திங்கள், 12 மே, 2014

கட்டைப் பேனாக்கள்

நாம் எழுத்தாணி உபயோகப்படுத்திக்கொண்டிருந்தபோது ஐரோப்பாவில் இறகுப் பேனாவை பயன்படுத்தினார்கள். பேப்பர் கண்டுபிடிக்காதபோது அவர்கள் மரப்பட்டைகளை உபயோகப்படுத்தினார்கள்.
இதிலிருந்து மாறி வந்தது தான் கட்டைப் பேனாக்கள். இவை 1960 ம் வருடத்திற்கு முன் மிகவும் பிரபலமாக இருந்தன.


இவைகளை தொட்டு எழுதும் பேனாக்கள் என்றும் கூறுவார்கள். சர்க்கார் ஆபீசுகளில் ஒவ்வொரு மேஜையிலும் தவறாது இடம் பெற்றிருக்கும்.
இந்தப் பேனாவை உபயோகித்து எழுதுவதற்கு நல்ல திறமையும் அனுபவமும் வேண்டும். அப்டிப்பட்ட அனுபவஸ்தர்கள் எழுதினால் எழுத்துக்கள் ஒரே சீராக இருக்கும். இல்லையென்றால் வரி ஆரம்பிக்கும்போது இங்க் அதிகமாகவும் வரி முடியும்போது எழுத்து மங்கலாகவும் இருக்கும்.

நான் இந்தப் பேனாக்களை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இதற்கு உபயோகிக்க இங்க் வில்லைகள் அந்தக்காலத்தில் பெட்டிக்கடைகளில் கிடைக்கும். ஒரு வில்லை காலணா (ஒன்றரை நயா பைசா) என்று ஞாபகம். காலணா என்பது நான் சிறுவனாக இருந்தபோது ஒரு கணிசமான தொகை. அதை வைத்துக்கொண்டு ஒரு இலந்தை வடகம் வாங்கலாம். ஒரு தேங்காய் பர்பி வாங்கலாம். அன்று ஒரு சிறுவன் கையில் காலணா இருந்தால் அவன் அன்று பள்ளியில் ஒரு பெரிய ஹீரோ.

இந்தப் பேனாக்கள் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்டவை. ஒரு முனையில் நிப் சொருக ஒரு அமைப்பு இருக்கும். அந்த நிப்பை சொருகி பின் மைக்கூட்டில் மையைத் தொட்டு எழுதவேண்டும். இதன் பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதுதான் பவுன்டன் பேனா என்று சொல்லப்படுபவை. இதில் இரண்டு வகை உண்டு. கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றும் வகை. இன்னொன்று தானே இங்க் நிரப்பிக்கொள்ளும் வகை.

பேனாவின் கழுத்தைத் திருகித் திறந்து இங்க் ஊற்றுவது ஒரு பெரும் யுத்தம். இங்க்கை கீழே சிந்தாமல் இங்க் ஊற்றிய சிறுவர்கள் அநேகமாக இல்லை. அப்படி செய்து " அம்மாவிடம் "கடங்காரா" பட்டம் வாங்காதவர்கள் இல்லை. இத்தகைய பேனாக்கள் கூட அன்று மேலை நாட்டிலிருந்துதான் இறக்குமதியாகிக்கொண்டிருந்தன.  பிளேக் பேர்டு, ஸ்வேன், பார்க்கர், பைலட், ஷெஃபீல்டு ஆகியவை அன்று பிபலமானவை.

இந்தியா சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் பேனா தயாரிப்பு இங்கு தொடங்கியது. இங்குகளும் தயாரிக்கப்பட்டன. "கேம்லின்" தயாரிப்புகள்தான் இன்று மார்க்கெட்டில் நிரம்பிக்கிடக்கின்றன. நடுவில் சைனாவிலிருந்து "ஹீரோ" பேனாக்கள் திருட்டுத்தனமாக வர ஆரம்பித்தன. சும்மா சொல்லக்கூடாது. அந்தப் பேனாக்கள் உண்மையிலேயே நன்றாக இருந்தன. இன்றும் நன்றாக இருக்கிறது.


அந்தக் காலத்தில் "ஹீரோ" பேனா வைத்திருப்பதுதான் பேஷனாக இருந்தது.இப்போது அதன் மவுசு பெரிதும் குறைந்து விட்டது. விதம் விதமான ஹீரோ பேனாக்கள் வாங்கி சேமித்து வைத்திருந்தேன். அதை எல்லாம் இப்போது பேரன்களுக்கு கொடுத்து விட்டேன்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பால்பாய்ன்ட் பேனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன. அவை வந்த புதிதில் அவைகளின் தரம் இன்று இருப்பதைப்போல் இருக்கவில்லை, எந்தப் புதிய கண்டு பிடிப்பு வந்தாலும் அதை எதிர்ப்பவர்கள் நம் நாட்டில் உண்டுதானே. குறிப்பாக பேங்க் ஆசாமிகள்.

