செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இரு பிரயாணிகள்.


ஒரு ஆங்கிலக் கதையைத் தழுவியது.

ஒரு நாள் நன்கு படித்தவன் ஒருவன் ரயிலில் பிரயாணம் செய்தான். அவன் கூடவே ஒரு விவசாயியும் பிரயாணம் செய்தான். விவசாயியைப் பார்த்தாலே படிக்காத, உலக அனுபவம் இல்லாதவன் என்று பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் படித்தவன் விவசாயியைப் பார்த்து நேரம் போகவில்லையே, ஏதாவது விளையாட்டு விளையாடலாமே என்றான். விவசாயியும் சரி என்று ஒப்புக்கொண்டு, என்ன விளையாட்டு விளையாடலாம் என்று கேட்டான்.

அதற்கு படித்தவன், நான் ஒரு கேள்வி கேட்பேன், அதற்கு நீ சரியான விடை சொன்னால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுப்பேன், சரியான விடை சொல்லாவிட்டால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான். அதே போல் நீ கேட்கும் கேளவிக்கு நான் சரியான பதிலை சொன்னால் நீ எனக்கு 100 ரூபாய் கொடுக்கவேண்டும். பதில் சொல்ல முடியாவிட்டால் நான் உனக்கு 100 ரூபாய் கொடுக்கிறேன், என்றான்.

விவசாயியும் கொஞ்சம் யோசித்துவிட்டு, நல்ல விளையாட்டாகத்தான் தெரிகிறது. ஆனால் நீங்கள் நன்கு படித்தவர், நல்ல உலக அனுபவம் பெற்றவர், ஆகையால் உங்களுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கும். நானோ ஒரு ஏழை விவசாயி, உலக அனுபவம் பெறாதவன். ஆகையால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன். நீங்கள் நான் கேட்கும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் நூறு ரூபாய் கொடுக்கவேண்டும் என்றான்.

படித்தவன், இந்த முட்டாள் அப்படி என்ன கேள்வி கேட்டுவிடப்போகிறான் என்று எண்ணிக்கொண்டு விளையாட்டிற்கு ஒப்புக்கொண்டான். படித்தவன் படிக்காதவனைப் பார்த்து நீயே முதலில் கேள்வி கேள் என்றான்.

படிக்காதவன் "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?" என்று தன் கேள்வியைக்கேட்டான்.

படித்தவன் பல நிமிடங்கள் யோசித்தும் அவனால் பதில் கண்டு பிடிக்க முடியவில்லை. நூறு ரூபாயை எடுத்து படிக்காதவனிடம் கொடுத்து விட்டு, அவன் தன்னுடைய கேள்வியைக் கேட்டான்.  "மூன்று கால் உள்ள ஒரு மிருகம் பறக்கிறது, அது என்ன மிருகம்?"

படிக்காதவன் ஐம்பது ரூபாயை எடுத்து படித்தவனிடம் கொடுத்து விட்டு எனக்கும் விடை தெரியவில்லை என்று சொன்னான்.

படித்தவர்கள் ஏன் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வருவதில்லை என்று புரிகிறதல்லவா.

வியாழன், 12 செப்டம்பர், 2013

கலி முற்றுகிறது.

Delhi records 1,121 rape cases in eight months, (till August, 2013)highest in 13 years
(Read more at: http://ibnlive.in.com/news/delhi-records-1121-rape-cases-in-8-months-highest-in-13-years/421286-3-244.html?utm_source=ref_article)

கடந்த 2012ம் வருடம் நடந்த கற்பழிப்பு நிகழ்வில் இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது மக்களுக்கு நினைவிருக்கும். டில்லியில் மிகவும் உக்கிரமான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சமூகத்தில் பெரும் புரட்சி நடக்கப்போகிறது என்று என்னைப்போன்ற கிழடுகள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம்.

இன்று அந்த டிசம்பர் கொடுமைக்கு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்போகிறது. அந்த தினத்தில் வெளியான செய்தியைப் பாருங்கள்.

இன்றைய இணையத்தில் வெளியான செய்தியின் தலைப்பைத்தான் இப்பதிவின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன். அத்தகைய புரட்சிகரமான ஆர்ப்பாட்டங்கள் நடந்த டில்லியில்தான் இத்தகைய தொடர் கொடுமைகள் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன.

கலி முற்றுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

புதன், 11 செப்டம்பர், 2013

சினிமா தயாரிப்பு மோகம்.


சினிமா உலகத்தில் பணம் கொள்ளை கொள்ளையா கொட்டி வச்சிருக்குது. வேண்டியதெல்லாம் நல்ல சாக்குகள்தான். உள்ளே போனால் சாக்கு நிறைய பணத்தைக் கட்டி கொண்டுவரலாம்.

இந்த எண்ணம் பலருடைய மனங்களில் வேரூன்றி இருக்கிறது. அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் ஒரு நல்ல டெய்லர். மிக நன்றாகத் தைப்பார். பணம் கொழித்தது. யாருடைய தூண்டுதலினாலோ சென்னைக்கு சினிமா எடுக்கப்போனார். கைக் காசு முழுவதும் போய் கடனாளியாகத் திரும்பி வந்தார். அந்த சோகத்திலேயே உயிரையும் விட்டார்.

பல சினிமா நடிகர்கள் தாங்கள் நடித்து சம்பாதித்த பணத்தை சினிமா எடுக்கிறேன் என்று ஆரம்பித்து ஓட்டாண்டியாய் மாறி, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் உயிர் விட்ட கதைகள் மக்களுக்குத் தெரியும்.

இதையெல்லாம் பார்த்த பிறகும் நாகர்கோவிலில் இருந்து நாகராஜன் என்று ஒருவர் கோழி கூவுது என்ற படத்தை கடன் வாங்கி எடுத்து விட்டு படம் சரியான வசூல் கொடுக்காததால் தற்கொலை செய்யலாமா என்று யோசனை செய்து கொண்டிருக்கிறாராம்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் சினிமா எடுக்கப்போவதற்கு முன்பு செய்யாத யோசனை இப்பொது எதற்கு என்பதுதான்.

சனி, 7 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு அனுபவங்கள்

கடந்த செப்டம்பர் 1 ந்தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு, மகாநாடு, திருவிழா நடந்தது அனைத்து பதிவர்களும் அறிந்ததே. இந்த நிகழ்வினால் என்ன பயன் விளைந்தது என்று பலருக்கு ஐயப்பாடு இருக்கிறது.

பதிவர் சந்திப்பினால் பின் வரும் பயன்கள் ஏற்படும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது வழக்கம்.

1. புதிய பதிவுலக நண்பர்கள் கிடைப்பார்கள்.

2. பழைய நண்பர்களைச் சந்தித்து அளவளாவலாம்.

3. புது பதிவுலக உத்திகளை அறிமுகப்படுத்துவார்கள்.

4. நல்ல தியான யோக அனுபவம் கிட்டும்.

5. மதியம் ஒரு விருந்து கிடைக்கும்.

6. ஒரு நான்கைந்து பதிவுகளுக்கான மேட்டர் தேத்தலாம்.

இந்த நோக்கங்கள் எல்லாம் நிறைவேறின. ஆனால் எல்லா பதிவர்களுக்கும் எல்லா நோக்கங்களும் நிறைவேறியிருக்காது.

என்னைப் பொருத்த வரை சில புதிய பதிவர்களை சந்திக்க முடிந்தது. பல பழைய பதிவர்களை சந்திக்க முடிந்தது.

சந்தித்த புதிய பதிவர்கள்:

ரஞ்சனி நாராயணன்.

வெளங்காதவன்

உமாமகேஸ்வரி

மாதங்கி மாலி.

சுப்புத் தாத்தா

கேபிள் சங்கர்

சேட்டைக்காரன்

முருகானந்தம் (கைலாய யாத்திரை)

ஆரூர் மூனா செந்தில்

சந்தித்த பழைய பதிவர்கள்.

புலவர் ராமானுஜம்

வெங்கட் நாகராஜ்

ஜாக்கி சேகர்

சதீஷ் சங்கவி (எங்க ஊரு)

திண்டுக்கல் தனபாலன்

ஜோதிஜி

தருமி

இந்த லிஸ்ட்டில் பல பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவேண்டும்.

இந்த அறிமுகங்களில் எனக்கு ஒரு பெரிய சங்கடம் உண்டு. மனித மூளையில் இரு பகுதிகள் உண்டு என்பதும் அதில் ஒரு பகுதியில்தான் இந்த மனித முகங்களையும் பெயர்களையும் சேமித்து வைக்கும் ஆற்றல் உண்டு என்றும் படித்திருக்கிறேன். என்னுடைய மூளையில் இந்தப் பகுதி ரொம்ப வீக். ஒருவரைப் பார்த்து அரை மணிநேரம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனதும் அவர் பெயர் என்னவென்று ஒரு மணி நேரம் யோசித்தாலும் நினைவிற்கு வராது.

இது புதிதாகப் பார்த்தவரைப் பற்றிய அனுபவம். வரவர நெடுநாள் பழகியவரின் பெயர் கூட உடனே நினைவிற்கு வருவதில்லை. இது வயதானதின் கோளாறு. இதில் கூடுதல் வம்பு என்னவென்றால், பதிவர்கள் ஒவ்வொருவரும் (சிலரைத்தவிர) எல்லோரும் ஒவ்வொரு புனை பெயர் வைத்திருக்கிறார்கள். அவர்களின் தளங்களின் பெயர்கள். பிறகு அவர்களின் நிஜப் பெயர்கள். அவர்களின் ஊர், தொழில். அவர்களின் முகங்கள். இத்தனை சமாசாரங்களையும் சந்தித்து ஓரிரு நிமிடங்களில் மனதில் பதிய வைத்து, பின்பு நினைவு கூர்வது என்ன பெரிய பிரம்ம வித்தை.

சைனாக்கார்ர்கள், ஜப்பான்காரர்கள் இவர்களைப் பார்க்கும்போது எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் எனக்குத் தெரிகிறார்கள். உங்களில் பலரும் இந்த அனுபவம் பெற்றிருப்பீர்கள். அந்த ஊரில் ஒருவருக்கொருவர் எப்படி அடையாளம் கண்டு பிடிப்பார்கள் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமே. இப்போது என்ன ஆகிவிட்டதென்றால், இன்றைய இளைஞர்களும் அதேபோல் ஒன்றுபோல் தெரிகிறார்கள். ஒரேமாதிரி தாடி, ஒரே மாதிரி ஜீன்ஸ் பேன்ட்டும் டி ஷர்ட்டும்.

இவர்களை வித்தியாசப் படுத்தி அடையாளம் கண்டு கொள்ள என்னால் முடிவதில்லை. அதிலும் ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கானவர்களைப் பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. இதுவும் வயசானதினால்தான் என்று நினைக்கிறேன்.

ஆகவே இப்படித்தான் என்னுடைய பதிவர்கள் சந்திப்பு நடந்தது.

பதிவுலகத்தில் புது உத்திகளை ஏதாவது அறிமுகப் படுத்துவார்களா என்று பார்த்தேன். யாரும் அதில் ஆர்வம் காட்டின மாதிரி தெரியவில்லை.

தியானயோக வகுப்புகள் எல்லாம் முன்தினம் இரவே முடிந்து விட்டதாகக் கூறி விட்டார்கள். எனக்கு மிகுந்த ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அடுத்த பதிவர் சந்திப்புக்கு இரண்டு நாள் முன்னதாகவே போய்விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனக்கு மிகவும் ரசிக்க முடிந்தது மதிய விருந்துதான். அப்படியொரு பிரியாணியை நான் இதுவரை சாப்பிட்டதில்லை. இருப்பதிலேயே உயர்ந்த ரக பாசுமதி அரிசியில் மிகவும் பக்குவமாக செய்யப்பட்டிருந்த பிரியாணி. வயிற்றுக்கு எந்த உபத்திரமும் செய்யவில்லை. விழாக்குழுவினருக்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.

அநேகமாக எல்லாப் பதிவர்களும் தலா நான்கு பதிவுகளாவது போட்டோ விட்டார்கள். பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களும் கலந்து கொள்ளாதவர்களும் பதிவர் சந்திப்பைப் பற்றி பதிவு போட்டுவிட்டார்கள். இன்னும் போடுவார்கள். ஆகவே பதிவுலகின் நோக்கமே பதிவு போடுவதுதானே. அந்த நோக்கம் மிக இனிதாக நிறைவேறியது என்பது ஒரு போற்றத்தக்க விஷயம்.

அடுத்த பதிவர் சந்திப்புக்காக காத்திருப்போம்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

விவசாய ஆராய்ச்சியும் மனிதர்களின் புரிதலும்.


பிடி கத்தரிக்காய் பற்றிய விக்கிப்பீடியாவின் கட்டுரை.

The Bt brinjal is a suite of transgenic brinjals (also known as an eggplant or aubergine) created by inserting a crystal protein gene (Cry1Ac) from the soil bacterium Bacillus thuringiensis into the genome of various brinjal cultivars. The insertion of the gene, along with other genetic elements such as promotersterminators and an antibiotic resistance marker gene into the brinjal plant is accomplished usingAgrobacterium-mediated genetic transformation. The Bt brinjal has been developed to give resistance against lepidopteron insects, in particular the Brinjal Fruit and Shoot Borer (Leucinodes orbonalis)(FSB).Mahyco, an Indian seed company based in JalnaMaharashtra, has developed the Bt brinjal. The genetically modified brinjal event is termed Event EE 1 and Mahyco have also applied for approval of two brinjal hybrids. The Event EE 1 was introgressed by plant breeding into various local varieties by University of Agricultural Sciences, Dharwad and Tamil Nadu Agricultural University, Coimbatore. Some of the cultivars of brinjal include: Malpur local, Manjari gota, Kudachi local, Udupi local, 112 GO, and Pabkavi local.[1] It was approved for commercialization in India in 2009, but - after an apparent public outcry and rounds of debates in which representatives from Mahyco, the scientific community, and NGO's spoke on the topic - the Indian Environment Minister, Jairam Ramesh, facilitated a moratorium on its release until further, unspecified, tests were conducted.

இந்தப் பதிவில் கூறப்படும் கருத்துகள் என்னுடைய சொந்தக் கருத்துகள். அவை கசப்பாக இருக்கலாம். உங்களுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். இந்தப் பதிவைப் படித்த பின் உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடலாம்.

பெரும்பாலான மனிதர்கள் ஆட்டு மந்தை சுபாவம் கொண்டவர்கள். அதாவது அவர்கள் தலைவர்கள் அல்லது வழிகாட்டுபவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன சொன்னாலும் அதை சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

கூடங்குளம் அணு நிலையம் ஆபத்தானது என்று சொன்னால் அதை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். இந்தப் போராட்டம் நியாயமானது என்று பல சான்றுகள் கொடுப்பார்கள். இத்தகைய போராட்டங்கள் யாரால், எதற்காக தூண்டி விடப்படுகின்றன என்பது சிதம்பர ரகசியம்.

உலகில் எந்த ஒரு முன்னேற்றம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் குறை காண்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். பிடி கத்தரி என்று ஒன்று சந்தைக்கு வந்திருக்கிறது. விவசாய ஆராய்ச்சி அல்லது பயிர்களின் மூலக்கூறுகள் பற்றி ஒன்றும் அறியாத பாமரனும் கூட இதைப்பற்றி கருத்து கூற முற்படுகிறான். அவனுக்கு சிலபல கட்டுரைகள் கைகொடுக்கின்றன.

பயிர்களை ஒட்டு சேர்த்து புதிய ரகம் கண்டுபிடிப்பது என்பது காலம்காலமாக விவசாய ஆராய்ச்சியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு உத்தி. இது தவிர ரசாயனங்கள் அல்லது வேறு உயிரினங்கிலிருந்து எடுக்கப்பட்ட வேதியல் பொருட்களையும் பயிரினுள் செலுத்தி புதிய ரகப்பயிர்களை உண்டாக்குவார்கள். இவைகளில் சில நல்ல மகசூலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்டிருக்கும். அத்தகைய ரகப் பயிர்களை விவசாயிகளுக்குப் பரிந்துரைப்பார்கள்.

இத்தகைய ரகங்கள்தான் இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்பட வழி வகுத்தது. அப்படி புதிய ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ரகம்தான் பிடி கத்தரி. பிடி என்பதின் விளக்கம் (BT = biologically transformed). இது ஒரு ஆராய்ச்சி  நிறுவனத்தால் கத்தரியின் காய்ப்புழு தாக்காத ரகம் வேண்டும் என்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ரகம். இதை ஒரு அயல் நாட்டுக் கம்பெனி மார்க்கெட் செய்கிறது.

இத்தகைய புதிய ஒட்டு ரகங்களின் விதைகளை எல்லா விவசாயியாலும் தயார் செய்து கொள்ள முடியாது. ஒவ்வொரு தடவையும் அந்தக் கம்பெனிதான் விதைகளைக் கொடுக்கவேண்டும்.

இந்த கத்தரி ரகத்தை பல விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் பரிசோதித்து இதைப் பயிரிடலாம் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். சில அரசியல் காரணங்களுக்காக இந்த அயல் நாட்டுக் கம்பெனியின் மேல் ஏதோ காரணத்தினால் ஏற்பட்ட விரோதத்தினால், இந்த கத்தரி ரகத்தின் பேரில் பல குற்றச்சாட்டுகள், நீதி மன்றத்தில் வழக்குகள், விவசாயிகளின் போராட்டங்கள் என்று பலவகையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த கத்தரிக்காய் ஏதோ விஷ ஜந்து, இதை சாப்பிட்டால் நேராக பரலோகம் போய்விடுவார்கள்  என்கிற மாதிரியான ஒரு மாயையை இந்த போராட்டத்திற்குக் காரணமானவர்கள்  உருவாக்கியுள்ளார்கள். இதைப்பற்றி நன்கு கருத்து கூறக்கூடிய விஞ்ஞானிகள் மௌனமாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் இந்த அரசியல் சக்திகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அல்ல. அது அவர்கள் வேலையும் அல்ல.

அப்படி அந்த விஞ்ஞானிகள் மௌனம் சாதிப்பதாலேயே இந்த போராட்டம் நியாயமானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதைப்போன்ற அபத்தமானது ஒன்றும் இல்லை.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு.

நானும் பதிவர் விழாவில் கலந்து கொண்டேன். வரவேற்புக்குழு சிறப்பாக பணியாற்றியது. நான் வடபழனி பஸ் நிலையத்தில் இருந்து போன் செய்தவுடன் திரு. சரவணன் அவர்கள் வந்து என்னை ரூமுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி குளிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். குளித்து ரெடியானவுடன் அங்கிருந்து விழா நடக்குமிடம் மிகவும் பக்கம். அதனால் அப்படியே பொடி நடையாக நடந்தேன்.

போகும் வழியில் வசந்தபவன் என்ற ஓட்டல் கண்ணுக்குப் பட்டது. அங்கு சென்று இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு காப்பி சாப்பிட்டேன். அந்தக் காலத்தில் பிளாட்பாரக் கடைகளில் "எது எடுத்தாலும் நாலணா" என்று பல சாமான்களைப் போட்டு வியாபாரம் செய்வார்கள். வசந்த பவன் முதலாளியும் அப்படி வியாபாரம் செய்து மேலுக்கு வந்தவர் என்று நினைக்கிறேன். நான் சாப்பிட்ட மூன்று ஐட்டங்களும் ஒரே விலை. இருபத்தியைந்து ரூபாய். மொத்தம் எழுபத்தியைந்து ரூபாய்.

சாப்பிட்டு விட்டு அரங்கிற்கு வந்தால் அரங்கிற்கு முன்னால் "அமுதா" நடமாடும் பலகாரக்கடையில் சுடச்சுட இட்லி ஒன்று மூன்று ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். சரி. நம் காசு எப்படி எப்படியோ யார் யாருக்குப் போகவேண்டுமோ, அப்படி போய்க்கொண்டு இருக்கிறது என்று மனதைச் சமாதானப் படுத்தினேன்.

பதிவர் சந்திப்பு நல்லபடியாக, சிறப்பாக நடந்தது. அனைத்து விழாக்குழுவினரும் சிறந்த ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இதைப்பற்றி பலரும் பதிவு போடுவார்கள் அதனால் நான் விளக்கமாக எழுதவில்லை. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

கொஞ்சம் சீரியஸ் மேட்டருக்கு வருவோம்.

பதிவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரைகள்.

பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.


இது போதாதா? வாழ்க்கையில  இப்போ இருக்கிற பிரச்சினைகளைத் தீர்க்கவே சக்தி இல்லை. இதுல ஊரு விட்டு ஊரு போயி வேற வம்பை காசு கொடுத்து வாங்கோணுமா? (காசு எப்படீ அப்படீங்கறீங்களா, ரயில்காரன் சும்மா சென்னைக்கு கூட்டீட்டு வருவானுங்களா)  வேண்டவே வேண்டாங்க. என்னமோ பதிவர் சந்திப்புக்கு போனமா, நாலு பேரப் பாத்து பேசினமா அப்படீன்னு இருக்கோணும். இது எங்க ஊட்டு அம்மா நான் ரயிலுக்குப் புறப்படறப்ப சொல்லி அனுப்பிச்ச அட்வைஸ்.

நாமதான் அம்மா கிழிச்ச கோட்டை எப்பவும் தாண்டினதில்லையே. அதனால வம்பு வராத போட்டோக்களை மட்டும் போட்டிருக்கேன். இந்த போட்டோக்களில் இருப்பவர்கள் அனைவரிடமும் போட்டோ எடுப்பதற்கும்,பதிவில் போடுவதற்குமான அனுமதி, ஸ்டாம்ப் பேப்பரில் சாட்சிக் கையெழுத்துடன் வாங்கி வைத்திருக்கிறேன். இதுலயும் யாராவதுக்கு ஆட்சேபணை இருந்தால் தயங்காமல் பின்னூட்டத்தில் போடவும். அந்தப் போட்டோக்களை அப்படியே அலாக்காத் தூக்கிடறனுங்க.

1. நான் சென்னை வந்த ரயில்.




2. என்னுடன் (ரயிலில்) வந்தவர்கள்.



.
3. சினிமா இசைக்கலைஞர்கள் அரங்கு.



4.அரங்கிற்கு எதிரில் உள்ள விஜயா மால்.



5. அரங்கு மேடை.

6. எனக்கு ஒதுக்கப்பட்ட சிம்மாசனம்.



7.மதிய விருந்துக்கான ஐட்டங்கள். (இதுதான் எல்லாவற்றிலும் டாப்.
   இதுக்காகத்தானே சென்னைக்குப் போனதே)





ஆனாலும் பிரியாணி அநியாயத்திற்கு கொள்ளை ருசி.

அடுத்த அறிவுரை:


 முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.

இதைக் கடைப்பிடிக்க ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன். என்னென்ன பிரச்சினைகள்னு லிஸ்ட் கொடுத்தா, அடுத்த தடவை அந்த பிரச்சினைகளை எல்லாம் பண்ண உபயோகமாக இருக்கும்.  அது சரி, மத்த நாள்ல யாரு ஹோஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரியலயே?

அடுத்த அறிவுரை:

 மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை  விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். .................. தவறக் கூடாது.


ரெண்டு நாளா இதுதாங்க வேலை. அதுதாங்க விசிலடிச்சுப் பழகறதுங்க. எப்பவோ ஒரு காலத்தில விசில் அடிச்சது. சுத்தமா மறந்து போச்சுங்க. இப்ப பிரேக்டீஸ் பண்ணலாமுன்னா பல்லெல்லாம் போயிட்டுதுங்களா, வெறும் காத்துதான் வருது. என்னால இந்தக் கண்டிஷன நிறைவேத்த முடியாததற்கு வருந்துகிறேன். சரி, கையையாவது தட்டலாம்னு பாத்தா கை வலிக்குதுங்க. இதுக்கும் சேர்த்து என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அடுத்த வருடப் பதிவர் சந்திப்பு ஈரோடில் என்று அறிவித்தார்கள். இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. பொழைச்சுக் கெடந்தா பாத்துக்கலாம். 

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நெதர்லாந்தில் என் அனுபவம்.


நான் ஒரு முறை ஸ்வீடன் சென்றிருந்தேன். நெதர்லாந்தில் "வேகனிங்கன்" என்கிற ஊரில் சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஸ்வீடனில் உள்ள என் ஒருங்கிணைப்பாளரிடம் சொன்னதற்கு அவர் "அதற்கென்ன, ஏற்பாடு செய்துவிடலாம்" என்றார்.

இரண்டு நாளில் பதில் வந்து விட்டது. மொத்தம் நான்கு நாட்கள் நெதர்லாந்தில் இருப்பதாக புரொக்ராம். இரண்டு நாள் வேகனிங்கனிலும் இரண்டு நாள் ஆம்ஸ்டர்டாமிலும் புரொக்ராம். எப்படி போகவேண்டும், எங்கு தங்கவேண்டும் என்கிற விவரங்களெல்லாம் துல்லியமாக குறிப்பிட்டு ஒரு ஃபேக்ஸ் வந்தது.

நினைவுக்கு வந்த வரை அதை ஆங்கிலத்தில் அப்படியே தருகிறேன்.

After alighting from flight at Schipol Airport, walk to the aerodrome Railway Station. Take ticket to Amersfort. Change train at Central. Get down at Amersfort, take Bus No.21 and come to Wageningen. From Bus Station, you can see International Student Centre where a room is reserved for you. Come to Soil Centre next day at 9 AM.

மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அந்த செய்தி இருந்தது. நான்கே வரிகள்தான். அதில் சொன்ன மாதிரியே ஏர்போர்ட்டில் இறங்கி ரயில் ஸடேஷன் போனேன். லக்கேஜை டிராலியில் வைத்துக்கொண்டு நடந்தே போய்விடலாம். அப்படி ரயில் ஸ்டேஷன் ஏர்போர்டை ஒட்டியே இருக்கிறது.

அந்த செய்தியில் சொன்ன மாதிரியே நான் போக வேண்டிய இடத்திற்குச் சென்று என் காரியத்தைக் கவனித்தேன்.

இதை எதற்காக இப்போது நினைவு கூர்ந்தேன் என்றால் வழி சொல்வது எப்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இரண்டாவது அங்குள்ள வழிகாட்டும் போர்டுகளும் தெளிவாக இருக்கின்றன. ஏரோப்ளேனில் இருந்து இறங்கியதிலிருந்து நான் தங்குமிடம் செல்லும் வரை யாரையும் வழி கேட்க வேண்டுய தேவையே ஏற்படவில்லை.



ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

சென்னை பதிவர் சந்திப்பு - ஒரு வேண்டுகோள்.

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நான் 1-9-2013 காலை ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறேன். என்னைப் போல் அன்று காலையில் பல பதிவர்கள் வரும் வாய்ப்பு இருக்கலாம்.

நான் ஒரு விஐபி யாக இருந்திருந்தால் என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு தங்குமிடத்தில் தங்க வைத்து காலைக்கடன்களை முடித்த பின் டிபன் சாப்பிடவைத்து, சந்திப்பு நடக்குமிடத்திற்கு கூட்டிப்போய் விடுவதற்கு ஆட்கள் வருவார்கள். அப்படி ஒரு காலம் இருந்தது.

இன்று நான் அதைப்பற்றி கனவு கூடக் காண முடியாது. தேவையுமில்லை. ஆனாலும் பணத்தைக் கணக்குப் பார்க்காமல் சில ஆயிரங்கள் செலவு செய்தால் அந்த சௌகரியம் இன்றும் கிடைக்கும். அப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்யக்கூடிய சூழ்நிலையில் நான் வளராததினால் இன்றும் அப்படி செலவு செய்ய மனம் வருவதில்லை. தவிர அப்படி செலவு செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் இல்லை.

ஆகையினால் எனக்கு வேண்டியது இரண்டே இரண்டு செய்திகள்தான். இந்தச் செய்திகள் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

1. சென்னை ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் முன்பு, அதாவது இருபது முப்பது வருடங்களுக்கு முன், குளிப்பதற்கு வெந்நீருடன் பாத்ரூம் கிடைக்கும் என்று வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள ஓட்டல்களில் போர்டுகள் தொங்கும். அன்று பத்து ரூபாய் வாங்குவார்கள். இன்று ஐம்பது அல்லது நூறு ரூபாய் கேட்பார்கள். அப்படிப்பட்ட வசதி இன்றும் இருக்கிறதா?

2. சென்னை சென்ட்ரலிலிருந்து வடபழனி வருவதற்கு டவுன் பஸ் நெம்பர் என்ன? (17ம் நெ. பஸ் என்று பழைய ஞாபகம்.)

சென்னைப் பதிவர்கள் யாராவது இந்த இரண்டு செய்திகளையும் கொடுத்தால் உதவியாயிருக்கும்.

நாங்கள் இங்கே ரூம் போட்டிருக்கிறோம், அங்கு வந்து விடவும் என்கிற மாதிரி விவரங்கள் வேண்டாம். நான் யாருக்கும் (என்னை உட்பட) சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இந்த விவரங்கள் இல்லாவிட்டாலும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் இருக்கிறது. காலை 9 மணிக்கு டாண் என்று சந்திப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவேன்.

இந்த விவரங்கள் என் தைரியத்தை இன்னும் கொஞ்சம் கூட்டும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

புலம்பல் எங்களது பிறப்புரிமை.


வீட்டில் வயதானவர்கள் இருந்தால் நீங்கள் இதை அனுபவித்திருப்பீர்கள். "அந்தக் காலத்தில ரூபாய்க்கு மூன்று படி அரிசி வித்தப்போ" என்று ஆரம்பித்தால் நான்-ஸ்டாப்பாக மூன்று மணி நேரம் அந்த பிரசங்கம் ஓடும்.

வயதானவர்கள் மட்டும்தான் புலம்புகிறார்கள். இளம் வயதில் புலம்புவர்கள் மிகவும் அரிது. ஏன் இப்படி வயதானவர்கள் மட்டும் புலம்புகிறார்கள் என்று (எனக்கும் வயதாகிவிட்டதால்) ஒரு ஆராய்ச்சி செய்தேன். அதில் கண்டு பிடித்த உண்மைகளை உங்களுக்குச் சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும்போல் இருக்கிறது. அதனால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமெல்லாம் என்ற தத்துவப்படி உங்களையும் வாதிக்கிறேன்.

இளம் வயதுக்காரர்கள் ஏதாவது ஒரு வேலையில் இருப்பார்கள். தவிர குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கும். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு வேறு எதிலும் சிந்தனை இருக்காது.

வயதாகி ரிடையர் ஆகி வீட்டில் தண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மனது வேலை செய்து கொண்டேயிருக்கும். அப்போது பேசுவதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். மனதின் எண்ணங்களை செயல்படுத்தும் தென்பும் போயிருக்கும். வாய் மட்டும் வேலை செய்யும். அப்போது நிகழ்வதுதான் இந்தப் புலம்பல்.

மனதின் எண்ண ஓட்டங்களை வாய் வழியாக வெளியில் வருகின்றன. மற்றவர்கள் இதைக்கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, இந்தப் புலம்பல் நடந்துகொண்டே இருக்கும்.

இரண்டாவது, அவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் முன் வருவதில்லை. எனக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது. ஒரு பயலும் என்னிடம் யோசனை கேட்க மாட்டேன் என்கிறானே என்பதுதான் பெரும்பாலானவர்களின் புலம்பலாக இருக்கும். காலம் மாறி விட்டது. அவர்களின் பழைய கால அனுபவம் இந்த அவசர யுகத்திற்குப் பொருந்தாது என்பதை அவர்கள் உணர மறுப்பதுதான் இந்தப் புலம்பலுக்கு காரணம்.

இன்று மூன்று வயதுக் குழந்தை இன்டர்நெட்டில் விளையாடுகிறது. செல் போன் பேசுகிறது. விமானத்தில் பயணிக்கிறது. இந்த கிழங்கள் எல்லாம் தங்கள் இளம் வயதில் விமானம் பறப்பதை வாயில் ஈ புகுவது தெரியாமல் வேடிக்கை பார்த்த கேஸ்கள். பேரன் விமானத்தில் போனதைப் பற்றிப் பேசினால், ஆஹா, நாங்கள் பார்க்காத விமானமா, ராமன் காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்ததாக்கும் என்று ஆரம்பிப்பார்கள். பேரன் அப்போதே ஓடிப்போய் விட்டிருப்பான். ஆனாலும் இவர்கள் அவன் முன்னால் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு தங்கள் பிரலாபத்தை இரண்டு மணி நேரம் புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.

இந்தக் கேஸ்களை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் காலத்தில் கிராமபோன் மெஷினில் ரெக்கார்டைப் போட்ட மாதிரி, நான் ஸ்டாப்பாக இவர்கள் புலம்பல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காதில் விழாத மாதிரி எல்லோரும் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

டாக்சியென்றால் எனக்குப் பயம் ?


உலகம் முழுவதும் உள்ள டாக்சிக்காரர்களின் (ஆட்டோக்காரர்களும் இதில் சேர்த்திதான்) பொதுவான ஒரு குணம் என்னவென்றால் நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு எவ்வளவு சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்றித்தான் போவார்கள். உங்களை எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்பது அவர்களுக்கு கைவந்த கலை. நீங்கள் எப்பேர்ப்பட்ட ஜகஜாலக் கொம்பனானாலும் உங்கள் கண்ணில் மிளகாய்ப்பொடி போட அவர்களுக்குத் தெரியும்.

இதை இரண்டொரு தடவை நேரடியாக அனுபவித்ததின் பலன்தான் எனக்கு டாக்சிக்காரர்களின் பேரில் ஏற்பட்ட பயம். அவர்களுடைய அனுபவத்தின் காரணமாக ஊருக்குப் புதியவர்களை உடனே இனம் கண்டு கொள்வார்கள். நாம் போக வேண்டிய இடம் பக்கத்தில் இருந்தால் "அங்க எல்லாம் நம்ம வண்டி வராது சார்" என்பார்கள்.

ஒரு டாக்சிக்காரனிடம் பேரம் பேசி படியாவிட்டால், அடுத்து இருக்கும் எல்லா டாக்சிக்காரன்களும் முதல் டாக்சிக்காரன் எவ்வளவு கேட்டான் என்பார்கள். நாம் உண்மையைத்தானே சொல்வோம். இளிச்சவாயனுக்கு அதுதானே அடையாளம். அந்த இரண்டாவது டாக்சிக்காரன் முதல் டாக்சிக்காரன் கேட்டதை விட அதிகம் கேட்பான். என்னப்பா, முதல் டாக்சிக்காரனை விட அதிகம் கேட்கிறாயே என்றால், அப்போ அந்த டாக்சியிலேயே போங்கள் என்று சொல்வான்.

இது டாக்சிக்காரர்களிடையே எழுதப்படாத ஒப்பந்தம். ஒரு டாக்சிக்காரனிடம் நீங்கள் பேசி விட்டால் அடுத்த டாக்சிக்காரன் ஒருவனும் உங்களுக்கு வரமாட்டான். சில இடங்களில் இந்த டாக்சிக்காரன்கள் புரோக்கர் வைத்திருப்பார்கள். அவர்கள் நம்மிடம் நைசாகப் பேசி ஒரு ஓட்டை டாக்சிக்குக் கூட்டிப்போவான். இவர்களிடம் சிக்கினால் மீளமுடியாது.

எப்படியோ ஒரு டாக்சியில் பேசி ஏறி விட்டீர்களானால் அவன் தன் இஷ்டத்திற்குத்தான் சுற்றிக்கொண்டு போவான். நீங்கள் ஓரிரு தடவை அங்கு சென்ற பழக்கத்தினால் இந்த வழியில் போகலாமே என்றால் சார், அந்த ரோட்டை மெட்ரோவிற்காக தோண்டிப் போட்டிருக்கிறார்கள் சார் என்பான். எப்படியோ நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு வந்த பிறகு மீட்டரைப் பார்த்தால் வழக்கமாக ஆவதைப் போன்று இரண்டு மடங்கு ஆகியிருக்கும். பேசாமல் கோடுத்தீர்களானால் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால் சென்னை பாஷையில் அர்ச்சனை வாங்கவேண்டி இருக்கும்.

கோயமுத்தூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கையாளும் விதமே தனி. ரயில்வே ஸ்டேஷனில் எப்படியோ பேரம் படிந்து ஏறிவிடுவார்கள். அவர்கள் கையில் அவர்கள் போகவேண்டிய இடத்தின் விலாசம் தெளிவாக இருக்கும். ஆனால் இந்த ஆட்டோ டிரைவர் முக்கால்வாசி தூரம் வந்த பிறகு அவன் அந்த ஊருக்கே புதிசு மாதிரி டிராமா போடுவான். போகவேண்டிய இடத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தாண்டிப்போய் ரோட்டில் போகும் யாராவது இடம் விசாரிப்பான். அந்த இடம் மிகவும் பிரபலமான இடமாயிருக்கும். ஆனால் அவன் ஒன்றும் தெரியாதமாதிரி கமுக்கமாக இருப்பான்.

இப்படி அவர்களை தெற்கும் வடக்குமாக அலைக் கழித்து கடைசியில் அவர்களைக் கொண்டு போய் சேரவேண்டுய விலாசத்தில் சேர்த்துவான். வந்தவர்களும் ஆஹா, டிரைவர் எவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டார் என்று உருகிப்போய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுவார்கள்.

நான் எந்த ஊருக்குப் போவதாயிருந்தாலும் அந்த ஊரிலுள்ள டவுன் பஸ் ரூட்களை நன்கு விசாரித்து அறிந்து கொள்வேன். மும்பாய், டில்லி, கல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களில் ஏர் போர்ட்டிலிருந்து டவுன் வரைக்கும் வர பஸ் ரூட்கள் நன்கு தெரியும். இது வரை அங்கெல்லாம் நான் டாக்சி வைத்ததே கிடையாது. பஸ்சில்தான் போவேன். டவுனுக்குள் வந்த பிறகு போகவேண்டிய இடத்திற்கு ஆட்டோ வைத்துக் கொள்வேன்.

உலக முழுவதும் உள்ள டாக்சிக்காரர்கள் ஒரே மாதிரி இருப்பதுதான் எட்டாவது உலக அதிசயம்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் எதிர்காலம்


அவர்கள் -உண்மைகள் பதிவின் ஆசிரியர் "இந்தியாவின் எதிர்காலம்" என்பதைப் பற்றி என் கருத்துகளைக் கேட்டார்.
http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html

என்னுடைய அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவன் என்கிற நிலையில் நான் இந்திய நாட்டின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டு வருகிறேன்.

இந்தியா சுதந்திரம் வாங்கியபோது இருந்த ஜனத்தொகை 33 கோடி. இன்று இருப்பது 120 கோடி. ஜனத்தொகை குறைவாக இருந்த காலத்தில் உணவுப் பஞ்சம் அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. கடைசியாக வந்த உணவுப் பஞ்சம் 1943 ம் வருடம் என்று நினைக்கிறேன். அதற்குப்பிறகு ஜனத்தொகை பலமடங்கு பெருகியிருந்த போதிலும் உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை.

இது விவசாயத்துறையில் ஏற்பட்ட மகத்தான புரட்சி. அதே போல் தொழில் துறையிலும் மகத்தான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டில் இருந்த கார்கள் இரண்டேதான், பியட் மற்றும் அம்பாசிடர் மட்டும்தான். இன்று எத்தனை வகை கார்கள், மற்ற கனரக வாகனங்கள், சிறு சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என்று அந்த துறையிலேயே இருப்பவர்களுக்கு கூட சரியாகத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

ஆடை உலகிலே நாட்டில் பெரும் புரட்சியே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்லலாம். பருத்தியிலிருந்து நூல் நூற்பதிலிருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாவது வரை, நடந்துள்ள மாற்றங்கள் மிகவும் வியக்கத்தக்கதாகும்.

இவ்வாறே கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலைகள் ஆகியவைகளும் பன்மடங்கு முன்னேற்றமடைந்துள்ளன. தொலை தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அபரிமிதமானதாகும்.

தனி மனிதனின் பொருளாதார வசதிகள் பன் மடங்கு பெருகியிருக்கின்றன. நல்ல வீடு, நல்ல துணிகள், வாகன வசதி என்று ஒவ்வொருவரும் முன்னேறியிருக்கிறார்கள். ஜனத்தொகை இன்று பலமடங்கு பெருகியிருந்த போதிலும் அத்தனை பேருக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆள் தேவை என்ற அறிவிப்புப் பலகை தென்படுகிறது.

இந்த மாற்றங்களெல்லாம் நாடு முன்னேறுவதைக் குறித்தாலும் சில எதிர்மறை சக்திகள் இந்தியா வல்லரசாகும் வாய்ப்பைத் தடுக்கின்றன.

அதில் முதலிடம் வகிப்பது இந்நாட்டின் அரசியல். இதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே போகலாம். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்வதால் ஒரு பயனும் இல்லை.

அடுத்தது ஊழல். இதற்கு முன்னோடிகள் யாரென்று தனியாகச் சொல்லவேண்டிதில்லை.

கடைசியாக மக்களின் ஒழுக்கம். இது சீர்கெட்டு வருவதை அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்திய மக்களுக்கு என்று எந்த வித ஒழுக்க அடையாளங்களையும் என்று சுட்டிக்காட்ட முடியவில்லை.

இந்த மூன்று குறைகள் மட்டும் இல்லாதிருந்தால் இந்தியா என்றோ வல்லரசு வரிசையில் சேர்ந்திருக்கும். இந்தக் குறைகள் இருந்தாலும் நம் நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக இருக்கும்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பிரபல பதிவர் ஆக ஏழு வழிகள்.

நீங்கள் புதிதாகப் பதிவு எழுத வந்திருக்கிறீர்களா? பதிவுலகில் நீங்கள் பிரபல பதிவர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? மேலே படியுங்கள்.

நீங்கள் பிரபல பதிவர் ஆவதற்கு எனக்குத் தெரிந்த சில வழிகள் கொடுத்திருக்கிறேன். வடிவேலு சொன்ன மாதிரி "நானும் ரவுடிதான்" என்கிற மாதிரி பதிவுலகில் பிரகாசிக்க இவை உதவும். ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் உண்டு. பதிவுலகில் பிரபலம் ஆகி என்ன செய்யப் போகிறேன் என்று கேட்பவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதால் பயனில்லை.

1. பதிவு எப்படியிருந்தாலும் அதன் தலைப்பு        அட்டகாசமாக இருக்கவேண்டும்.
பதிவைப் படிக்க வருபவர்கள் பதிவின் தலைப்பைப் பார்த்துத்தான் வருகிறார்கள். தலைப்பு அவர்களுக்குப் பிடித்திருக்கவேண்டும். அவர்களை சுண்டி இழுக்கவேண்டும். தெருவில் போகும் ஒரு பெண்ணிடம் ஒருவன் நகையை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். "பெண்ணிடம் நகை திருட்டு" என்று தலைப்பு வைத்தால் எத்தனை பேர் உங்கள் பதிவைப் படிக்க வருவார்கள்?

"தெருவில் இளம் பெண்ணிடம் அத்து மீறல்" என்று தலைப்பு வையுங்கள். அப்புறம் பாருங்கள். ஹிட்ஸ் அள்ளிக்கொண்டு போகும்.


2. பதிவு எழுதும் டாபிக் மிகவும் முக்கியம். 

தலித் மற்றும் வன்னியர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இதில் முன்னுரிமை பெறுகின்றன. இந்த விஷயம் சாகாவரம் பெற்ற விஷயம். தமிழன் இருக்கும் வரை இது உயிருடன் இருக்கும். அவர்களை சாதி வெறியர்கள் என்று குற்றம் சாட்டி எழுதவேண்டும். ஒரு பதிவில் வன்னியர்களைத் திட்ட வேண்டும். அடித்த பதிவில் தலித்துகளைத் திட்டவேண்டும்.

3. அடுத்து தமிழீழம்.

இதுவும் ஒரு சாகாவரம் பெற்ற சப்ஜெக்ட். ஏனென்றால் தமிழீழம் எப்போதும் வரப்போவதில்லை. இதை மட்டும் சொன்னாலே போதும். பின்னூட்டங்களில் உங்களை திட்டு திட்டென்று திட்டுவார்கள். அவைகளைப் படிக்காதீர்கள். சும்மா பப்ளிஷ் பண்ணிவிட்டு வேறு வேலையைப் பாருங்கள்.

மாத த்திற்கு ஒரு முறை இந்தப் பதிவுகள் வெளிவரவேண்டும்.

4. அரசியல் தலைவர்கள், சினிமா நடிகைகள், பதிவர்கள் இவர்களின் தனிப்பட்ட கசாமுசா விஷயங்கள்.

மனிதனுக்கு எப்பொழுதும் அடுத்தவர்களுடைய அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்வது என்பது இரத்தத்தில் ஊறியுள்ள ஒரு குணம். ஒரு சினிமா நடிகை ஒரு நடிகனுடன் ஐந்து நிமிடம் பேசி விட்டால் போதும். அதற்கு கண், காது, மூக்கு எல்லோம் வைத்து ஒரு கதை கட்டி விடுவார்கள். இத்தகைய செய்திகளுக்குத்தான் இன்று மார்க்கெட் இருக்கிறது.

வாரப் பத்திரிக்கைகள் அனைத்தும் இத்தகைய செய்திகளை வைத்துத்தான் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன.

"ஜில்ஜில் ரமாமணி இன்று ...?' அப்படீன்னு ஒரு தலைப்பு வைத்துப்பாருங்கள்! உங்கள் பதிவின் ஹிட்ஸ் எங்கேயோ போய்விடும். மேட்டர், ஜில்ஜில் ரமாமணி இன்று சாப்பிட்டாள் அப்படீன்னு இருந்தாப்போதும்.

5. அரசியல் ஆரூடங்கள்

அரசியலில் பதிவுகள் போட அன்றாடம் எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும். அன்றைய தினத்தந்தியைப் பாருங்கள். முதல் பக்கத்தில் என்ன செய்தி வந்திருக்கிறதோ அதை அப்படியே பதியுங்கள். கடைசியில் ஒரு பாரா உங்கள் கருத்துகளை சொல்லி பதிவை முடித்து விடுங்கள். உங்கள் கருத்து கொஞ்சம் ஏறுமாறாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.


6. பெண்களை மட்டம் தட்டும் பதிவுகள். 

காதலாவது கத்தரிக்காயாவது அப்படீன்னு இன்றைய காதலை ஒரு பிடி பிடியுங்கள். சரமாரியாக பின்னூட்டங்கள் வரும். அடுத்த பதிவில் காதலைப் போன்று புனிதமானது உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்று ஒரு பதிவு போடுங்கள்.

7. அடுத்து மாணவர்களைப் பற்றி

மாணவர்கள் ஏதாவது போராட்டம் நடத்தினால் அதைப்பற்றி உடனே பதிவு போட்டு விடுங்கள். இந்தக்காலத்து மாணவர்களுக்கு பொறுப்பே கிடையாது என்று எழுதினால் போதும். உங்களை அனைவரும் (மாணவர்களைத்தவிர மற்றவர்கள்- உங்கள் பதிவை எந்த மாணவனும் படிக்கப்போவதில்லை.) பிலுபிலு வென்று பிடித்து உலுக்குவார்கள்.

கடைசியாக முக்கிய குறிப்பு

 உங்கள் தோல் தடிப்பாக, எருமைத்தோல் மாதிரி இருக்கவேண்டும். பின்னூட்டங்களில் உங்களை வாய்க்கு வந்த படியும் வாயில் வராதபடியும் அர்ச்சனை செய்வார்கள். அத்தனையையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.

இன்னும் பல வழிகள் இருக்கலாம். இந்த யுத்திகளெல்லாம் என்னால் நேரடியாக சோதித்து அறிந்த அரிய உண்மைகள். ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் தருகிறேன். அதனால் அவைகளை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். மற்ற வழிகளை பிற பதிவுகளுக்குப்போய் அறிந்து கொள்ளவும்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ரூபாய் நோட்டுகள் குட்டி போடும் அதிசயம்


தெனாலிராமன் கதைகளில் பாத்திரங்கள் குட்டி போட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த கதையை மிஞ்சிய ஒன்று இந்திய ரிசர்வ் பேங்கில் நடந்திருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆப் இண்டியா பேப்பரில் வந்த செய்தி. ரிசர்வ் பேங்க் கஜானாவில் பிரஸ்சில் அச்சடித்த ரூபாய் நோட்டுகளை விட அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி ரூபாய் நோட்டுகள் கஜானாவில் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெறுவதை வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?