாருக்கு சென்னை வரும். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊரான பெரியநாயக்கன்பாளையத்திற்கு (கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 20 கி.மீ. தூரம்) அநேகமாக நாளை (15-5-2013, புதன்கிழமை) காலையில் 8 லிருந்து 9க்குள் சடலம் வரலாம்.  அன்றே இறுதிச்சடங்குகள் நடக்கும்.

இறந்தவருக்கு வயது 46. மனைவியும் இரு பெண் குழந்தைகளும் இருக்கின்றன. எனக்கு நெருங்கிய நண்பர். அந்த விபரங்களை பிற்பாடு எழுதுகிறேன்.

அவருக்கு சொந்த ஊரில் ஏகப்பட்ட நண்பர்கள். ஊரெங்கும் இரங்கல் நோட்டீஸ் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.


அஞ்சிலே ஒன்று பெற்றான்


இந்தப் பாடலை பலமுறை பல இடத்தில் படித்திருக்கிறேன். ஆனால் முறையாக அர்த்தம் தெரிந்து கொள்ளவில்லை. இந்தப் பதிவில் 

 http://sangarfree.blogspot.in/2012/04/blog-post.html 


இந்த உரையைக் கண்டேன். எல்லோருக்கும் பயன்படுமென்று கருதி அதை அந்த ஆசிரியரின் அனுமதி பெறாமலேயே இங்கு பிரசுரித்துள்ளேன். அவருடைய ஈமெயில் விலாசம் கிடைக்கவில்லை. அதனால் அவரிடம் அனுமதி வாங்கவில்லை. அனுமதி வாங்காததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

இந்தப் பதிவுதான் என்னுடைய முதல் "காப்பி-பேஸ்ட்" பதிவு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.


அஞ்சிலே ஒன்று பெற்றான்

                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான் 

இது கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு பா ..தமிழ் சினிமா காரங்க சொல்லூர மாதிரி ரொம்ப எபெட் எடுத்து தான் கம்பர் இந்த பாடலை புனைந்திருக்க  வேண்டும் .

அனுமனுக்கு வணக்கம் வைக்கும்வகையில இந்த பா உருவாக்க பட்டிருக்கும் .
முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில்   அஞ்சிலே ஒன்றுபெற்றான் .அஞ்சு என்று கம்பர்  விளிப்பது ஐம்பூதங்களை என்பது வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது .

அனுமனை வாயுபுத்திரன் என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் .காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாவில்   அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றுஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து   அஞ்சிலே ஒன்றை தாவி        இந்த  கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய நீரை  கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்..அத்தோடு   அஞ்சிலே ஒன்று ஆறு ஆக   எனும் போது வான் வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர்
எதுக்கு?  ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர்



கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான்,இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கை கண்டு இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா பூமா தேவி மகள் எனவே இந்த வரி இங்கு ..இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர்

அஞ்சிலே ஒன்று வைத்தான்  இலங்கா புரிக்கு தீ வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று நினைத்திருகிறான்  கவியர்...

அருஞ்சொல் விளக்கம்:

ஆறு = வழி
அளித்து = கருணை அளித்து
ஆரியர் = வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்

மேற்கண்ட பதிவு கீழே கொடுத்துள்ள தளத்திலிருந்து, அதன் ஆசிரியரிடமிருந்து எந்த விதமான அனுமதியும் வாங்காமல் பிரசுரிக்கப்பட்டது. அவருடைய முகவரி தெரியாததால் இவ்வாறு செய்யவேண்டி நேர்ந்தது.
http://sangarfree.blogspot.in/2012/04/blog-post.html

திங்கள், 13 மே, 2013

இப்படியும் ஒரு பதிவர்


http://avinashiathikadavu.blogspot.in    ல் வெளிவந்த  பதிவு  அவினாசி அத்திக்கடவு திட்டம் ...மேலும் வாசிக்க

இன்று தமிழ்மணம் திரட்டியை மேய்ந்துகொண்டிருந்த பொது மேற்கண்ட பதிவைப் பார்த்தேன். ஏதோ நம்ம ஊரு சமாச்சாரமா இருக்குதே, என்ன ன்னு பார்ப்போம் என்று கிளிக் பண்ணினேன். கீழ்க்கண்ட அறிவிப்பு வந்தது.


அதாவது வருகை புரிந்தவரின் பெயரும் பாஸ்வேர்டும் கேட்கிறது. படிக்க வருபவர்களை இந்தப் பதிவர் ஏன் இப்படி வாதிக்கிறார் என்று புரியவில்லை.