செக்குகளில் பால் பாய்ன்ட் பேனாவால் கையெழுத்துப் போட்டால் செல்லாது என்றார்கள். அதற்கு அவர்க்ள கொடுத்த வியாக்யானம்தான் வேடிக்கை. பால்பாய்ன்ட் பேனாவால் எழுதும்போது கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும். அப்படி அழுத்தி செக் புக்கில் எழுதினால் கீழே இருக்கும் செக்கிலும் அந்தக் கையெழுத்தின் அடையாளம் விழுந்து விடும். அதை வைத்து யாராவது வேற்று ஆட்கள் அந்தக் கையெழுத்தை ஒரிஜினல் மாதிரி போட்டு பணத்தைக் களவாண்டு விடுவார்கள், அதனால் பால்பாய்ன்ட் பேனா உபயோகப்படுத்தக்கூடாது என்றார்கள்.

அப்படி சொன்னவர்கள் இன்று எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. பேங்குகளில் இங்க் பேனாவை மருந்துக்குக்கூட காண முடிவதில்லை. எல்லோரும் பால் பாய்ன்ட் பேனாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இன்று பால்பாய்ன்ட பேனாக்களில் எத்தனை வகை இருக்கறது என்று யாராலும் சொல்ல முடியாதென்று நினைக்கிறேன். ஒரு சமயம் பள்ளிச் சிறுவர்கள் சொல்லக்கூடும். அவர்களுக்குத்தான் லேட்டஸ்ட் சமாச்சாரங்கள் தெரியும். கடைகளில் போய் இங்க் பேனா வேண்டும் என்றால் மேலும் கீழும் பார்க்கிறார்கள்.

இப்போது கம்ப்யூட்டர் வந்து விட்டது. பேப்பரில் எழுதுவது என்பதே ஏறக்குறைய மறந்து போக ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பேனாக்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

நான் இன்னும் ஹீரோ பேனாவும் கேம்லின் இங்க்கும் வைத்திருக்கிறேன். அவைகளை அவ்வப்போது உபயோகப்படுத்தவும் செய்கிறேன்.

16 கருத்துகள்:

  1. பேனா நினைவுகள் பிரமாதம். பைலட், பார்க்கர், ஹீரோ பேனாக்கள் என்னிடமும் இருந்தன.

    இப்போதெல்லாம் பேப்பரில் வைத்து பேனாவால் எழுதும் சந்தர்ப்பம் மிகமிகக் குறைவு என்பதால், அப்படி எழுத ஆரம்பித்தால் முதல் இரண்டு எழுத்துகள் மட்டுமே ஒழுங்காய் வருகின்றன! அப்புறம் எங்கோ செல்கின்றன எழுத்துகள்!

    பதிலளிநீக்கு

  2. //எந்தப் புதிய கண்டு பிடிப்பு வந்தாலும் அதை எதிர்ப்பவர்கள் நம் நாட்டில் உண்டுதானே. குறிப்பாக பேங்க் ஆசாமிகள்.//

    ஐயா வங்கி ஆசாமிகள் எல்லாவற்றையும் எதிற்பதில்லை. நீங்கள் சொன்னதுபோல் பால்பாய்ன்ட் பேனாக்கள் வந்த புதிதில் அவைகளின் தரம் இன்று இருப்பதைப்போல் இருக்கவில்லை. அவைகளை உபயோகித்து கையொப்பமிட்டால் அதிலுள்ள மசியின் கறை பரவி (Smudge) கையொப்பமோ அல்லது எழுத்தோ உருத்தெரியாமல் போகலாம் என்பதால் அவ்வாறு சொன்னார்கள். இப்போது தரமான பேனாக்கள் வந்துவிட்டதால் அதே வங்கி ஆசாமிகள் அதை எதிர்ப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும், நடனசபாபதி. நீங்கள் ஒரு பேங்கர் என்பது அடிக்கடி மறந்து போய் விடுகிறது.

      நீக்கு
    2. பவுன்ட்டன் பேனா நிப்பில் இ ரு முனைகள் இருக்கும பாங்க்களில் கையெழுத்து சீர் பார்க்கையில் strokes எனும் ஒரு தன்மையை கவனிப்பார்கள் . அந்த stroke முறை பவுன்ட்டன் பேனா உபயோகிக்கும்போது தெளிவாக இருக்கும் .தற்போது ஜெல் இங்க் பேனாக்கள் ஏறத்தாழ அத்தகைய எழுத்துக்களை தருகின்றன. இன்றும்பவுண்
      டன் பேனா மாதிரி எழுத்துக்களை மற்ற பேனாக்கள் தருவதில்லை.
      மேலும் mont blac, sheaffer waterman போன்ற பேனாக்கள் இன்றும் ஒரு status symbol ஆக வ ல ம் வருகிங்கின்றன .

