செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சூரியாஸ்தமனக்கூத்து - தொடர்ச்சி

“ஆஹா, சூரியன் மறைய ஆரம்பித்துவிட்டான் ................................................................ அனைவரும் இப்போதுதான் மூச்சை விட்டார்கள்.”

இப்படி எழுத எனக்கும் ரொம்ப ஆசைதான். பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் சூரியாஸ்தமனக்காட்சியின் வர்ணணை பத்தாம் வகுப்பில் படித்தது இன்னும் மறக்கவில்லை. ஆனால் நாங்கள் கொடுத்து வைத்திருக்கவில்லை.

சூரியாஸ்தமனத்திற்கு இன்னும் 15 நிமிடமே இருக்கும்போது மெள்ள மெள்ள மேகங்கள் சூரியனை மறைக்க ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குள் சூரியன் முழுவதுமாக மறைந்துவிட்டது. அவ்வப்போது சூரியனின் கதிர்கள் மேகங்களின் இடைவெளியில் எட்டிப்பார்த்தன. பிறகு முற்றிலுமாக மறைந்து போனான். எல்லோருமாக இந்த பாழாய்ப்போன மேகங்களைத்திட்டி விட்டு ரூமுக்கு திரும்பினோம்.

வரும் வழியில் ஒரு ஓட்டலில் 37 ரூபாய் வீதம் ஆளுக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு பக்கத்திலுள்ள ஆவின் பூத்தில் ஒரு டம்ளர் பால் குடித்தோம். அங்கு பார்த்தால் ஒரு தட்டி விலாஸ் ஓட்டலில் சுடச்சுட ஊத்தப்பமும் பரோட்டாவும் சுட்டுக்கொண்டிருந்தாரகள். சும்மா விலை கேட்போமென்று விலை கேட்டேன். நாலு ஊத்தப்பம் அல்லது நாலு பரோட்டாவின் விலை சட்னி, குருமாவுடன் 10 ரூபாய் என்று சொன்னார்கள். வட இந்திய டூரிஸ்ட்டுகள் வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்தார்கள். அடடா, முன்னால் இதைப்பார்த்திருந்தால் பார்சல் வாங்கிக்கொண்டு ரூமில் போய் சாப்பிட்டிருக்கலாமே என்று நினைத்துக்கொண்டோம்.

ரூமில் நன்றாகத் தூங்கினோம். காலையில் எழுந்து குளித்துவிட்டு அங்குள்ள கேன்டீனில் சாப்பிடலாம் என்று முடிவு செய்து ரிசப்ஷனில் விலை விசாரித்தோம். ரிசப்ஷனிஸட் சொன்னார், “சார் காலை டிபன் கெஸட் ஹவுஸின் காம்ப்ளிமென்டரி ட்ரீட் சார், அதுவும் பஃபே சிஸடம் சார் ” என்றார். ஆஹா பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆயிற்று என்று சந்தோஷமாகப்போய் இரவு சரியாக சாப்பிடாததையும் சேர்த்து ஒரு வெட்டு வெட்டினோம்.பிறகு விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம், அதற்குள் (திருச்செந்தூரில் இளைத்த பர்ஸை சரி செய்வதற்காக) அருகில் இருந்த ஒரு ஏ.டி.எம்மில் பணம் எடுக்கலாம் என்று போனேன்.. கார்டைப்போட்டு பின் நெம்பரை அழுத்தினால் ‘இன்று நீங்கள் பணம் எடுத்துக்கொள்வதற்கான கோட்டா’ முடிந்து விட்டது’ என்று பதில் வந்தது. எனக்கு மயக்கம் வராத குறைதான். போச்சு, நம்ம பணம் ‘ஹோகயா’ தான் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது காலை 81/2 மணி. பக்கத்திலுள்ள பேங்கில் விசாரிக்கலாம் என்றால் பேங்க் 10 மணிக்கு மேல்தான் திறப்பார்கள். சரி ஆனது ஆகட்டும், நம்ம புரொகிராமை முடிக்கலாம் என்று படகுத்துறைக்கு போனாம். எல்லோருக்கும் டிக்கட் வாங்கினேன். டிக்கட் விலை 20 ரூபாய் என்றார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு போனபோது அதிக விலை கொடுத்த்தாக ஞாபகம். சரி, சர்க்காருக்கு கருணை பிறந்து டூரிஸ்டுகளுக்கு சலுகை காட்டுகறார்கள் போலும் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்த்து, திருவள்ளுவர் சிலைக்கு படகு போவதில்லை என்று.விவேகானந்தர் பாறைக்கு போய்விட்டு 91/2 மணிக்கெல்லாம் கரைக்கு திரும்பிவிட்டோம். வரும்போதே யோசித்தேன். இனி பார்க்கவேண்டியது சுசீந்திரம் கோவில் மட்டுமே. அதற்கு ஒரு முக்கால் மணி நேரம் ஆகும். பிறகு ஊருக்குப்போய் விடலாமே என்று தோன்றியது. மேலும் பர்ஸும் பிழைக்கும். ஆகவே கன்னியாகுமரியில் இரண்டு நாள் தங்கலாம் என்று போட்ட பிளானைக் கேன்சல் செய்து விட்டு ரூமைக்காலி செய்தோம்.

சரியாக 10 மணிக்கு புறப்பட்டு சுசீந்திரம் சென்று தரிசனம் செய்தோம். அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டோம். எங்கும் நிற்காமல் 2 மணிக்கு கோவில்பட்டி வந்து சேர்ந்தோம். நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று விசாரித்ததில் ‘லக்ஷ்மி மெஸ்ஸில்’ சாப்பாடு நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். நிஜமாகவே அங்கு சாப்பாடு நன்றாகவே இருந்தது.
சாப்பிட்டுவிட்டு கோவில்பட்டியில் கடலை மிட்டாய் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். எந்த கடையில் நன்றாக இருக்கும் என்று விசாரித்ததில் மார்க்கெட் ரோட்டில் கே.டி.ஆர். என்கிற கடையில் நன்றாக இருக்கும் என்றார்கள். அந்தக்கடையை தேடிக்கண்டு பிடித்து போனால் அந்தக்கடை பார்ப்பதற்கு ரொம்ப சாதாரணமாகத்தான் இருந்த்து. கடலை மிட்டாய் வேண்டும் என்று கேட்டதற்கு கடைக்காரர் ‘சார், ஆட்கள் எல்லாம் சாப்பிடப் போயிருக்கிறார்கள். அவர்கள் வந்து மிட்டாய் போட்டபிறகுதான் கிடைக்கும்’ என்றார். ஆஹா, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாக்கடைக்காரருக்கு அண்ணன் போலிருக்கு என்று முடிவு செய்து, சரி இப்போதைக்கு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கொடுப்பினை இல்லை என்று நினைத்துக்கொண்டு நேராக கோவையை நோக்கி புறப்பட்டோம்.

டிரைவர் எங்கும் சாப்பிடவில்லை. ஒரே சீராக வண்டி ஓட்டினார். மாலை 8 மணிக்கு சுகமாக வீடு வந்து சேர்ந்தோம். மகள் சூடாக சாதம் செய்து வைத்திருந்தாள். சாப்பிட்டுவிட்டு செந்திலாண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டுத்தூங்கினோம்.

2 கருத்துகள்:

  1. பதிவு நல்லாத்தான் இருக்குதுங்கோ. ஆனா படிபுபாரைத்தான் காணோமுங்கோ. தெகிரியமா இருங்கோ, மொள்ள மொள்ளத்தான் ஆள் சேர்க்கோணுமுங்கோ

    பதிலளிநீக்கு
  2. கவுண்டர்களைப்பற்றி விவரமாக எழுதியுள்ளீர்கள். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு