திங்கள், 10 பிப்ரவரி, 2014

பேங்க் கணக்குகள் - பாகம் 3


பேங்குகளில் உங்கள் கணக்கில் பணம் கட்டுவது எப்படி என்று போன பதிவில் பார்த்தோம். அதில் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதாவது பேங்கில் கட்டுவதற்கு உங்களிடம் பணம் இருக்கவேண்டும்.

பணம் இல்லாமலும் பேங்குகளில் பணம் கட்டுவதற்கும் வழி முறைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு நீங்கள் முதலில் ஒரு எம்.பி. ஆகவேண்டும். அப்போது பேங்கில் உங்கள் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம். பணம் இல்லாமலும் உங்கள் கணக்கில் பணம் போடலாம். (திரு.நடனசபாபதி கவனிக்கவும்)

ஆகவே வரும் பார்லிமென்ட் தேர்தலில் நின்று எப்படியாவது ஒரு எம்.பி. ஆகிவிடுங்கள். அப்புறம் நீங்கள் முடி சூடா மன்னனேதான்.

நிற்க, இப்போது உங்கள் கணக்கில் பணம் போடுவது பற்றி தொடர்வோம். உங்களுக்கு வர வேண்டிய பணம் சில சமயம் காசோலை மூலமாகவும் வரலாம். அதுதாங்க செக் மூலமாகவும் வரலாம். செக்கில் இரண்டு வகை உண்டு. கிராஸ் செய்தது அல்லது கிராஸ் செய்யாதது.

கிராஸ் செய்யாத செக்குகளை அதன் பின்புறம் உங்கள் கையெழுத்து மற்றும் போன் நெம்பர் எழுதி, அது எந்த பேங்க் செக்கோ அந்த பேங்கில் போய் கொடுத்தால் உங்களை நன்கு விசாரித்து விட்டு பணம் கொடுப்பார்கள். கொஞ்ச நஞ்சம் சந்தேகம் வந்தாலும் பணம் கொடுக்கமாட்டார்கள். இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. கணக்கு வைத்திருப்பவர்களின் நலன் கருதி இதில் ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஏதாவது தவறு நேர்ந்து விடக்கூடாதல்லவா.

கிராஸ் செய்வதில் இரண்டு வகை உண்டு.

1. சாதாரண கிராஸ் - இந்த வகை செக்குகளை ஏதாவது ஒரு அக்கவுன்ட்டில் (உங்களுடையதாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை) போட்டு பணம் பண்ணிக்கொள்ளலாம்.


2. "அக்கவுன்ட் பேயீ" கிராஸ் - இவ்வகை செக்குகளை செக் யார் பெயரில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவருடைய அக்கவுன்ட்டில்தான் செலுத்த முடியும்.


செக்குகளை அக்கவுன்ட்டில் போடுவதற்கும் செலான் பூர்த்தி செய்யவேண்டும். ரொக்கப் பணம் கட்டுவதற்கு உபயோகிக்கும் அதே செலான்தான். விவரங்களை தவறு இல்லாமல் பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கணக்கு எண் மாறிவிட்டால் பணம் வேறு ஒருவர் கணக்கிற்கு போய்விடும். அப்புறம் அதை மீட்பது சிரமம்.

செலான் படிவத்தைப் பூர்த்தி செய்து அதன் கௌன்டர்பாயிலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அந்த படிவத்துடன் உங்கள் செக்கை ஒரு குண்டூசி மூலம் இணைத்து பேங்கில் உள்ள ஒரு பெட்டியில் போடவேண்டும். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் - செக் மேலேயும் செலான் படிவம் கீழேயும் இருக்கவேண்டும். குண்டூசியால் மட்டுமே இணைக்கவேண்டும். ஸ்டேப்ளர் பின்னால் இணைக்கக் கூடாது.

இப்படி செக்கை பேங்கில் போடுவதற்கு cheque presentation  என்று சொல்வார்கள்.
செக்கைப் போட்டு மூன்றாவது நாள் உங்கள் கணக்கில் பணம் சேர்ந்து விடும். அப்படி சேர்ந்து விட்டதா என்று சரி பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் சில சமயம் உங்களுக்கு செக் கொடுத்தவர் கணக்கில் போதிய பணம் இல்லாவிட்டால் செக் திரும்பிவிடும். அப்படி செக் திரும்பி விட்டால் உங்களுக்கு அபராதம் போடுவார்கள். ஒவ்வொரு பேங்கிலும் ஒவ்வொரு தொகை அபராதமாகப் போடுவார்கள். இது 300 ரூபாய் வரை போகலாம்.

இந்த மாதிரி கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது என்பது வியாபாரத்தில் ஒரு முக்கியமான அம்சம். வியாபாரிகளினால் சர்வ சாதாரணமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறை. பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும்போது எந்த மனச்சாட்சி உறுத்தலும் இல்லாமல் செக் கொடுத்து விடுவார்கள். கொஞ்ச நஞ்சம் மனச்சாட்சி பாக்கி உள்ளவர்கள், செக்கை வாங்கின ஆள் போன ஐந்தாவது நிமிடத்தில் அந்த கம்பெனிக்கு போன் பண்ணி, இப்போது உங்கள் ஆளிடம் ஒரு செக் கொடுத்திருக்கிறேன், அதை நான் சொன்ன பிறகு பேங்கில் போடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.

மனச்சாட்சியை சுத்தமாக துடைத்து வைத்திருப்பவர்கள் இதையும் சொல்ல மாட்டார்கள். அந்த செக் பேங்கிற்குப் போய் பணம் இல்லாமல் திரும்பி விட்ட பிறகு, அந்தப் பார்ட்டி கூப்பிட்டு கேட்டால் இவர்கள் ஏதாவதொரு நொண்டி சமாதானம் சொல்லுவார்கள். நீங்கள் அந்தச் செக்கை திரும்பவும் போடுங்கள், பணம் வந்து விடும் என்பார்கள். இப்படியே இந்த விளையாட்டு தொடரும்.

தன் கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது இன்றைய சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம். அப்படி செக் கொடுத்தவரை ஜெயில் வரைக்கும் கொண்டு போக சட்டத்தில் வழி இருக்கிறது. ஆனால் அது எல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கும் சமாச்சாரம். சாதாரண மனிதனுக்கு உதவாது. ஆகவே உங்களுக்கு யாராவது செக் கொடுத்தால் அந்த நபர் நம்பிக்கைக்கு உகந்தவரா என்று ஆராய்ந்து அந்த செக்கை வாங்கவும்.

பேங்க் டிராப்ட் என்று ஒரு முறை இருக்கிறது. இது 99.9 சதம் நம்பிக்கையானது. இது ஒருவர் பேங்கில் பணம் கட்டி இன்னொருவர் பெயருக்கு வாங்குவது. பேங்க் டிராப்ட் ஏறக்குறைய செக் மாதிரிதான். ஆனால் இதற்கு பேங்க் கேரண்டி உண்டு. பணம் கண்டிப்பாய் வந்து விடும் என்று நம்பலாம்.

ஏன் 0.1 சதவிகிதம் தொங்கல் வைத்திருக்கிறேன் என்றால் பேங்க் டிராப்டிலும் பம்மாத்து வேலை செய்யக்கூடிய கில்லாடிகள் இருக்கிறார்கள். 1000 ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் வாங்கி அதை கோடி ரூபாய்க்கு மாற்றக்கூடிய ஜகஜ்ஜால மந்திரவாதிகள் நம்ம ஊரில் உண்டு. ஆனால் இப்போது இன்டர்நெட் வசதிகள் முன்னேறிவிட்டபடியால் இத்தகைய புரட்டர்களுக்கு கஷ்ட காலமாய் இருக்கிறது.

இந்த பேங்க் டிராப்ட் பொதுவாக வெளியூர்களுக்கு அனுப்பும்போதுதான் தேவைப்படும். உள்ளூரிலேயே செல்லுபடியாக வேண்டியதாயிருந்தால் அதற்கு பேங்கர்ஸ் செக் என்று ஒன்று நடைமுறையில் இருக்கிறது. இரண்டும் ஏறக்குறைய ஒன்றேதான். இரண்டுக்கும் பேங்க் கமிஷன் வாங்குவார்கள்.

பேங்க் முறை மிகவும் சௌகரியமானதுதான். ஆனால் அது இரண்டு பக்கமும் தீட்டப்பட்ட கத்தி போன்றது. ஏமாந்தால் உங்களையும் வெட்டிவிடும்.

உங்கள் கணக்கில் பணம் போட இன்னும் சில வழி முறைகள் இருக்கின்றன. அடுத்த பதிவில் பார்ப்போம்.

27 கருத்துகள்:

  1. செக் திரும்பி விட்டால் கலெக்ஷனுக்கு போட்டவர்களுக்கு அபராதம் போடுவார்கள்.
    இதுவரை அறியாத செய்தி ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலெக்ஷ்னுக்கு போட்டவர்களுக்கும் செக் கொடுத்தவர்களுக்கும் ஆக இரண்டு பேர்களுக்கும் அபராதம் உண்டு. பேங்குகள் எப்படியெல்லாம் வருமானம் சேர்த்துகிறார்கள் என்று புரிந்து கொண்டீர்கள் அல்லவா?

      இதெல்லாம் சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டவை.

      நீக்கு
    2. வங்கியில் நமது கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம் என்ற இரகசியத்தை தெரிந்துகொண்டேன் அய்யா. நன்றி! ஆனால் அப்படி பணம் இல்லாதபோது பணம் எடுக்க அனுமதித்த அலுவலரின் கதி அதோகதிதான். அதுவும் மேலதிகாரியின் வாய்மொழி மூலம் செயல்படும் கீழ்மட்ட அதிகாரிகளை கடவுள் கூட காப்பாற்ற முடியாது என்பதை சமீபத்திய நிகழ்வுகளிலிருந்து அறியலாம்.

      // 1000 ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் வாங்கி அதை கோடி ரூபாய்க்கு மாற்றக்கூடிய ஜகஜ்ஜால மந்திரவாதிகள் நம்ம ஊரில் உண்டு.//

      சில வங்கிகளில் எண்ணால் எழுதப்பட்டிருக்கும் இடத்தில் cellophane paper ஐ ஒட்டிவிடுவார்கள். அதை எடுத்தால் அந்த இடம் உரிந்து வந்துவிடும். அதில் திரும்ப எழுதமுடியாது. அதனால் யாரும் தங்கள் விருப்பம்போல் தொகையை மாற்ற முடியாது.

      நீக்கு
    3. ஜனங்கள் இப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்த பிறகே இந்த செல்லோடேப் ஒட்டும் முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    4. இதிலும் ஏதாவது வம்பு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் தற்போது செக்கில் எந்த வித அடித்தல் திருத்தலும் இருக்ககூடாது என்கிறார்கள். முன்பெல்லாம் திருத்தி எழுதி பக்கத்திலேயே நாம் கையெழுத்து போட்டு விட்டால் போதும். ஆனால் இப்போதெல்லாம் அதை ஒத்துக்கொள்வதில்லை.
      திருட்டு அதிகமாக அதிகமாக அதை தடுக்கும் முறைகளும் கண்டுபிடிக்கபடுகின்றன. ஆனால் அவை இந்த மாதிரி சில வேலைகளில் நடைமுறை சிக்கல்களில் சென்று விட்டு விடுகிறது.

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  2. //பேங்குகளில் உங்கள் கணக்கில் பணம் கட்டுவது எப்படி என்று போன பதிவில் பார்த்தோம். அதில் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதாவது பேங்கில் கட்டுவதற்கு உங்களிடம் பணம் இருக்கவேண்டும்.//
    இதுதான் கந்தசாமி சார் பஞ்ச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க அய்யாவா கொக்கா?

      எந்தவொரு நிகழ்ச்சியை பற்றி பதிவிட்டாலும் அதில் ஒரு மெல்லிய நகைச்சுவை கூடவே இழையோடும். அது ஒரு சிலருக்கே வரும் அபூர்வ கலை. வாழ்க அய்யா அவர்கள்.

      சேலம் குரு

      நீக்கு
  3. ந்டைமுறை விவரங்களை விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  4. ஆரம்பத்திலே உங்களுக்கே உரித்தான நகைச்சுவையோடு... ஹா... ஹா... நீங்கள் சொன்ன விளையாட்டால் அதிகம் நொந்து போயிருக்கிறேன்... அந்தளவு சுத்தமாக துடைத்து வைத்திருப்பவர்கள் அதிகம் பேர்... மனச்சாட்சி என்பதே இல்லாமல் என்று கூட சொல்லலாம்...!

    பதிலளிநீக்கு
  5. //அதாவது பேங்கில் கட்டுவதற்கு உங்களிடம் பணம் இருக்கவேண்டும்.//

    அருமையான வார்த்தைகள்
    என் குழந்தை பள்ளியில் LKG தான். கொள்ளைக்கூடம் சாரி தப்பு தப்பு பள்ளிக்கூடம் சேர்ப்பதற்காக நன்கொடை என்ற பெயரில் கேட்ட பணத்தை புரட்ட சிறிது நாட்களாயிற்று. அதற்குள் என் மகள் தன் நண்பர்களிடம் பேசி எனக்கு ஒரு ஐடியா சொன்னாள் பாருங்கள். அவள் நண்பியோட அப்பா வங்கியில் சென்று பணம் எடுத்து வந்தாராம். அதுபோல நீயும் பொய் எடுத்து வர வேண்டியதுதானே என்று.
    வங்கியில் இருந்து எடுப்பதற்கு நமது அக்கௌண்டில் முன்பாகவே நாம் பணம் போட்டிருக்கவேண்டும் என்று தெரியவில்லை.
    இன்றும் அதை சொல்லி சொல்லி சிரிப்போம்

    உங்கள் வார்த்தைகளை படித்தவுடன் எனக்கு எனது மகள் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்து விட்டது. மீண்டும் சிரித்தோம்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிகூடங்களை கொள்ளைகூடங்கள் என்று சொல்வதை நான் முழுமையாக மறுக்கிறேன்.
      கொள்ளையர்கள் பணம் இருக்கும் இடத்தில்தான் கொள்ளை அடிப்பார்கள்.
      பள்ளிகூடங்களோ பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் பணம் கட்டித்தான் ஆகவேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்
      யார் நல்லவர் என்று நீங்களே முடிவு சித்து கொள்ளலாம்

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  6. //ஆனால் அதற்கு நீங்கள் முதலில் ஒரு எம்.பி. ஆகவேண்டும். //

    ரொம்ப சாதாரமாக சொல்லி விட்டீர்கள். ஒரு எம்.பி. ஆகவேண்டுமென்றால் இன்றைய நிலையில் மிக மிக குறைந்த பட்சம் 20 கோடி வேண்டும். சீட் வாங்கவே கட்சிக்கு 5 கோடி கட்ட வேண்டும். பிறகு தேர்தல் செலவுக்கு 10-15 கோடிக்கு வசதி இருக்கிறது என்று ப்ரூப் காட்டவேண்டும். பிறகுதான் ஜெயிப்பதெல்லாம். அதனால் தான் ஜெயித்தபிறகு அடுத்த ஐந்து வருடங்களில் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
    எனவே அரசியல்வாதியின் மகனாகவோ/மகளாகவோ பினாமியாகவோ இருந்தால்தான் எம்.பி. ஆகமுடியும்.

    நேர்மையான ஆளாக இருந்தால் அந்த 20 கோடியை வங்கியில் போட்டுவிட்டு வட்டி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம்
    வருகிற வட்டியில் 1/3 பங்கை வருமான வரி அதிகாரிகள் பிடுங்கி கொள்வார்கள் என்பது வேறு விஷயம்.

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  7. (திரு.நடனசபாபதி கவனிக்கவும்)

    உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு ஹாட்ஸ் ஆப்.
    திரு நடனசபாபதி அவர்களிடம் 20 கோடி இருந்தால் எம்.பி. சீட் கேட்கலாம். அய்யா அவர்களின் வோட்டும் எனது வோட்டும் கண்டிப்பாக உண்டு. நமக்கு தெரிந்த ஆள் ஒருவர் எம்.பி. யாக இருந்தால் நாமும் நாலு காரியத்தை சாதித்துக்கொள்ளலாம் இல்லையா

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பேச்சுக்குக்காவது "அப்படிப்பட்ட எம்.பி.க்கள் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் எல்லோரும் 47A வில்தான் ஓட்டோ போடுவோம்" என்று ஒருவராவது சொல்வார்கள் என்று பார்த்தால்
      ஹ்ஹும் நினைப்புத்தான் பொழப்பை கெடுக்குது.
      நானும் போய் அந்த எம்.பி.யை பார்த்து ஏதாவது நடத்திகொள்கிறேன். என்ன செய்வது நம்ம பொழப்பு நடக்கனுமில்லையா

      சேலம் குரு

      நீக்கு
    2. என்னைப் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்க பார்க்கும் திருச்சி அஞ்சு அவர்களுக்கு நன்றி. என்னிடம் 20 கோடி ரூபாய்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அதைக் கொடுத்துவிட்டு என்னைப்போன்றோர் தெருக்கோடியில் நிற்கவேண்டியதுதான்!

      நீக்கு
  8. // செக் மேலேயும் செலான் படிவம் கீழேயும் இருக்கவேண்டும். குண்டூசியால் மட்டுமே இணைக்கவேண்டும் //

    முக்கியமாக பின்பற்றப்படவேண்டிய ஒன்று.
    இல்லையென்றால் அந்த கிளார்க் நம்மை பார்க்கும் பார்வை இருக்கிறதே. நம்மை முறைத்துகொண்டே அந்த குண்டூசியை உருவி செக்கையும் செலான் படிவத்தையும் சரியாக வைத்து குண்டூசியால் குத்துவார். "பணம் மட்டும் போடா தெரிகிறது இந்த சின்ன வேலை உருப்படியாக செய்ய தெரியவில்லையே உன்னையெல்லாம் இந்த குண்டூசியாலாயே குத்தினால் என்ன" என்பது அவர் பார்வையில் நன்கு தெரியும். ஞாபகம் வைத்துக்கொண்டு சரியாக மிகசரியாக அடுத்த தடவையும் தப்பாகத்தான் குத்துவோம்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் சைமன் பிராய்ட் சொல்லும் மனோதத்துவம்.
      ஒரு காரியத்தை தப்பாக செய்யும் போது, அடுத்த தடவை அதை சரியாக செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவாகும், ஆனால் நிறைய நேரம் அந்த தப்பான காரியத்தையே பார்த்துகொண்டிருந்ததால் மனதில் அந்த தப்பான முறைதான் படிந்திருக்கும். இதை மாற்ற நிறைய முயற்சி செய்ய வேண்டும்.

      இன்னொரு விளக்கம்.
      நம்மை குண்டூசியால் குத்த நினைத்த அந்த கிளார்க்கை பழி வாங்க நினைக்கும் நமது ஆழ் மனத்து ஆசைதான் அப்படி மீண்டும் தப்பு செய வைக்கிறது. உன் வேலை அதுதானே குண்டூசியை எடுத்து சரியாக வைத்து மீண்டும் குத்து என்று நம் மனது சொல்லும். அந்த கிளார்க் செய்வதை பார்த்து உள்மனது குதூகலிக்கும். இதுதான் மனிதமனம். இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

      இதே அந்த கிளார்க் பணிவாக 'சார் குண்டூசி தப்பாக குத்தி விட்டீர்கள். நான் மாற்றிகொள்கிறேன். அடுத்த தடவை பாத்து கொள்ளுங்கள்' என்று மட்டும் சொல்லட்டும். அந்த சார் ஆயுசுக்கும் தப்பாக குத்த மாட்டார்.

      சேலம் குரு

      நீக்கு
    2. வியாபாரிகளை விடுங்கள். அவர்கள் பிசினஸ் செய்ய வந்தவர்கள். பணம் சிறிது போட்டு பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள். ஆனால் சேவை எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட எந்த வங்கிகளின் ஊழியர்கள் செய்யும் ஸ்டிரைக்குகள் போது மக்களை எந்த அளவு பாதிக்கும் என்று கூட தெரியாமல் (அல்லது தெரிந்தேதானோ?) இருக்கிறார்களே. நேற்று விடுமுறை. இன்றும் நாளையும் வங்கிகள் ஸ்டிரைக். இது நியாயம்தானா? வங்கி ஊழியர்கள் தங்கள் மனசாட்சியை கேட்டுகொள்ளட்டும்.

      சேலம் குரு

      நீக்கு
  9. //கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுப்பது என்பது வியாபாரத்தில் ஒரு முக்கியமான அம்சம்.//

    ஆனால் ரொம்ப ரொம்ப தப்பான அணுகுமுறை என்பது எனது கருத்து. நாணயம் என்பது இங்கு இல்லாமல் போய்விட்டதல்லவா.
    வியாபாரத்தில் நீண்ட நாள் நம்பிக்கை, தொடர்புகள் வேண்டுமென்றால் நாணயம் மிக மிக முக்கியம். ரொம்ப வளர்ந்த ஆளாக இருந்தால், பாதிக்கப்பட்டவர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார். அவருக்கு அடுத்த பிசினஸ் அவரோடு வேண்டுமே ஆனாலும் மனதளவில் பாதிக்கப்படுவார்.

    சேலம் குருப்ரியா

    பதிலளிநீக்கு
  10. //கொஞ்ச நஞ்சம் மனச்சாட்சி பாக்கி உள்ளவர்கள், செக்கை வாங்கின ஆள் போன ஐந்தாவது நிமிடத்தில் அந்த கம்பெனிக்கு போன் பண்ணி, இப்போது உங்கள் ஆளிடம் ஒரு செக் கொடுத்திருக்கிறேன், அதை நான் சொன்ன பிறகு பேங்கில் போடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள்.//

    கொஞ்ச நஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் இன்னமும் பிசினசில் இருக்கிறார்களா என்ன? அப்படி இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இன்றைய நிலைமை எப்படி யாரை ஏமாற்றி சுலபமாக பணம் செய்யலாம் என்ற நிலை வேரூன்றி விட்டது. செக் கொடுத்த நேரத்துக்கும் வங்கியில் போட சொல்லி சொல்லும் நேரத்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் அந்த பணத்தை வைத்து ஆயிரம் விளையாட்டு விளையாடி விடுவார்கள் இந்த வியாபாரிகள்.

    சேலம் குரு





    பதிலளிநீக்கு
  11. //அது எல்லாம் வம்பை விலை கொடுத்து வாங்கும் சமாச்சாரம். சாதாரண மனிதனுக்கு உதவாது.//

    நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள்.
    இந்த நாட்டின் சட்டங்கள் எல்லாமே சாதாரண மக்களுக்கு உடனடியாக பயன் அளிக்காத வகையில்தான் உள்ளன என்பதற்கு இந்த அனுபவ வார்த்தைகள் ஒரு நல்ல உதாரணம்.

    சேலம் குரு ப்ரியா

    பதிலளிநீக்கு
  12. அக்கவுண்ட் டிரான்ஸ்ஃபர் ஒன்று செய்ய சென்ற வாரம் கொஞ்ச நேரம் நான் லோல்பட்டென்!

    பதிலளிநீக்கு
  13. படிக்கிறேன் பல விஷயங்கள் அறிகிறேன்

    பதிலளிநீக்கு
  14. பல விஷயங்களைச் சொல்லும் நல்ல பகிர்வு...
    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. ஏனுங்கோ கவுண்டரே வங்கியில் பணம் போடுவது பற்றி சொல்வதென்னவோ இந்திய வங்கிகள் பற்றி. படம் மட்டும் எதற்கு பேங்க் ஆப் அமெரிக்கா?
    அங்குதான் எல்லாம் நன்றாக இருக்குமே.
    நம்ம ஊர் வந்கிகளில்தானே எல்லா பிரச்சனையும்.
    சரி சரி புரிகிறது. படத்திலாவது ஒரு நல்ல வங்கியை காட்டலாம் என்ற எண்ணம்தானே.
    கவுண்டரின் மனதை புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. உமது பார்யாள் எப்படி? டக்கென்று பிடித்து விடுவார்களா? அல்லது எங்களை மாதிரி கொஞ்சம் லேட்டுதானா?

    பதிலளிநீக்கு
  16. அடுத்த பதிவுக்கு ஏன் இவ்வளவு தாமதம்?
    வங்கிஎன்றாலே தாமதம்தான் என்கிறீர்களா?
    அதுவும் சரிதான்.
    Tongue in cheek என்பது மாதிரி வங்கிகளை பற்றி சொல்லும்போது தாமதம் நம்மை அறியாமலே வந்து விடுகிறது.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணத்தை சென்ன பிறகு என்னை தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்ற உறுதி அளித்தால் காரணத்தை சொல்லுகிறேன்.

      நீக்கு