திங்கள், 14 மார்ச், 2011

காப்பி குடிப்பது எப்படி?

காப்பி குடிக்கத் தெரியாதா எங்களுக்கு! நேத்துப்பொறந்த குழந்தை கூட இன்னைக்கு காப்பி குடிக்கறது என்று சொல்பவர்கள் சற்றுப் பொறுக்கவும். இது ரோடோரக் கடையில வாங்கி நாலு மொடக்குல குடிக்கற காப்பி மாதிரி இல்லை. ஜப்பானில் “டீ செரிமனி” என்று வைப்பார்களே அந்த மாதிரி.

{ பாவம் ஜப்பான்காரர்கள் ! விதி அவர்களுடன் எப்போதும் விளையாடுகிறது. யாருடனும் வம்புக்குப் போகாமல் அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களை இயற்கை ஏன் இவ்வாறு பழி வாங்குகிறது என்று தெரியவில்லை. அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. இந்தப் பேரழிவிலிருந்து மீண்டுவரத் தேவையான மன தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்க இறைவனை வேண்டிக்கொள்வோம். உயிர்நீத்த அனைத்து ஆத்மாக்களும் அமைதி பெற ஆண்டவனை வேண்டுவோம்.} 

இரண்டு பேர் காப்பி குடிக்கவேண்டும் என்றால் தேவையானவைகள் - இரண்டு பழைய காலத்து டம்ளர்கள். கால் படிக்குக் கம்மியில்லாமல் கொள்ளளவு இருக்கவேண்டும். அரைப்படி பிடிக்கக் கூடிய வாழைப்பூ சொம்பு ஒன்று. ஒரு படி ஒரு உப்புப்பொரி. சாதாரணப் பொரி இரண்டு உப்புப்பொரி என்று சொல்வார்கள். அது கொஞ்சம் கசக்கும்.
 
கிராமங்களில், வெளியூரிலிருந்து யாராவது ஒரம்பரை (உறவினர்) வந்தால் இரண்டு பேரும் (அதாவது வீட்டுக்காரரும், ஒரம்பரைக்கு வந்தவரும்) வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொள்வார்கள். வீட்டுக்காரர் உள்ளே பார்த்து “அம்மணீ, யாரு வந்திருக்காங்கன்னு பாரு” ன்னு குரல் கொடுப்பார். வூட்டு அம்மணி வெளியில் வந்து பார்த்துவிட்டு, வாங்கண்ணா, ஊர்ல அண்ணியெல்லாம் எப்படி இருக்காங்க, எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாட்டம் இருக்குது, அப்படீன்னு குசலம் விசாரித்து விட்டு, வீட்டுக்குள் போய் ஒரு சொம்பில் குடிப்பதற்கு தண்ணீரும் கூட ஒரு தட்டில் வெத்தலபாக்கும் கொண்டு வந்து வைப்பாங்க. அண்ணா, வெத்தில போடுங்க, காப்பி கொண்டார்றேன்னுட்டு உள்ள போயிடுவாங்க. 

அப்புறமா காப்பி வரும். ரெண்டு டம்ளர்ல நெறயக் காப்பியும், கூட ஒரு வாழைப்பூ சொம்பில நெறய காப்பியும் கொண்டு வந்து வைப்பாங்க. கூடவே ஒரு தட்டத்தில நெறய பொரியும் கொண்டு வந்து வைப்பாங்க. அந்தக்காப்பிய கொஞ்சம் குடிச்சுட்டு, அப்பறமா பொரிய எடுத்து காப்பி டம்ளர்ல போட்டுக்குவாங்க. அப்புறம் அந்தப் பொரியோட காப்பியக் குடிப்பாங்க. காப்பி அரை டம்ளர் ஆனவுடன் வாழைப்பூ சொம்பில இருக்கிற காப்பிய டம்ளர்ல ஊத்தி, பொரியையும் போட்டு டம்ளரை நெறச்சுக்குவாங்க. டம்ளர்ல காப்பி குறையக் குறைய சொம்பில இருந்து நெரப்பீக்குவாங்க. அப்பப்ப பொரியையும் போட்டுக்குவாங்க.

கொண்டு வந்து வச்ச காப்பியெல்லாம் தீர்ந்ததுக்கு அப்புறமும் காப்பி வேணும்போல இருந்திச்சுன்னா வீட்டுக்காரர் உள்ள பாத்து இன்னும் கொஞ்சம் காப்பித்தண்ணி கொண்டா அம்மணின்னு கொரல் குடுப்பாரு. சித்த நேரத்துல மொத மாதிரியே ரண்டு டம்ளர்ல காப்பியும், ஒரு சொம்பு நெறய காப்பியும், ஒரு தட்டத்தில பொரியும் வந்துடும். அப்பறம் என்ன, பழய மாதிரியே ரவுண்டு கட்ட வேண்டியதுதான்.

மத்தியானம் சாப்பாடு சாப்பிடற மட்டும் இப்படியேதானுங்க குடிச்சிட்டிருப்பாங்க. இதுதாங்க காப்பி குடிக்கிற முறைங்க.

