ஞாயிறு, 29 ஜூன், 2014

தமிழன் என்று ஓர் இனம்.


தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. ஆஹா, எப்படிப்பட்ட வார்த்தைகள். இவ்வார்த்தைகளைக் கேட்கும்போதே புல்லரிக்கிறது, மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன, தலை தானாக உயர்கிறது.

தமிழினத்தைப் போல் தன்மானமுள்ள இனம் இவ்வுலகில் கிடையாது. ஒரே சிக்கல் என்னவென்றால், அதை அவன் அடிக்கடி மறந்து விடுவான். தற்காலக் கலாச்சாரக் காவலர்களான திராவிட அரசியல்வாதிகள் அவனுக்கு இதை அடிக்கடி நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.

இலங்கையில் பிரபாகரன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தபோது "ஆஹா, எங்கள் சகோதரர்களை இலங்கை அரசு படுகொலை செய்து கொண்டிருக்கிறது, இதை ஏன் இந்திய அரசு கண்டும் காணாதது போல் இருக்கிறது? இதை வன்மையாக எதிர்க்கிறோம்" என்று தமிழனின் தன்மான உணர்வை தூசு தட்டி எழுப்பி ஒரு சில தீக்குளிப்பு வரை கொண்டு சென்றது யார்?

இந்த அரசியல் வாதிகள் இல்லாவிட்டால் தமிழனுக்கு, தான் ஒரு பாரம்பரியம் மிக்க, தன்மானத்திற்குப் பெயர் போன இனம் என்பது மறந்து போயிருக்கும். ஈழத் தமிழர் பிரச்சின் ஒரு வழியாக ஓய்ந்த பிறகு அவர்களுக்கு மெல்லுவதற்கு ஒன்றும் இல்லாமல் போயிற்று.

நல்ல காலம், மோடி வந்தார். அவர் ஏதோ இந்தி பற்றி அறிக்கை விட்டிருக்கிறார். உடனே நம் அரசியல்வாதிகள் " பழைய குருடி, கதவைத்திறடி" என்றபடி இந்தி எதிர்ப்புக் கோஷங்களை கூவுகிறார்கள். தமிழா, மோடி உன் தமிழை அழித்து விட முடிவு செய்து விட்டார், நீ வீறு கொண்டு எழு என்று உசுப்பி விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது ஏதாவது ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கட்சி உயிரோடு இருப்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? அதற்கு ஏதாவது நொண்டிச் சாக்கு வேண்டும். அவ்வளவுதான். இப்போது மோடி சிக்கிக்கொண்டார். அவர் இன்று சென்னை வரும்போது இரண்டொரு கட்சிகள் கருப்புக்கொடி காட்டினாலும் காட்டுவார்கள். அவர்களை  கைது என்ற பெயரில் உடனே ஒரு கல்யாண மண்டபத்திற்கு கூட்டிக்கொண்டு போய் நல்ல பிரியாணி போட்டு மாலையில் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

முன்னூறு வருடங்களுக்கு முன் இங்கிலீஷ்காரன் நம்மூருக்கு வியாபாரத்திற்கென்று வந்து நம்மை ஆள ஆரம்பித்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்போது இங்கிலீஷ் தெரிந்தால் அவனிடம் சேவகம் செய்யவும் கொஞ்சம் காசு பார்க்கவும் முடியும் என்பதினால் நம் ஆட்கள், குறிப்பாக தமிழர்கள் இங்கிலீஷ் படித்து காசு பண்ணினார்கள்.

அவன் நம் நாட்டைவிட்டுப் போய் 70 ஆண்டுகள் ஆன பின்பும் நாம் இங்கிலீசை விடவில்லை. ஏன் என்றால் இங்கிலீஷ் இன்றைக்கும் காசு கொடுக்கிறது. இல்லையென்றால் எப்படி அமெரிக்கா செல்ல முடியும்? இந்திக்கு அவ்வளவு மவுசு இல்லை. இருந்தாலும் பலர் வடநாட்டுக்கு உத்தியோகம் பார்க்கப்போவதால் இந்தி படிக்கிறார்கள். (இந்தியை கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்கள் உட்பட).

தமிழனின் தன்மானம் எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், தன் பிள்ளைகளுக்கு வேத வியாஸ், தினேஷ், பிரபு விகாஷ் என்று பெயர் வைப்பதில் இருக்கிறது. தமிழ் இனம் அழிகிறதா, எப்படி அழியும்? அழிய விட்டு விடுவோமா? அமெரிக்காவில் ஊர்ஊருக்கு எவ்வளவு தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழ் கலாச்சாரத்தை பேணிக் காக்கிறோம், ஒவ்வொரு கலாசார நிகழ்ச்சி முடிந்தவுடன் பீஸ்ஸா சாப்பிட்டு கோக் குடித்து எவ்வளவு பாடு படுகிறோம். தமிழ் கலாச்சாரத்தை அழிய விடுவோமா?

தமிழனே, எப்போதும் தன்மானத்தைக் காக்க புரட்சி செய்யத் தயாராக இரு. வாழ்க தமிழ், வாழ்க தமிழினம்.

8 கருத்துகள்:

 1. தமிழுக்கு உங்கள் பங்குத் தொண்டு!

  பெயரை விடுங்கள், கேடி சகோதரர்கள் முதல் பழ சகோதரி மருத்துவ மகன் வரை எல்லோருக்கும் ஹிந்தி தெரியும். தொண்டர்களுக்குத்தான் தெரியாது!

  ஆனாலும் மத்திய அரசு வலுக்கட்டாயமாக ஒரு மொழியை அன்றாட அலுவல்களில் புகுத்த நினைத்தால் அது தவறுதானே..
  பதிலளிநீக்கு

 2. உண்மைதான் ஐயா. தமிழன் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்கட்டும். எனக்கு தெரிந்த ஒருவர் தன் மகனுக்கு கன்னா (ராஜேஷ் கன்னா இரசிகர்) என்று பெயர் வைத்தார். அவருக்கு கன்னா என்பது துணைப்பெயர் (Surname) என்று தெரியுமோ தெரியாதோ!

  ஆனால் ஒன்று. முடிந்தவரை இரண்டு மூன்று மொழிகள் கற்றுக்கொள்வது நமக்கு நல்லது. அது இந்தியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இன்றைக்கு சென்னையிலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் வட இந்தியர்கள் வந்து வேலை செய்வதே இதற்கு சான்று. எனவே மய்ய அரசில் உள்ளோர் மொழிகளை திணிக்காமல் எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ள வழி செய்யவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொரு கலாசார நிகழ்ச்சி முடிந்தவுடன் பீஸ்ஸா சாப்பிட்டு கோக் குடித்து எவ்வளவு பாடு படுகிறோம். தமிழ் கலாச்சாரத்தை அழிய விடுவோமா?//

  மிகச் சரியாக கூறியுள்ளீர்கள். இப்படிப் பேசி பேசியே தமிழக அரசியல்வாதிகள் தமிழ் இனத்திற்கே துரோகம் செய்துவிட்டனர்.

  பதிலளிநீக்கு
 4. தமிழன் என்றோர் இனமுண்டு. அவனுக்குப் பேச்சே என்றும் துணையுண்டு. வாழைப்பழத்தில் ஊசிஎன்று இதைத்தான் சொல்வார்களோ.

  பதிலளிநீக்கு
 5. சிந்திக்கத் தூண்டும் பகிர்வு.நன்று&நன்றி!

  பதிலளிநீக்கு
 6. நல்லாவே நக்கல் அடிக்கிறீங்க! ஆனாலும் இதையும் இன்னும் கொஞ்ச நாளில் மறந்துவிடுவான் மறத்தமிழன்!

  பதிலளிநீக்கு
 7. ஒரு மொழியை கற்றுக் கொள்வதில் தவறில்லை. மொழியை வைத்து அரசியல் செய்வது தான் தவறு!

  பதிலளிநீக்கு