சனி, 3 மே, 2014

ஒரு வில்லங்கமான சந்தேகம்.

பாரம்பரியமாக சொல்லப்படுகின்ற அல்லது நடைமுறையில் இருப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான பெரியோர்களின் கருத்து. ஏனெனில் அவைகளில் பல உட்பொருள்கள் மறைந்திருக்கலாம். அதை நாம் அறியாமல் இருக்கலாம். ஆகவே அவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு சில சந்தேகங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றிய மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். (நம்ம அரச மரத்தைத்தான் போதி மரம் என்று புத்தர்கள் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?)

இந்த மாதிரி சந்தேகங்கள் வருவது பாவ லிஸ்டில் சேருமா  என்று நான் அறியேன். சித்திரகுப்தனை ஒரு நாள் பார்த்து இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

கீழே கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள். பார்வதி கல்யாணப்படம். பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க பரமசிவன் தானம் வாங்கிக்கொள்கிறார்.


இந்த படம் எனக்கு சமீபத்தில் வந்திருந்த ஒரு கல்யாண அழைப்பிதழில் இருந்தது. செல்போன் கேமராவினால் எடுக்கப்பட்டது. படம் அவ்வளவு துல்லியமாக வரவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு வந்த கல்யாணப் பத்திரிக்கைகளிலும் இருக்கலாம்.

இந்த தானம் கொடுப்பதைப்பற்றி ( தாரை வார்ப்பது என்றாலும் தானம் கொடுப்பது என்றாலும் ஒன்றுதான்) எனக்குத் தெரிந்த ஐதீகம் என்னவென்றால், தானம் கொடுப்பவர் கை உயர்ந்து இருக்கவேண்டும். அடுத்த படியில் அதாவது அதற்குக் கீழே தானம் கொடுக்கப்படும் பொருள் இருக்கவேண்டும். அதற்குக் கீழே தானம் வாங்குபவரின் கை இருக்கவேண்டும். சரிதானே.

இப்போது படத்திற்கு வாருங்கள். பெருமாளின் கை மேலே இருக்கிறது. அவர் கெண்டியிலிருந்து நீர் வார்க்கிறார். தானம் கொடுக்கும்போது இந்த மாதிரி நீர் வார்ப்பது அவசியம்.

மகாபாரதத்தில் குருக்ஷேத்திர யுத்தத்தில் இந்திரன் பிராமண வேடத்தில் கர்ணனை அணுகி அவனுடைய புண்ணியங்களை தானமாக கொடுக்கும்படி கேட்கிறான். அப்போது அங்கு தண்ணீர் இல்லாததால் தன் உடம்பிலிருந்து வழியும் ரத்தத்தையே வார்த்து தானம் கொடுத்ததாக கதை படித்திருப்பீர்கள்.

இப்படி பெருமாள் நீர் வார்க்கும்போது மேலே பார்வதியின் கையும் அதன் கீழே ஈஸ்வரனின் கையும் இருப்பதுதானே முறை. ஆனால் இந்த மாதிரி பல படங்களில் ஈஸ்வரன் கை மேலேயும் பார்வதியின் கை கீழேயும் இருப்பது மாதிரி காட்டப்படுகிறது. இது சரியல்ல என்பது என்னுடைய கருத்து. 

இந்தப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த நுணுக்கத்தைப் பார்த்துப் பார்த்து எனக்கு இந்தப் படங்களின் மேல் இருக்கும் மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. என் கருத்து சரிதானா என்று வாசகர்கள் சொல்லுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

14 கருத்துகள்:

  1. பெருமாள் சிவன் இருவருமே தானம் கொடுப்பது/ வாங்குவதில் கவனமில்லாமல் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல நம்மைப் பார்த்துக் கொண்டே கையை நீட்டுகிறார்கள் என்று தெரிகிறது.

    கடந்த 20 வருடங்களாக குடும்பத்துடன் போதி மர நிழலில்தான் குடியிருக்கிறோம். (எங்கள் வீட்டை ஒரு பழைய பெரிய அரச மரம் பாதி கவர் செய்திருக்கிறது!) ஏன் எங்களுக்கு ஞானம் வரவில்லை! ஆனால் ஒன்று என்னையும் அறியாமல் என் மகனுக்கு நான் ராகுல் என்று பெயரிட்டிருக்கிறேன்!!!! :)))))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  2. உங்களுடைய இந்த ஆராய்ச்சிக்கு இன்னொரு Ph.D யே கிடைக்கும்!!

    நீங்க கை கீழே/மேலே இருப்பது தவறாக போட்டுட்டங்கன்னு கவலைப் பட்டுகிட்டு இருக்கீங்க. நாட்டில நடப்பதை பார்த்தா தலை சுத்தும்.

    அப்பப்போ மனுஷனுங்களையே கடவுளாக்கி விட்டுடறானுங்க, அது தலைமுறை தலைமுறைக்கும் தொடர்ந்துகிட்டே இருக்கு. தலையில டர்பன் கட்டிக்கிட்டு ஒரு கிழவன் இருப்பான் பாருங்க, அவன் நூறு வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த சாதா மனுஷன் ஆனா இப்போ கடவுளாயிட்டான். இப்போ தலையில் புசு புசுன்னு முடி வச்சிருந்தவனை கடவுளாக்கிட்டாங்க. அடுத்து ஒருத்தன் ஆகப் போற சமயத்தில நடிகையோட "அராய்ச்சி" பண்ணிக்கிட்டு இருக்கும்போது கேமராவில மாட்டிகிட்டான். நல்ல வேலையாக ஒரு கடவுள்கிட்ட இருந்து தப்பிச்சோம்!!