      நீக்கு
  3. மாற்றத்தை அனைவரும் எடுத்துக் கொண்டால் அதுவே காலப்போக்கில் சரியாகி விடுகிறது...

    படிக்கும் போது எழுதி எழுதிப் பார்த்து தேர்வுக்கு சென்றதுண்டு... ஒரு முறை எழுதிப் பார்த்தால் நூறு முறை படிப்பதற்கு சமம்... இன்று குழந்தைகள்...?

    கையெழுத்து போடத்தான் இப்போது பேனா உதவுகிறது நமக்கும்...!

    பதிலளிநீக்கு
  4. பேனாக்கள் பற்றி சுவாரஸ்யமான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  5. நானும் ஒரு கட்டைப் பேனா பைத்தியம். நுனியில் நிப் கொண்ட பேனா அல்ல. அதை என்னுடைய தாத்தா பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து கட்டையால் செய்யபட்ட (பிற்காலத்தலில் ப்ளாஸ்டிக்கால் செய்யபட்டன) பேனா மீது நான் கொண்டிருந்த மோகம் ஏறக்குறை ஐம்பது வயது வரையிலும் நீடித்தது. சென்னை பாரீஸ் கார்னரில் ஜெம்ஸ் காரனர் என்ற கடையில் இன்றும் இத்தகைய பேனாக்கள் கிடைக்கின்றன. அந்த காலத்தின் இனிய நினைவுகளை உங்கள் பதிவு மீண்டும் அசைபோட வைத்தது. அதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. என் அப்பாக்கிட்ட இருக்கும் ஹீரோ பேனாவை வாங்க எவ்வளவு முயற்சி செய்யனும் தெரியுங்களா!? ஒவ்வொரு பரிட்சையிலும் முதல் மார்க் எடுத்தால் ஒரு நாள் முழுக்க தருவார். மற்ற நாட்களில் தொடக்கூட விடமாட்டார்.

    பதிலளிநீக்கு
  7. //கடைகளில் போய் இங்க் பேனா வேண்டும் என்றால் மேலும் கீழும் பார்க்கிறார்கள்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ரஸித்தேன் !!

    பதிலளிநீக்கு
  8. ஐயா!
    என் இளமைக்காலத்தில் இதை வைத்தியசாலையில் வைத்தியர்கள், காரியாலயங்களில் எழுத்தர்கள் உபயோகித்து எழுதியதைக் கண்டுள்ளேன். பாடசாலை மேசை வலக்கை மேலோரத்தில் ஒரு இரண்டரை அங்குல விட்டமுள்ள துவாரம் ஒன்று இருந்தது. அவை இந்த பேனா மை புட்டிகள் சிந்தாமல் இருக்க வைக்கப்பட்டவை என எங்கள் ஆசிரியர் விளக்கினார்.
    நான் ஊற்றுப் பேனாவினால் கல்லூரியில் எழுதத் தொடங்கினேன். அப்போது பைலட் பிரபலம், எனக்கு முதல் வாங்கும் போது குயிங் மைப் போத்தல், ஒரு மைநிரப்பி, அத்துடன் ஒரு மை ஒற்றுத்தாள் இலவசம் கிடைத்தது , நல்ல ஞாபகம் உண்டு. குமிழ் முனைப் பேனா வந்த காலங்களில் அதைப் உபயோகிக்க பாடசாலைகளில் தடை இருந்தது.
    பின் அத் தடை மெள்ள மெள்ள, இப் பேனாக்களில் மலிவான விலையால் தள்ளாடி, நிறுத்தப்பட்டது.
    ஆசிரியர்களே கறுப்பு, நீலம், சிவப்பு, பச்சை ஒரே பேனாவினுள் உள்ளதை , வாங்கி அப்பியாசப் புத்தகங்களை திருத்துவதை ஆவென பார்த்து நாங்களும் வாங்கியுள்ளோம்.
    ஆனால் இன்று எழுதவே தேவையற்ற வாழ்க்கையாகிவிட்டது.
    இங்கு வங்கிக் காசோலைகள் பந்து முனைப் பேனாவால் மாத்திரம் நிரப்பவேண்டுமென வலியுறுத்துகிறார்கள்.
    அன்று மை எழுத்துகளை அழிக்க மில்ரன் என்ற திரவமும் பாவித்தோம்.
    இப் பேனா வாழ்வு மறக்கமுடியாதது.
    ஈழத்தில் நாமிருந்த வீடுகளே இல்லை, பாவித்த பேனாக்களா? ம்.
    நல்ல நினைவு மீட்டல்


    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் ஐயா ஏப்ரல் 1 க்குகூட சட்டைகளில் மை அடித்து மகிழ்வதும் மறைந்து விட்டது.
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  10. நான் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் வரை கட்டைப் பேனாதான் உபயோகிதிருக்கிறேன் பேனாவோடு இங்க் புட்டியும் கூடவே இருக்கும். பிற்காலத்தில் ஒரு sheffers பென் வெகுநாட்கள்வரை வைத்திருந்தேன் . அதை என் பேரனுக்குக் கொடுத்தேன். அவனுக்கு அதெல்லாம் நினைவேயில்லை. பேனாவும் இல்லை

    பதிலளிநீக்கு
  11. கட்டை பேனாக்கள் – பற்றி உங்களது நகைச்சுவை பாணியில் சுவையான செய்திகள். எனது சின்ன வயதில், சொந்தக்காரர் வீட்டில் இருந்த இந்த பேனாவில் நானும் தாறுமாறாக எழுதிப் பார்த்து இருக்கிறேன்.. எங்களுக்கு நாலாம் வகுப்புவரை பென்சில்தான். அப்புறம்தான் இங்க் பேனா. பால்பாயிண்ட் பேனாக்கள் மாணவர்களுக்கு ரொம்பநாளாக அனுமதி இல்லை.

    பால்பாயிண்ட் பேனா விஷயத்தில் மணியார்டரின் போது தபால்காரர்கள்தான் ரொம்பவும் கண்டிப்பாக இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  12. அடடா....பைலட் பேனாவை ஞாபகப்படுத்திட்டீங்களே!!!! பரிட்சை எழுதப் போகும்போது ரெண்டு பேனா கொண்டு போவேன். அண்ணந்தான் இங்க் ஊத்திக்கொடுப்பார்.

    அரசாங்க சப்ளைன்னு தொட்டு எழுதும் கட்டைப்பேனாதான் அம்மா ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுத பயன்படுத்துவாங்க. அவுட் பேஷண்ட் பார்க்கும் இடத்தில் மேஜையில் இங்க் பாட்டிலும், கட்டைப்பேனாவும்,. ப்ளாட்டிங் பேப்பரும் இருக்கும். மெடிக்கல் ரெப்ஸ் விதவிதமான கலர்களில் ப்ளாட்டிங் பேப்பர்ஸ் கொண்டு வந்து தருவாங்க.

    என் வகுப்புத் தோழிகளுக்கு ப்ளாட்டிங் பேப்பர் சப்ளையர் நாந்தான்:-)))

    பதிலளிநீக்கு
  13. காலணாவை வைத்துக்கொண்டு ராஜாங்கமே நடத்திய காலம் அன்று. கடையில் ஒரு கேம்லின் பேனாவுக்கு இங்க் போட காலணா கற்பார்கள். பின்னர் அது மூன்று பைசாவுக்கு என்று ஆயிற்று. வீட்டில் நாங்கள் மூன்று பேர் படித்ததால் காசு மிச்சம் பண்ண அப்பா 250 எம்எல் இங்க் பாட்டில், கூடவே கீழே சிந்தாமல் ஊற்ற ஒரு இங்க் பில்லர், அப்படி தவறி சிந்தி விட்டால் உடனே உறிஞ்சி எடுக்க ஒரு பிளாட்டிங் பேப்பர் என்று ஒரு தனி கடையே எங்கள் வீட்டில் வைத்திருப்பார். காலை நேரத்தில் எங்கள் பேனாவுக்கு இங்க் ஊற்ற வரிசையாக நிற்போம். ஒவ்வொருவராக இங்க் ஊற்றி கொடுக்க நாங்கள் ஏதோ சாம்ராஜ்யத்தையே பிடித்தவர்கள் மாதிரி முகத்தில் ஒரு பெருமிதத்துடன் பேனாவை கையில் பிடித்துக்கொண்டு வருவோம். ஏழை நண்பன் ஒருவன் கடையில் இங்க் போட்டால் மூன்று காசு செலவாகும் என்று ஒன்னரை மைல் தூரம் நடந்து வந்து எங்கள் வீட்டில் இங்க் போட்டுகொண்டு போவான். அவன் எங்கள் வீட்டுக்கு வைத்திருந்த பெயர் "இங்க் போர்ரவங்க வீடு". யார் வீட்டுப்பிள்ளைகள் என்று கேட்டால் "இங்க் போர்ரவங்க வீட்டுப்பிள்ளைங்க" என்றுதான் கடை வீதியில் சொல்வார்கள். "பழைய ஞாபகன்டா [பேராண்டி" என்றுதான் சொல்லவேண்டும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  14. பல வண்ணங்களில் ஹீரோ பேனாக்கள் சேமித்து வைத்திருந்தேன். இப்போது ஒன்று கூட என்னிடத்தில் இல்லை :(

    பேனாக்கள் பற்றிய உங்கள் அனுபவங்கள் பிரமிக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு