புதன், 30 மார்ச், 2011

சேவைகளும் சேவைக்களங்களும்



வழுக்கைத் தலைக்காரர் ஒருவர் ஹேர் கட்டிங் சலூனுக்குப் போனால் நாம் என்ன சொல்வோம்- “ இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை” – என்று சொல்வோம். 
நீதி: முடி இருக்கிறவன்தான் அதை வெட்டிக்கொள்ள சலூனுக்குப் போகவேண்டும். 

அதே மாதிரி ஒருவனுக்கு பேங்க்கில் கணக்கே கிடையாது, அவன் நான் பேங்கில் பணம் எடுக்கப்போகிறேன் என்றால் என்ன சொல்ல முடியும்? (கொள்ளையடிப்பது இதில் சேராது). 
நீதி: பேங்கில் கணக்கு இருந்தால்தான் பணம் எடுக்க முடியும்.

இது வரையிலும் நான் சொன்னது புரிகிறதா? புரிந்தால் மேலே படியுங்கள். புரியாவிட்டால் அடுத்த பிளாக்கிற்குப் போங்கள்.

அது போல் எலக்ஷ்ன் சமயத்தில் சொல்வதற்கு நல்ல, மக்களின் மனதைக் கவரக்கூடிய இனிமையான கோஷங்கள் வேண்டும்.

உதாரணமாக- 
வறுமைக் கோட்டை அழிப்பேன்.
லஞ்சத்தை ஒழிப்பேன்.
குடிசைகளை மாளிகைகள் ஆக்குவேன்.
எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்.

இந்தக் கோஷங்களெல்லாம் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன? காதில் விழும்போது தேன் பாய்வது போல் இருக்கிறதல்லவா?. இவைகள் எல்லாம் எப்போது சாத்தியப்படும்?  
வறுமை இல்லாவிட்டால் வறுமையை அழிப்பது எப்படி?           லஞ்சம் இல்லாவிட்டால் அதை ஒழிப்பது எப்படி?               குடிசைகள் இல்லாவிட்டால் அவைகளை எப்படி மாளிகைகள் ஆக்க முடியும்?

மாக்களே, கவலைப்படாதீர்கள். இவைகள் நம் நாட்டில் என்றும் சிரஞ்சீவியாய் இருக்கும்.


செவ்வாய், 29 மார்ச், 2011

இலவசங்களை குறை கூறாதீர்கள். அது தேசத்துரோகம்.


சரித்திரம் படித்தவர்கள் பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் ரஷ்யப் புரட்சி பற்றியும் படித்திருப்பார்கள். அந்தப் புரட்சிகளின் பின்னணி பற்றியும் நன்கு அறிந்திருப்பார்கள். சமீபத்தில் எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி பற்றி எல்லோரும் செய்தித் தாள்களில் படித்துக் கொண்டிருந்தோம்.
சரித்திரம் படிப்பதின் நோக்கமே, நம் முந்தைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் செய்த தவறுகள் என்ன, அந்த தவறுகளிலிருந்து நாம் நம்மை எவ்வாறு காத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளத்தான். இந்த தத்துவத்தில் யாருக்கும் ஐயப்பாடு இருக்காதென்று நம்புகிறேன்.

எகிப்திய மன்னர் இந்தத் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன். அல்லது தம் மக்கள் ராஜ விசுவாசம் மாற மாட்டார்கள் என்ற மயக்கத்தில் இருந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

ஆனால் நம் நாட்டு அரசியல் வாதிகள் இந்தத் தத்துவத்தை நன்கு புரிந்தவர்கள். அதாவது மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துள்ளார்கள். மக்களுக்கு வயிறு எப்போது காய்ந்து போகிறதோ அப்போதுதான் புரட்சிக்கான விளை நிலம் உருவாகிறது. பல சமயங்களில் வயிறு நிறைந்திருந்தாலும் அவன் சும்மா இருந்தால் அவன் மனதில் வேண்டாத எண்ணங்கள் தோன்றும். இப்படி பலர் சிந்திக்க ஆரம்பிப்பது நல்லதல்ல. அவர்களை எப்போதும் ஒருவித மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும். ஆட்சியாளர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்காது.

அப்படி வைத்திருந்தாலும், இந்தப் படித்த முட்டாள்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் அவ்வப்போது குட்டையைக் குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் அவர்களை ஒரு கட்சிக்கும் பிடிப்பதில்லை. ஆனால் ஒரு நல்ல காலம், அவ்வாறு படித்த சிந்தனையாளர்கள் அதிகமாக உருவாவதில்லை. அப்படி ஒன்று இரண்டு உருவாகும்போது அவர்களை எப்படி கையாளவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

இந்த சூழ்நிலையை நிலை நிறுத்தத்தான் இலவசங்கள். கிராமிய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை செய்யாமல் காசு கிடைக்கிறது. சலீசாக அரிசி கிடைக்கிறது. பொழுது போக்க டி.வி. யும் டாஸ்மாக்கும் இருக்கின்றன. குடிசைமாற்றுத் திட்டத்தின் மூலம் குடியிருக்க வீடு கிடைக்கிறது. இந்த நிலையில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவது?
ஆகவே இலவசங்களின் நன்மையைப் புரிந்து கொண்டீர்களா? இனியாவது இலவசத்தைக் குறை கூறாமல் அவைகளை வாங்கி அனுபவியுங்கள். வாழ்க இலவசம். வாழ்க குடி மக்கள்!

