ஞாயிறு, 18 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-4)

பாகம் 3 ல் சும்மா ஒரு பெண்ணின் படத்தை மட்டும் போட்டிருக்கிறீர்களே, இது ஏன் என்ற எண்ணம் இதற்குள் வந்திருக்கவேண்டுமே? எல்லாம் காரணமாகத்தான்! சும்மா வளவளவென்று டிவி சீரியல்களில் வருகிற மாதிரி வசனமாகவே உங்கள் பதிவு இருந்தால் உங்கள் பதிவை ஒருவரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.
இன்றைய உலகில் எல்லாவற்றிலும் ஒரு கவர்ச்சி தேவைப்படுகிறது. பத்திரிக்கைகளைப்பாருங்கள். அல்லது டிவி விளம்பரங்களைப்பாருங்கள். தேவை இருக்கிறதோ இல்லையோ, ஒரு பெண்ணின் படம் வருகறது. இன்றைய நடப்பு அதுதான். ஆகவே, ‘உலகத்தோடொட்டு ஒழுகல்’’ என்கிற இலக்கணப்படி உங்கள் பதிவிலும் ஆங்காங்கே இந்த மாதிரி படங்களைப் போடவேண்டியது அவசியம். உங்கள் பதிவை பிரபலமாக்க வேண்டுமல்லவா?
முதல் பதிவு போட தயாராகிவிட்டீர்களா! பதிவில் எதைப்பற்றி எழுதலாம் என்று யோசிக்கிறார்களா? எழுதுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. அவைகளில் சில.
சினிமா, அரசியல் (ஆட்டோ வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்), சமூகப்பிரச்சினைகள், சிறுகதை, கேள்வி-பதில் (கேள்வியும் பதிலும் நீங்களே எழுதவேண்டும்), அடுத்த பதிவர்களை வம்புக்கு இழுத்தல் (மூக்கு உடைபட அல்லது போலீஸ் ஸடேஷன் போக தயாராக இருக்கவேண்டும்) - இப்படியாக ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு பதிவுக்கும் நல்லதாக, அதாவது வாசகர்களை சுண்டி இழுக்கும்படியான தலைப்பு வைக்கவேண்டும். தமிழ் பத்திரிக்கைகள் படிக்கும் வழக்கம் இருந்தால் கவலை இல்லை. உதாரணத்திற்கு – ‘பிரபல நடிகையின் படுக்கை அறையில் ??? – இது தலைப்பு.  ‘ஒரு கரப்பான் பூச்சி இருந்தது – இது செய்தி.
இன்னொறு விஷயம். ஐயோ, தலைப்பு இப்படி வைத்து விட்டோமே, அதற்கு ஏற்றாற்போல் என்ன எழுதுவது என்று வீணாய் கவலைப்படாதீர்கள். தலைப்பிற்கும் உள்ளே எழுதப்படும் விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் வேண்டியதில்லை. கவலை வேண்டாம்.
சரி, உங்கள் முதல் பதிவை எழுதி ப்ளாக்கில் ஏற்றியாகிவிட்டதா? இனிமேல்தான் உங்களுக்கு நிஜமான வேலை. அடுத்த பதிவில் சந்திப்போமா?
பாகம் 5 - தொடரும்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக