திங்கள், 23 டிசம்பர், 2013

இயேசுவின் கடைசி யாத்திரை


இந்த யாத்திரையைப் பற்றி அறிந்திராதவர்கள் (எம்மதத்தவராயினும்) இருக்க முடியாது. அப்போது இருந்த யூத மதத் தலைவர்கள் இயேசுவிற்கு சிலுவையில் அறையப்பட்டு மரணமடையவேண்டும் என்ற தண்டனையை வழங்கியதாக பைபிளில் எழுதப் பட்டுள்ளது. சிலுவையில் அறைவது என்றால் கைகளையும் கால்களையும் சிலுவையின் நான்கு பக்கமும் ஆணி அடித்து அந்த குற்றவாளியை தொங்க விடுவது. படம் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். (அலுவலகத்தில் ஆணி பிடுங்குவது என்பது வேறு.)

அப்போதைய மரண தண்டனை முறை இது. அவர்கள் அறையப்படும் சிலுவையை,  தண்டனை விதிக்கப்பட்ட யூத குருமார்களின் ஆலயத்திலிருந்து தண்டனை நிறைவேற்றப்படும் இடம் வரைக்கும் தண்டனை பெற்றவரே தூக்கிக் கொண்டு செல்லவேண்டும். நினைக்கவே கொடுமையாய் இருக்கிறது.

நம் தமிழ்நாட்டிலும் இத்தகைய தண்டனைகள் இருந்ததாகப் புத்தகங்கள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் "கழுவேற்றுதல்" என்ற தண்டனை இருந்திருக்கிறது. பாண்டிய மன்னன் சமணர்களைக் கழுவேற்றினான் என்று படித்திருக்கிறோம். ஆனால் அந்த தண்டனை எப்படியிருக்கும் என்று சிந்தித்தது கிடையாது.

சைனாவில் குற்றவாளிகளுக்கு ஒருவகையான தண்டனை கொடுக்கப்படும் என்று படித்திருக்கிறேன். குற்றவாளியை ஒரு மைதானத்தில் படுக்கவைத்து அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் பலமான கயிறுகள் கட்டப்படுமாம். இந்தக் கயிறுகளை திசைக்கு ஒன்றாக நான்கு திசைகளில் நான்கு வலுவான எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்குமாம். நான்கு எருதுகளை ஓட்ட நான்கு ஆட்கள் இருப்பார்களாம். அரசன் உத்திரவு கொடுத்தவுடன் ஒரே சமயத்தில் இந்த நால்வரும் அந்த எருதுகளை நான்கு திசையிலும் விரட்டுவார்களாம்.

இப்போது சிறிது கற்பனை செய்து பாருங்கள். இந்த தண்டனைகளெல்லாம் எப்படியிருக்கும்? குரூரத்தின் உச்சகட்ட தண்டனைகள் இவை. இந்த தண்டனைகளை வேடிக்கை பார்க்க அந்த நாட்களில் ஏகப்பட்ட மனிதர்கள் (?) கூடுவார்களாம்.

என்னை அழைத்துப் போன சுற்றுலா பஸ்சின் கைடு இந்த இயேசுவின் கடைசி யாத்திரையை கண்முன் கொண்டு வந்தார். இயேசு சென்றதாக க் கூறப்படும் வழியாக எங்களை (சுற்றுலா பஸ்சில் வந்தவர்களை) அழைத்துச் சென்றார். அந்த வழி ஏறக்குறைய காசியில் விஸ்வநாதர் ஆலயத்திற்கு செல்லும் வழி போல் இருக்கிறது.

அந்த வழியில் இயேசு எப்படி சென்றார், எந்தெந்த இடங்களில் கீழே விழுந்தார், யார் அவருக்கு குடிக்க நீர் கொடுத்தார்கள், எந்த சீடர் உடன் வந்தார் என்கிற விவரங்களை எல்லாம் நேரில் நடப்பது பொல் கூறிக்கொண்டே வந்தார். இத்தகைய கைடுகள் இதே வேலையாக இருப்பதால் அவர்கள் வர்ணனைகள் தத்ரூபமாக இருக்கின்றன. ஏறக்குறைய நம்மை அந்தக் காலத்திற்கே கூட்டிப்போய் விடுகிறார்கள். அவர் சொல்லும் காட்சிகள் தம் கண் முன்னே நடப்பதுபோல் உணர ஆரம்பித்து விடுகிறோம்.

