கடந்த சில நாட்களாக வரும் சில பதிவுகளைப்படித்தால் இவர்கள் படித்த, அறிவு ஜீவிகள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் கொடுத்துக்கொண்டு இப்படி எழுத எப்படி முடிகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன் பதிவுலக நாற்றம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அப்போது வெறும் கூவம் நாற்றம் மட்டும்தான் இருந்தது. இப்போது ''பிண நாற்றம்'' வீசுகின்றது.
இந்த பதிவுகளைப் பார்க்கும்போது எனக்கு புரிந்தவை என்னவென்றால் பதிவர்கள் வழக்கமாக சந்திப்பது தாகசாந்தி வசதி இருக்கும் ஹோட்டல்களில் மட்டுமே. பிரபல பதிவராவது எப்படி என்ற என்னுடைய பதிவில் வேடிக்கையாக ''பதிவர் என்றால் 5 ரவுண்டிற்குப்பிறகும் ஸ்டெடியாக நிற்கவேண்டும்'' என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையிலேயே பதிவர்கள் இப்படி இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
பதிவர்கள் பொது சமாசாரங்களைப்பற்றி எழுதுவார்கள் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். அது மிகத்தவறு என்று இப்போது புரிந்து விட்டது. அடுத்த பதிவரைப்பற்றி தனி மனித வசைகள், அதுவும் நாகரிகமற்ற வார்த்தைகளைப்பயன்படுத்தி எழுதுவது எந்த ரகத்தில் சேரும் என்று புரியவில்லை. ஒருகால் நான் ஒரு பைத்தியக்காரனாக இருக்கிறேனோ என்னமோ தெரியவில்லை. அதைத்தவிர அந்தப்பதிவரின் குடும்ப நபர்களைப்பற்றி எழுதுவது இன்னும் கேவலம். இன்னும் வேடிக்கை என்னவென்றால் அப்படி மோசமாக எழுதப்பட்ட பதிவரை நேரில் சந்திப்பது.
குழாயடிச்சண்டையை நான் நேரில் பார்த்ததில்லை. கேள்வி ஞானம்தான். அங்குதான் பெண்கள் ஒருவருக்கொருவர் வாயில் வரக்கூடாத வார்த்தைகளினால் ஏசிக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பதிவுலக வசைகள் அதையும் மிஞ்சி இருக்கின்றன. பதிவுலகம் எங்கு போய் நிற்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை.