திங்கள், 24 பிப்ரவரி, 2014

உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி? - பாகம் 5


உங்கள் கணக்கிலிருந்துதான் நீங்கள் பணம் எடுக்க வேண்டும்.  அடுத்தவர் கணக்கிலிருந்து நீங்கள் பணம் எடுக்கக் கூடாது. அது தப்பு. சாமி கண்ணைக் குத்திடும்.

பேங்கில் நீங்கள் தொடங்கியிருக்கும் சேமிப்புக் கணக்கு ஒரு வசதிதானே தவிர அது பணங்காய்ச்சி மரமல்ல. கையில் பணம் அதிகமாக இருந்தால் வீண் செலவு செய்வோம். அதை ஓரளவு கட்டுப்படுத்த சேமிப்புக் கணக்குகள் உதவும். ஆனால் சேமிக்கவேண்டும் என்ற அடிப்படை உந்துதல் இல்லாவிட்டால் சேமிப்புக் கணக்கினால் பயன் ஏதுமில்லை.

ஒருவனுடைய மாத வருமானத்தில் குறைந்தது பத்து சதம் சேமிக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பணம் தேவைப்படும்போது கை கொடுக்கும். இப்போது பல தொழிற்சாலைகள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வங்கிக் கணக்கிலேயே செலுத்துகின்றனர். இது அவர்களின் சேமிப்பு வழக்கத்தை ஊக்கப்படுத்த உதவும். ஆனால் பெரும்பாலானோர் இந்த வசதியை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்.

இப்படி சேர்த்த அல்லது சேர்க்கப்பட்ட ஊதியத் தொகை அல்லது சேமிப்புத் தொகையை எப்படி எடுப்பது? பேங்கில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இது பற்றி நன்கு அறிந்திருப்பது அவசியம்.

1. சாதாரண முறை:

பேங்கில் போடப்படும் தங்கள் சம்பளத்தை பேங்கில் இருந்து எடுப்பதை மட்டும் செய்யும் நபர்களுக்கு இந்த முறைதான் உகந்தது. அதற்கு பேங்கில் கிடைக்கும் "வித்டிராயல் ஸ்லிப்" எனப்படும் பணம் எடுக்கும் படிவத்தை உபயோகப்படுத்த வேண்டும். இது மிகவும் எளிமையான படிவம். ஆனால் இதை பூர்த்தி செய்யக்கூடத் தெரியாதவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்றே சில பேங்குகளில் ஒரு ஊழியரை நியமித்திருப்பார்கள். அவர்களிடம் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்து அல்லது கைநாட்டு வைத்து கவுன்டரில் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்தப்படிவத்துடன் பேங்க் பாஸ்புக்கையும் அவசியம் கொடுக்கவேண்டும். பாஸ்புக்கில் ஒட்டப்பட்டுள்ள புகைப் படத்துடன் உங்கள் உருவத்தை ஒப்பிட்டுப் பார்த்து பிறகே பணம் கொடுப்பார்க்ள.

இந்தப் படிவத்தின் மூலம் பணம் எடுக்க யார் கணக்கு வைத்திருக்கிறார்களோ அவர்களேதான் பேங்கிற்கு நேரில் செல்லவேண்டும். அடுத்தவர் இந்த படிவத்தின் மூலம் பணம் எடுக்க முடியாது. ஒரு விதி விலக்கு. பேங்கில் பணி புரிபவர்கள் யாராவது நேர்மையற்றவர்களாக இருந்து விட்டால், சில சமயம் நீண்ட காலமாக பணப் பரிவர்த்தனை நடக்காத கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவது உண்டு. ஆனால் இது மிகவும் அபூர்வம். ஆனாலும் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை நீண்ட காலம் பரிவர்த்தனை இல்லாமல் வைப்பது கூடாது. அப்படி வைத்திருந்தால் பல பேங்குகள் அபராதம் கூட விதிக்கிறார்கள்.

2. செக் மூலம் பணம் எடுப்பது.

பேங்கில் கணக்கு ஆரம்பிக்கும்போதே செக் புக் வேண்டுமென்றால் கொடுப்பார்கள். ஆனால் இத்தகைய கணக்குகளில் குறைந்த இருப்புத் தொகை கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அதுவும் தவிர ஒரு 10 செக் கொண்ட ஒரு செக் புத்தகத்திற்கு ஏறக்குறைய 30 ரூபாய் பிடித்துக்கொள்வார்கள்.

அந்தக் காலத்தில் அதாவது நான் இளைஞனாக இருந்தபோது ஒரு வெள்ளைக் காகிதத்தில் "இந்தக் காகிதத்தைக் கொண்டு வரும் நபருக்கு பத்தாயிரம் ரூபாய் என்னுடைய கணக்கில் இருந்து கொடுக்கவும் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தனுப்பினால் பணம் கொடுத்து விடுவார்கள். அது மக்கள் நாணயமாகவும் அரசு நேர்மையாகவும் இருந்து மாதம் மும்மாரி பெய்த காலம்.

இப்போது செக்குகள் மிகவும் முன்னேற்றமடைந்து "சிடிஎஸ்" செக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அனைத்து பேங்க் செக்குகளும் ஒரே மாதிரி சைஸ், மற்றும் விவரங்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். இந்த வகை செக்குகளில் எந்த விதமான அடித்தல்களும் திருத்தல்களும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் செக் பாஸ் ஆகாது. உங்களுக்கு 100 ரூபார் தண்டம். நீங்கள் செக் கொடுத்தவருக்கும் 100 ரூபாய் தண்டம். தவிர செக்கின் விலை 3 ரூபாயும் தண்டம்.

செக்குகள் மூலம் நீங்கள் அடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கலாம். செக் எழுதுவது என்பது ஒரு கலை. இதை நன்றாக கற்றுக்கொண்டுதான் செக்கை உபயோகிக்க ஆரம்பிக்கவேண்டும். செக் கணக்கு உள்ளவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய சில ஜாக்கிரதைக் குறிப்புகள்.

1. செக் புஸ்தகத்தில் உங்கள் மாதிரிக் கையெழுத்தைப் போட்டு வைக்கவேண்டாம்.

2. செக் புஸ்தகம் எப்போதும் உங்கள் வசம் பூட்டுப்போட்ட பெட்டிகளில் வைத்திருக்கவேண்டும்.

3. நிரப்பப் படாத செக்குகளை எக்காரணம் கொண்டும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. (பொண்டாட்டியாயிருந்தாலும் சரி வைப்பாட்டியாயிருந்தாலும் சரி)

4. வெற்றுச் செக்கில் கையெழுத்து மட்டும் போட்டு வைக்கக் கூடாது.

5. முன்பின் தெரியாதவர்கள் பணம் கொடுத்து உங்கள் செக்கைக் கேட்டால் கொடுக்கக் கூடாது.

6. உங்கள் கணக்கு எண். கணக்கில் உள்ள இருப்புத் தொகை இவைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

இப்படியெல்லாம் இருந்தீர்களானால் உங்கள் பணத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இல்லாவிடில் யாரோ அனுபவிப்பார்கள். பட்டினத்தார் பாடலை நினைவு கொள்ளவும்.

பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைக்கும் பாவிகாள் கூடு விட்டிங்கு உயிர்தான் போனபின் யாரே அனுபவிப்பார் அந்தப் பணம்.

19 கருத்துகள்:

  1. எளிமையாகவும் உபயோகமாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு

  2. //சில சமயம் நீண்ட காலமாக பணப் பரிவர்த்தனை நடக்காத கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவது உண்டு. ஆனால் இது மிகவும் அபூர்வம்.//

    ‘வைத்தவன் மறந்துபோனால் எடுத்தவன் கொடுக்கமாட்டான்.’ என்பது பழமொழி. துரதிர்ஷ்டவசமாக இது சில இடங்களில் நடந்துகொண்டு இருக்கிறது என்பதே உண்மை.எனவே பல வங்கிகளில் கணக்கு வைத்து operate செய்யாமல் இருப்பதைவிட ஒரு வங்கியில் கணக்கு வைத்து அதை operate செய்வதே நல்லது.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் பட்டினத்தாருடையதல்ல. அது அவ்வையாரின் ‘நல்வழி’ பாட்டு. அந்த பாட்டு இதோ.

    “பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
    ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
    பாவிகாள் அந்தப் பணம்?”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
      கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
      ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
      பாவிகாள் அந்தப் பணம்?”

      புதைத்து வைத்த இடத்தை சொல்லி விட்டு கூட்டை விட்டு ஆவி பிரிந்து போனால் நாம் அனுபவிக்கவிட்டாலும் நமது சந்ததியர் அனுபவிப்பார்கள் அல்லவா?
      அப்படி புதைத்து வைத்த இடத்தை சொல்வதற்கு முன்பே கூட்டை விட்டு ஆவி பிரிந்து போய்விட்டால் நாமும் அனுபவிக்காமல் நமது சந்ததியரும் அனுபவிக்க முடியாமல் போய்விடும் என்பது உண்மைதான்.
      ஆனால் பின்னர் ஒரு காலத்தில் அந்த புதையலை எடுப்பவன் அனுபவிப்பானல்லவா? அப்போது பாட்டை சிறிது மாற்றி

      “பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
      கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
      ஆவிதான் போயின பின்பு யார் யாரோ அனுபவிப்பாரே
      பாவிகாள் அந்தப் பணம்?”

