இந்தப் பதிவு மிகவும் தாமதாகப் பதிவிடுகிறேன். காரணம் சோம்பல் மற்றும் உடல் சோர்வு.
திருச்சி பதிவர் வை.கோபாலகிருஷ்ணனைத் தெரியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். தற்போது இவருடைய சிறுகதைகளுக்கு ஒரு விமர்சனப் போட்டி நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.
பல நாட்களாகவே இவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். குறிப்பாக இவர் வீட்டு ஜன்னலைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசைதான் அதிகம். இந்த ஜன்னலைப் பற்றி இவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். போன வாரம் திருச்சி போகவேண்டிய அவசியம் ஒன்று ஏற்பட்டது. அங்கு மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் பேரன் படிப்பை முடித்து விட்டான்.
இப்போது வாழ்க்கையில் பல புது கலாச்சாரங்கள் தோன்றியிருக்கின்றன. அவைகளில் கல்லூரிகளில் படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடத்துவதும் ஒன்று. ஆனால் இது உண்மையில் பட்டமளிப்பு விழா அல்ல. பட்டமளிப்பு விழா பல்கலைக் கழகம்தான் நடத்த முடியும். ஆனால் அது போன்ற ஒரு மாயை விழாவை இறுதி வைபவமாக கல்லூரிகள் நடத்துகின்றன. அதைப் பார்க்க மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் வருகிறார்கள்.
நானும் என் மனைவியும் இந்த விழாவிற்காக திருச்சி செல்வதென்று முடிவு எடுத்தோம். அப்போது எனக்கு எப்படியாவது "வைகோ" வை (அரசியல்வாதி வைகோ அல்ல) சந்தித்து விடுவது என்று முடிவு செய்தேன். பல விதமான பிரயாணத்திட்டங்கள் தீட்டினதில் விழா அன்று காலை காரில் சென்று விட்டு மறு நாள் திரும்புவது என்று முடிவாயிற்று.
ஆண்டார் தெரு ஆரம்பம்
இந்த திட்டத்தின் பிரகாரம் திருச்சியில் எனக்கு மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஒரு இடைவெளி கிடைத்தது. சரி, இந்த இடைவெளியில் வைகோவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை எனக்கு எப்போது வந்தாலும் சௌகரியமே என்று கூறினார்.
வைகோ வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மதுரா ஹோட்டல்
காரில் செல்வதற்கு டிரைவர் இல்லை. நானே ஓட்டிக்கொண்டு போக பயமாக இருந்தது. திருச்சி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊராக இருந்தாலும் நான் திருச்சியைப் பார்த்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். புது ரோடுகள், மேம்பாலங்கள் என்று திருச்சி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறது. ஆகவே டவுன் பஸ்சில் போய் வந்து விடுவது என்று முடிவு செய்தேன்.
இங்கு நான் ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டேன். அது கதிரவனின் கருணை. மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் கோடை காலங்களில் இருந்திருக்கிறேன். ஆனால் அது இருபது வருடங்களுக்கு முன். இப்போது எனக்கு இருபது வயது கூடியிருக்கிறது என்பது ஞாபகத்திற்கு வரவில்லை. நான் பார்க்காத திருச்சி வெய்யிலா என்ற மமதையுடன் கிளம்பி விட்டேன்.
நான் செய்த சமீப காலத் தவறு இதுதான். வெயில் தாக்கத்தில் நா வரண்டு போகிறது. நடை தள்ளாடுகிறது. எங்கே மயங்கி விழுந்து விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. பஸ்சில் போய் மெயின் கார்டு கேட்டில் இறங்கி வைகோ வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அப்போதுதான் இந்த அனுபவம். வழியில் ஒருவன் கரும்புச் சாறு விற்றுக்கொண்டிருந்தான். ஒரு கிளாஸ் ஜூஸ் வாங்கி பக்கத்தில் ஒரு கடை வாசலில் உட்கார்ந்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது.