ஞாயிறு, 27 மார்ச், 2011

தொழில் நுட்பம் - பதிவில் வரியின் இடைவெளியை அதிகப்படுத்த


முதலில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு அமெச்சூர். கம்ப்யூட்டரின் எல்லா தொழில் நுட்பங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் குருட்டாம்போக்கில் சில நுட்பங்களைக் கற்றிருக்கிறேன். அவைகளில் ஒன்று பதிவில் வரிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தல். நான் எழுதியிருப்பவைகளை அப்படியே செய்தால் விரும்பிய விளைவுகள் ஏற்படும்.  பல முறை படித்துவிட்டு அப்படியே செய்யவும். 
 
1.   முதலில் பதிவின் டேஷ்போர்டுக்குப் போகவும்.
2.   அங்கு Design என்று உங்கள் பதிவின் கீழ் இருக்கும். அதை அழுத்தவும்.
3.   இப்போது தோன்றும் ஸ்கிரீனில் Edit HTML  என்று இருப்பதை அழுத்தவும்.
4.   இப்போது Back up/Restore Template என்கிற இடத்தில் இருப்பீர்கள். அந்த இடத்தை நன்றாக, முழுவதும் சுற்றிப் பார்த்து என்னென்ன இருக்கிறது என்று நன்றாகப் பார்த்துக்கொள்ளவும்.
5.   இப்போது Download Full Template என்று இருப்பதை அழுத்தவும்.
6.   இப்போது you have chosen to open என்று ஒரு விண்டோ வரும்.
7.   அதில் Save File ஐ செலக்ட் செய்யவும். பிறகு OK ஐ அழுத்தவும்.
8.   இப்போது உங்கள் டெம்ப்ளேட் பத்திரமாக உங்கள் Desk Top  இல் ஸ்டோர் ஆகியிருக்கும். இது எதற்கென்றால் நீங்கள் நான் சொன்னபடி செய்யாமல் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்திருந்தீர்களென்றால் வம்பு வந்துவிடும் அப்போது அந்த வம்பிலிருந்து மீண்டு வர இது உதவியாயிருக்கும்.
9.   அடுத்து Edit Template க்கு கீழே ஒரு சதுரக் கட்டத்தினுள் என்னென்னவோ எழுதியிருக்கும். அதைப்பார்த்து பயப்படாதீர்கள். அந்தக் கட்டித்திற்குள் கர்சரை வைத்து ஒரு லெப்ட் கிளிக் செய்யவும். இப்போது கர்சர் ஒரு கோடாக உள்ளே கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.
10. அப்படிக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தால் இது வரை நீங்கள் செய்தது சரியென்று அர்த்தம். இப்போது Ctrl  என்று ஒரு கீ உங்கள் கீபோர்டில் இடது கோடியில் கீழே இருக்கும். அதை அழுத்துக்கொண்டு மூடவே F கீயையும் அழுத்தவும். அழுத்திவிட்டு கையை கீ போர்டிலிருந்து எடுத்து விடவும்.
11. இப்பொது டெம்ப்ளேட் கட்டத்துக்கு கீழே x Find என்று ஒன்று தோன்றியிருக்கும். அதற்குப்பக்கத்தில் ஒரு கட்டம் இருக்கும். அந்தக் கட்டத்தில் .post-body என்று டைப் அடிக்கவும். இப்போது இந்த எழுத்துக்கள் டெம்ப்ளேட்டில் ஹைலைட் ஆகித் தெரியும்.

முக்கிய குறிப்பு; இது வரையில் நீங்கள் செய்ததெல்லாம் உங்கள் பிளாக்கை ஒன்றும் செய்துவிடாது. இப்போது உங்களுக்குப் பயமாக இருந்தால் உங்கள் ஸ்கிரீனின் வலது கோடி டாப்பில் ஒரு சிகப்பு x இருக்கிறதல்லவா, அதை கிளிக் செய்துவிட்டு ஓடி வந்து விடலாம். பயப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் கூகுளாண்டவர் துணை நிற்பார்.

12. இப்போது கர்சரை வைத்து இந்த .post-body என்ற எழுத்துகள் சிறிது மேலே போகும்படி செய்யுங்கள்.
13. இப்போது தெரிபவை:
       .post-body {
        Font-size 110%
        Line-height 1.2;

14. இதில் லைன் ஹைட் 1.2 என்று இருப்பதை 1.8 என்று மாற்றுங்கள். எப்படியென்றால், கர்சரை 2 க்கு முன்னால் வைத்து 2 ஐ டெலீட் செய்துவிட்டு 8 என்று டைப் செய்யுங்கள். அவ்வளவுதான். வேறு எந்த கீயையும் உபயோகப்படுத்தவேண்டாம்.
15. இப்போது டெம்ப்ளேட் சதுரத்தை விட்டு வெளியில் வாருங்கள். கட்டத்துக்கு அடியில் SAVE TEMPLATE என்று இருப்பதை அழுத்தவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
16. இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். Your changes have been saved. View Blog என்று இருக்கும்.  View Blog ஐ அழுத்தவும். ஆஹா, உங்கள் பிளாக் இப்பொழுது அதிக இடைவெளியுடன் ஜ்வலிக்கும்.
17. இடைவெளியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுமானால் திரும்பவும் இதே மாதிரி செய்து லைன் ஸ்பேசிங்க்கை 2.0 க்கு மாற்றலாம். இதே மாதிரி எழுத்துகளின் சைஸையும் 120, 130 % என்று உங்களுக்குத் தேவையான அளவிற்கு மாற்றலாம்.
18. இவைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்த பின், உடனே என்னுடைய இந்த பிளாக்குக்கு வந்து நன்றி தெரிவிக்கவும். இல்லாவிட்டால் குருவின் சாபத்திற்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெள்ளி, 25 மார்ச், 2011

பெயர்க் காரணம்.





அன்னு அவர்கள் என்னுடைய  "பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்"   பதிவில் போட்டுள்ள பின்னூட்டம்.
{ ஹெ ஹே... ஏன் இப்படி???

அடுத்தடுத்து வரப்போற டிப்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஹெ ஹெ :))

கந்தஸ்வாமி சார், உங்களை ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன். வழக்கம் போல கோவை லோலாயுடன் கலாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில். }
இந்த “ஹெ ஹே” வுக்கு அர்த்தம் தெரியாமத்தான் முளிச்சிகிட்டு இருக்கேன். நல்ல பாராட்டா இல்லை நக்கலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தொடர் பதிவுன்னு அழைப்பு வந்த பிறகு சும்மா இருந்தா நம் (தன்மைப்பன்மை – Royal We) சுயமரியாதை என்ன ஆவது? ஆகவேதான் ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தாலும் திருமதி அன்னுவிற்காக இன்னொரு பதிவு. 
இப்போது இருக்கும் பதிவின் தலைப்பு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும். ஏறக்குறைய ஒரு முப்பது வருடம் தப்பு, தப்பு, முப்பது நாள் சீ, இதுவும் தப்பு, முப்பது நிமிஷம் ஆயுசில முப்பது நிமிஷம் எதையும் யோசித்ததே இல்லை, முப்பது செகண்ட் யோசித்து எடுத்த தலைப்பு ஆகும். ஏன்னா முப்பது செகன்ட்டுக்கு மேல நம்ம மூளை வேலை செய்யாது.
இதுக்கு முன்னால பல தலைப்புகளை யோசித்து வைத்திருந்தேன். அவைகளை ஏன் கைவிட்டேன் என்பதற்கான விளக்கம்.
மசக்கவுண்டன் கிறுக்கல்கள்:  நீ எழுதறது எல்லாமே கிறுக்கல்கள்தான். அதைத் தனியா வேற சொல்லோணுமாக்கும் என்று நண்பர்கள் சொல்லவே அதைக் கைவிட்டேன்.
பயித்தயக்காரன் பிதற்றல்: பதிவுலகத்தில ஒருத்தரும் நிஜப்பேரை வைப்பதில்லை. நீ மட்டும் ஏன் உன்னுடைய நிஜப்பேரை வைக்கிறே, பயித்தக்காரா ? என்று நண்பர்கள் இதையும் நிராகரித்து விட்டார்கள்.
முட்டாள் பையன், ரெட்டை மண்டை, அழுகுணி, பல்லவராயன் (என்னுடைய பல் கொஞ்சம் தூக்கலாக இருப்பதால் வந்த காரணப்பெயர்), இப்படி பல பெயர்களை நான் சொல்லச் சொல்ல நண்பர்களும், வீட்டு அம்மணிகளும் நிராகரிக்க, கடைசியில் யாரையும் கேட்காமல் நானே இப்போது இருக்கும் பெயரை முப்பது செகன்ட் யோசித்து வைத்துவிட்டேன். இதுதான் இந்தப் பதிவின் பெயர்க்காரணம்.
அம்மணி அன்னு, தொடர் பதிவு போட்டுவிட்டேன். இதற்கு மேல் மூளை வேலை செய்யாததால் இத்துடன் முடிக்கிறேன்.