      என்று சொல்ல வேண்டியதுதான்.

      பெருமூச்சு விடுவது கேட்கிறது. புதையல் எடுத்தால் யார் இப்போது பேசாமல் இருக்கிறார்கள் உடனடியாக போட்டு கொடுத்து விடுகிறார்களே. அரசாங்க அதிகாரிகள் வந்து அள்ளிக்கொண்டு பொய் விடுகிறார்களே என்று பொருமுவது கேட்கிறது.

      சேலம் குரு

      நீக்கு
  3. பந்தியிலே அமரவைக்கும் பணத்தை
    வங்கியிலே அமர்களமாக
    வரவு செலவு வைப்பதை அருமையாக பதிவிட்டு
    தெளிவு படுத்தியதற்கு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

    //3. நிரப்பப் படாத செக்குகளை எக்காரணம் கொண்டும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. (பொண்டாட்டியாயிருந்தாலும் சரி வைப்பாட்டியாயிருந்தாலும் சரி)//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    ஆனால் ஏதோவொரு ஜோரில் கொடுக்கும்போது அது எப்படி சாத்யமாக முடியும் ? ;)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த காலத்தில் தசரதன் தன் மனைவியான கைகேயிக்கு கொடுத்த வாக்கினால் ராமாயணம் உருவானது. இன்று தன் மனைவிக்கு (அல்லது வைப்பாட்டிக்கு) இப்படி கொடுக்கும் செக்கினால் என்ன உருவாகபோகிறதோ என்று தெரியவில்லை. ஒன்று நிச்சயம். வங்கியில் இருந்து பணம் காணாமல் போகும்.

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  5. சட்டியில் இருக்க வேண்டும் . அப்போதுதான் அகப்பையில் வரும். சட்டி= பேங்க் பாலன்ஸ் அகப்பை= எடுக்கும் முறை.

    பதிலளிநீக்கு
  6. //உங்கள் கணக்கிலிருந்துதான் நீங்கள் பணம் எடுக்க வேண்டும். அடுத்தவர் கணக்கிலிருந்து நீங்கள் பணம் எடுக்கக் கூடாது. அது தப்பு. சாமி கண்ணைக் குத்திடும்.//

    நீங்கள் நம்மை போன்றே அந்த காலத்து ஆள் என்று புரிகிறது.
    அப்போதுதான் சாமி பெயரை சொல்லி நல்வழிபடுத்தினால் கேட்டுக்கொண்டார்கள். இப்போதோ 'நாய் விற்ற காசு குறைக்கவா போகிறது' என்று சொல்லிவிட்டு போய் விடுகிறார்கள்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  7. //உங்கள் கணக்கிலிருந்துதான் நீங்கள் பணம் எடுக்க வேண்டும். அடுத்தவர் கணக்கிலிருந்து நீங்கள் பணம் எடுக்கக் கூடாது. அது தப்பு. சாமி கண்ணைக் குத்திடும்.//

    அப்படியென்றால் அரசியல்வாதிகள் எல்லாம் குருடர்களாகத்தான் இருக்கவேண்டுமில்லையா?

    எல்லா கண் மருத்துவமனைகளும் நிரம்பி வழிய வேண்டுமே.
    அப்படி இல்லையே.

    எனவே நியாயத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களுக்குத்தான் சாமி கண்ணை குத்தும். மற்றவர்கள் எல்லாம் சாமிக்கு குத்திவிடுவார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம்.


    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  8. //ஆனால் சேமிக்கவேண்டும் என்ற அடிப்படை உந்துதல் இல்லாவிட்டால் சேமிப்புக் கணக்கினால் பயன் ஏதுமில்லை.//

    இது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் இந்த சேமிக்கும் பழக்கம் நமது இந்தியர்களிடையே நன்கு ஊறி போயிருக்கிறது.
    சமீபத்தில் நமது சம காலத்து பொருளாள நிபுணர் திரு குருமூர்த்தி அவர்கள் சாரநாதன் கல்லூரியில் கல்லுரி ஆண்டு விழாவில் பேசும்போது சொன்ன சில வார்த்தைகள்.

    90களில் இந்தியர்கள் சேமிப்பது 19% இருந்த போது, வளர்ச்சி விகிதம் 3%-4% தான் இருந்தது. அன்றைய நிதி அமைச்சர் திரு மன்மோகன்சிங் அமெரிக்காவின் பெரிய பொருளாதார நிபுணராக இருந்த அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவரை அழைத்து வளர்ச்சி விகிதம் அதிகரிக்க ஆலோசனைகளை கேட்டாராம். அவர் சொன்னது. இந்தியர்கள் சேமிக்காமல் செலவழிக்க வேண்டும். 19% சேமிப்பு 9% ஆகா வேண்டும் செலவழிக்க செலவழிக்க பண புழக்கம் அதிகமாகும். பொருள்களின் தேவை அதிகமாகும். தானாக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அதற்கு என்ன வழி என்று கேட்கும்போது அந்நிய நாட்டு பொருட்களை கொண்டு வர வேண்டும் என்று ஒரு ஆலோசனை கூறப்பட்டது. அதன் விளைவுதான் தாராள கொள்கை.
    ஆனால் 2001 இல் சேமிப்பு குறைவதற்கு பதிலாக 38% ஆகி விட்டதாம். இதை ஆராய்ந்த போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது.
    வளர்ச்சி விகிதம் 1% அதிகரிக்க முதலீடு 4% அதிகறிக்கவேண்டுமாம். இதை புரிந்து கொண்ட அரசும் சேமிக்கும் பணத்தை முதலீடாக மாற்ற, வளர்ச்சி விகிதம் 9%-10% ஆயிற்று. ஆனால் 2006-07க்கு பிறகு ஊழல்கள் பெரிய அளவில் செய்யப்பட முதலீடுக்கு பதில் தனி நபர் கணக்கில் அந்த பணம் போய் சேர ஆரம்பிக்க வளர்ச்சி விகிதம் குறைய ஆரம்பித்தது.
    எனவே சேமிப்பு மட்டுமே பற்றாது சேமிப்பை நாள் முதலீட்டாக மாற்றும் அரசும் இருக்க வேண்டும்.

    ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் சில வாரங்களில் பொது தேர்தல் வந்து விடும். எனவே ஊழலை வரவிடாமல் நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு நம்மிடையே உள்ளது. அதை சரிவர நிறைவேற்றுவோம்.

    ஓட்டு போடுவது நம் கையில்
    சேமிப்பதும் நம் கையில்
    ஆனால் அதை நாட்டு முன்னேற்றத்துக்கு உபயோகப்படுத்துவது துரதிருஷ்டவசமாக நமது அரசியல்வாதிகளின் கையில்.

    எதிர்பார்ப்போம் நல்லதே நடக்கும் என்று
    எதிர்பார்ப்புகள் எப்போதுமே ஏமாற்றங்கள் ஆவதில்லை

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  9. //அந்தக் காலத்தில் அதாவது நான் இளைஞனாக இருந்தபோது ஒரு வெள்ளைக் காகிதத்தில் "இந்தக் காகிதத்தைக் கொண்டு வரும் நபருக்கு பத்தாயிரம் ரூபாய் என்னுடைய கணக்கில் இருந்து கொடுக்கவும் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தனுப்பினால் பணம் கொடுத்து விடுவார்கள். அது மக்கள் நாணயமாகவும் அரசு நேர்மையாகவும் இருந்து மாதம் மும்மாரி பெய்த காலம்.//

    அந்த காலம் பொற்காலம்.
    நம்பிக்கை கோலோச்சிய காலம்.
    இன்று ஒருவரை ஒருவர் பார்ப்பதே அவநம்பிக்கையோடுதான் என்று நினைத்து பார்க்கும்போது மனது அழுகிறது.
    நம்பினோர் கெடுவதில்லை என்பது ஏட்டோடு போய்விட்டது போல தோன்றுகிறது.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  10. //அப்படி இருந்தால் செக் பாஸ் ஆகாது. உங்களுக்கு 100 ரூபார் தண்டம். நீங்கள் செக் கொடுத்தவருக்கும் 100 ரூபாய் தண்டம். தவிர செக்கின் விலை 3 ரூபாயும் தண்டம்.//

    இப்படித்தான் வங்கிகள் நமது பணத்தை கொள்ளை அடிக்கின்றன.
    நமது பணத்தை போட்டுவிட்டு அதற்கு போனால் போகிறதென்று ஒரு பிசாத்து 4% வட்டி கொடுத்துவிட்டு பின்னர் இத்தகைய மறைமுக வழிகளில் பணத்தை பிடுங்கிகொள்கிறது.
    நல்லவேளையாக இப்போது செக்கில் இப்போது அடித்தல் திருத்தல் இருந்தால் பாஸ் செய்யமாட்டோம் என்று அறிவித்துவிட்டபடியால் கொடுப்பவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார். வாங்கியவரும் வங்கியில் போடுவதற்கு முன்னர் பார்த்து விடுகிறார். அடித்தல் திருத்தல் இருந்தால் இன்னொரு செக் எழுதி விடலாம். ஒரு 3 ரூபாயோடு தண்டம் போய்விட்டது.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  11. பணத்தை எடுப்பது இருக்கட்டும். பணம் சம்பாதிக்ககும் வழிகள் பலருக்குத்தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    பதிலளிநீக்கு