புதன், 30 டிசம்பர், 2009

புது வருட தீர்மானங்கள்







மனிதன் எப்பொழுதும் தன்னை உயர்த்திக்கொள்ளவே அல்லது உயர்ந்தவனாகவோ காட்டிக்கொள்ளவே விரும்புகிறான். இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் அவன் மற்றவர்களுடைய அபிப்ராயங்களுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து தன்னைத்தாழ்த்திக் கொள்கிறான். ஒருவனுடைய மனச்சாட்சிதான் அவன் உயர்ந்தவனா இல்லையா என்று கூற முடியும். அடுத்தவர்கள் பல காரணங்களுக்காக ஒருவனைப் புகழ்ந்து ‘உன்னைப்போல் உலகில் உண்டா! ‘ என்று சொல்லி தங்கள் காரியத்தை சாதித்துக்கொண்டு போய்விடுவார்கள். இந்த புகழ்ச்சியில் ஒருவன் மயங்குகிறானென்றால் அவன் தன் நிலையிலிருந்து கீழே செல்கிறான் என்றுதான் கொள்ளவேண்டும்.
அதேபோல் ஒருவன் ஒரு நியாயமான கருத்தைச் சொன்னாலும் பலர் அதை வெவ்வேறு காரணங்களுக்காக எதிர்க்கலாம். ஆனால் தன்னுடைய கருத்து நேர்மையானதாக இருந்தால் அடுத்தவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் உணர்ச்சிகள் மேலோங்கி அறிவை மழுங்கச்செய்து விடுகின்றன. அச்சமயங்களில் தெறித்து விழும் வார்த்தைகள் மிகவும் காரமாக இருக்கின்றன. சொல்லாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான், சொல்லிவிட்ட வார்த்தைகள் நமக்கு எஜமான். பின்னால் எவ்வளவு வருந்தினாலும் கொட்டின வார்த்தைகளை அள்ள முடியாது. ஆனாலும் பல நேரங்களில் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்பு வருந்துகிறோம்.
பதிவுலகில் இந்த சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நான் என்னுடைய பதிவிற்கு ஒருவரும் வரக்காணோமே என்று வருத்தப்பட்ட நாட்கள் உண்டு. ஆனால் இப்போதோ யாரும் நம் பதிவிற்கு வந்து பின்னூட்டம் போடாமலிருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளேன். நானும் யாருடைய பதிவிற்கும் சென்று பின்னூட்டம் போடப்போவதுமில்லை.
இதுவே 2010 ல் என் புது வருடத்தீர்மானம்.

2 கருத்துகள்:

  1. சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச்சொத்து..,

    பதிலளிநீக்கு
  2. ஆகா, நீரே இறைவனாகினும் குற்றம் குற்றமே என்று முழங்கிய நக்கீரன் பரம்பரையல்லவா நாம்!

    பதிலளிநீக்கு