திங்கள், 21 மார்ச், 2011

பதிவர்களுக்கான தொழில் நுட்பங்கள்


சில பிளாக்குகளில் அதிகமான பின்னூட்டங்கள், ஹிட்கள், பாலோயர்ஸ் வந்து பிராண்டுவார்கள். அந்த மாதிரி பிளாக்குகளுக்கு ஒரு சுலப வைத்தியம்.

DashBoard போய் Settings க்குப் போகவும். அங்கே Template Designer என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் பலவிதமான டெம்ப்ளேட்டுகள் இருக்கும். இருப்பதில் திக் கலராக இருப்பதை செலக்ட் செய்யவும். எழுத்துகளையும் திக் கலரில் செலக்ட் செய்யவும். அதாவது கருப்பு பேக்ரவுண்ட்டில் – ஊதா எழுத்துக்கள் சிறப்பாக இருக்கும். இப்போது Apply ஐ அமுக்கிவிட்டு வெளியில் வரவும். உங்கள் பிளாக் கீழே கண்டவாறு இருக்கும்.


உங்கள் பிளாக்குக்கு பின்னூட்டத் தொந்திரவுகள் போயே போச். அவ்வளவுதான். இனி நீங்கள் நிம்மதியாக பதிவுகள் போடலாம்.

இன்னும் இது மாதிரியான தொழில் நுட்பங்கள் நிறைய கைவசம் இருக்கின்றன. இந்தப் பதிவுக்கு வரும் ஆதரவைப் பார்த்துவிட்டு அவைகளையும் வெளியிடுகிறேன்.




         










சனி, 19 மார்ச், 2011

பெண்களின் எழுத்துக்கள்


காப்பி குடிக்க கத்துக்கொடுத்த 
டாக்டர் அய்யாவே.
தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வாருங்கள். கருத்தினையும் பகிருங்கள்..
   க்டர். Dr PKandaswamyPhD

மொதல்ல நன்றி சொல்லிக்கொள்கிறேன். அப்புறம் மறந்து போய்விடும்.


காப்பி குடிக்க கத்துக் கொடுத்ததிற்கே இந்த பரிசு என்றால் இன்னும் இந்த வரிசையில் வர இருக்கும் மற்ற பதிவுகளுக்கு என்னென்ன பரிசுகள் வரப்போகுதோ என்கிற பயம் வந்து விட்டது. “முட்ட நனைந்த பின் முக்காடு எதற்கு” என்று ஒரு பழமொழி உண்டு. பதிவுலகத்துக்குள்ள வந்தாச்சு, இனி என்ன வந்தாலும் பார்த்துட வேண்டியதுதான்.
எல்லோரையும் கொஞ்சம் மொக்கை போட்டு வறுத்தெடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும். அப்பறம் ஒருத்தரும் நம்ம வழிக்கே வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

 (அன்புடன் மலிக்காவுக்கு - உங்களைச் சொல்றதா நெனச்சுக்காதீங்க, அப்படி நெனச்சீங்கன்னா, நான் ஒரு மொழக்…… தேடீடுவனுங்க)

உடல், மனம், புத்தி, சொல், செயல், இவையெல்லாம் உயிரோடு இருக்கும் மனிதனின் அங்கங்கள். மனம் என்பது எண்ணல்களின் தொகுப்பு. எண்ணங்கள் சொல்லாக வெளிப்படுகின்றன. இந்த வெளிப்படுதல் பேச்சாகவும் இருக்கலாம், எழுத்தாகவும் இருக்கலாம். அப்பாடி, ஒரு வழியா சப்ஜெக்ட்டுக்கு வந்தாச்சு.


பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள ஒற்றுமை, இரண்டும் மனதின் எண்ணங்களை வெளிப்படுத்தலேயாகும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், பேச்சு ஒரு முறை பேசிவிட்டால் அப்புறம் திரும்ப எடுத்துக் கொள்ளமுடியாது. அரசியல் வாதிகள் வேண்டுமென்றால் “நான் அப்படிச் சொல்லவேயில்லை, இந்தப் பத்திரிக்கைக் காரர்கள் எதிர்க் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு என் பேச்சை வேண்டுமென்றே திரித்துப் போட்டுவிட்டார்கள்” என்று நாக்கூசாமல் சொல்லி விடலாம். ஆனால் நம்மைப் போன்ற சாதாரண குடி மக்கள் அந்த மாதிரி தப்பிக்க முடியாது. ஆகவே பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக (டாஸ்மாக்கில் தவிர) இருக்கவேண்டும். 


ஆனால் எழுதுவதில் நாம் ஜாலங்கள் செய்யலாம். எழுதினதை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். குறுக்கலாம், நீட்டலாம், அடிக்கலாம், பெருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக யாராவது மேல் கோபம் வந்தால் அவரைப்பற்றி கன்னாபின்னாவென்று திட்டி எழுதி, பிறகு கோபம் தணிந்தவுடன் அதைக் கிழித்து எறிந்து விடலாம். இப்படி பல சௌகரியங்கள் இருக்கின்றன.


அதுவும் பதிவுலகில் உங்களை யாரென்றே அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ, யாராக இருந்தாலும் சரி, உங்கள் நிஜ அடையாளத்த காட்ட வேண்டிய அவசியம் இல்லை. விவரம் போறாத சிலர்தான், தாங்கள் ஆணா, பெண்ணா, உண்மைப் பெயர் இவற்றைக்கூறி வீணான வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். இல்லை, நான் காந்தியின் வம்சாவளியில் வந்தவன், வானமே இடிந்து விழுந்தாலும் சத்தியத்தின் பாதையிலிருந்து விலக மாட்டேன் என்றால், அதன் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்.
ஆணானாலும் பெண்ணானாலும் விதி இதுதான். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பொது வெளிக்கு வந்து விட்டால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் தைரியமும் மனப்பக்குவமும் வேண்டும். ரத்த பூமியில் பயந்தாங் கொள்ளிகளுக்கு இடம் இல்லை. ரத்தத்தைப் பார்த்து மயக்கம் போடுபவர்களுக்கு இங்கு என்ன வேலை? 


பெண்கள் போற்றத் தகுந்தவர்கள். அவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டியது அவசியம். ஆனால் அவர்கள் பெண்கள் என்பதாலேயே அவர்களுக்கு சலுகைகள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் அதை எதிர்பார்க்கக் கூடாது. ஆகவே பதிவுலகில் எல்லோரும் சமம். மூக்கில் குத்து வாங்க ஆண்கள் தயார் என்றால் பெண்களும் அதற்கு சளைக்கக்கூடாது.


நான் பக்கா சுயநலவாதி. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு பரோபகாரி (இளிச்சவாயன்) இல்லை. ஆகவே இந்த தொடர் பதிவுக்கு ஒருவரையும் அழைக்கப் போவதில்லை. அவர்களாகவே தொடர் பதிவு என்று போட்டால் நான் பொறுப்பில்லை.






வெள்ளி, 18 மார்ச், 2011

சோர்வும் சலிப்பும்


இந்த இரண்டு வார்த்தைகளையும் உடல், மனம் ஆகியவை சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் பொதுவாகவே உபயோகிப்பதுண்டு. இருந்தாலும் நான் ஒரு வித்தியாசத்தைப் புகுத்தி இருக்கிறேன்.
அதாவது:

1.   சோர்வு என்பது சாதாரணமாக உடல் சோர்வைக் குறிக்கும். இது உடல் தன் சக்திக்கு மீறி உழைக்கும்போது ஏற்படுவது. இதற்குத் தீர்வு ஓய்வு எடுப்பதுதான். இது ஒரு இயற்கை விதி.

2.   சலிப்பு மன ரீதியாக ஏற்படுவது. வாழ்க்கை ஒரே கதியில் ஓடிக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுவது இயற்கை.

பதிவுலகத்தில் சோர்வும் சலிப்பும் மலிந்திருக்கின்றன என்பது என் அபிப்பிராயம். பலர் ஆர்வத்தில் பதிவுகள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் கொஞ்ச காலத்திலேயே காணாமல் போகிறார்கள். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களில் மறைந்துவிடும் பதிவுகள் ஏராளம். மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும் பதிவர்களில் கூட சிலர்தான் தொடர்ந்து பதிவுகள் போட்டு வருகிறார்கள். 

இதற்கான காரணங்களை யாராவது ஆராய்ந்து சொன்னால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பூனைக்கு மணி கட்டுவது யார்?
எனக்குத்தெரிந்த சில காரணங்களைப் பதிவர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

1.   பதிவுக்கான பொருள்கள் அமையாமை.
எதைப்பற்றி எழுதுவது என்பது பல பதிவர்களுக்கு ஒரு தலையாய வலி (தலைவலி). சிலர் வழியில் பார்த்த ஒரு சிறு உரையாடலைக் கூட வைத்து ஒரு பதிவு தேற்றி விடுவார்கள். அந்தக்கலை எல்லோருக்கும் வருவதில்லை. இவர்களுக்கு ஆதரவாகத்தான் பல பதிவர்கள் “தொடர் பதிவு” என்ற உத்தியைக் கடைப்பிடிக்கிறார்கள்.

2.   அடுத்தபடியாக எழுதுவதற்குத் தேவையானது கற்பனைத்திறன்.
இது கொஞ்சம் கஷ்டமான விஷயம். கடையில் வாங்கக் கூடிய சரக்குமில்லை. கம்ப்யூட்டர் இவர்களுக்காகவே மைக்ரோசாஃப்ட் நிறுவனம் copy, paste வசதியைச் செய்து கொடுத்திருக்கிறது. யாரும் கமென்ட் போடாத பதிவைக் காப்பி, பேஸ்ட் செய்தால் வெளியில் யாருக்கும் தெரியாது.

3.   ஊக்கம் இல்லாமை.
பாலோயர்ஸ், ஹிட்ஸ், பின்னூட்டங்கள் வராவிட்டால் பலர் மனமுடைந்து தற்கொலை லெவலுக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் பதிவுலகத்திற்குள் வந்ததே தவறு. அவர்கள் போவதே பதிவுலகத்துற்கு அவர்கள் செய்யும் தியாகம்.

4.   ஆபீஸில் டேமேஜர் தொந்திரவுகள்.
இந்தத் தொந்திரவு பல விதங்களில் இருக்கும். குறிப்பாக இணையக் கட்டுப்பாடுகள். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர். வேலைக்கே உலை வைக்கும் அபாயமும் உண்டு. என்னைப்போல் பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டில் சொந்தக் கம்ப்யூட்டரில் பதிவு போடும் ஆசாமிகள் ரொம்பக் கம்மி.

5.   அனானி பின்னூட்டங்கள்.
அனானியாகவோ இல்லை ஒரு பெயருடனோ, ஒரு பதிவரைப் பற்றி தரக்குறைவான வகையில் பின்னூட்டங்கள் வந்தால், நன்கு இரும்பு இதயம் கொண்ட பதிவர்களைத் தவிர மற்றவர்கள் ஆடிப்போய் விடுகிறார்கள். இது இயற்கை. இதற்குப் பயந்து பல பதிவர்கள் நமக்கு எதற்கு வம்பு என்று ஓடிப்போகிறார்கள். பொதுவெளிக்கு வந்துவிட்டால் கல் வீச்சுக்குப் பயந்து விடக்கூடாது.  அதே கல்லைப்பிடித்து திரும்ப வீசும் தைரியம் வேண்டும்.

இதையெல்லாம் கடைப்பிடித்து, தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பதிவுகள் போட்டு எல்லோரும் பிரபல பதிவர்கள் ஆக வாழ்த்துக்கள்.

திங்கள், 14 மார்ச், 2011

காப்பி குடிப்பது எப்படி?

காப்பி குடிக்கத் தெரியாதா எங்களுக்கு! நேத்துப்பொறந்த குழந்தை கூட இன்னைக்கு காப்பி குடிக்கறது என்று சொல்பவர்கள் சற்றுப் பொறுக்கவும். இது ரோடோரக் கடையில வாங்கி நாலு மொடக்குல குடிக்கற காப்பி மாதிரி இல்லை. ஜப்பானில் “டீ செரிமனி” என்று வைப்பார்களே அந்த மாதிரி.

{ பாவம் ஜப்பான்காரர்கள் ! விதி அவர்களுடன் எப்போதும் விளையாடுகிறது. யாருடனும் வம்புக்குப் போகாமல் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை இயற்கை ஏன் இவ்வாறு பழி வாங்குகிறது என்று தெரியவில்லை. அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. இந்தப் பேரழிவிலிருந்து மீண்டுவரத் தேவையான மன தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்வோம். உயிர்நீத்த அனைத்து ஆத்மாக்களும் அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம்.} 

இரண்டு பேர் காப்பி குடிக்கவேண்டும் என்றால் தேவையானவைகள் - இரண்டு பழைய காலத்து டம்ளர்கள். கால் படிக்குக் கம்மியில்லாமல் கொள்ளளவு இருக்கவேண்டும். அரைப்படி பிடிக்கக் கூடிய வாழைப்பூ சொம்பு ஒன்று. ஒரு படி ஒரு உப்புப்பொரி. சாதாரணப் பொரி இரண்டு உப்புப்பொரி என்று சொல்வார்கள். அது கொஞ்சம் கசக்கும்.
 
கிராமங்களில், வெளியூரிலிருந்து யாராவது ஒரம்பரை (உறவினர்) வந்தால் இரண்டு பேரும் (அதாவது வீட்டுக்காரரும், ஒரம்பரைக்கு வந்தவரும்) வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொள்வார்கள். வீட்டுக்காரர் உள்ளே பார்த்து “அம்மணீ, யாரு வந்திருக்காங்கன்னு பாரு” ன்னு குரல் கொடுப்பார். வூட்டு அம்மணி வெளியில் வந்து பார்த்துவிட்டு, வாங்கண்ணா, ஊர்ல அண்ணியெல்லாம் எப்படி இருக்காங்க, எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாட்டம் இருக்குது, அப்படீன்னு குசலம் விசாரித்து விட்டு, வீட்டுக்குள் போய் ஒரு சொம்பில் குடிப்பதற்கு தண்ணீரும் கூட ஒரு தட்டில் வெத்தலபாக்கும் கொண்டு வந்து வைப்பாங்க. அண்ணா, வெத்தில போடுங்க, காப்பி கொண்டார்றேன்னுட்டு உள்ள போயிடுவாங்க. 

அப்புறமா காப்பி வரும். ரெண்டு டம்ளர்ல நெறயக் காப்பியும், கூட ஒரு வாழைப்பூ சொம்பில நெறய காப்பியும் கொண்டு வந்து வைப்பாங்க. கூடவே ஒரு தட்டத்தில நெறய பொரியும் கொண்டு வந்து வைப்பாங்க. அந்தக்காப்பிய கொஞ்சம் குடிச்சுட்டு, அப்பறமா பொரிய எடுத்து காப்பி டம்ளர்ல போட்டுக்குவாங்க. அப்புறம் அந்தப் பொரியோட காப்பியக் குடிப்பாங்க. காப்பி அரை டம்ளர் ஆனவுடன் வாழைப்பூ சொம்பில இருக்கிற காப்பிய டம்ளர்ல ஊத்தி, பொரியையும் போட்டு டம்ளரை நெறச்சுக்குவாங்க. டம்ளர்ல காப்பி குறையக் குறைய சொம்பில இருந்து நெரப்பீக்குவாங்க. அப்பப்ப பொரியையும் போட்டுக்குவாங்க.

கொண்டு வந்து வச்ச காப்பியெல்லாம் தீர்ந்ததுக்கு அப்புறமும் காப்பி வேணும்போல இருந்திச்சுன்னா வீட்டுக்காரர் உள்ள பாத்து இன்னும் கொஞ்சம் காப்பித்தண்ணி கொண்டா அம்மணின்னு கொரல் குடுப்பாரு. சித்த நேரத்துல மொத மாதிரியே ரண்டு டம்ளர்ல காப்பியும், ஒரு சொம்பு நெறய காப்பியும், ஒரு தட்டத்தில பொரியும் வந்துடும். அப்பறம் என்ன, பழய மாதிரியே ரவுண்டு கட்ட வேண்டியதுதான்.

மத்தியானம் சாப்பாடு சாப்பிடற மட்டும் இப்படியேதானுங்க குடிச்சிட்டிருப்பாங்க. இதுதாங்க காப்பி குடிக்கிற முறைங்க.

ஞாயிறு, 13 மார்ச், 2011

ஆஹா, தேர்தல் வந்து விட்டது


எல்லோரும் தேர்தலைப்பற்றி பதிவுகள் போட்டுக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் சும்மா இருந்தால் நன்றாக இருக்குமா? ஆகவேதான் இந்தப் பதிவு.
 
சமீபத்தில், 1951 ம் வருடம் டிசம்பர் மாதம். நான் SSLC பாஸ் ( நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், “பாஆஆஆஆஆஆஆஆஆஸ்” ) செய்துவிட்டு காலேஜில் இன்டர்மீடியேட்டில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். அரை வருடப் பரீட்சை முடிந்து லீவு விட்டிருந்தார்கள். வழக்கம்போல் அந்தக் காலத்து ஆர்.எஸ்.புரத்தை சர்வே எடுத்துக் கொண்டிருந்தேன். (நான் ஆர். எஸ். புரத்தில்தான் குடியிருந்தேன்). திடீரென்று யாரோ என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். திரும்பிப் பார்த்தால் ஹைஸ்கூலில் என்னுடன் படித்த வகுப்புத் தோழன். அவன் நன்றாக வளர்ந்து ஆஜானுபானுவாக இருப்பான். என்னை விட நான்கு வயது பெரியவன். அஸ்திவாரம் நல்ல ஸ்ட்ராங்க்.

“என்னடா செய்து கொண்டிருக்கிறாய்” என்றான். “காலேஜ் லீவு, சும்மா சுற்றிக்கொண்டு இருக்கிறேன்” என்றேன். அப்படியானால் என் கூட வா என்று ஒரு ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போனான். அங்கு ஒரு பத்துப் பதினைந்து பேர் என்னென்னமோ காகிதங்களை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ரொம்ப பிஸியாக போய்க் கொண்டு இருந்தார்கள். காலியாக இருந்த ஒரு டேபிளில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, ஒருவரிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொல்லிவிட்டு வெளியில் போய் விட்டான். அந்த நபர் என்னிடம் ஒரு லிஸ்டைக் கொடுத்து கார்பன் வைத்து நான்கு காப்பி எடுக்கச் சொல்லிவிட்டு, அவர் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார். 

பேப்பர், கார்பன் எல்லாம் ஏகப்பட்டது கிடந்தன. நானும் மும்முரமாக காப்பி எடுக்க ஆரம்பித்தேன். அப்படியே சுற்றுமுற்றும் பார்த்ததில் தெரிந்தது – அது ஒரு தேர்தல் ஆபீஸ் என்று. என்னுடன் படித்தவர்கள், மற்றும் தெரிந்தவர்கள் சிலர் இருந்தார்கள். விசாரித்ததில் தெரிந்தது – நாங்கள் எல்லோரும் தேர்தல் தொண்டர்கள். அந்தக்காலத்தில் காங்கிரஸ் ஒன்றுதான் எங்களுக்குத் தெரிந்த ஆரசியல் கட்சி. ஊரில் செல்வாக்கான காங்கிரஸ்காரர்கள் பலர் உண்டு. எல்லோருக்கும் சீட் கொடுக்க முடியாதல்லவா? அப்படி சீட் கிடைக்காத வெங்கிடசாமி நாயுடு என்பவர் சுயேச்சையாக கூஜா சின்னத்தில் நின்றார். அந்த தேர்தல் ஆபீஸ் அவருக்காக அந்தப் பகுதியில் பிரசாரம் செய்ய எற்படுத்தப்பட்ட ஆபீஸ். அவருக்கு பிற்காலத்தில் கூஜா வெங்கிடசாமி நாயுடு என்ற பெயர் நிலைத்து விட்டது.

எங்களுக்கு தினம் மூன்று ரூபாய் கூலி அல்லது கௌரவமாக சம்பளம். காலை, மாலை இரு வேளை டிபன். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை. இந்த டிபனுக்கு பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலில் அக்ரிமென்ட். அதாவது என் நண்பன் ஒரு சீட்டு கொடுப்பான். அதை அங்கு கொடுத்தால் ஒரு வடை அல்லது போண்டா, மற்றும் ஒரு காப்பி கொடுப்பார்கள். அதற்கு அளவாக பணத்தை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுப்பான். எனக்கு மட்டும் பணத்தை எழுதாமல் காலியாகக் கொடுப்பான். நான் இஷ்டம்போல் சாப்பிட்டுவிட்டு பில் வந்ததும் அந்தப் பணத்தை அந்தச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவேன். இது எனக்கு ஸ்பெஷல் சலுகை.

எங்கள் வேலை என்னவென்றால், அந்த பகுதியில் உள்ள வீதிகளுக்கு ஒவ்வோன்றாகச் சென்று அங்குள்ள வோட்டர்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பது. வோட்டர்கள் லிஸ்டை வைத்துக்கொண்டு வோட்டர்கள் லிஸ்ட் பிரகாரம் சரியாக இருக்கிறார்களா என்று செக் செய்வது, இத்தியாதிகள். வோட்டர்களிடம் ஓட்டுக்கேட்பதற்கு, பெரிய மனிதர்கள் அடங்கிய ஒரு குழு தனியாக வேலை செய்தது. இதற்காக எங்களுக்கு இரண்டு பேர்களுக்கு ஒரு குதிரை வண்டி வாடகைக்கு அமர்த்திக் கொடுத்திருந்தார்கள். தேர்தலுக்கு முந்தைய வாரம் முழுவதும் இந்த வேலைதான்.

நடுநடுவில் டிபன் சாப்பிட ஓட்டலுக்குப் போவது, மதிய உணவிற்கு வீட்டுக்குப் போவது எல்லாம் இந்த குதிரை வண்டியில்தான். தேர்தலுக்கு முன் தினம் இரவு டூட்டியும் பார்த்தோம். தேர்தல் அன்று வீடு வீடாகச் சென்று வோட்டர்களை ஒட்டுப் போட அழைத்துப் போகச்சொன்னார்கள். ஆனால் ஒருவரும் குதிரை வண்டியில் வரவில்லை. நாங்கள் தொண்டர்கள் மட்டும் குதிரை வண்டியில் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தோம். ஒரு வழியாகத் தேர்தல் நடந்து முடிந்தது.

கூஜா வெங்கிடசாமி நாயுடு இந்த தேர்தலுக்காக ஏகப்பட்ட செலவு செந்திருந்தார். சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்ததாகக் கேள்விப்பட்டோம். அதாவது இன்றைய மதிப்பிற்கு ஏறக்குறைய ஏழு கோடி ரூபாய்க்குச் சமம். இவ்வளவு செலவு செய்தும் மக்களுடைய காங்கிரஸ் பக்தியை மாற்ற முடியவில்லை. இவருக்கு டெபாசிட் கூடக் கிடைக்கவில்லை. இவர் இவ்வளவு செலவு செய்து தோற்றுப் போனதைப் பற்றி கோவை மக்கள் வெகு காலம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

இதுதான் நான் தேர்தல் தொண்டனாகப் பணியாற்றிய வரலாறு. அப்போது எனக்கு வயது 17. ஓட்டுப்போட அருகதை அற்றவனாக இருந்தேன்.