திரு GMB யைப் பார்க்க நான் செய்த முஸ்தீபுகளை போன பதிவில் எழுதியிருந்தேன். நான் புறப்படுவதற்கு முன் தினம் அவர் அனுப்பிய செய்தியில் என்னை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். நான் மிகவும் மகிழ்வுற்றேன். ஏனெனில் இப்போது பெங்களூரு பூதாகாரமாக வளர்ந்துள்ளது என்று கேள்விப்பட்டிருந்தேன். நண்பர் வீட்டிற்கு எப்படி போய்ச்சேரப் போகிறோம் என்ற கவலை மனதினுள் அரித்துக் கொண்டிருந்தது. அவர் அனுப்பிய செய்தியினால் அந்தக் கவலை மறைந்தது.
ஆனால் வேறு கவலைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. "தெனாலி" படத்தில் கமலஹாசன் சொல்லுவாரே அந்த மாதிரி கவலைகள்.
நான் போகும் ரயில் இரவு 1 மணிக்கு. நான் நேரத்தோடு ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். இல்லாவிட்டால் பஸ் கிடைக்காது. அப்படி நேரத்தோடு ஸ்டேஷன் போய்விட்டால், ரயில் வரும்போது தூங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை.
அப்படி ரயில் வரும்போது நான் விழித்திருந்து என் கம்பார்ட்மென்டில் ஏறின பிறகு என்னுடைய பெர்த் காலியாக இருக்குமா? அதில் யாராவது படுத்துக் கொண்டிருந்தால் அவருடன் வாக்குவாதம் செய்யவேண்டி வருமோ என்ற கவலை.
அப்படி நடக்காமல் பெர்த் கிடைத்த பிறகு ரயில் விபத்தில்லாமல் பெங்களூரு போய்ச்சேருமா என்ற கவலை.
டிடிஆர் உடனே வந்து டிக்கெட்டைச் செக் செய்யவில்லையானால் அவருக்காக விழித்துக்கொண்டிருக்கவேண்டுமே என்ற கவலை.
நடுவில் எங்காவது ரயில் கொள்ளைக்காரர்கள் வந்து என் உடமைகளைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை. என்ன உடமைகள்? இரண்டு செட் பழைய டிரஸ்கள். பணத்தை ஜட்டியில் இருக்கும் பாக்கெட்டில் பாலிதீன் கவரில் போட்டு பத்திரமாக வைத்து ஒரு சேப்டி பின் குத்திவிட்டு புறப்படுவதுதான் என் மாமூல் வழக்கம். ஆகவே பணத்தைப் பற்றி அதிகம் கவலை இல்லை.
பாத்ரூம் போனால் திரும்பி வருவதற்குள் என் பேக்கை யாராவது தூக்கிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற கவலை.
நடுவில் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மேல் லோகம் போய் விட்டால் என் உடலை யார், எப்படி என் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்ற கவலை.
செல்போன் சார்ஜ் தீர்ந்து போனால் என்ன செய்வது என்ற கவலை.
பெங்களூர் ஸ்டேஷனுக்கு திரு GMB வராமல் போனால் என்ன செய்வது என்ற கவலை.
இப்படிப் பலவிதமான கவலைகளுடன் ஸ்டேஷனில் தூக்கம் வராமல் உட்கார்ந்து கொண்டிருந்தபோது நான் செல்லவேண்டிய ரயில் வந்து சேர்ந்தது. என்னுடைய பெர்த் காலியாக இருந்தது. என் பேக்கையே தலையணையாக வைத்துக்கொண்டு படுத்தேன் ஏனென்றால் தூங்கும்போது பேக்கை யாரும் களவாடக் கூடாதல்லவா?
முன்பு டிடிஆர் என்று ஒரு கருப்புக்கோட்டு போட்ட ஆசாமி வந்து பயணிகளை வாதித்துக்கொண்டு இருப்பார். ஒழுங்காக டிக்கெட் ரிசர்வ் பண்ணி இருந்தாலும் அவர் வந்து நம் டிக்கெட்டை செக் பண்ணிவிட்டுப் போகும் வரையிலும் ஒரு இனம் தெரியாத பயம் மனதிற்குள் இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ரயில்வே டிபார்ட்மென்டை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் அந்த அதிகாரிகளின் மனதில் வேறூன்றி இருக்கும். அது போலத்தான் நடந்துகொள்வார்கள்.
இப்போதெல்லாம் ரயில்வே டிபார்ட்மென்டுக்கு தங்கள் பயணிகள் மேல் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது போல் இருக்கிறது. நான் சென்ற ரயிலில் ஒரு டிடிஆரையும் காணவில்லை. திரும்பி வரும்போதும் அப்படியே. என்ன ஒரு நம்பிக்கை. மக்களும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் பயணித்துக்கொண்டு இருந்தார்கள்.
ரயில் வந்தவுடன் நான் என் கேரேஜை கண்டு பிடித்து ஏறி என் சீட்டைத் தேடினேன். என் சீட் லோயர் பெர்த். மாமூலாக யாராவது அதில் படுத்துக்கொண்டு இருப்பார்கள். எழுப்பி இது என்னுடைய பெர்த் என்று சொன்னால், என்னுடையது அப்பர் பெர்த், அதில் படுத்துக்கொள்ளுங்களேன் என்று புத்திமதி கூறுவார்கள். நம்முடைய உரிமையை நிலை நாட்ட ஒரு வாக்குவாதம் நிகழ்த்த வேண்டும்.
இந்த மாதிரி வாக்குவாதம் செய்து அதில் ஜெயித்து நம் பெர்த்தை நாம் அடைந்தோமானால் வாதத்தில் வெற்றி பெற்ற எண்ணம் மட்டுமே மிஞ்சும். தூக்கம் போய்விடும். அந்த மாதிரி எதுவும் நடக்காமல் என் பெர்த் காலியாக இருந்தது. எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். பெர்த்தில் என்னுடைய பேக்கை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தேன். ஏனெனில் பேக்கை நான் தூங்கும்போது யாரும் திருடிக்கொண்டு போய்விடக்கூடாதல்லவா?
பிறகு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் பெங்களூர் போய்ச் சேர்ந்தேன். ரயிலை விட்டு இறங்கினால் பிளாட்பாரத்தில் ஒரே திருவிழாக்கூட்டம். நண்பரை எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறோம் என்ற புதுக்கவலை என்னை பிடித்துக்கொண்டது. என் நல்ல காலம் ஒரு நிமிஷத்தில் திரு.GMB என் அருகில் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டார். இருவருமாக ஸ்டேஷனுக்கு வெளியில் வந்தோம். ஆட்டோ புக் செய்யும் இடத்திற்குச் சென்று ஒரு ஆட்டோ பிடித்து அவர் வீட்டிற்கு போய் சேர்ந்தோம்.
அங்கு சென்றதிலிருந்து மாலை அவர் வீட்டை விட்டு புறப்படும் வரை நடந்தவைகளை திரு.GMB அவர்கள்
தன்னுடைய பதிவில் விவரமாக எழ்தியிருக்கிறார் அதை மறுபடியும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. அதில் நான் ஒரு கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தம்பதியினர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு என்னை உபசரித்து தங்கள் அன்பு வெள்ளத்தில் என்னை திக்குமுக்காடச் செய்து விட்டனர். இந்த அன்புக்கு நான் எப்படி எந்த ஜன்மத்தில் கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.
திருGMB தம்பதியினர்
பிற்பகலில் திரு GMB தம்பதியினர் என்னை தும்கூர் ரோட்டில் 15 கி. மீ. தூரத்திலுள்ள பகவத் கீதா மந்திருக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். பகவத் கீதை ஸ்லோகங்கள் முழுவதையும் நான்கு பாஷைகளில் அங்கு கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். நடுவில் விஷ்ணுவின் விஸ்வரூப சிலை ஒன்றும் இருக்கிறது. கீழ் தளத்தில் காயத்ரி தேவியின் சந்நிதி இருக்கிறது. கண்ணன் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள். நான் அங்கு எடுத்த சில போட்டோக்கள்.
திரு GMB எனக்கு அன்பளிப்பாக கொடுத்த ஓவியம். இது அவரே கைப்பட வரைந்தது. 65 வயதில் தஞ்சாவூர் பெயின்டிங்க் போட தானாகவே பழகி பல படங்கள் வரைந்துள்ளார்.(அதிகாலையில் போட்டோ எடுத்த போது தூக்கக் கலக்கத்தில் காமிராவின் கைப்பிடியும் போட்டோவில் சேர்ந்துவிட்டது.)
திரு GMB அவர்கள் எழுதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எனக்கு அன்பளிப்பாக கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.
16 சிறு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மணிமேகலைப்பிரசுரம் பிரசுரித்துள்ளது. நடைமுறை ழ்க்கையில் நாம் சந்திக்கும், சந்தித்தபின் அவைகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் போகும் நிகழ்வுகளை அருமையாக சிறுகதை வடிவில் தொகுத்திருக்கிறார். படித்த பின் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.
இந்த இரண்டு அன்பளிப்புகளும் ஆத்மார்த்தமாக கொடுக்கப்பட்டவை. அவைகளை பெரும் பொக்கிஷமாக கருதி பாதுகாப்பேன். என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாலையில் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்படும்போது திருமதி GMB தன் கையால் செய்த இனிப்புகள் கொண்ட ஒரு டப்பாவை என்னிடம் கொடுத்தார்கள். கோவை வந்தவுடன் அதைத் திறந்து பார்த்தேன். அருமையான பொரிவிளங்காய் உருண்டைகள். பாதிக்கு மேல் நானே சாப்பிட்டேன். மிகவும் ருசியாக இருந்தன. சர்க்கரை, நெய்யுடன் அன்பும் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பல்லவா அவை.
ஒரு இனிய நண்பருடன் ஒரு நாள் கழித்த நினைவுகள் என்றும் என் மனதில் பசுமையாகத் தங்கியிருக்கும்.