நானும் அவருடைய வர்ணனைகளைக் கேட்டு அந்தக் காலத்திற்கே போய்விட்டேன். மனது மிகவும் கனக்க ஆரம்பித்து விட்டது. கண்கள் பனிக்க ஆரம்பித்தன. அந்த அளவு உணர்ச்சிப் பிரவாகத்தை நான் எப்போதும் உணர்ந்ததில்லை. அதுதான் என் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

இயேசுவை சிலுவையில் அறைந்த இடம் என்று ஒரு இடம் வரையில் இந்த யாத்திரை தொடர்கிறது. அந்த இடத்தில் ஒரு சர்ச் கட்டியிருக்கிறார்கள். அந்த சர்ச் மிகவும் சிதிலமடைந்து விட்டபடியால் அதை இடித்து விட்டு அப்போது புதிதாக கட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த இடத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று கைடு சொன்னவுடன் கூட வந்திருந்த பெண்கள் கண்ணீர் சிந்தினார்கள்.

ஜெருசலேமில் கண்ணீர் விடுவதற்கு என்றே ஒரு தனி இடம் இருக்கிறது. இது யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிகவும் புனிதமான இடமாகும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாமா?


14 கருத்துகள்:

  1. படிக்கும் போதே மனம் கலங்குகிறது ஐயா
    அப்பாதையின் சில புகைப் படங்களையும்
    அடுத்தப் பதிவில் வெளியிடுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  2. அந்த 'கைடை'ப் பாராட்ட வேண்டும். கேட்பவர்கள் கண்களில் நீர் வருமளவு உரைக்கும் திறன் பெற்றுள்ளார்.

    பதிலளிநீக்கு
  3. //இத்தகைய கைடுகள் இதே வேலையாக இருப்பதால் அவர்கள் வர்ணனைகள் தத்ரூபமாக இருக்கின்றன.//

    உண்மைதான். இதுபோல் ஆக்ரா கோட்டையிலும், தாஜ்மகாலிலும், தில்லி செங்கோட்டையிலும் உள்ள வழிகாட்டிகள் முன்பொருகாலத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்கி நம்மை அந்த காலத்திற்கே அழைத்து சென்றுவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. //அவர் சொல்லும் காட்சிகள் தம் கண் முன்னே நடப்பதுபோல் உணர ஆரம்பித்து விடுகிறோம்.//
    தங்கள் இடுகையும் அதே அனுபவத்தைத் தருகின்றது ஐயா...!
    த.ம +1

    பதிலளிநீக்கு
  5. நல்ல பயணக்கட்டுரை ,வழிகாட்டிகளின் தொழில் திறமை தான்.

    பதிலளிநீக்கு
  6. எங்களையும் புனித இடத்திற்கு அழைத்துச் சென்றதுக்கு நன்றி!. ஃபோட்டோஸ் எடுத்திருந்தா அதை பதிவாய் போடலாமே!

    பதிலளிநீக்கு
  7. மனிதர்களின் வாழ்வு
    இப்போது இருக்கும் நீலை
    ஏறக் குறைய இங்கு சொர்க்கவாழ்வு வாழ்கிறோம் ....
    அறிவியல் கண்டுபிடிப்புகளும்
    வேளாண்மை சமுதாயத்தின் நவீன வீவசாயமும்
    உங்கள் மரபில் வந்த ஆசிரியர் பெரும் தகைகளும்
    நவீன இந்திய சிந்தனை மரபை உருவாக்கி
    செயல் புரிந்து ஒரு கட்டு அமைப்பை உருவாக்கி உள்ளீர்
    பழமை சார்ந்த மூட நம்பிகைகளை இயேசு ஒழித்தார்
    பிறகு அவரையும் பின்னல் வந்தவர்கள் இறைவன் ஆக்கி விட்டனர் .................எத்தனை புத்தர் இயேசு வந்தாலும் கற்பனையும் மாயையும் பொய்யும் வேறு வேறு ஒரு கொண்டு இங்கு இருக்கும் ..........அறிவியல் பார்வை ஒன்று தான் வாழ்வை நடத்த நம் முன்பு உள்ள ஒரு பாதை ...............

    பதிலளிநீக்கு
  8. தண்டனை கொடுப்பதிலும் நிறைவேற்றுவதிலும் எத்தனை விதங்கள்.? பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இயேசு வாழ்ந்த புனித பூமியல்லவா இஸ்ரேல்..!

    ஜெருசலேமில் கண்ணீர் விடுவதற்கு என்றே ஒரு தனி இடம் இருக்கிறது.

    வியக்கவைக்கும் தகவல்கள்..!

    பதிலளிநீக்கு
  10. நிஜமாகவே மனம் கனக்கிறது .
    நெகிழ வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  11. தண்டனை தருவதில் எத்தனை எத்தனை வகைகள்..... மனது காயப் பட்டது......

    பதிலளிநீக்கு