    இதெல்லாம் ஒரு பக்கம்னா, புராணத்திலேயே இல்லாததையெல்லாம் சொல்லி புது கடவுளை உருவாக்கி ஏக போக வியாபாரம் நடத்துறானுங்க. வியாசர் எழுதிய புராணங்கள் எதிலும் ஒரு சாமி பெண்ணாக மாறி, அதோட இன்னொரு சாமி சேர்ந்து பிள்ளை பெத்து பக்கத்து ஸ்டேட்டில் போட்டுவிட்டு சென்றதாகவோ அதை சில நூறு ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த மன்னன் எடுத்து வளர்ப்பான் என்றோ சொல்லப் படவே இல்லை.

    எனவே இளிச்சவா பயல்கள் இருக்கும் வரை எது வேண்டுமானாலும் அரங்கேறும், உள்ளுக்குள்ளேயே புழுங்க வேண்டியது தான், ஒன்றும் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்குத் தெரியுமா, ஜெயதேவ் தாஸ், இப்போது செய்யப்படும் Ph.D. ஆராய்ச்சிகளின் பொருட்கள் மிகக் கேவலமாக இருக்கின்றன.

      நீக்கு
  3. இது குறித்து முழுமையாக தெரியவில்லை! அறிந்து பதில் சொல்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. புளுகு எப்படி இருந்தால் என்ன ?
    அங்கு patent error அல்லது latent error எதுவாக இருந்தாலும் புளுகு என்று நினைத்தால் கவலை இல்லை.

    பதிலளிநீக்கு
  5. முந்தைய பதிவிலிருந்து....

    தானத்தைப் பற்றி எழுதும் போது கர்ணனைப் பற்றி எழுதாமலிருக்க முடியுமா? அப்படி நினைக்கும் போதே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நம் கண் முன் வராமல் இருக்க முடியுமா? அந்தப் படத்தில் கர்ணன் இறக்கும் தருவாயில், அவர் செய்த தர்மம் அவரை இறக்க முடியாமல் தடுக்கும். பிறகு, அவர் செய்த தர்மமெல்லாம் கிருஷ்ணன் வந்து விவரமாக வாங்கிக் கொண்டு சென்று விடுவார். (சிறு வயதில் அந்த படத்தைப் பார்க்கும் போது கிருஷ்ணன் மீது கோப கோபமாக வரும்) ஆனால், அப்போது கூட கர்ணன், வந்திருப்பது யார் என்று தெரிந்தும், "முதியவரே. இந்த வாய்ப்பை அடைந்ததற்கு பெரும் பேறு பெற்றேன்" என்று சந்தோசமாக கூறி எல்லாவற்றையும் தாரை வார்த்து கொடுத்து விடுவார். நாமும் அவரைப் போல தானம் செய்வதை இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு என்று நினைக்க வேண்டும். கர்ணனின் கொடையைப் பற்றி ஒரு புத்தகத்தில் :

    பெரும்பாலும் தானம் செய்கிறவர்கள் கை மேலிருக்கும். வாங்குபவர்கள் கை கீழே இருக்கும். ஆனால், கர்ணன் தானம் செய்யும் போது, எல்லாவற்றையும் தனது உள்ளங்கையில் வைத்து தானம் செய்வாராம். அதாவது கர்ணனின் கை கீழிருக்கும். தானம் பெறுபவர்கள், கர்ணனின் உள்ளங்கையில் உள்ள பொருளை மேலே இருந்து எடுத்துக் கொள்வார்கள். அதாவது வாங்குபவர்கள் கை மேலிருக்கும். இதைப் பார்த்த கிருஷ்ணன், "கர்ணா! தானம் தருபவர்கள் கை மேலே தானே இருக்கும். தானம் வாங்குபவர்கள் கை கீழே தானே இருக்கும். நீ இப்படி செய்தால் உனக்கு புண்ணியம் எப்படி கிடைக்கும்?" என்ற விளக்கத்தை கேட்டார். (கிருஷ்ணனுக்கா தெரியாது... கர்ணனின் பெருமையை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்காகத் தான்!)

    கர்ணன், "கிருஷ்ணா! நான் தானம் செய்வது எனது புகழுக்காக அல்ல. நான் மடிந்த பின் கொடை வள்ளல் என்ற பெயர் வாங்குவதற்காகவும் அல்ல." என்று கூறினார். மேலும் கர்ணன் கூறியது தான் கிருஷ்ணனுக்கே திகைப்பாக இருந்தது. "கிருஷ்ணா! 'எத்தனை பிறவி எடுத்தாலும் இதைப் போல் தானம் செய்வதற்கு எனக்கு வல்லமை தா' என்று என் கைகளை கீழே வைத்து இறைவனை வேண்டுகிறேன். தானமும் செய்கிறேன். நீயே சொல்! புண்ணியம் வேண்டுபவர்கள் கை கீழே தானே இருக்க வேண்டும்!" என்றாராம்....!

    http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_12.html - இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான விளக்கம் தனபாலன். உங்களின் அந்தப் பதிவு வெளியான நேரத்தில் உங்கள் அறிமுகம் இல்லை.

      நீக்கு
  6. ஈஸ்வரனின் கைதான் மேலே இருப்பது சரி என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நான் இங்கு கலந்து கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  8. மாயவன் மருமகன் வேலவன் பெயர் உங்களுக்கு பொருத்தம்

    பதிலளிநீக்கு