21 கருத்துகள்:

  1. பொறி போட்டு காப்பி? காலையில் எழுந்ததும் உங்கள் பதிவுடன் தான் ஆரம்பித்தேன். சுடச் சுட காப்பி கிடைத்தது – நல்ல தகவலுடன்! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தெரியாத தகவல் தந்தமைக்கு நன்றி
    படங்களுடன் விளக்கமும் அருமை
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. 'காப்பி' அடிக்கறது எப்படின்னு சொன்னதுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நம்ம ஊர்ல மட்டுந்தான் இப்படி ..இப்ப அதுவும் போச்சு...

    பதிலளிநீக்கு
  5. :)

    உண்மை தான்..நல்லவர்களை தான் கடவுள் சோதிக்கிறார்..

    பதிலளிநீக்கு
  6. பொரி போட்டு காபியா? இப்பதான் கேள்விப்படறேன்.
    காபியே இது வரை குடித்ததில்லை!

    பதிலளிநீக்கு
  7. பேசாம ரெண்டு பித்தளை குண்டாளில் கொண்டுவந்து வைத்துவிட்டால் போயிற்று. எதுக்கு கால் படி அளவுள்ள டம்ளர்ங்கண்ணா ?

    பதிலளிநீக்கு
  8. இது கோவை ஸ்பெஷல் என்று முன்பு சொல்வார்கள் , இப்போதும் தொடர்கிறதா?

    பதிலளிநீக்கு
  9. I deeply feel sorrow for the tremendous loss of lives and properties lost due to the earthquake.

    Could this be the reason for Japanese Tsunami. There will always be a cause and the effect for the cause is certain.
    http://members.iinet.net.au/~rabbit/ofishing.htm

    பதிலளிநீக்கு
  10. தோழி பிரஷா said...

    //புதிய காபியாக உள்ளது.. தகவலுக்கு நன்றி//

    புதிசு இல்லைம்மா, ரொம்ப பழசு.

    நீங்க வந்ததுதான் புதுசு. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஹெ ஹே...

    எனக்கும் எங்க அப்பாவுக்கும் மிக மிக பிடித்த விஷயம் இது. சில சமயம் மிக்ஸரும் சேர்த்துக் கொள்வோம். பொரி மட்டுமே மூட்டை மூட்டையாக உள்ளெ தள்ளிய காலம் அது!!

    நன்றி சார் :)

    பதிலளிநீக்கு
  12. அன்னு said...
    //ஹெ ஹே...
    எனக்கும் எங்க அப்பாவுக்கும் மிக மிக பிடித்த விஷயம் இது. சில சமயம் மிக்ஸரும் சேர்த்துக் கொள்வோம். பொரி மட்டுமே மூட்டை மூட்டையாக உள்ளெ தள்ளிய காலம் அது!!
    நன்றி சார் :)//

    அப்போ என்னையாட்டம் பழமை விரும்பிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  13. காப்பிக்குடிக்க கத்துக்கொடுத்த
    டாக்டர் அய்யாவே.
    தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வாருங்கள். கருத்தினையும் பகிருங்கள்..
    http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  14. அன்புடன் மலிக்கா said...

    //காப்பிக்குடிக்க கத்துக்கொடுத்த டாக்டர் அய்யாவே.
    தாங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வாருங்கள். கருத்தினையும் பகிருங்கள்..//

    மிக்க நன்றி மலிக்கா அவர்களே. பதிவு போடுகிறேன். ஒரு வாரம் டைம் கொடுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. அமைதிச்சாரல் said...

    //மிச்சர் போட்டும் குடிக்கலாம் :-))//

    டெஸ்ட் பண்ணிப் பார்த்தனுங்க. சூபரா இருக்குதுங்க. இத்தன நாளாத் தெரியாமப் போச்சுங்களேன்னு வருத்தமாப் போச்சுங்க.

    கார்ன் ஃபிளேக், அது இதுன்னு காச செலவழிக்கிறத விட இது சிக்கனமான ஒண்ணுங்க.

    பதிலளிநீக்கு
  16. யோவ் வைத்தியரே[பிரியத்தோடு தான்]திண்ணைன்னா என்ன செம்புன்னா என்னன்னே தெரியாம காலங்கழிச்சுக்கிட்டு இருக்கோம்.இதுல பொரியக் கொண்டா அவலக் கொண்டான்னுக்கிட்டு.
    டாக்டர் இண்டர்நெட் வழியாக கம்ப்யூட்டரில் படிக்க பீஸா,பெப்சின்னு ஆரோக்கியமான பாஸ்ட் புட் பற்றி எழுதவும்.

    பதிலளிநீக்கு
  17. சேக்காளி said...
    //யோவ் வைத்தியரே[பிரியத்தோடு தான்]திண்ணைன்னா என்ன செம்புன்னா என்னன்னே தெரியாம காலங்கழிச்சுக்கிட்டு இருக்கோம்.இதுல பொரியக் கொண்டா அவலக் கொண்டான்னுக்கிட்டு.
    டாக்டர் இண்டர்நெட் வழியாக கம்ப்யூட்டரில் படிக்க பீஸா,பெப்சின்னு ஆரோக்கியமான பாஸ்ட் புட் பற்றி எழுதவும்.//

    வாய்யா சேக்காளி, ஒன்னையத்தான் இத்தன நாளா தேடிக்கிட்டு இருந்தேன்.
    McDonald போலாம் வர்றியா? செலவை நான் பாத்துக்கறேன்.

    பதிலளிநீக்கு