வைகோ வசிக்கும் காம்ப்ளெக்சின் முன்புறத்தோற்றம்
பின்பு நடையைக் கட்டினேன். வைகோ வசிக்கும் வடக்கு ஆண்டார் தெரு வந்தது. இந்த இடங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயமானவைதான். ஆகவே வைகோ வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
நான் அவர் வசிக்கும் காம்ளெக்ஸ் வாசலில் நுழையும்போதே "வாங்கோ வாங்கோ" என்று ஒரு அசரீரி கேட்டது. குரல் வரும் திசை நோக்கி மேலே பார்த்தேன். வைகோ தனது இரண்டாவது தளத்தில் இருந்து என்னைப் பார்த்து விட்டு வரவேற்பு கொடுத்திருக்கிறார்.
லிப்டில் ஏறி இரண்டாவது தளத்திற்குப் போனேன். லிப்டு கதவிற்கே வந்து என்னை வரவேற்று தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். அவரது துணைவியாரும் வீட்டு வாசலிலேயே என்னை வரவற்றார்கள். வீட்டுக்குள் என்னை அவருடைய பெட்ரூம் கம் ஆபீஸ் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏசி வைத்திருக்கிறார். வெய்யிலில் வந்ததற்கு ஏசி சுகமாக இருந்தது.
வைகோ தம்பதியினர்
குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். திருச்சியில் இப்போது கடும் தண்ணீர் பஞ்சம் போலிருக்கிறது. திருச்சி வரும் வழியில் காவிரியைப் பார்த்த போது அதில் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லை. மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆயிரக் கண்க்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லுகிறார்கள். அதனால் திருமதி வைகோ எனக்கு மாம்பழ ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அம்மா எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார்கள்.
இரு "பிரபல" பதிவர்கள்
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றதற்கு மிகவும் தயங்கி ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். பிறகு பரஸ்பரம் குடும்ப க்ஷேமங்கள் குறித்து விசாரித்தோம். ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்குள் ஆறு தடவை சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்துக்கொண்டே இருந்தார்க்ள. இருபது வருடத்திற்கு முன்பாக இருந்தால் அவை அனைத்தையும் கபளீகரம் செய்திருப்பேன். இப்போது முடியவில்லை.
நான் அவரைத் தொடர்பு கொண்டபோதே எனக்கு அய்யர் விட்டு டிகிரி காப்பி வேண்டும் என்று சொல்லியிருந்தேன். திருமதி வைகோ நான் கேட்டுக்கொண்டபடி, கொஞ்ச நேரம் கழித்து கொண்டு வந்து கொடுத்தார்கள். பழைய கால முறைப்படி டவரா டம்ளரில் காப்பி வந்தது. டம்ளரைப் பார்த்து நான் பயந்தே போனேன். உண்மையிலேயே டம்ளர் ஆதி காலத்துதான். கால் லிட்டர் கொள்ளளவு கொண்டது. நான் திருமதி வைகோ அவர்களிடம் கெஞ்சி அதல் பாதியை எடுத்துக் கொள்ளச் செய்தேன். உண்மையிலேயே டிகிரி காப்பிதான்.
வைகோ வீட்டு ஜன்னலில் இருந்து தெரியும் மலைக்கோட்டை
வைகோ அவருடைய பதிவுகளில் குறிப்பிட்டபடி அவர் வீடு இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை துல்லியமாகத் தெரிகிறது. ஸ்வாமி ஊர்வலங்கள் வந்தால் வீட்டை விட்டு நகராமலேயே ஸ்வாமியைத் தரிசித்துக் கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவருடன் அளவளாவிக்கொண்டு விடை பெற்றேன். அந்த ஒரு மணி நேரமும் அவர்கள் காட்டிய அன்பையும் விருந்தோம்பலையும் என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது.
நான் அவர்களிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு நான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இந்த சந்திப்பு நான் மறக்க முடியாத சந்திப்பு. நாங்கள் பிரிந்து இரண்டு மணி நேரத்திலேயே இந்த சந்திப்பைப் பற்றி பதிவு போட்டு விட்டார். லிங்க் இதோ.
http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html
என்னால் அப்படிப்போட முடியவில்லை. அவருடைய சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் முன்னால் நான் ஒரு வாழைப்பழச்சோம்பேறி. அதனால்தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் இது ஒரு தாமதமான பதிவு என்று குறிப்பிட்டேன்.
வைகோ தம்பதியினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.