புதன், 30 டிசம்பர், 2009

புது வருட தீர்மானங்கள்







மனிதன் எப்பொழுதும் தன்னை உயர்த்திக்கொள்ளவே அல்லது உயர்ந்தவனாகவோ காட்டிக்கொள்ளவே விரும்புகிறான். இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் அவன் மற்றவர்களுடைய அபிப்ராயங்களுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து தன்னைத்தாழ்த்திக் கொள்கிறான். ஒருவனுடைய மனச்சாட்சிதான் அவன் உயர்ந்தவனா இல்லையா என்று கூற முடியும். அடுத்தவர்கள் பல காரணங்களுக்காக ஒருவனைப் புகழ்ந்து ‘உன்னைப்போல் உலகில் உண்டா! ‘ என்று சொல்லி தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த புகழ்ச்சியில் ஒருவன் மயங்குகிறானென்றால் அவன் தன் நிலையிலிருந்து கீழே செல்கிறான் என்றுதான் கொள்ளவேண்டும்.
அதேபோல் ஒருவன் ஒரு நியாயமான கருத்தைச் சொன்னாலும் பலர் அதை வெவ்வேறு காரணங்களுக்காக எதிர்க்கலாம். ஆனால் தன்னுடைய கருத்து நேர்மையானதாக இருந்தால் அடுத்தவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் உணர்ச்சிகள் மேலோங்கி அறிவை மழுங்கச்செய்து விடுகின்றன. அச்சமயங்களில் தெறித்து விழும் வார்த்தைகள் மிகவும் காரமாக இருக்கின்றன. சொல்லாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான், சொல்லிவிட்ட வார்த்தைகள் நமக்கு எஜமான். பின்னால் எவ்வளவு வருந்தினாலும் கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனாலும் பல நேரங்களில் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்பு வருந்துகிறோம்.
பதிவுலகில் இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நான் என்னுடைய பதிவிற்கு ஒருவரும் வரக்காணோமே என்று வருத்தப்பட்ட நாட்கள் உண்டு. ஆனால் இப்போதோ யாரும் நம் பதிவிற்கு வந்து பின்னூட்டம் போடாமலிருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளேன். நானும் யாருடைய பதிவிற்கும் சென்று பின்னூட்டம் போடப்போவதுமில்லை.
இதுவே 2010 ல் என் புது வருடத்தீர்மானம்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மொழிக்கொலை!





Obsessive & Compulsive Disorder (OCD)  என்று ஒரு வகை வியாதி உண்டு. இந்த வியாதியின் வகைகளை லிஸ்ட் போட்டால் ஒரு நான்கைந்து பக்கமாவது வரும். அதில் ஒன்று-எதிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பது. அவர்களுக்கு வீட்டில் அந்தந்த பொருள்கள் அந்தந்த இடங்களில் இருக்க வேண்டும். நாட்காட்டி, படங்கள் ஆகியவை சரியாக செங்குத்தாக தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பயங்கர கோபம் வந்து காச்மூச்சென்று கத்தி வீட்டையே இரண்டு பண்ணிவிடுவார்கள்.
இந்த வியாதி எனக்கு இருக்கிறது. என்ன, இப்போது வயதாகிவிட்டதால் சத்தம் போடுவதில்லை. நேற்று ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தபோது அங்கு ஒரு படம் சாய்வாக தொங்கிக்கொண்டு இருந்தது. அதை நேர்செய்த பிறகுதான் என் மனம் சமாதானமடைந்தது.
அதேபோல் புத்தகங்களைப் படிக்கும்போது எழுத்துப்பிழைகள் இருந்தால் அதைத்திருத்திய பிறகுதான் மேலே படிக்கமுடியும். இப்படியான நான் ஆசிரியராக வேலை பார்த்தால் எப்படியிருக்கும?
விவசாயக்கல்லூரியில் உதவி விரிவுரையாளனாக (வேதியல் பிரிவு) பணிபுரிந்தபோது மாணவர்களின் செய்முறை குறிப்பேடுகளை திருத்துவது ஒரு முக்கியப்பணியாகும். மாணவர்கள் எழுத்துப்பிழைகள் செய்வது சகஜம். ஆங்கிலத்தில் எழுத்துப்பிழைகளை பொருத்துக்கொள்வேன். ஆனால் வேதியல் கனிமங்களின் பெயர்களில் தவறு செய்தால் என்னால் பொறுக்கமுடியாது. குறிப்பாக பொட்டாசியம் என்ற கனிமத்தை பலர் Pottassium  என்று எழுதுவார்கள். Potassium என்பதுதான் சரியானது.  அப்படி எழுதியிருந்தால் அந்த மாணவனிடம் –தம்பி நாளைக்கு ஒரு 40 பக்க நோட்டு வாங்கி அது முழுவதும் Potassium என்று எழுதிக்கொண்டு வந்துவிடு- என்று கூறிவிடுவேன். அப்படி கொண்டுவராவிட்டால் அடுத்த வகுப்பில் அவனுக்கு அனுமதி இல்லை. கல்லூரியில் இந்த மாதிரி தண்டனை கொடுப்பதற்கு 60 களில் முடிந்தது. இன்று அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
நேற்று புதுகைத்தென்றல் என்ற பதிவில் Magnesioum என்று எழுதியிருந்தது. அதைப்பார்த்த்தும் எனக்கு என்னுடைய ஆசிரியப்பணி காலங்கள் நினைவுக்கு வந்த்து. அந்த பதிவு எழுதுவது ஒரு சகோதரி என்று நினைக்கிறேன. எப்போதாவது நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு 40 பக்கநோட்டு நானே வாங்கிக்கொடுத்து இந்த Magnesioum என்பதை Magnesium என்று சரியாக அந்த நோட்டு முழுவதும் (நானும் கூடவே இருந்து) எழுதச்சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த பதிவைப்படிக்கும் யாருக்காவது அந்த பெண்மணியைத் தெரியுமானால் என்னைச்சந்திப்பதை தவிர்க்கச்சொல்லுங்கள்.
தொடரும்....

வியாழன், 17 டிசம்பர், 2009

பதிவுலக நுணுக்கங்கள்



நான் ஒரு 38 வருடங்கள், ஒரு ஆராய்ச்சியாளனும் ஆசிரியனுமாக இருந்து ஓய்வு பெற்றவன். இவ்வளவு நீண்ட காலம் பணி புரிவது அரசுத்துறையில் மட்டுமே சாத்தியம் என்பது அரசுப்பணியில் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றாகத்தெரியும். ஓய்வு பெற்ற பின்பும் பழகின ஆராய்ச்சி மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் இந்த பதிவுலகத்தின் பக்கம் வந்தேன்.
யாருக்குமே தெருச்சண்டையை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். அப்படி ஒரு சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது. சில பதிவுகள் மட்டும் எப்படி பிரபலமாகின்றன என்றால் அவைகளில் மக்கள் இடும் பின்னூட்டங்கள்தான் காரணம் என்ற அரிய உண்மையை கண்டுபிடித்தேன். அதிலும் பதிவைப்பற்றிய வெறும் பின்னூட்டங்கள் போதாது. பதிவின் கருத்தை விட்டு விட வேண்டும். பதிவூட்டங்களில் வரும் கருத்துக்களை எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் ஏசிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆரிய-திராவிட வகுப்பு வாதம்தான் சீக்கிரம் சூடு பிடிக்க நல்ல விஷயம்.
ஒரு பள்ளிக்கூட கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். வாத்தியார் ஒரு மரத்தைப்பற்றி கட்டுரை எழுதச்சொன்னார். பையன் பால்காரரின் பையன். அவனுக்கு மாட்டைப்பற்றிதான் தெரியும். என்ன செய்தானென்றால் கட்டுரையை இப்படி ஆரம்பித்தான். ஒரு காட்டில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு மாடு கட்டியிருந்த்து என்று ஆரம்பித்து இரண்டு பக்கம் மாட்டைப்பற்றியே எழுதி கட்டுரையை முடித்து விட்டான்.
இப்படி பதிவில் எழுதப்பட்டிருக்கும் விஷயமே வேறாக இருக்கும். ஆனாலும் எப்படியாவது நமது சமாசாரத்திற்கு (மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு) விவாதத்தை இழுத்து நம் கும்மியை போட்டுவிட வேண்டும். இப்படி ஒரு பதிவில், பதிவு 4 பக்கம், கும்மிகள் 80 பக்கம். இப்படி போடச்சொல்லி அந்த பதிவரே சொன்னாலும் சொல்லியிருக்கலாம். இப்படித்தான் பதிவுகளைப்பிரபலப்படுத்த வேண்டும்.
தொடரும்.....

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வணக்கம்






வணக்கம். உலகம் நன்றாகவே போயக்கொண்டு இருக்கிறது. என்ன, நீண்ட நாட்களாக பதிவு எழுதவில்லை என்ற குற்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. இந்த குற்ற உணர்வுகள்தான் நம்முடைய பெரிய தடைக்கல். முதலில் சோம்பல் படாமல் பதிவு எழுதியிருக்க வேண்டும். சரி, அது முடியலையா, எப்போது முடிகிறதோ அப்போது பதிவு எழுதவேண்டியதுதான். அதை விட்டு விட்டு குற்ற உணர்வால் பதிவு எழுதுவதை மேலும் மேலும் ஒத்திப்போடுவதுதான் மிகவும் மோசமான மனப்போக்கு. அதிலிருந்து மீள முயற்சிக்கிறேன்.
பதிவு எழுதத்தான் சோம்பலாக இருந்தேனே தவிர பதிவலகத்தை விட்டு விலகிவிடவில்லை. தினமும் ஒரு மணி நேரமாவது பதிவுலகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், என்னைத்தவிர மற்ற பதிவர்கள் எல்லோரும் மிக மிக சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் எழுதும் அளவைப்பார்த்தால் இந்த பதிவு எழுதுவதைத்தவிர அவர்கள் வேறு எந்த வேலையையும் (தூங்குவது உட்பட) பார்க்க முடியாது என்பது என் கணிப்பு. அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்று பல இரவுகளில் தூக்கம் வராத சமயங்களில் யோசித்திருக்கிறேன்.  75 வயதில் என்ன தூக்கம் வரப்போகிறது !
பதிவுலகத்திலிருந்து பெரிய வருமானம் வருமென்று தோணவில்லை. ஆகவே அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக ஏதோவொரு வேலை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு வேலையில் இருந்து கொண்டு இவ்வளவு பதிவுகள் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய அபரிமிதமான ஆர்வத்தை மனமாரப்பாராட்ட வேண்டும். பாராட்டுகிறேன்.
அடுத்த பதிவு சீக்கரத்தில்.....