ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மொழிக்கொலை!

Obsessive & Compulsive Disorder (OCD)  என்று ஒரு வகை வியாதி உண்டு. இந்த வியாதியின் வகைகளை லிஸ்ட் போட்டால் ஒரு நான்கைந்து பக்கமாவது வரும். அதில் ஒன்று-எதிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பது. அவர்களுக்கு வீட்டில் அந்தந்த பொருள்கள் அந்தந்த இடங்களில் இருக்க வேண்டும். நாட்காட்டி, படங்கள் ஆகியவை சரியாக செங்குத்தாக தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பயங்கர கோபம் வந்து காச்மூச்சென்று கத்தி வீட்டையே இரண்டு பண்ணிவிடுவார்கள்.
இந்த வியாதி எனக்கு இருக்கிறது. என்ன, இப்போது வயதாகிவிட்டதால் சத்தம் போடுவதில்லை. நேற்று ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தபோது அங்கு ஒரு படம் சாய்வாக தொங்கிக்கொண்டு இருந்தது. அதை நேர்செய்த பிறகுதான் என் மனம் சமாதானமடைந்தது.
அதேபோல் புத்தகங்களைப் படிக்கும்போது எழுத்துப்பிழைகள் இருந்தால் அதைத்திருத்திய பிறகுதான் மேலே படிக்கமுடியும். இப்படியான நான் ஆசிரியராக வேலை பார்த்தால் எப்படியிருக்கும?
விவசாயக்கல்லூரியில் உதவி விரிவுரையாளனாக (வேதியல் பிரிவு) பணிபுரிந்தபோது மாணவர்களின் செய்முறை குறிப்பேடுகளை திருத்துவது ஒரு முக்கியப்பணியாகும். மாணவர்கள் எழுத்துப்பிழைகள் செய்வது சகஜம். ஆங்கிலத்தில் எழுத்துப்பிழைகளை பொருத்துக்கொள்வேன். ஆனால் வேதியல் கனிமங்களின் பெயர்களில் தவறு செய்தால் என்னால் பொறுக்கமுடியாது. குறிப்பாக பொட்டாசியம் என்ற கனிமத்தை பலர் Pottassium  என்று எழுதுவார்கள். Potassium என்பதுதான் சரியானது.  அப்படி எழுதியிருந்தால் அந்த மாணவனிடம் –தம்பி நாளைக்கு ஒரு 40 பக்க நோட்டு வாங்கி அது முழுவதும் Potassium என்று எழுதிக்கொண்டு வந்துவிடு- என்று கூறிவிடுவேன். அப்படி கொண்டுவராவிட்டால் அடுத்த வகுப்பில் அவனுக்கு அனுமதி இல்லை. கல்லூரியில் இந்த மாதிரி தண்டனை கொடுப்பதற்கு 60 களில் முடிந்தது. இன்று அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
நேற்று புதுகைத்தென்றல் என்ற பதிவில் Magnesioum என்று எழுதியிருந்தது. அதைப்பார்த்த்தும் எனக்கு என்னுடைய ஆசிரியப்பணி காலங்கள் நினைவுக்கு வந்த்து. அந்த பதிவு எழுதுவது ஒரு சகோதரி என்று நினைக்கிறேன. எப்போதாவது நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு 40 பக்கநோட்டு நானே வாங்கிக்கொடுத்து இந்த Magnesioum என்பதை Magnesium என்று சரியாக அந்த நோட்டு முழுவதும் (நானும் கூடவே இருந்து) எழுதச்சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த பதிவைப்படிக்கும் யாருக்காவது அந்த பெண்மணியைத் தெரியுமானால் என்னைச்சந்திப்பதை தவிர்க்கச்சொல்லுங்கள்.
தொடரும்....

4 கருத்துகள்:

 1. //அது முழுவதும் Potassium என்று அழுதிக்கொண்டு வந்துவிடு//

  "அழுதிக்கொண்டு" தவறு. எழுதிக்கொண்டு என்று வர வேண்டும். ஒரு 40 பக்க நோட்டு வாங்கி அது முழுவதும் எழுதிக்கொண்டு என்று எழுதுங்கள். தமிழை கொலை செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ளாவே முடியாது.

  பதிலளிநீக்கு
 2. ஒரு வேளை அப்பவே numerology பார்த்திருப்பாங்களோ?? நல்ல வேளை அந்த பைத்தியம் கெமிக்கல் பெயருக்கெல்லாம் பரவவில்லை..

  -சுரேஷ் பாபு

  பதிலளிநீக்கு
 3. ஏன் அனானி பெயரில் மறைந்து கொள்ளவேண்டும். அவ்வளவு பயமா?

  பதிலளிநீக்கு
 4. திரு.கருவாயன் அவர்களுக்கு,
  நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் பைத்தியமா அல்லது நான் பைத்தியமா? தெளிவாகச்சொன்னால் வைத்தியம் செய்ய சௌகரியமாக இருக்கும்

  பதிலளிநீக்கு